LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”

 

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”

பன்னாட்டுப் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்-2021

அறிமுகம்

         “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” என்ற தலைப்பில் பன்னாட்டுப் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் 2021 இணையவழியில் சிறப்பாக நடத்தப்பட்டது. நடுவராகச் சிங்கப்பூரிலுள்ள முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் அவர்களும் பேச்சாளர்களாக அயலகவாழ் தமிழர்கள் ஆறுபேரும் பங்கு வகித்துச் சிறந்த உரையாற்றினர்.

நடுவர் - முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் - சிங்கப்பூர்

         பன்னாட்டுப் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் அவர்கள் பங்கேற்றார். இவர் 450க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் உரையாற்றியவர். தன் முனைப்பு பேச்சாளராகவும் ஆங்கில பேராசிரியராகவும் தொழில் முனைவோராகவும் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றார். பட்டிமன்ற உரைகளுக்காகப் பல விருதுகளைப் பெற்று இன்றுவரை தமிழ் தொண்டாற்றி வருகின்றார்.

உரை

         வாழ்க்கை நடத்தும் முறைகள் மாறிவருவது எப்படிப்பட்ட உளவியல் சிக்கல்களை இளையோருக்கும் முதியோருக்கும் ஏற்படுத்துகின்றன. முதியோருக்கும் இளையோருக்குமான வீட்டு உறவுப்பிணைப்பு, சமூக உறவு பிணைப்பு போன்றவை காலத்திற்கேற்ப மாறி வருகின்றன. இம்மாற்றங்கள் அவர்களுடைய வாழ்வில் குறிப்பிட்ட பாதிப்புகளையும் தாக்கங்களையும் உண்டாக்குகின்றன. அன்றாட வாழ்வியல் நெறிகள், விழுமியங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் வாழ்வியல் மாற்றங்களின் பாதிப்புகளைக் குறித்து தற்போது காணவேண்டியது அவசியமாக உள்ளது. எனவே இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா, என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்த்துவது காலத்தின் தேவையாகும்.

திரு.மகாதேவன் - கத்தார்

         இவர் தொழில் முனைவோராகவும் பொறியியலாளராகவும் கத்தாரில் பணிபுரிந்து வருகின்றார். மேலும் பேச்சாளராகவும் சமூக சேவகராகவும் செயலாற்றி வருகின்றார். இவர் இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

உரை

         இன்றைய வாழ்வியல் முறைகளில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் இளையோர்களே ஆவர். இன்றைய வாழ்வியல் முறைகளால் பிறந்த குழந்தை முதற்கொண்டு பாதிப்பை அடைகின்றது. இக்காலகட்டத்தில் குழந்தைகள் அடையும் பாதிப்புகள் சொற்களிலடங்காதவை. தவழும் வயதில் பள்ளிக்குச் செல்லும் நிலையைப் பெரியோர்களுக்குக் குழந்தைகளுக்குத் திணிக்கின்றனர். சற்று வளர்ந்த சிறுவர் சிறுமியரின் பாடு இதனினும் பெரியதாக உள்ளது. பள்ளிப்பை என்கின்ற பெயரில் பெரிய மூட்டைகளைச் சுமக்கும் சுமைதாங்கியாக உள்ளனர் இன்றைய சிறார்கள். பள்ளி வகுப்புகள் போதாதென்று பலபல சிறப்பு வகுப்புகளுக்கும் மாலைநேரத்தில் சிறுவர் சிறுமியர்களை அனுப்புகின்றனர். இத்தகைய வாழ்வியல் மாற்றங்கள் சிறார்களை மனவழுத்தத்தில் ஆழ்த்துகின்றன. இன்றைய இளைஞர்களுக்கு பணிச்சுமை பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. பணிநெருக்கடிகளை சமாளித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் இரவுபகலாகச் செயலாற்றும் இளைஞர்கள் இன்று ஏராளமாக உள்ளனர். இவர்களுக்குப் பொறுமையாகச் சாப்பிட்டு இளைப்பாறக் கூட நேரமில்லை. முக்கிய பதவிகளிலும் பணியிடங்களிலும் இளையோர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குடும்ப பொறுப்புகளை இளையோர்களே சுமப்பவர்களாக உள்ளனர். இத்தகைய சூழலில் இளையோர் பலரும் தற்கொலை முயற்சிகளுக்கு ஆட்படுகின்றனர். எனவே தற்கால மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையே என்பது உண்மையாகும்.

முனைவர் சித்ரா - ஹாங்காங்

         ஹாங்காங் நாட்டிலிருந்து தமிழர்களின் வாழ்வு முதல் சுமேரிய நாகரிகம் வரை ஆராய்ச்சி செய்து தமிழ் வளர்ப்பவர் முனைவர் சித்ரா அவர்களாவார். இவர் தம் ஆய்வு குறித்துப் பல காணொலிகளையும்  பதிவிட்டு வருகின்றார். தமிழ் எழுதப்படிக்க அறியாத முதியோர்க்கு இணையவழியில் இலவச கல்வி அளித்து வருகின்றார். இவர் இன்றைய மாற்றங்கள் அதிகம் பாதிப்பது முதியோரையே என்று உரையாற்றினார்.

உரை

         அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பற்பல கண்டுபிடிப்புகள் போன்றவற்றின் மூலம் நமது வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகமே கிராமமாக மாறி வருகின்ற சூழலில் பண்பாட்டுச் சீர்கேடுகளும் நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழல் முதியோர்களையே பெரிதும் பாதிக்கின்றது. கைவிடப்பட்ட முதியோர், பணக்கார ஆதரவற்ற முதியோர், பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் முதியோர், கணவனை இழந்த வயோதிகப்பெண்கள், மனைவியை இழந்த வயோதிக ஆண்கள் என முதியோர் எந்நிலையிலிருந்தாலும் அவர்கள் அனைவரின் ஒரே தேவை அக்கறை ஆகும். தற்கால வாழ்வியல் முறையில் முதியோர்க்கு அக்கறை கிடைப்பதில்லை. இதனால் மனஉளைச்சலடைகின்றனர் முதியோர்கள். நவீனத் தொழில்நுட்பங்கள் இளையோருக்குப் புரியும் அளவிற்கு முதியோருக்குப் புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் காலத்தில் இத்தகைய வசதிகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவற்றை உடனே புரிந்து கொள்ளும் ஆற்றல் பெரும்பான்மையாக இருப்பதில்லை. பொதுவாக முதியோர்களை அனுபவச் சுரங்கங்கள் என்று கூறலாம். ஆனால் அவர்கள் அனுபவ அறிவை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஈடுபாடு இருப்பதில்லை. தன்னுடைய பேரப்பிள்ளைகளிடம் உறவாடக்கூடத் தகவல் தொழில்நுட்பம் தேவை என்பதனால் அவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகுகின்றனர் முதியோர்கள். இதனால் மனநிம்மதி அடையவேண்டிய வயதில் மனஅழுத்தம் அடைகின்றனர். எனவே இன்றைய மாற்றங்கள் அதிகம் பாதிப்பது முதியோர்களையே என்று கூறலாம்.

திருமதி.மதிவதனி-சுவிட்சர்லாந்து

         வாணமதி எனப்படும் திருமதி.மதிவதனி அவர்கள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்து வருகின்றார். இணையவழியின் மூலம் பலரிடம் தமிழ் ஆர்வலராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றார். கல்வித்துறையைச் சார்ந்தவர் என்பதால் மாணவர்களின் உளவியலை முழுமையாக அறிந்து உளவியல் ஆலோசனை வழங்கி வருகின்றார். இவர் இன்றைய மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையே என்று உரையாற்றியுள்ளார்.

உரை

         முதியோர் வயதான காலத்தில் நிம்மதியின்றி உள்ளனர் என்றால் இளைஞர்கள் இளம்வயதில் நிம்மதியின்றி வாழ்கின்றனர். குடும்ப பாரத்தை சுமக்கவேண்டிய கட்டாயத்தில் இன்றைய இளையோர்கள் உள்ளனர். குழந்தைகளை பெரியோர் வெளியே சென்று விளையாடவும் பேசவும் அனுமதிப்பதில்லை. குழந்தைகளுடன் பெரியோரின் உரையாடல் படிப்பு மற்றும் உணவு இவற்றை மட்டும் சார்ந்ததாக உள்ளது. பெருகிவரும் விவாகரத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும் சிறார்களுமே என்பதை மறுக்க முடியாது. இன்றைய இளைஞர்களை வழிநடத்திச்செல்ல யாரும் தயாராக இல்லை. இதனால் தடம்மாறி போகின்றனர் இளையோர்கள். தன்வயதில் உள்ளவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தாழ்த்தி பெரியோர்கள் பேசுவதினால் இளையோர்கள் மனமுடைந்து விடுகின்றனர். போட்டி மனப்பான்மையுடனேயே  சிறார்கள் இக்காலத்தில் வளர்க்கப்படுகின்றனர். எனவே தற்கால மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையே என்பது மறுக்கமுடியாதது.

திருமதி.ஜெயாமாறன் - அட்லாண்டா(அமெரிக்கா)

         சிறந்த பேச்சாளராகவும் தமிழ் அறிஞர்களை சிறப்புபேட்டி காணும் ஆளுமையாளராகவும் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ளார் திருமதி.ஜெயாமாறன் அவர்கள். இவர் இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது முதியோரையே என்று உரையாற்றியுள்ளார்.

உரை

         முதியோரின் அறிவுரை கேட்கும் இளையோர்கள் இன்றையச்சூழலில் இல்லை. மாறாக ‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்று அவர்களை மட்டுப்படுத்துபவர்களாகவே உள்ளனர். இன்றைய இளையோர் தனக்காக மட்டுமே எண்ணுபவர்களாகவே உள்ளனர். இதன் காரணமாக முதியோர்கள் பலரும் ஓய்வுபெறவேண்டிய வயதில் வேலைதேடி அலைகின்றனர். வலுக்கட்டாயமாக தகவல்தொழில்நுட்ப வசதியை கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆட்படுகின்றனர் முதியோர்கள். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை உடைய தாய்நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. தன்பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் அலைப்பேசியில் கூட சரியாக பார்க்க முடிவதில்லை. நவீன வாழ்வியல் முறைகளினால் இடர்பாடுகள் பலவற்றை சந்திக்கின்றனர் முதியோர்கள். நிர்கதியாக நிற்கும் முதியோர்களை கவனிக்க தற்சூழலில் ஆளில்லை. நகரங்களில் வாழும் முதியோர்கள் சிறையிலிருக்கும் உணர்வுடனே வாழ்கின்றனர். தற்கால முதியோர்கள் மாத்திரைகளினால் வாழ்பவர்களாக உள்ளனர். காரணம் உணவுமுறை மாற்றங்களாகும். எனவே இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் இளையோருக்கு வெறும் மாற்றங்கள் என்றால் முதியோருக்கு அவை பாதிப்புகள் எனலாம்.

திருமதி.ஸ்ரீகங்கா - பக்ரேன்

         பக்ரேனில் வாழ்ந்துவரும் திருமதி.ஸ்ரீகங்கா அவர்கள் நடனம், பாட்டு, பல பிரபலங்களுடன் பட்டிமன்ற பேச்சு என பலத்துறைகளில் துடிப்புடன் பங்கேற்று சாதித்து கொண்டுவருபவர். இவர் இன்றைய மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையே என்று உரையாற்றியுள்ளார்.

உரை

         வயதான காலத்தில் முதியோர்களுக்கு உடல்ரீதியாகவும் மனாPதியாகவும் பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் தற்காலத்தில் மாற்றமடைகின்ற வாழ்வியல் சூழலில் இளையோர் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்படைகின்றனர். தற்கால இளைஞர்களே பொறுப்புகளை தூக்கி சுமத்துவதிலேயே முதியோர்கள் முனைப்புடன் இருக்கின்றனர். படிப்பு முதல் திருமணம் வரை என அனைத்து நிகழ்வுகளிலும் முடிவெடுக்க முடியாமல் திணரும் நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பண்பாட்டு மாற்றங்கள் சமூகத்தில் பரவலான பின்பு இளையோர்களின் வாழ்வு மிகவும் பாதிக்கப்படுகின்றது. சமூக வலைத்தள ஊடகங்களின் வளர்ச்சியால் வாழ்வின் அந்தரங்கங்கள் பொதுபார்வைக்கு வைக்கப்படுகின்றன. இதில் பெரிதும் பாதிப்புள்ளாகுபவர்கள் இளையோர்களே என்று கூறலாம்.

திரு.பிரபுசின்னதம்பி - நியூஜெர்சி(அமெரிக்கா)

         திரு.பிரபுசின்னதம்பி அவர்கள் சிறந்த பட்டிமன்ற பேச்சாளராகவும் தகவல்தொழில்நுட்ப பணியாளராகவும் செயலாற்றி வருகின்றார். வளர்ந்து வரும் அமெரிக்க தமிழ் சமுதாயத்திற்கு ஊக்கமளித்து முன்னேற்ற பாடுபடுபவராகவும் உள்ளார். தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்துகொண்டு வருகின்றார். இவர் இன்றைய மாற்றங்களில் அதிகம் பாதிப்பது முதியோர்களே என்று உரையாற்றியுள்ளார்.

உரை

         இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் இளையோருக்கே கிடைக்கின்றன. முதியோர்கள் வேலைவாய்ப்பில் கூட ஒதுக்கப்படுகின்றனர். பெரியோர்களுக்கு இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தடுமாற்றங்களாகவே அமைகின்றன. பெரியோர்களிடம் அமர்ந்து பேசக்கூட பலருக்கு நேரமில்லை. இன்றைக்கும் பெரியோர்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருப்பதில்லை. இன்றைய பதின்ம வயதினர் சிறுசெயல்களுக்கு கூட பெற்றோரிடம் போராடுகின்றனர். ஆனால் முதியோர்க்கு தங்களின் உரிமையைக் கூட பிள்ளைகளிடம் பெற தயங்குகின்றனர். வாழ்வியல் மாற்றங்களினால் தங்கள் உரிமைகளைக் கூட இழக்கும் நிலையை காணமுடிகின்றது. இன்றைய மாற்றங்கள் முதியோர்களை முதியோர் இல்லத்திற்கு கொண்டு செல்லுதலை எவரும் மறுக்க முடியாது. பல முதியோர்கள் தனியாக இல்லாவிட்டாலும் தனிமையை உணருகின்றனர். தன் பிள்ளைகளின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துசெல்லும் நிலையைக் காணலாம். எனவே இன்றைய மாற்றங்கள் அதிகம் பாதிப்பது முதியோரையே என்று கூறலாம்.

இரண்டாம் சுற்று

         அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருந்தே உணவு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உணவுமுறை மாற்றங்கள் இதற்கு காரணமாக கூறலாம். தற்காலத்தில் குடும்ப வன்முறை வீட்டில் நடந்தால் குழந்தைகளுக்கு எதிர்த்து கேட்கவும் புகாரளிக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளது. ஆனால் இவ்வுரிமையால் முதியோர்களை இளையோர்கள் பயனற்றவர்களாக கருதுகின்றனர். வீட்டுக்குழந்தைகள் முதியோர்களின் உதவியின்றி வளர்க்கப்படுகின்றனர். இத்தகைய மாற்றங்களில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் முதியோர்களே என்று இரண்டாம் சுற்றில் முனைவர் சித்ரா அவர்கள் கூறினார்.

         இன்றைய கால தகவல் தொழில்நுட்ப வசதிகளின் மூலம் உடனுக்குடன் தகவல்கள் உரியவர்களைச் சென்றடைகின்றன. முதியோர்கள் இவற்றை பயன்படுத்தவே தயங்குகின்றனர். பொறுப்புகளைத் தாங்கும் நிலையை இளம்வயதில் சுமக்கும் எண்ணத்தை முதியோர்களே இளைஞர்களுக்கு ஏற்படுத்துகின்றனர். பல இடங்களில் அவமானங்களையும் வேதனைகளையும் இளையோர்களே சந்திக்கின்றனர். எனவே அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளையோர்களே என்று திரு.மகாதேவன் அவர்கள் இரண்டாம் சுற்றில் கூறினார்.

தீர்ப்பு

         அனைவரின் உரையும் சிறப்பாக அமைந்திருந்தது. முதியவர்கள் காலமாற்றங்களை உணர்ந்து கொள்வதிலேயே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக தங்களின் தேவை தற்போது பெரிதளவும் தேவையில்லை என்பதை ஜீரணிக்கவே பெரிதும் சிரமப்படுகின்றனர். இக்கருத்தினை மறுக்க முடியாது. அதுபோலவே இம்மாற்றங்களினால் மனதளவில் உளவியல் சிக்கல்களை இளையோர்கள் சந்திக்கின்றனர் என்ற கருத்தையும் மறுக்க முடியாது. இதற்கு உலகெங்கும் உள்ள மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் பல்கியிருப்பது ஒரு சான்றாகும். உணவுமுறை மாற்றங்களினால் இளையோரைக் காட்டிலும் முதியோரே பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக  தூித உணவுவகைகள் சில நடுத்தர வயதினருக்குக் கூட சேர்வதில்லை. இதைத்தவிர குறிப்பாக போதைப்பழக்கம் என்ற மாற்றத்தினால் முழுவதும் இளையோர்களே உடலளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் முதியோர் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலத்தில் கீழை நாடுகளான சிங்கப்ப+ர், மலேசியா போன்ற நாடுகளில் இளையோர்களாக பணிபுரிய வந்து இளமைக்காலத்தை துறந்து பொறுப்புகளை நிறைவேற்ற நடுத்தர வயதினராக தாய்நாட்டிற்குச் சென்று பொறுப்புகளை நிறைவேற்ற நடுத்தர வயதினராக தாய்நாட்டிற்குச் சென்று பின் தன் வாழ்வை வாழ தொடங்குகின்றனர் இளையோர் பலர். இது மறுக்க முடியாத உண்மை. இதைப் போலவே தன் வறுமையை பிள்ளைக்குத் தெரியாமல் மறைத்து தன் பிள்ளையை படிக்க வைத்து நல்ல வேலைக்குச் செல்லுமளவிற்கு ஆளாக்கிய இன்றைய முதியோர்களையும் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது. முதியோர் பலருக்கும் தம் மகன்கள் அவர்கள் மனைவிக்கு வீட்டுப்பணி உதவுவதை ஜீரணிக்க முடிவதில்லை. தம் பேரக்குழந்தைகளின் உடை, உணவு மாற்றங்களையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக முதியோர் உள்ளனர். நவீன மாற்றங்களினால் உடல்ரீதியிலும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு தம் விழுமியங்களை இளையோர்கள் தொலைத்திருந்தாலும் அதனை அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஆனால் இவ்விழுமியங்களை முழுவதும் அறிந்தவர்கள் முதியோர்கள். தற்கால இளையோரின் இந்நிலையை முற்றிலும் அறிந்து வருந்துகின்றனர். கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து அதீத பொறுப்புமிக்கவர்களாக விளங்கிய முதியவர்கள் தற்கால மாற்றங்களைக் கண்டு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்புகளை இளையோர் பெற்றாலும் அதனை தாண்டி வரும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. ஆனால் இம்மாற்றங்களை தாங்கிக்கொள்ளும் சக்தி கூட பெரியோருக்கு இல்லை. எனவே இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது முதியோரையே என்று நடுவர் முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

 

 

by   on 28 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐ .டி துறையில் நம்பபடும் கட்டுக்கதைகள்! ஐ .டி துறையில் நம்பபடும் கட்டுக்கதைகள்!
தமிழக ஊர்களின் பெயர் காரணம் -  பகுதி 2 தமிழக ஊர்களின் பெயர் காரணம் - பகுதி 2
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.