|
|||||
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி |
|||||
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் .. ச.பார்த்தசாரதி, மேனாள் தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், தமிழ் கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கண்டுவருகிறது. குறிப்பாக மொழி, வரலாறு, மருத்துவம், கலை, இலக்கியம், தமிழிசை என்று பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி போதுமான அளவில் உள்ளதா? வேறு என்ன கட்டமைப்புகள் தேவை, எப்படி பல ஆர்வலர்களை ஒன்றிணைத்து இன்னும் பல படி வளர்ச்சியை எட்டுவது என்பதைக் குறித்து ஆராயும் நோக்கில் சிந்திப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் வலைத்தமிழ் என்ற தமிழ் தகவல் களஞ்சியத்தை உருவாக்கி நடத்திவ்ருவதில் ஏற்பட்ட பலதுறை புரிதலும், மனிதர்களை நேர்காணல் செய்து ஏற்பட்ட பரந்துபட்ட அனுபவமும்,வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்து உணர்வுப்பூர்வமாக முன்னெடுத்து மேற்கொண்ட பலவேறு கட்டமைப்பு சார்ந்த அனுபவமும், உலக சித்த அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கியதில் பெற்ற அனுபவத்தையும் கொண்டு இந்த தமிழினம் செல்லவேண்டிய திசையை என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இதை எழுத முனைகிறேன். இதன் நோக்கம், நாம் செல்லவேண்டிய திசை குறித்து சிந்திக்க வைப்பதே அன்றி, முழுமைபெற்ற ஒன்றாக கருதிவிடக்கூடாது. இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துகளை அனுபவத்தை பகிர்ந்து, பொது உரையாடல் நிகழ்த்தி இந்த சிந்தனை கூர்தீட்டப்படவேண்டும் என்பதே இதன் நோக்கம். தமிழ்மொழி: தமிழ்மொழி இன்று பயிற்றுமொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இல்லாத சூழல் நிலவிவருகிறது. தமிழ்ப்பள்ளிகள் குறைந்து ஆங்கிலவழிப் பள்ளிகளை நோக்கி நகர்ந்து வருகிறோம் . ஆங்கிலத்தில் பேசுவது பெருமையாகப் பார்க்கப்படும் நிலையில், தமிழ்மொழிதானே என்ற பார்வை சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் அடர்த்தியாக வாழும் தமிழ்நாட்டில் தமிழ் காப்பாற்றப்படாமல் போனால், கலாச்சார மாற்றம் ஏற்பட்டு மேற்கத்திய மோகத்தில் நம் அடுத்த தலைமுறை பயணித்தால், நாம் எவ்வளவு சிந்தித்தாலும் பின்னடைவே கிட்டும். எனவே மொழி வாழ்வியலில் ஒரு மதிப்புமிக்க நிலையை தமிழ்நாட்டில் பெறவேண்டும். அதற்காக ஆங்கிலமோ,பிற மொழிகளே கற்கக்கூடாது என்பதல்ல நம் நோக்கம். பிறமொழிகளைக் கற்ற பாரதியால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடமுடிந்தது. ஆனால் ஒரு இனம் தன் தாய்மொழ்யை சரியான அடிப்படை கல்வியாக, சிந்திக்கும் மொழியாகக் கொள்ளாமல் வேறு பல மொழிகளைக் கற்பதால் பலனில்லை என்பதை உணர்த்தவேண்டியது அவசியம். இதற்கு ஒரு வலுவான “தாய்மொழி அறக்கட்டளை” புலம்பெயர் தமிழர்களால் தொடங்கப்பட்டு ஆவணப்படங்கள், திரைப்படங்களில் சில கருத்துகளை கொண்டுசெல்ல முயற்சி, பொது நிகழ்ச்சிகள், மாவட்ட குழுக்களை உருவாக்கி கருத்தரங்கங்கள் என்று தொடர் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் இலக்கியங்கள்: இன்று தமிழ் இலக்கியங்கள் தமிழகத்தில் இலக்கிய மேடைகளில் வயது முதிர்ந்தவர்களிடத்திலும், தமிழ் பாடப்புத்தகங்களிலுமே பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக இளைய சமூகம் அவைகளைப் பற்றிய பெருமிதம் கொள்வதையோ, தங்களுக்கு கிடைத்தற்கரிய அறிவாகவோ பார்ப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் இலக்கிய ஆய்வுக் கூட்டங்கள் அளவு கூட தமிழகத்தில் இலக்கியங்கள் பேசப்படுவதில்லை என்பது மிக வருந்தத்தக்க விடயமாகும். இலக்கியங்களை கதைகளாக, ஆர்வமூட்டும் வகையில் அதில் உள்ள கருத்துகளை தொகுத்து குறும்படம், காணொளி, திரைப்படங்களில் பயன்படுத்துதல், பாடத்திட்டத்தில் சொல்லிக்கொடுக்கும் முறையை மாற்றுதல் என்று பல பணிகளை செய்யமுடியும். இதற்கு “தமிழ் இலக்கிய ஆய்வு அறக்கட்டளை” ஒன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களால் உருவாகி, தொழில்நுட்பம் கொண்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டால் இளைய தலைமுறைக்கு நம் சங்க இலக்கியக் கூறுகளை கடத்தமுடியும். சிறுவர் இலக்கியம்: நாற்பது ஆண்டுகளுக்கு முன் தழைத்தோங்கி இருந்த சிறுவர் இலக்கியம் இன்று கவனிப்பாரற்று, முக்கியத்துவமின்றி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. உதாரணத்திற்கு, 1975-ல் கொண்டாடப்பட்ட சிறுவர் இலக்கிய படைப்பாளிகள் சங்க ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்ட விழா மலரில் 400 சிறுவர் இலக்கிய படைப்பாளிகளின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று இத்தனை கோடி மக்கள் வளர்ந்துள்ள நிலையில் 100 பேர் கூட அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டிய கருத்துகள் குறித்து எழுத படைப்பாளிகள் இல்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும் . என்ன செய்யலாம் “ தமிழ் சிறுவர் இலக்கிய அறக்கட்டளை” ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் ஏற்படுத்தி இந்த துறையை மீட்டெடுக்க வேண்டும் .. தமிழர் வரலாறு: தமிழர் வரலாறு என்பது பல்வேறு படையெடுப்புகளால், மொழி சிதைவுகளால் கால ஓட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ளது. இந்திய வரலாறு என்று பார்த்தால், பெரும்பாலும் வட இந்திய பங்களிப்புகளே அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே ஒரு சரியான ஆய்வுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, போதிய நிதி ஒதுக்கி “தமிழர் வரலாறு’ ஆய்வுக்கு உட்படுர்த்தப்பட்டு, அனைத்து பிறமொழி தரவுகளை திரட்டி சரியான, நம்பத்தகுந்த, பிற மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வரலாராக ஒன்றை உருவாக்கவேண்டியது அவசியம். இதற்கு புலம்பெயர் தமிழர்கள் “தமிழர் வரலாறு ஆய்வு மையம்” என்ற ஒன்றை உருவாக்கவேண்டியதும், அடுத்த தலைமுறைகளுக்கு சரியான தகவல்களை சொல்லிக்கொடுக்கவேண்டியதும் அவசியம் . தமிழிசை: இன்று நம்மிடம் இருக்கும் தொன்மையான தமிழிசை இசை வேறொரு இனத்திற்கு இருக்குமானால் இந்நேரம் பல மில்லியன் டாலர்களில் ஆய்வுகளும், நூல்களும், ஒட்டுமொத்த சமூகமும் கற்றுத்தேர்ந்த அறிவும் இருந்திருக்கும். ஆனால் பணம் படைத்தவர்கள், மேடையில் தமிழிசை குறித்து பேசிய அளவில் ஒரு தமிழிசை மேடையை மாவட்டம்தோறும் உருவாக்கி அதை வளர்க்க முன்வரவில்லை. இன்று நலிவுற்றிருக்கும் தமிழிசையை மீட்டெடுக்க புலம்பெயர் சமூகம் “உலகத் தமிழிசை ஆய்வு அறக்கட்டளை” என்ற ஒன்றை நிறுவி அதற்கு போதிய நிதி ஒதுக்கி தமிழிலும், பிற மொழிகளிலும் நூல்களை வெளியிட்டு, வகுப்புகளை நடத்தி அடுத்த தலைமுறைக்கு இதை கடத்த வேண்டும். தமிழ் மருத்துவம்: நம் சித்தர்களின் சிந்தனைகள் தமிழகத்தில் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை, இதை ஒரு அன்றாட வாழ்வை ஓட்டும் தொழிலாக பலரும், ஏழைகளுக்கு எட்டாத பணக்கார மருத்துவமாக பலரும், ரகசியம் காக்கும் மருத்துவம், என்று பலரும், உலகளாவிய அளவில் மற்ற மருத்துவத்துடன் போட்டிபோட்டு, ஆய்வுகளுக்கு உட்பட்டு, அறிவியல் தரவுகளைக் கொண்டு, ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு சீன மருத்துவத்திற்கு இணையாக வளரவேண்டிய மருத்துவம் என்ற பார்வையில் சிலரும் உள்ள துறை. இதை உலக அரங்கில் பெருமையாக கொண்டுசெல்ல “உலக சித்த மருத்துவ ஆய்வு அறக்கட்டளை” என்ற ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் கட்டமைத்து உலகெங்கிலும் சித்தமருத்துவம் தமிழ்மொழியின் பெருமையை போற்றும்படி செய்யவேண்டும். மரபுக் கலைகள்: இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ள நம் தமிழகத்தில் இன்று காட்சிக்காக பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மரபுக் கலைகளில் உள்ளவர்களுக்கு சரியான வருமானம் இல்லாமலும், தொலைகாட்சி உள்ளிட்டவைகளின் ஆதிக்கங்கள் இவைகளின் எதிர்காலத்தை,இருப்பை வெகுவாகப் பாதித்துள்ளன. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் “மரபுக் கலைக் குழு”-வை ஏற்படுத்தி, தமிழகத்திலிருந்து பலரையும் அழைத்து பொருளாதாரத்திற்கு உதவுதல் “தமிழ் மரபுக்கலை அறக்கட்டளை” ஒன்றை தொடங்கி ஆவணப்படுத்தலாம். வளர்ச்சிக்கு துணைநிறக்கலாம் கட்டிடக்கலை: நம் கோயில்கள் உள்ளிட்ட பல கட்டிடக்கலைகள் அழிந்துவரும் நிலையம், ஆவணபடுத்த போதிய ஆர்வம் இல்லாத அன்றாட வாழ்க்கை போராட்டத்தில் தமிழகம் சென்றுகொண்டுள்ள நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்கள் “தமிழர் கட்டிடக்கலை ஆய்வு அறக்கட்டளை” என்ற ஒன்றை உருவாக்கி, போதிய நிதி ஒதுக்கி இவைகளை ஆவன்படுத்த, பிற மொழிகளில் மொழிபெயர்த்து பாடங்களில் வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆவணப்படுத்துதல்: தமிழில் ஆவணப்படுத்துதல் என்பது ஓரளவு வளர்ந்து வருகிறது . இருப்பினும் “தமிழ் ஆவணம் அறக்கட்டளை “ என்ற ஒன்றை உருவாக்கி அல்லது ஏற்கனவே இயங்கும் பல அறக்ட்டளைகளை ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றம், பகிருதல், பாதுகாத்தல் ஆகிய பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சல்லிக்கட்டு போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஆவணப்படுத்த இந்த அறக்கட்டளை கவனம்செலுத்தவேண்டும். தமிழ் இருக்கைகள்: ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைத்ததுபோல், உலகெங்கும் பல நாடுகளில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் தமிழிருக்கையை அமைக்க அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் முன்வரவேண்டும். இது புலம்பெயர்ந்த குழந்தைகள் தமிழ் ஆய்வை அந்தந்த நாடுகளில் ஆய்வு செய்ய பேருதவியாக இருக்கும். இதற்காக உருவாகியுள்ள “தமிழிருக்கை அறக்கட்டளை” இதை செய்ய கைகொடுப்போம். இறுதியாக, ஏன் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் இவைகளை செய்ய முன்வரவேண்டும்? புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் மொழியை விட்டு கொஞ்சம் தள்ளி வாழ்கிறார்கள், உலகப் பார்வை கொண்டவர்கள் , பிற இனத்தவர்களும் எப்படி தங்கள் மரபை போற்றுகிறார்கள் என்பதை உணர்ந்தவர்கள், எனவே அவர்களுக்கு ஆர்வமும், நம் மொழியின் தொண்மையையும் பெருமிதத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். மேலும், நிழலின் அருமை வெய்யிலில்தான் தெரியும் என்பதற்கிணங்க இழப்புகளை,இருப்பிடத்தை, உறவை பிரிந்து வாழும் நம் வழிகள் நமக்கு வேர்களைப் பற்றிய அக்கறை அதிகம். மேலும், தன்முனைப்பு, குழு அரசியல், சுய அங்கீகாரம் என்று அனைத்தையும் கொஞ்சம் கடந்தவர்கள் . பொருளாதாரத்தில் மேம்பட்டும், ஒரு செயலை செய்யும் சரியான தொடர்புகளை ஏற்படுத்தும் வசதியும் கொண்டவர்கள் என்றவகையில் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களது பங்களிப்பு மிக அவசியம் ..
|
|||||
by Swathi on 22 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|