2019 இல் பிறந்து 100ஆவது அகவையையும் 2010ஆம் ஆண்டு மறைந்து 10 ஆண்டுகளையும் காணும் மதிப்பிற்குரிய புலவர் அடைக்கலமுத்து என்னும் பெரியாரின் நினைவுகளை மீட்கும் ஒரு கட்டுரையாகவே இது அமைகின்றது. ஒருகாலத்தில் அவரது மாணாக்கராக இருக்கும் வாய்ப்பைப் பெற்று இன்று கனடாவில் வாழும்போது அவரை நினவுகூரும் பாக்கியம் பெற்ற மாணவர்களுள் ஒருவனாக இருந்தே இக்கட்டுரையை வரைகிறேன். மாதகல் சென். ஜோசெப் மகா வித்தியாலயத் தில் அவரிடம் கல்வி கற்கும் பேறைப் பெற்றதோடு அவரால் பண்டத்தரிப்பில் வித்துவான் பொன். கந்தசாமி அவர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட பண்டிதவகுப்பில் மாணவனாக இருந்தும் பெற்ற பட்டறிவினை ஆதாரமாக வைத்தும் அவரது ஆக்கங்களூடாகப் பெற்ற தகவல்களை அடிப்படை யாகக் கொண்டும் இக்கட்டுரையை வரைகிறேன். இந்தவகையில் 'அமுதுவின் கவிதைகள்' என்ற அவரது நூல் அவர் பற்றிய பல தகவல்களை அறிய உதவியுள்ளது.
எனினும் இங்கு குறிப்பிடப்படும் செய்திகள் அமுதுப் புலவரின் நிறைவான பதிவாக அமையும் என்று சொல்லும் துணிவு என்னிடமில்லை. என்றாலும் எனது குருபக்தியின் வெளிப்பாடு இது என்று மிக அடக்கமாகக் கூறிக்கொள்கிறேன்.
இளவாலை அமுது என்று இலக்கிய உலகத்தில் நன்கு அறியப்பட்ட புலவர் அடைக்கலமுத்து அவர்களைத் தமது குருஎன்று கூறிக்கொள்வதிற் பெருமை கொள்ளும் பலர் இன்றும் உயிரோடு உள்ளார்கள். குருவாகத் தாம் பெற்ற ஒருவரை மதிக்கும் எல்லோரிடமும் இப்பண்பாடு காணப்படு வதை நாம் காண்கிறோம்.
புலவர் அவர்கள் தன்னை உருவாக்குவதில் துணையாக இருந்த பல பெரியார்கள் பற்றித் தமது நூலிற் குறிப்பீட்டுள்ளார். அருள்துறவி பேதுருப்பிள்ளை என்பவரே தன்னை இலக்கிய, இலக்க ணத்துறையில் நாட்டம் கொள்ள வைத்தவர் என்று குறிப்பிடும் புலவர் அவர்கள் புலவர்மணி இளமுருகனார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, வித்துவான் சுப்பையா, வித்துவான் வேந்தனார், வித்துவான் நடராசா போன்ற கல்விமான்களின் தொடர்பும் தன்னை ஆக்க இலக்கிய ஈடுபாட்டில் ஆர்வமுடன் கால்பதிக்க வைத்தது என்று கூறுகிறார். மேலும் வேந்தனார் அவர்கள் தன்னைப் 'புலவர்' என்று வாழ்த்தியதைத் தனக்கு 'வசிட்டர் வாயாற் கிடைத்த வாழ்த்து' என்று கருதித் தொடர்ந்து உற்சாமாகச் செயற்பட்டதாகவும் கூறியுள்ளார். இன்னும் பேராதனைப் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வநாயகம், பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சி. தில்லைநாதன் என்பவர்களது தொடர்பும் தன்னைப் புடம்போட்டுக்கொள்ளப் பேருதவி புரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரியாரவர்கள் தனது பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக்கொண்டு மாதகல் சென். யோசெப் மகா வித்தியாலயத்திற்கே முதல் நியமனம் பெற்று ஆசிரியராக வருகை தந்தார். அவர் தான் சுமந்துவந்த கனவுகளிற்குச் செயல்வடிவம் கொடுக்கும் இடமாக எமது பாடசாலையைக் கருதி யதால் அவரது முழுமையான சேவையைப் பெறும் பாக்கியத்தை எமது பாடசாலை அன்று பெற்றுக்கொண்டது. கற்பித்தல் முறைகளில் அவர் பின்பற்றிய அணுகுமுறை மாணவரை அவர் பக்கம் கவர்ந்திழுப்பதாக அமைந்திருந்தது. நாடகம், பேச்சு, உரையாடல், விளையாட்டு என்று பல்துறைகிலும் ஈடுபட்டு மாணரைத் தன்பக்கம் இழுப்பதில் முன்னுதாரணமாக விளங்கினார். அவரது இலக்கிய வகுப்புகளை மாணவர் பெரிதும் விரும்பிப் பின்பற்றினர். செய்யுள்களை மாணவர் விரும்பி ஏற்கும் வகையிற் கற்பிக்கும் ஆற்றல் கொண்டவராக அவர் விளங்கினார். அவரைச் சூழ்ந்து நிற்கும் மாணவர் கூட்டத்தில் ஒருவனாக நானும் இருந்த அந்த நினைவுகள் பசுமையானவையாக இன்றும் என்நினைவில் நின்று நிழலாடுகின்றன.
பேசவும், நாடகப் பாத்திரங்களுக்கு ஏற்ப மாறிப் பாத்திரமுணர்ந்து நடிக்கவும் அவர் சொல்லித் தந்த பாடங்கள் அன்று எமக்குப் புதியனவாகவும் எம்மைக் கவர்ந்திழுப்பனவாகவும் இருந்தன. மாணவரின் தனித்திறன் அறிந்து அவர்களை வழிநடத்தும் பாங்கு பெற்றோராலும், பாடசாலை நிர்வாகத்தாலும், சக ஆசிரியர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. அறையில் ஆடவைத்து அம்பலத்தில் ஏறவைத்து மாணவர்கள் தம்திறனை உணரவைத்த அமரர் அவர்களால் உருவாக்கப் பட்ட நடிகர்களும், பேச்சாளர்களும் பலர். விளையாட்டு மைதனத்தில் அவர் கற்பித்த நற்பண்புகள் பலரை இன்றும் சமூகநலன் விரு;பிகளாக மாற்றியுள்ளதை என்னாற் காண முடிகிறது.
அவரிடம் வகுப்பறையிற் பெற்ற பட்டறிவைப் பாடசாலையை விட்டுச் சென்ற பின்பும் பண்டிதர் வகுப்பினூடாகப் பெறும் வாய்ப்பை நாம் பெற்றுக்கொண்டோம். இதுவரை ஆண்கள் பாடசாலை யிற் கல்வி பயின்ற நாம் பெண்களுடன் சேர்ந்து பண்டித வகுப்பைப் பின்பற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டோம். அங்கே ஆசிரியரின் கற்பித்தல் முறை இளம்பருவத்தினரின் மனநிலை உணர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக இருந்தது. பாடசாலையை விட்டகாலமென்றாலும் நானும் நண்பர்களும் பண்டித வகுப்புகளைப் பின்பற்றத் தவறாது செல்வோம். அப்படியான ஒரு ஈர்ப்பு நிறைந்த கற்பித்தல் முறையை அவர் பின்பற்றினார். அதனால் பிரவேச பண்டிதம் பாலபண்டிதம் என்று தமிழை விரும்பிப் படிக்கும் மாணவராக நாம் மாறினோம். அதன் பெறுபெற்றையும் இன்று உணர்ந்து அவரை வாழத்தவும் செய்கிறோம்.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டபோதிலும் இளவாலையைப் புகுந்தகமாகக் கொண்டு தனது பெயரையே 'இளவாலை அமுது' என்று ஆக்கிக்கொண்டிருந்தார். ஆசிரியர், அதிபர், எழுத்தாளர் கவிஞர், நாடக ஆசிரியர் என்று பலதுறைகளிற் கால்பதித்துத் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்த அமுதுப்புலவர் அவர்கள் மரபுக் கவிதையில் பற்றுக் கொண்டவராகவும் விளங்கினார். இதற்கு அவரது 'அமுதுவின் கவிதைகள்' என்ற கவிதைத் தொகுப்புச் சான்றாக உள்ளது. அவரது சமூகப்பற்றையும், மனித நேயத்தையும், படைப்பாற்றலையும் அவர் வெளியிட்ட ஏனைய நூல்க ளூடாக அறியமுடிகிறது. அந்தவகையில்: நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம், அன்னம்மாள் ஆலய வரலாறு என்பன குறிப்படத்தக்கன. அமரர் அவர்கள் எட்டுத் தடவைகள் அவரது இலக்கியப் பணிக்காகப் பாராட்டப்பட்டுப் பட்டம் பெற்றுள்ளார் என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு புலவர் அமுது அவர்கள் பெற்ற பட்டங்க ளையும் அதை வழங்கியவர்களையும் அமைப்புகளையும் இவ்விடத்திற் கூறுவது அவர் சமூகத்திற் பெற்றிருந்த மதிப்பை வெளிப்படுத்துமென்று கருதுகிறேன்.
சொல்லின் செல்வன் - ஞானப்பிரகாசர் மன்றம் புலவர் மாமணி - பிரித்தானியா - கென்றி அரசர் கல்லூரி மாணவர்கள் முப்பணி வேந்தன் - லண்டன் - பேராசிரியர் எஸ். ஜே. இமானுவேல் அடிகளார் பாவேந்தன் - பரிசுத்த பாப்பரசர் தமிழ்க் கங்கை - ஜேர்மன் - தமிழ்ப்பணி மன்றம் செந்தமிழ்த் தென்றல் - லண்டன் - தமிழ்மன்றம் கவியரசு - பேராசிரியர் அ. சண்முகதாஸ் (யாழ். ப. க.. கலைப்பீடாதிபதி) மதுரகவி - யாழ். பல்கலைக்கழக வேந்தர்.
அமரர் அமுது அவர்களைப் பேராசிரியர் அவர்கள் தமது பாணியில் தான் வழங்கிய மதிப்புரை யில் பாராட்டிய வரிகளை இங்கு நோக்குவது அமரரின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்குமென்று நம்புகிறேன். 'மனித வாழ்வில் அழகானவற்றைக் கண்டு குதூகலித்து அலங் கோலங்களைக் கண்டு பதறும் அமுதுவின் கவிதா மண்டலத்தில் உலவும் வாசகன் அவரது உள்ளக் கிடக்கைகளைத் தௌ;ளிதில் அறிவதில் இன்பம் காண்பான்' என்பது ஒரு சிறப்பான குறிப்பாகக் கொள்ளத்தக்கது.
பேராசிரியர் கூறியதுபோன்று அமரரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் இரண்டு பாடல் களை மட்டும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதென எண்ணுகிறேன்.
செந்தமிழ் மக்களை ஏற்றிய கப்பல் தீய பிளவெனும் பாறையில் மோதி சிந்தை கலங்கியே நொந்திடு முன்னர் திரும்புவோம் ஒற்றுமைத் தீவை அடைவோம்!
அரசியலில் உளத்தூய்மை உடையார் வேண்டும் அநியாய வழிகளிலே நிதியைச் சேர்த்து நரிவேடம் புiனைந்தவரை நசுக்க வேண்டும் நயமான பொன்னுரைகள் பதவி ஆசை ஒருகோடி ஊழல்கள் வழக்கு நூறு உடல்காட்டி ஊர்சுருட்டி உயர்ந்தோர் ஈழத் திரியெரிய ஒருகுச்சைத் தேய்த்த தில்லை சீர்பெற்ற வரலாற்றைச் சிதைக்கின் றாரே!
இந்த இரண்டு பாடல்களும் அவரது சமூகப் பார்வையையும், சமூகத்திற் காணப்படும் புல்லுரு விகள் குறித்து அவரிடம் ஏற்பட்ட வெஞ்சினத்தையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. இந்தவகையில்...
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்.
என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளைப் பொய்யா மொழியென்று நம்போன்றவர் ஏற்கும் வகையில் அக்குறளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நம்முன் வாழ்ந்து காட்டிய பெருந்தகையே ஆசிரியர் அடைக்கலமுத்து அவர்கள். எளிய வாழ்வும், இனிய பழக்கமும், எல்லோரையும் அணைத்துச் செல்லும் அன்பு உள்ளமும் கொண்டு விளங்கிய ஒரு பெருந்தகை விட்டுச்சென்ற எச்சங்கள் பற்பல.
வள்ளுவர் தமது குறளில் எடுத்தாண்ட எச்சங்கள் எவை என்று கூறுவோர் அதற்குப் பல விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் கூறிவருவதை நாம் காணத்தான் செய்கிறோம். எச்சம் என்பது ஒருவர் விட்டுச் செல்லும் ஆக்கபூர்வமான படைப்புகளைச் சுட்டும் என்று ஒருசாரார் கூற, அப்படியல்ல அவரது பின்வாரிசுகளையே அது சுட்டி நிற்கிறது என்று கூறுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இதில் எது சரி என்று நான் எடுத்தாள முனையவில்லை.
அவரது ஆக்க இலக்கியப் படைப்புகளை அவர் விட்டுச் சென்ற எச்சங்களாக தமிழுலகம் ஏற்றுக் கொண்டாலும் அது பொருத்தமாவே காணப்படுகிறது. அப்படி இல்லாமல் அவரது வாரிசுகளைச் சுட்டிக்காட்டிப் பேசமுனைந்தாலும் அங்கும் அமுதுப் புலவர் விட்டுச்சென்ற சிறந்த எச்சங்களாக அவரது பிள்ளைகள் இருப்பதைக் காண்கிறோம். கனடாவில் நமக்கெல்லாம் அறிமுகமான சந்திரகாந்தன் அடிகளார் அவரது எச்சமாக நின்று நிலையான பல குமுகாயப் பணிகளை ஆற்றி வருவதை நாம் கண்ணாரக் கண்டுவருகிறோம். இது தவிர அவரால் உருவாக்கப்பட்டு இன்று சமூகத்தில் தமது பணிகளை ஆற்றுவோர் பலர் தம்மை வெளிப்படுத்தாது இருப்பார்கள் என்பதும் எனது நம்பிக்கை.
இவ்வாறு தான் விட்டுச் சென்ற எச்சங்களூடாகத் தன்னை உலகிற்கு அடையாளப் படுத்திக் காட்டிய செம்மல் வாழ்ந்த வாழ்வு அர்த்தமுள்ளதாக இருந்ததன் காரணாகவே அவரை என்போன்ற ஒரு மாணவர் கூட்டம் நினைவுகூர முனைகின்றது. அன்னார் பல மாணாக்கரைப் பல இடங்களில் உருவாக்கி இருந்தாலும், இன்று கனடாவில் அவரிடம் பண்டித வகுப்பிற் படித்த என்போன்ற பலர் இருந்து அவரை மனதார நினைத்து வாழ்த்துகிறோம். ஒவ்வொருவரும் தமது வாழ்வில் எத்தனையோ ஆசிரியர்களைச் சந்தித்தாலும் ஒரு சிலரே அவர்கள் மனதில் இடம் பிடித்து நீங்காது நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் அமுதுப் புலவர் அவர்கள் எம்போன்றவர் நெஞ்சில் நீங்காது நிலைத்து நிற்கின்றார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
என்பதற்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாரை நாமெல்லாம் எமது நெஞ்சத்தில் ஏத்தி வாழ்த்தி மனநிறைவெய்துகிறோம்.
நூற்றாண்டு காணும் அமுதுப் புலவர்! நூற்றாண்டு காண்கின்ற அமுதுப் புலவர் நூலோர்கள் போற்றிடும் பெருமைக் குரியர்! ஆற்றலாற் செவாலியர் பட்டம் பெற்றார் அடைக்கல முத்தெனும் எனது ஆசான்!! போற்றிடும் கவிதைகள் யாத்துத் தந்தார் புகழ்பெறும் நூல்களும் ஆக்கித் தந்தார் காற்றோடு காற்றாகக் கலந்த போதும் அன்னார் கலந்துளார் எங்களின் நெஞ்ச மெல்லாம்!
ஊற்றாக எழுகின்ற கவிதைப் பாடம் உணர்வோடு எமக்கெலாம் சொல்லித் தந்து நாற்றாக எங்களை மாற்றி விட்ட நம்குரு அமுதுவின் நினைவை ஏற்றுப் போற்றுதல் தலையெனக் கொண்டு நாங்கள் பொதுப்பணி ஆற்றுவோம் அவரைப் போன்று மாற்றங்கள் தந்திடும் கவிதை செய்து மாநிலம் பயன்பெற வாழ்வோம் என்றும்!
கற்றவர் விரும்பிடும் ஆற்ற லோடும் காண்பவர் மதித்திடும் பெருமை யோடும் உற்றவர் அணைந்திடும் பண்பி னோடும் உறவினைச் சேர்த்திடும் நட்பி னோடும் மற்றவர் நாடிடும் அறிவி னோடும் மாணவர் தேடிடும் கலைக ளோடும் அற்புத மனிதராய் நம்முன் வாழ்ந்த அமரராம் அமுதுவை போற்று வோமே!
சபா. அருள்சுப்பிரமணியம். ஆ.யு.
|