|
|||||
இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.... |
|||||
![]() இன்று ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, வெளியில் இருந்து ஆம் ஆத்மியை கேள்வி கேட்டுக்கொண்டு, விமர்சனம் செய்துகொண்டு ஆனால் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று மனதார விரும்பிய அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியான நாள். இந்திய அரசியல் அத்தியாயம் திருத்தி எழுதப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். பலர் தன்னுடைய தியாகங்களால், இன்னுயிரைக் கொடுத்து பெற்ற சுதந்திரத்தை மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வசன மொழிகளாலும், பிரியாணி, போதை, பணம், வெற்று பகட்டு என்று சமூகத்தை சீரழிக்கும் போக்கு இன்றைய இந்திய அரசியலின் கலாச்சாரமாக மாறிவிட்டது. இலவசமும், குவாட்டரும் கோழி பிரியாணியும், பணமும், ரவுடித்தனமும் ஜனநாயகத்தை தீர்மானிப்பது இந்தியாவிற்கு அவமானம். இதனைக் கண்டு முகம் சுளிக்கும் பலரும் இயக்கம் கண்டு தேர்தல் ஒன்றே வழி என்று குதித்து டெபாசிட் இழந்து காணாமல் போகும் நிலை தொடர்ந்து வருகிறது. மக்களிடம் ஒட்டு வாங்க ஆய்வுப் பட்டமோ, அறிவோ, திறமையோ, நேர்மையோ, எளிமையோ, செயல்திறனோ தேவையில்லை. மக்களை ஏமாற்றி, அவர்களின் சுயநலத்தில் நெய் ஊற்றி அதை வளர்த்து, உணர்ச்சியைத் தூண்டி, சாதி, மதம் என்று எல்லா வேடமும் இட்டு வெற்றி பெறும் அரசியல் கலத்தில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை. இந்த மேடையில் வெகுண்டெழுந்து வெற்றியை ஈட்டி, இந்த சமூகத்தை புரட்டிப் போடுவேன் என்று புறப்பட்ட டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி போன்றோர், டெப்பாசிட் இழந்து காணாமல் போனதை வரலாறு சொல்லும். அனைவரும் மதிக்கும் ஆந்திர ஐ.ஏ. எஸ் அதிகாரி டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோர் பல முயற்சி எடுத்தும் ஓரிரு இடங்களைத் தவிர வெற்றிபெறமுடியவில்லை, லோக் பரித்தன், மக்கள் சக்தி கட்சி என்று எத்தனை எத்தனை முயற்சிகள் படுதோல்வி அடைந்ததை பார்த்து வருகிறோம்.
அரசியல் என்பது துரோகம் நிறைந்தது.அது ஒரு அலை. முதல் அலையில் வேகத்தில் கரையேறி மேட்டில் அமர்ந்துகொள்ளவேண்டும், இல்லையேல் கடையை மூடிவிடவேண்டியதுதான். இரண்டாவது முயற்சி பலனளிக்காது. எதிர் கட்சிகளை விட தன்னுடன் கைகோர்த்து நடைபோட்ட விசுவாசமானவர்களே முதல் எதிரியாகி நம் பலம்-பலவீனத்தை உணர்ந்து வீழ்த்த நினைப்பார்கள். வழக்கமான இந்த அனைத்து அரசியல் சம்பிரதாயங்களும் ஆம் ஆத்மியில் நடந்தேறியது, இருப்பினும் இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி இந்திய தலைநகர் டெல்லியில் வெற்றிபெற்றுள்ள திரு.அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு நல்லவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், சாதி-மத பிடிப்பு இல்லாதவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ்த்து தெரிவிக்கும் நேரமிது. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி இந்திய அரசியல் மாற்றத்திற்கு ஒரு ஆரம்பம். ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனித்தன்மை கொண்டது.இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்தி பேசும் மக்கள் வட இந்தியாவில் இருந்து வந்து மற்ற மாநிலங்களில் கிளை திறந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்குமான அரசியல் அந்தந்த மாநில மொழி பேசும், சமூக நலம் கொண்ட நல்லவர்களால் தான் உருவாக வேண்டும். அவர்கள் வலுப்பெற ஆம் ஆத்மியில் இருந்து பாடங்களை எடுத்துக்கொள்ளளாம் ஆனால், ஆம் ஆத்மியாகவே இயங்குவது சாத்தியமில்லை. ஒரு கட்சி ஆரம்பித்து அரசியல் மாற்றம் செய்ய 30 ஆண்டுகால வரலாறு எல்லாம் தேவையில்லை, மூன்று ஆண்டு திட்டமிடலும் நேர்மையான மக்கள் சார்ந்த வியூகமும் மட்டுமே போதுமானது என்பதற்கு ஒரு உதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி என்பது கேஜ்ரிவால் பார்க்காதது இல்லை. இதை எப்படி ஒரு உதாரண அரசாக மாற்றப்போகிறார்? இரண்டு மலைகளுக்கு மத்தியில் மாட்டிய மடுவாக இருக்கும் இந்த வெற்றி டெல்லி போன்ற மாநிலக் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் எப்படி திறம்பட செயல்படப்போகிறார்? கடந்தமுறை செய்த திட்டமிடல் தவறுகளினால் நம்பிக்கை இழந்த நடுநிலையாளர்களை தன்பக்கம் எப்படி இழுக்கப்போகிறார்? காமராசர், கக்கன் என்று இன்று காலம் கடந்தும் நாம் அரசியல் உதாரணங்களை பேசுகிறோமே அந்த வரிசையில் இடம்பெறுவாரா? மக்கள் தன் மனதில் ஒரு நிரந்தர இடத்தை தருவார்களா? ஒவ்வொரு நாளும் நடைபெறும் அரசியல் சூட்சிகளில் சிக்கி விடாமல் தன்னையும், தன் எம்.எல்.ஏக்களையும், தன் கட்சியின் முன்னனித் தலைவர்களையும் எப்படி காப்பாற்றப் போகிறார்? என்ற பலவற்றைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் இருக்கிறது. இதை வென்றெடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது என்று இதுவரை அவர் இந்த அரசியில் அழுத்தத்தில் நின்றதில் இருந்து புலப்படுகிறது. காமராசர், கக்கன், ஓமந்தூறார்,நல்லக்கண்ணு போன்ற எத்தனையோ எளிமையான மனிதர்களை தமிழகம் கண்டுள்ளது.. ஆனால் அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வழியில்லாமல் பல அரசியல் குப்பைகள் இன்று தமிழகத்தை அடைத்துக்கொண்டு நிற்கிறது. இந்தக் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு ஆம் ஆத்மியை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, வீட்டிலும் நாட்டிலும் தமிழ் பேசும் ஒருவர் தமிழகத்திற்கும், தெலுங்கு பேசும் ஒருவர் ஆந்திரத்திற்கும், கன்னடம் பேசும் ஒருவர் மலையாளத்திற்கும் உருவாகி தன் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து தன் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் சிறப்பு குன்றிவிடாமல் வேற்றுமையில் ஒற்றுமை காணும் மத்திய அரசு ஒன்று உருவானால் இந்தியா உலகின் ஏற்றமிகு நாடாக விளங்கும். பல மொழியும், பல தனித்துவமான கலாச்சாரமும்தான் நம்முடைய நாட்டின் அடித்தளம் என்பதை தலைமைகள் உணரவேண்டும். ஒன்றை தாழ்த்தி இன்னொன்றோ, ஒன்றை பலவீனப்படுத்தி இன்னொன்றோ வருவது ஆரோக்கியமான் வளர்ச்சியில்லை. பல எளிமையான தலைவர்கள் வாழ்த்து தன் வாழ்க்கையை சத்திய சோதனை செய்துவிட்டு சென்றுவிட்டார்கள். நாம் அவர்களின் வாழ்வியலைக் கற்று தன்னலம் மறந்து பொதுநலத்திற்கு உழைக்க முன்வரும் திரு.கேஜ்ரிவால் போன்ற ஒருவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அந்த மொழியின் பின்புலத்தில் இருந்தே பல நல்ல மக்கள் இயக்கங்கள் உருவாகி மக்களுக்காக அரசியல் செய்தால் இந்தியா சொர்க்க பூமியாக திகழும்.
தலைமை குறித்த முந்தைய கட்டுரை:
தலைமைப் பண்புகள்: www.valaitamil.com/leadership-quality_8288.html
ச.பார்த்தசாரதி
|
|||||
by Swathi on 10 Feb 2015 0 Comments | |||||
Tags: ஆம் ஆத்மி டெல்லி தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவால் Delhi Election Aravind Kejriwal | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|