LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை

தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை

தேற்றான்:

    இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும். இந்த மரம் நம் முன்னோர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தற்போது இதன் முக்கியத்துவத்தை இழந்து அதன் பயன்களை நம் வருங்கால சந்ததியினர் அறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். தேற்றா மர வனம் (கதகாரண்யம்), தென்கயிலை, திருக்கோளிலி, புஷ்பவனம் என்றெல்லாம் அறியப்பட்ட திருக்குவளை கோயிலின் ஷ்தல விருட்சமாக தேற்றான் கொட்டை மரம் விளங்குகிறது. தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று.

இலக்கியத்தில் தேற்றான்:

    தேற்றா மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம், சில்லம், கதலிகம் என்பது போன்ற பல பெயர்களோடு பிங்கலம் என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேறு, தேத்தாங்கொட்டை என்ற பெயர்களும் உள்ளன. கலித்தொகையிலும் நற்றிணையிலும் கூட இதன் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

‘கலம் கிதை இல்லத்து காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் நலம் பெற்றான்’ என்பது கலித்தொகை பாடல் வரியாகும். தேற்றான் கொட்டையைத் தேய்க்கும் போது கலங்கிய நீர் தெளிவதைப் போல, தலைவி தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்’ என்பது அந்த பாடல் வரியின் பொருள்.

காணப்படும் இடங்கள்:

    தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம் மற்றும் விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன.

கலங்கிய நீரைத் தெளிய வைக்கும் தேற்றான:

    பொதுவாக முற்காலங்களில் நம் முன்னோர், தேற்றாங்கொட்டையைச் சேறும் சகதியுமாகக் கலங்கிக் காணப்படும் நீரைத், தெளிய வைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். குளம், ஊருணி போன்றவற்றிலிருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால், தேற்றான் கொட்டையால் நீரைத் தெளிய வைத்துப் பயன்படுத்தினர்.

    இன்றைக்கும் கூட, இது சில கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது. தஞ்சாவு+ர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க, அதாவது கலங்கிய நீர் நிரப்பப்பட்ட பானையின் உட்புறம் தேற்றான் கொட்டையைத் தேய்த்து வைப்பார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகுப் பானை நீர் தெளிந்து காணப்படும். அழுக்குகள் மற்றும் கிருமிகள் இல்லாத சுத்தமான குடிநீர் கிடைக்கும். இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் இது நடைமுறையில் உள்ளது.

ருசியான குடிநீர்:

    அமலக்கா (நெல்லி), நாகா (நன்னாரி), உசிரா (வெட்டி வேர்), முஷ்டா (கோரைக்கிழங்கு), கோசடக்கா (நுரைபீர்க்கை), அஞ்சனா (காட்டு ஏலக்காய்) போன்றவற்றைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் தேற்றான் கொட்டைத் தூளைச் சேர்த்து, கிணற்று நீர் அல்லது கலங்கிய நீரில் கலந்தால் கசப்பாக இருந்தாலும், சப்பென்று இருந்தாலும் உப்பாக இருந்தாலும், ருசியில்லாமல் நாற்றமடிக்கக் கூடியதாக இருந்தாலும் அவற்றைத் தெளிய வைத்துவிடும். அந்த நீரைக் குடித்தால் சுத்தமாகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

மீன்பிடிக்க உதவும் தேற்றான்:

    ஏரி, குளம், குட்டைகளில் மீன்களைப் பிடிக்கவும் தேற்றான் கொட்டை மரத்தின் சக்கையை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதாவது அந்த மரத்தின் காய்களை இடித்து, கொட்டையை எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையை இந்த நீர்நிலைகளில் போடுவார்களாம். அப்போது அந்தச் சக்கையானது, நீரோடு கலக்கும் போது மீன்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், மீன்கள் கரை ஒதுங்கிவிடுமாம். அதன் பிறகு மிக எளிதாக அந்த மீன்களை எடுத்து வந்துவிடுவார்களாம்.

தேறாதவனையும் தேற்றும் தேற்றான்:

    தேற்றான் மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும் இதன் விதைகளே மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

    இதன் கொட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்குச் சிறந்த மருந்து. எல்லாவற்றுக்கும் மேலாகத் தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான் மரம்.

மருத்துவப் பயன்கள்:

    தேற்றான் கொட்டைத்தூள், திரிகடுகுத் தூள், சீரகத் தூள், சித்தரத்தைத் தூள் ஆகியவற்றுடன் பால் சேர்த்து பசை போல் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனோடு நான்கு பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர்விட்டு பாகு தயாரித்து அதனுடன் ஏற்கெனவே பசைபோலத் தயாரித்து வைத்திருக்கும் மருந்துக் கலவையைச் சோத்துக் கிளர வேண்டும். இது அல்வா பதத்துக்கு வந்ததும், நெய்விட்டுக் கிளறி இறக்க வேண்டும். நெய் தனியாகப் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி, தேன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த லேகியத்தைக் காலை, மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் தேறி வரும். தயார் செய்ய முடியாதவர்கள் சித்த ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும் தேற்றான் கொட்டை லேகியம் மற்றும் அஸ்வகந்தா லேகியம் இரண்டையும் வாங்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் தேறுவதுடன் உடலும் நன்றாக வலுவடையும்.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனமடைவதுடன் தூக்கம் கெட்டு விடும். அப்படிப்பட்டவர்கள் தேற்றான் கொட்டை தூளையும், செண்பகப் பூவையும் நீர்விட்டுக் கொதிக்க வைத்து, பால் சேர்த்துக் குடித்து வந்தால் இந்தப் பிரச்சனை சரியாகும். இவ்வளவு பயன் தரும் தேற்றான் மரத்தை பொது வெளிகளில், நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் வைத்து வளர்க்கலாம்.

by Lakshmi G   on 06 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.