LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்

தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

சமூக சிந்தனையாளர் , எழுத்தாளர், பேச்சாளர், Social Entrepreneur

 

இந்தியா முழுதும் ஆங்கிலம் என்பது பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு எட்டாக்  கனியாக விளங்குகிறது. பல பொருளாதாரச்  சிக்கல்களுக்கு இடையில் முனைவர் பட்டம் வரை பயின்ற கிராமப்புற இளைஞர்கள்கூட ஆங்கிலம் பேசுவதற்கு நம்பிக்கையில்லாத நிலையில் இருப்பதைப்  பார்க்கிறோம்.  பல கல்லூரிகளில் ஆங்கிலவழியில் நடத்தவேண்டிய பாடங்களைக் கூட பேராசிரியர்கள் உரிய உதாரணங்களுடன் ஆங்கிலத்தில் விளக்க முடியாமல் தமிழில் நடத்துவதை நாம் பெரும்பாலானோர் அறிவோம்.  

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு குழந்தை தன்  ஏழு -  எட்டு வயதிற்குள் ஆங்கிலத்தை உரிய உச்சரிப்புடன், இலக்கணச் சுத்தமாகப் பேசமுடிகிறது.  அதே குழந்தை வார இறுதி நாட்களில் தமிழ்ப்பள்ளிகளுக்குச்  சென்று தமிழும், மேலும் ஆர்வமுள்ள பலர் ஸ்பானிஷ் உள்ளிட்ட  பிற மொழிகளையும் கற்கமுடிகிறது என்ற நிலையைப் பார்க்கிறோம்.

சென்னை , பெங்களூர் போன்ற நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் சிறுவயதிலேயே தமிழ், ஆங்கிலம் , இந்தி, கன்னடம் , தெலுங்கு போன்று நான்கு , ஐந்து மொழிகளில் புலமை பெறுவதை நாம் நேரடியாகப் பார்க்கிறோம்.  பல நேரங்களில் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இருக்கும்போது இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆங்கிலப் புலமையும், பிறமொழிப் புலமையும் மாணவர்களிடம் உள்ளது.

தமிழகத்தில் பல தரமான பள்ளிகளிலும், சில தரமான அரசுப்பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஆங்கிலத்தையும், நல்ல தமிழையும், பிறமொழிகளைக் கற்றுத்தருகிறார்கள். ஆனால் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் இன்றைய நிலை என்ன?   தமிழ்வழிப்பள்ளிகளில் படித்து உயர்ந்து நிற்கும் ஒரு முன்மாதிரியான சமூகத்தின் வளர்ச்சியை உள்வாங்கி திட்டம் வகுக்காமல் , ஆங்கில வழியில் தமிழ்வழிப் பள்ளிகளை மாற்றிவருவது என்ன பலனை ஏற்படுத்தும்?  ஆங்கிலம் என்ற மொழியை மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ளும் ஓர் எளிய மொழியைச் சரியாகக் கற்றுக்கொடுக்க வியூகம் வகுக்காமல், பள்ளிகளையே ஆங்கிலப்பள்ளிகளாக மாற்றுவது அந்த மாணவர்களை ஆங்கிலம் பேசவைத்துவிடுமா? தமிழும் ஆங்கிலம் தெரியாத   ஒரு குழம்பிய தலைமுறை உருவாகிவிடாதா? என்ற  சிந்தனையை ஆழமாக உள்வாங்கவேண்டும்.

அந்தக் காலத்தில் பியுசி படித்தவர்கள் ஆங்கிலம் நல்ல தமிழையும், ஆங்கிலத்தையும் பேசினார்கள், எழுதினார்கள்.  சென்ற தலைமுறை இன்று அமெரிக்காவில் , பிற நாடுகளில் மென்பொருள் துறையில் கோலோச்சும் பல லட்சம் பேர் இந்த அரசுப்பள்ளியில் படித்தவர்கள், பள்ளிகளுக்கு வெளியே ஆங்கிலத்தை கற்று வெற்றிகண்டுவிட்டார்கள். இதிலிருந்துதான் அடுத்த கட்ட வளர்ச்சியைச் சிந்தித்திருக்கவேண்டும். சிந்தித்தோமா?

இந்த சிந்தனையின் பின்புலத்தில் பயணிக்கும்போதுதான்  இன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஆங்கிலத் தாக்கமும் , அதனால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவையும் நன்கு உணர்ந்துகொண்டு செயலாற்ற முடியும் , அதற்கு உலகத் தமிழ் மக்களை  சிந்திக்கவைக்கவேண்டும். தமிழை ஆங்கிலத்தோடு போட்டிப்போட்டு ஒரே பள்ளியில் தமிழைவிட ஆங்கிலவழியில் அதிகம் பேர் சேர்கிறார்கள், அதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்ற நிலையை ஏற்படுத்தக்கூடாது. தாய்மொழியை , ஆங்கிலத்துடன் ஒப்பிடு வது  ஆப்பிள்  , ஆரஞ்சு  இரண்டையும் ஒப்பிடுவது போன்றதாகும். வலுவான தாய்மொழி அடித்தளத்தில்  ஆங்கிலத்தில் பேசும், எழுதும் திறமை வேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது.

  1. ஆங்கிலம் ஒரு மொழி , அறிவு அல்ல என்ற புரிதலை ஏற்படுத்துதல்:

ஆங்கிலம் ஓர் எளிதான, இனிமையான மொழி.  அதனாலேயே இன்று உலகை அது ஆண்டுவருகிறது.  இன்று உலக மொழியாக , வணிக மொழியாக ஆங்கிலம் இருந்துவருகிறது.   இது ஒரு மொழி மட்டுமே , அறிவு அல்ல என்ற அழுத்தமான புரிதல் தமிழ்நாட்டில் இல்லை.  அறிவு என்பது உன் தாய்மொழியில்தான் வாழ்வியலாகக் கட்டுமானம் பெரும்.  பிற மொழி இலக்கியங்கள், நூல்களை  வாசித்தாலும்கூட  நமது தொன்மை தமிழ் என்பதை நினைவில் வைத்துப் பயணிக்கும் சூழலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த மக்களிடம் உரக்கமாக விவாதப்பொருளாக்கவேண்டும். இன்று தமிழ் படித்தால் ஆங்கிலம் வெள்ளைக்காரர்களைப்போல் வருவதில்லை எனவே தமிழ்ப்பள்ளி படிப்பை நிறுத்துகிறேன் என்று முடிவெடுத்த பெற்றோர்களை வெளிநாட்டில் பார்த்திருக்கிறேன். யுனெஸ்கோ -விற்கு உலக நூலாகத்  திருக்குறளைக் கொண்டுசெல்லும் நிலையில் இருக்கும் நாம் , "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சங்க இலக்கிய விழுமியங்களை கொண்ட உலகின் மூத்த மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட நாம், அறிவு என்பது எது ? மொழியின் வரையறை என்பது குறித்து ஆழமாக அறிந்துகொள்ளவேண்டும். 

 

  1. ஆங்கிலம் உயர்ந்தது என்ற எண்ணம் :

வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு வெளிவந்த சமூகம் இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதையே நம் தாய்மொழியை விட ஆங்கிலம் உயர்ந்தது , மதிப்புமிக்கது என்று நம்மிடம் உள்ள சிந்தனை காட்டுகிறது..  படித்தவர்கள், அறிவாளிகள், பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள், வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்ற மனோபாவம், மாயை தமிழ்ச் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது.  என் பிள்ளையும் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று தேடும் பெற்றோரும், என் பேரப்பிள்ளைக்கு தமிழ் சுத்தமாக வராது, அவன் வெளிநாட்டுக்காரனைப்போல் ஆங்கிலம் பேசுவான், ஆனால் எங்களுக்குத்தான் எதுவும் புரியவில்லை என்று பெருமை பேசும் தாத்தா பாட்டிகளும்,  தமிழ்நாடு செல்கிறீர்களா?  பார்த்து ஆங்கிலத்தை மறந்துவிடப்போகிறார்கள் என்று சொல்லும் அமெரிக்க இளம் பெற்றோர்களுக்கும், நாம் தொடர்ந்து உரையாடி அவர்களின் பார்வையை மாற்றவேண்டும்.  இன்று ஆங்கிலம் பலரது தாய்மொழியை ஊடுருவிச் சிதைத்துவிட்டது என்ற உலக உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.  ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி என்பதை நாம் நன்கு புரிந்துகொண்ட அதில் புலமைபெறுவதில் தவறில்லை, அதனோடு ஒப்பிட முடியா தமிழை ஒப்பிடுவதும் , ஆங்கிலம்தான் தெரியுமே , தமிழ் எதற்கு என்ற பார்வையும் தவறானது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். அமெரிக்காவின் அருகில் இருக்கும் மெக்சிகோவில் இந்த மோகம் இல்லை. அவர்கள் ஸ்பானிஷ் தவிர ஒரு வார்த்தை ஆங்கிலம் கற்க விரும்புவதில்லை. மாறாக ஸ்பானிஷ் மொழியையே கடத்துகிறார்கள்.

 

  1. ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் முறையாக கற்பிக்கவேண்டும்:

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு வரை  12 ஆண்டுகள் ஆங்கிலத்தை பள்ளிகளில் கற்றுக்கொடுத்தும், கல்லூரியில் முதுநிலை வரை 5 ஆண்டுகள் ஆங்கில வழியில் படித்தும் மாணவர்கள் ஆங்கிலம் பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பேற்பது?   இது குறித்து ஒரு வெளிப்படையான ஆய்வு தேவையல்லவா? 12 ஆண்டுகள் பாடத்திட்டம் தவறா? சொல்லிக்கொடுக்கும் முறை தவறா?  ஆசிரியர்கள் உரிய முயற்சி எடுக்கவில்லையா?  என்பதை ஆராய்ந்து கல்வித்துறை ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தை இந்தியச் சூழலில் எளிதாகப் பேசவைக்க உரிய உத்திகளைக் கையாளவேண்டியது அவசியமல்லவா?  அருகில் இருக்கும் தனியார்ப் பள்ளியில் முடியும்போது  அரசுப் பள்ளிகளால் ஏன் முடியாது?

பல நேரங்களில் ஆங்கில ஆசிரியர்களுக்கே  உரிய ஆங்கில புலமை இல்லாததால் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியாத நிலை இருப்பதைப் பார்க்கிறோம். கிராமப்புறப் பின்னணியிலிருந்து  அரசுப்பள்ளியில் படித்த என்னைப்போன்ற மிகப்பெரிய முதல் தலைமுறை இளைஞர் கூட்டம் இன்று உலகெங்கும் கல்லூரி முடித்துத் தானாகவோ , பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து , வெளிநாடு சென்று தேவையும், நெருக்கடியும் கருதி ஆங்கிலத்தைக் கைக்கொள்ள முடிந்துள்ளது என்ற அனுபவத்திலும் பாடம் கற்கவேண்டியுள்ளது.

 

  1. தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் புலமை இல்லாததால் ஏற்பட்டுள்ள மனத்தடை, தாழ்வு மனப்பான்மை :

தமிழை , அறிவை, வாழ்வியல் கருத்துகளைக் கற்றுத்தரும் தமிழ் ஆசிரியர்கள் தமிழுடன் ஆங்கிலப்புலமையைக் கட்டாயம் பெறவேண்டும். இன்று தமிழ் ஆசிரியர்கள் ஆங்கிலப் புலமையற்றவர்களாக இருப்பது அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது என்பதையும் ஓரளவு நம்பவேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் படிக்கும் ஒரு மாணவர் நிறைவாக, உணர்வாக , அடையாளமாக வாழ்வதற்கு நல்ல தமிழையும்,  பன்னாட்டுச் சூழலில் பிழைப்பதற்கு ஆங்கிலம் என்று இரண்டிலும் நல்ல புலமை பெற்றிட வேண்டும்.   பிற மொழிகளை எத்தனைவேண்டுமானாலும் அவரவர் தேவைக்கேற்ப கற்றுக்கொள்வதில் கூடுதலாய் பலனைப் பெறலாம்.  பாரதிபோல் யாமறிந்த மொழிகளிலே என்று பழமொழி கற்க வேண்டியதில்லை, குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் உரையாடவாவது தமிழாசிரியர்கள் உரிய பயிற்சி பெறவேண்டும்.  ஆங்கிலம் தெரிந்த தமிழாசிரியர்கள் இனி தமிழை நம்பிக்கையுடன் கற்றுக்கொடுக்கமுடியும் என்ற சூழல் வந்துவிட்டது என்பதை உணரவேண்டும்.

 

  1. தமிழ்நாடு கல்வித்துறையின் தொலைநோக்குப் பார்வையில் உள்ள சிக்கல்கள் :

 அரசியல்வாதிகள் பெரும்பாலும் மெத்தப் படித்தவர்கள் அல்ல, அவர்கள் பெரும்பாலும்  மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை வைத்து, அதிகாரிகளை நம்பி, சூழலை உணர்ந்து , கட்சி நலனை , வாக்கு வங்கியைக் கணக்கில் கொண்டு  முடிவெடுத்துப் பயணிப்பவர்கள். மேலும் பல தனியார் கல்விக்கூடங்களை நடத்துபவர்கள் அரசியல்வாதிகள் என்ற நிலையில் அரசுப்பள்ளிகள் ஆங்கிலத்தில் வளர்ச்சியடைவதும் அதனால் அந்தப் பகுதியிலேயே பெரும் கட்டணத்துடன் பயணிக்கும் தனியார்ப் பள்ளிகளின் வணிகம் பாதிக்கும் என்ற பார்வையில் ஓரளவு உண்மை உள்ளது.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் ,தெலுங்கானாவில்,  கேரளாவிலும் அந்த மாநிலத்தின் மொழியைப் படிக்காமல் படித்து முடித்து வெளிவர முடியாது என்ற சூழல் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தமிழை முதல், இரண்டாம், மூன்றாம் பாடமாக எடுக்காமல் , தமிழே படிக்காமல் வெளிவரும் சூழல் உள்ளது.  சென்னை உயர்நீதிமன்றமும் , உச்சநீதி மன்றமும் தமிழை இரண்டாவது மொழியாகத் தமிழ்நாட்டில் கற்பிக்கவேண்டும் என்று உறுதிசெய்தபிறகும் இன்னும் கட்டாயப்படுத்தாமல் அரசியல் கட்டமைப்பு இருப்பதைப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் தங்கள் தொடர்புகளின் வழி தொடர்ந்து வலியுறுத்தி நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.  தமிழ்நாட்டில் தமிழைக்  கற்றுக்கொடுக்க என்ன மனத்திடை, எங்கிருந்து வருகிறது என்பதை சிந்திக்கவேண்டும்.  

உணர்வுள்ள தமிழ்நாட்டுத் தலைமைகள்  இதை நன்கு உணர்ந்தும், இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது உலகத் தமிழர்களுக்குக் கவலையைக் கொடுக்கிறது.  அரசியலோடு நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் , அரசியல் தொடர்பாளர்கள், அறம்  சார்ந்து இதை முன்னெடுத்து அரசியல் தலைமைகளின் கவனத்திற்குக் கொண்டுசென்று தீர்க்கவேண்டியது அவசியம். அதேநேரம், தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் நல்ல ஆங்கிலப்புலமை பெற்றால்தான் ஏற்றப்பட்டுவரும் உலகமயமாக்கலில் நிலைத்து நிற்கமுடியும் என்பதையும் உணர்ந்து திட்டமிடவேண்டும்.

 

  1. படித்த, பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் தாய்மொழி தவிர்த்து ஆங்கிலம் அதிகம் பயன்படுத்துவது:

ஒரு தமிழர் மற்றவரை உலகின் எந்த நாட்டில், எந்த நிலையில் சந்தித்தாலும், வாய்ப்புள்ளபோது , பிறமொழியினர் இல்லாதபோது தமிழில் கூச்சமின்றிப் பேசவேண்டும்.  இந்த நிலை ஏற்பட்டால்தான் சமூகத்தின் வளர்ச்சியை நோக்கி வந்துகொண்டிருக்கும்  இளையோரும் தமிழைத் தயக்கமின்றிப் பேசி பின்பற்றுவார்கள்.  படித்தவரா, உயர்ந்த நிலையில் உள்ள தமிழரா, அவர் தமிழில்தான் பேசுவார் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டியது அவசியம்.

 புலம்பெயர் தமிழ்ச்சமூகம் இதில் பெரும்பங்காற்றமுடியும். நீங்கள் பெரும் பொருள் ஈட்டியவராக இருக்கலாம், நிறுவனம் நடத்தும் நிர்வாகியாக இருக்கலாம், மற்றொரு தமிழரைச் சந்திக்கும்போது தமிழிலும், பிறரை  சந்திக்கும்போது ஆங்கிலத்திலும் பேசுவது அவசியம்.  இது வளர்ந்துவரும்  கிராமப்புற மக்களுக்கு ஒரு வலுவான செய்தியைக் கொண்டுசேர்க்கும்.

 

  1. ஊடங்களில் மொழியாற்றல் குன்றியவர்கள் பயன்படுத்தும் தமிழ்-ஆங்கிலம் கலந்த பயன்பாடு:

இன்று பெரும்பாலான ஊடங்கங்களில் தொகுப்பாளர்கள் தமிழ் -ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். அதையே அனைவரும் பின்பற்றும் அளவுக்கு பெரிய தாக்கமாக உள்ளது.  இதையே பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் இளையோர் ஸ்டைல் என்றும் பேஷன்  என்றும் பின்பற்றுகிறார்கள்.  "தமிழைத் தமிழாய் பேசுவோம்"  என்று தனி இயக்கம் காணும் அளவிற்கு நிலைமை உள்ளது என்பதை ஆழமாகச் சிந்திப்போம்.

இந்த நிலையை சீரமைக்க முடியுமா? தீர்வு என்ன?

 

தனி மனிதர்களும்,  தமிழ்ச்சமூகமும் என்ன செய்யவேண்டும்?

 ஆங்கிலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தேடலைக் கொஞ்சம் தாய்மொழி தமிழுக்கும்  கொடுக்கவேண்டும். தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் பிறமொழி கலக்காமல் பேசவேண்டும் என்று ஆர்வம் கொள்ளவேண்டும். பெற்றோர்கள் கடைபிடித்தால் , பிள்ளைகள் அவர்களை பின்பற்றி வளர்வார்கள். தமிழில் பேசுவதைக் குறைவாக பொதுவெளியில் எண்ணிவிடக்கூடாது. ஆங்கிலம் பேசுவதால் ஒரு பெருமிதம் வந்துவிடக்கூடாது.

தாய்மொழி படித்து என்ன ஆகப்போகிறது  என்ற மனோபாவம்  கொண்டுள்ள தமிழ் இளையோரிடம் அதன் முக்கியத்துவத்தைப் புரியவைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

 

அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

 தமிழ்நாட்டில் தமிழ்-ஆங்கிலம் குறித்த ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளவேண்டும். அந்த ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் தமிழும் , ஆங்கிலம் சிறப்பாகப் பேசுவார்கள் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.   நீதிமன்ற ஆணையை ஒட்டி  தமிழ்நாட்டில் தமிழ் மொழியை  இரண்டாவது மொழியாக அனைவரும் கற்றுக்கொள்ள ஆணை பிறப்பிக்கவேண்டும். புலம்பெயர் சமூகம் இதுபோன்ற முக்கிய தேவைகளைத் தங்களுக்கு உள்ள தொடர்புகளை வைத்துத் தொடர்ந்து வலியுறுத்திச் செய்துமுடிக்கவேண்டும்.

அரசுப்பள்ளிகள் இனி  தமிழ் வழியில் மட்டுமே என்ற நிலைப்பாட்டை எடுத்து அரசு ஆங்கில வழிக் கல்வியை மக்கள் விரும்புகிறார்கள் என்று சிந்திக்காமல் தொடர்ந்து தமிழும் , நல்ல ஆங்கிலப்புலமையும் அனைவருக்கும்   கிடைக்க வழிசெய்யவேண்டும்.  அதற்கு பல்வேறு புதிய உத்திகளைக் கையாளவேண்டும்.

 

புலம்பெயர் சமூகம் என்ன செய்யவேண்டும் ?

இன்று நம் தமிழ்ச் சமூகத்தில் நிலவிவரும் உச்சக்கட்ட ஆங்கில மோகத்தால் ஏற்படும் சமூகச் சிக்கலைத் தீர்க்க , நம் தாய்மொழி அடையும் பின்னடைவைச் சரிசெய்ய புலம்பெயர் சமூகத்தால் ஓரளவு முடியும்.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?   ஆம் , உங்களால் முடியும். உங்களால்தான் முடியும்.  நீங்கள் உரிமையோடு, உணர்வோடு நீங்கள் பிறந்த ஊருக்கு பல நல்ல தொண்டுகளைச்  செய்திருப்பீர்கள்.  தற்போது வெளிநாட்டில் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கற்ற நம் பிள்ளைகளை நம் ஊருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வாரம் ஒரு மணி நேரம் ஒதுக்க கேளுங்கள்.   தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் பிறந்த சுமார் 80 லட்சம் பேருக்கு மேல் வெளிநாடுகளில் வசிக்கிறோம்.  அவர்களில் மாவட்டத்திற்கு 100 பேரின் பிள்ளைகள் தன்னார்வலர்களாக வசிக்கும் நாட்டிலிருந்தே  அவர்கள் அப்பா, அம்மா பிறந்த ஊரில் உள்ள அரசுப்பள்ளி, கிராமப்புற இளைஞர்களிடம் வாரம் ஒரு மணி நேரம் ஆங்கிலம் பேசினால் சுமார் 4000 பிள்ளைகளின் பங்களிப்பு இந்த ஆங்கில மோகத்தை ஓரளவு தணிக்கும் என்ற நம்பிக்கையில் உணர்ந்து , இதுவே சரியான தீர்வு என்று இதை எழுதுகிறேன். இதனால் இருவருக்கும் பலன். புலம்பெயர்ந்த மாணவர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள முடியும், தமிழ்நாட்டில் உள்ளவர்களும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும்.  

இதற்காக அமெரிக்காவின் செயிட் லூயிஸ் மாகாணத்தில் ஒரு பொறுப்பாளரை நியமித்து, அமெரிக்காவிலிருந்து தொடங்கி பிற  நாடுகளுக்கு விரிவுபடுத்த English4TamilNadu  திட்டம் Rural Vision Foundation தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு செய்துகொண்டு , இது ஒரு தொடர் நிகழ்வாகப் பயணிக்கவேண்டும் என்று திட்டமிடுகிறது..

இத்திட்டத்தின் பெயர் "English For TamilNadu". ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை இத்திட்டத்தில் தன்னார்வலராகப் பங்களிக்கச் செய்ய English4TamilNadu@RuralvisionFoundation.org என்ற மின்னஞ்சலில் விவரம் தெரிவித்து பதிவுசெய்துகொள்ளலாம்.

தொய்வில்லாமல் இதில் இரண்டு ஆண்டுகள் பங்களிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, அவர்கள் தமிழ்நாடு வரும்போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் பெருமை சேரும் வகையில், தாத்தா பாட்டிகளும் , உறவினர்களும் உங்கள் பிள்ளைகளின் சேவையைக் கொண்டாடும் வகையில் உங்கள் மாவட்ட ஆட்சியர் கையால்  ஒரு  பாராட்டுப் பத்திரம் வழங்க ரூரல் விஷன் பவுன்டேசன் ஏற்பாடு செய்துவருகிறது.

ஏற்கனவே தமிழில் பிறந்தநாள் பாடல், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் , தமிழைத் தமிழாய் பேசுவோம் இயக்கம், ரூரல் விஸ்ன்  பஞ்சயாத்து அகாடமி  என்று தொடர் செயல்பாடுகளை தொலைநோக்கு சிந்தனையுடன், துறைசார்ந்த அறிஞர்பெருமக்களை இணைத்து ,ஆழமாக, விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் செய்துள்ள எமது குழு இந்த ஆங்கிலத்திற்கும் ஒரு நடைமுறைத் தீர்வை முன்னெடுத்து, தமிழ்நாட்டின் ஆங்கில மோகம் தனிய, தமிழ் சமூகத்தின் வளர்ச்சி ஆங்கிலத்தால் வலிமையடையாமல் இருப்பதை குறைக்கவும்,  உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் , களப்பணியும் தேவை என்பதை இக்கட்டுரையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

by Swathi   on 21 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.