LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு

வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு

நீரின்றி அமையாது உலகு

இந்தியச்சுடர் கல்வி அறக்கட்டளை

வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு

                71 சதவீதம் நீர்ப்பரப்பினைக் கொண்டுள்ள இப்புவியில், 3 சதவீதம் நன்னீர் மட்டுமே நம்மால் பயன்படுத்தப்படுகிறது. பருவநிலை மாறுபட்டாலும், பெருகிவரும் மக்கள் தொகையாலும், அதிகப்படியான தண்ணீர்ப் பயன்பாட்டாலும் தற்போதுள்ள நீர்நிலைகளில் உள்ள நீரினைத் திறம்படவும், சிக்கனமாகவும் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

     தற்போதைய சூழ்நிலையில் வீடு, பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை போன்ற அனைத்து இடங்களிலும் ஏற்படும் தண்ணீர்ப் பற்றாக்குறையினைச் சரி செய்ய, உடனடித் தீர்வாக மக்கள் நிலத்தடி நீரையே (போர்வெல்) நம்பியிருக்கின்றனர். நிலத்தடி நீரைத் தொடர்ந்து உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயமும் ஏற்படுகிறது. முடிந்தவரையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தவிர்த்துத்  மழைநீரைச் சேமிப்பது நன்மை பயக்கும்.

எப்படி மழைநீர் சேமிக்கப்பட்டு வருகிறது?

• குளம், குட்டை, ஊருணி போன்ற பகுதிகளைச் சுத்தம் செய்து மழைநீரைச் சேமித்தல்.

• மேற்கூரைகளின் மீது விழும் மழைநீரைச் சேகரித்து, அதை நேரடியாகப் பூமிக்குள் செலுத்துவது.

• மேற்கூரைகளின் மீது விழும் மழைநீரைச் சேகரித்து, அதை இயற்கை முறையில் வடிகட்டி, ஒரு பெரிய சேமிப்பு தொட்டியில் சேமித்தல்.

     இயற்கை முறையில் மழைநீரை வடிகட்டிச் சேமிக்கும் முறையைச் சிலர் நடைமுறைப்படுத்தி உள்ளனர். இருப்பினும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அதிகப் பரப்பளவு கொண்ட பொது இடங்களில், இம்முறையை நடைமுறைப்படுத்தினால் அது பெருமளவு  பலன் கொடுக்கும். இம்முறையானது அதிக மக்களால் பயன்படுத்தப்படுமேயானால், நிலத்தடியில் உள்ள நீரை எடுக்கும் தேவை குறையும். ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். இது குறித்து இக்கையேடு விளக்குகிறது.

மழைநீரை நிலத்தடித் தொட்டியில் சேமித்தல்

     கட்டடத்தின் மேற்கூரையில் விழும் அனைத்து மழை நீரையும், பல குழாய்களின் (DOWN PIPE) உதவியுடன் சேகரித்து, அந்நீர் முழுவதும் ஒன்றாக இணைந்து ஒரு குழாயின் வழியாக வருமாறு செய்ய வேண்டும். கூரையின் மீது விழுந்த நீரானது சற்று சுத்தமற்று இருக்கும் என்பதால் அதை வடிகட்டிப் பின்னர் நிலத்தடித் தொட்டியில் சேமிக்க வேண்டும். மழைநீரை வடிகட்ட பல்வேறு வடிகட்டும் கருவிகள் சந்தைகளில் கிடைத்தாலும், அக்கருவிகளின் செயல்திறனைவிட இயற்கை வடிகட்டியின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அதிக அளவு நீரையும் வடிகட்ட இயலும்.

இயற்கை மழைநீர் வடிகட்டி அமைக்கும் முறை

தேவைப்படும் பொருட்கள்

• வேறுபட்ட அளவிலான கூழாங்கற்கள் (1/4 இன்ச், 1/2 இன்ச், 1/4 இன்ச்)

• கப்பி (மணலைவிடச் சற்று பெரிய கற்கள்)

• சதுர வடிவத் துளைகளைக் கொண்ட கம்பி வலை (துளைகளின் அளவு ¼ இன்ச், 1/2 இன்ச், 3/4 இன்ச்)

• குழாய் (PVC)

முன்னேற்பாடு

• முதலில் கால் இன்ச் அளவு கொண்ட இரும்புக் கம்பி வலையால், கூழாங்கற்களைச் சலிக்க வேண்டும். அவ்வாறு சலிக்கும் போது கம்பி வலையின் மேற்பகுதியில் தேங்கும் கூழாங்கற்களைத் தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

• பிரித்து எடுக்கப்பட்ட கூழாங்கற்களை அரை இன்ச் அளவு கொண்ட இரும்புக் கம்பி வலையால் சலித்து. கம்பி வலையின் மேற்பகுதியில் தேங்கும் கூழாங்கற்களைத் தனியாகவும், கம்பி வலையின் கீழே விழக்கூடிய 1/4 இன்ச் அளவுடைய கூழாங்கற்களைத் தனியாகவும் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

• அரை இன்ச் அளவு கொண்ட கம்பி வலையால் சலித்த போது மேற்பகுதியில் பெறப்பட்ட கூழாங்கற்களை, முக்கால் இன்ச் அளவு கொண்ட கம்பி வலையால் சலித்து, பிரிக்கும் போது கம்பி வலையின் மேற்பகுதியில் தேங்கக் கூடிய 3/4 இன்ச் கூழாங்கற்களைத் தனியாகவும், கம்பி வலையின் கீழே விழக்கூடிய 1/2 இன்ச் கூழாங்கற்களைத் தனியாகவும் பிரிக்க வேண்டும். தற்போது நம்மிடம் மூன்று வேறுபட்ட அளவுடைய (1/4 இன்ச், 1/2 இன்ச், 3/4 இன்ச்) கூழாங்கற்கள் இருக்கும். அதனைத் தனித்தனியே பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

• மணலை நன்றாகச் சலித்து, அதிலிருந்து கப்பியைப் (மணலைவிடச் சற்று பெரிய கற்கள்) பிரித்தெடுக்க வேண்டும்.

• தேர்வு செய்யப்பட்ட கூழாங்கற்கள் மற்றும் கப்பி முதலியவற்றை 4 முதல் 5 முறை சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவுவது மிகவும் அவசியமாகும்.

• குழாய் (1) – வடிகட்டும் தொட்டியின் நீளத்திற்கேற்ப பக்கவாட்டில் துளையிடப்பட்ட குழாய் (மழைநீர் வடிகட்டும் தொட்டிக்குள் நீரினை விழச் செய்வது). வடிகட்டும் தொட்டியின் உள்பகுதியில் உள்ள குழாயின் முனைப்பகுதி மூடியிருக்க வேண்டும்.

• குழாய் (2) – படத்தில் காட்டியுள்ளபடி, பகுதி அளவு சுற்றிலும் துளையிடப்பட்ட குழாய் (வடிகட்டப்பட்ட நீரானது மழைநீர் சேமிப்பு நிலத்தடித் தொட்டியை அடைய உதவுவது). துளையிடப்பட்ட பகுதியின் முனைப்பகுதி மூடியிருக்க வேண்டும்.

இயற்கை மழைநீர் வடிகட்டும் தொட்டியின் அமைப்பு மற்றும் உள்ளீடுகள்

இயற்கை மழைநீர் வடிகட்டி அமைக்க, நிலத்திற்கு மேற்பரப்பில் நீளம், அகலம், உயரம் முறையே 10 அடி 1.5 அடி 2.5 அடி அளவுகளைக் கொண்ட ஒரு தொட்டி அமைக்கப்பட வேண்டும். (பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அதிகப் பரப்பளவு கொண்ட பொது இடங்களில் தரைமேல் தொட்டியாகவும் கட்டலாம்). மழைநீர் சேகரி ப்புத் தொட்டி மற்றும் இயற்கை வடிகட்டும் தொட்டி இரண்டையும் கட்டும் போதே துளையிடப்பட்ட குழாய்களைப் படத்தில் காட்டியுள்ளவாறு பொருத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .இல்லையென்றால் குழாய்களைத் துளையிடுவதில் சிரமம் ஏற்படும்.

• இயற்கை மழைநீர் வடிகட்டும் தொட்டியைத் தண்ணீர் விட்டு நன்கு கழுவ வேண்டும்.

• முக்கால் இன்ச் அளவு கொண்ட கூழாங்கற்களைத் தொட்டியின் அடிப்புறத்தில் ஆறு இன்ச் உயரம் வரை நிரப்ப வேண்டும்.

• அதற்கு மேலடுக்கில் அரை இன்ச் அளவு கொண்ட கூழாங்கற்களை ஒரு இன்ச் உயரம் வரை நிரப்ப வேண்டும்.

• அதற்கு மேலடுக்கில் கால் இன்ச் அளவு கொண்ட கூழாங்கற்களை ஒரு இன்ச் உயரம் வரை நிரப்ப வேண்டும்.

• இம்மூன்று அடுக்குகளும் கூழாங்கற்களாக இருப்பது அவசியம்.

• மேலடுக்கில் கப்பியை (மணலைவிடச் சற்று பெரிய கற்கள்) மூன்று இன்ச் உயரம் வரை நிரப்ப வேண்டும்.

• மேற்கூரையின் மீதிருந்து வரும் சேகரிக்கப்பட்ட நீரானது வடிகட்டும் தொட்டியினுள் வந்து விழும் வண்ணம் அடிப்புறத்தில் துளையிட்ட ஒரு குழாயினைக் கப்பிக்கு மேற்புறத்தில் இருக்கும் வண்ணம் அமைக்க வேண்டும். குழாயின் முனை மூடியிருக்க வேண்டும்.

• வால்வு (1) – மேற்கூரையில் சேகரிக்கப்பட்ட மழைநீரானது, மழைநீர் சேகரிப்புக் குழாய் வழியாக இயற்கை மழைநீர் வடிகட்டும் தொட்டியை அடைய உதவும் திறப்பு.

• வால்வு (2) – மேற்கூரையில் சேகரிக்கப்பட்ட மழைநீரானது, மழைநீர் சேகரிப்புக் குழாய் வழியாக நேரடியாக நிலத்தடியில் செலுத்த உதவும் திறப்பு.

• இயற்கை மழைநீரை வடிகட்டும் தொட்டியைத் தூசு மற்றும் பூச்சிகள் நுழையா த வண்ணம் கடப்பாக்கல் அல்லது சிமெண்ட்டால் செய்யப்பட்ட ஸ்லாப் அல்லது கிராணைட் கல் கொண்டு மூட வேண்டும்.

நிலத்தடி மழைநீர் சேமிப்புத் தொட்டி

     நிலத்தடி மழைநீர் சேமிப்புத் தொட்டியானது சாதாரணமாக நாம் கட்டும் நிலத்தடித் தொட்டியைப் போன்றதே. பயன்பெறுவோரின் எண்ணிக்கையைப் பொருத்தும் தண்ணீரின் தேவையைப் பொருத்தும் நிலத்தடித் தொட்டியின் கொள்ளளவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதர தண்ணீர் இணைப்பை இத்தொட்டியில் இணைக்கக்கூடாது. மழைநீர் சேமிப்புத் தொட்டி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் போன்றவை அதற்கெனத் தனியாக இருப்பது நல்லது.

செயல்படும் விதம்:

     எப்பொழுதும் வால்வு – 1 ஐஅடைத்தும், வால்வு -2 ஐ திறந்தும் வைக்க வேண்டும். கனமழை பெய்யும் நேரத்தில் 15 நிமிடங்கள் கழித்து வால்வு – 1 ஐ திறந்து பின்வால்வு – 2 ஐஅடைக்க வேண்டும். இதனால் மழைநீரானது இயற்கை மழைநீர் வடிகட்டியால் வடிகட்டப்பட்டு நேரடியாக மழைநீர் சேமிப்புத் தொட்டியினைச் சென்றடைந்துவிடும். அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில் நீரானது மழைநீர் சேமிப்பு தொட்டியின் முழுக்கொள்ளளவை எட்டியவுடன் வால்வு – 1ஐ அடைத்துவிட்டு, வால்வு -2 ஐ திறந்துவிட வேண்டும். இதனால் மழைநீரானது நேரடியாக நிலத்தடியைச் சென்றடைந்துவிடும்.

     இரவு நேரங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டால் இந்த வால்வுகளை இயக்க சென்சார் உதவியுடன் தானியங்கிக் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

பராமரிப்புப் பணிகள்:

     மழைநீரை வடிகட்டும் தொட்டியை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறந்து, மேற்பரப்பில் உள்ள கப்பியைச் சுத்தமான நீரில் நன்றாகக் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். இல்லையென்றால் பழைய கப்பியை நீக்கிவிட்டு, புதிய கப்பியையும் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.

மழைநீரைச் சேகரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

• மேற்கூரையிலிருந்து வரும் நீரானது சுத்தமற்று இருக்கும் என்பதனால், கனமழை பொழியும் நேரத்தில் முதல் 15 நிமிடங்கள் சேகரிக்கப்பட்ட மழைநீரை வடிகட்டும் தொட்டிக்குச் செலுத்தாமல், நேரடியாக நிலத்தடிக்குச் செல்லுமாறு (கFIRST FLUSH) செய்வது அவசியம். இதன் காரணமாகவே வால்வு – 1 ஆனது எப்போதும் அடைத்து வைக்கப்பட வேண்டும்.

• மழைநீரானது மேற்கூரையிலிருந்து மழைநீர் சேகரிப்புக் குழாயினுள் நுழையும் இடத்தில் சல்லடை வைப்பதன் மூலம் மேற்கூரையின் மீதுள்ள குப்பைகள் சேகரிப்புக் குழாயில் சென்று அடைப்பதைத் தவிர்க்க இயலும்.

• மழைநீர் சேமிப்புத் தொட்டியின் உட்புறத்தில் சூரிய ஒளிபட்டால் பாசிகள் மற்றும் பூஞ்சைகள் உருவாகும் அபாயம் உள்ளதால், சூரிய ஒளிபடாத வண்ணம் இருப்பது மிகவும் அவசியம்.

• மழைநீர் சேமிப்புத் தொட்டியின் மூடியை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்க வேண்டும்.

• நிலத்தடித் தொட்டியின் மூடியானது, தரையைவிடச் சற்று உயரமாக இருப்பது அவசியம். இதன் மூலம் தேவையற்ற நீர்த் தொட்டியில் நுழையா வண்ணம் இருக்கும்.

கூடுதல் தகவல்கள்

• மழைக்காலமான அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழைநீரைப் பயன்படுத்துவதோடு, அம்மழைக்கால இறுதி வாரத்தில் பெய்யக்கூடிய மழை நீரை இம்முறை மூலம் சேமித்து கோடைக்காலங்களுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நிலத்தடிநீர் உபயோகம் கணிசமாகக் குறைந்துவிடும்.

• கோடைக்காலங்களில் ஓரிரு நாள்கள் பெய்யக்கூடிய மழைநீரைச் சேமிப்பதன் மூலம் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கும் அந்நீரைப் பயன்படுத்த முடியும். ஆகவே, இம்முறையைப் பின்பற்றுவதனால், வருடம் முழுவதிற்குமுரன நீர்த் தேவையைச் சமன் செய்ய இயலும்.

• மேற்கூரையை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது நல்லது.

• தேற்றான் கொட்டையை மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் பயன்படுத்துவதன் மூலம் மேற்கூரை மீதிருந்து வரும் மழைநீரில் உள்ள சிறு மாசுக்களை நீக்கலாம்.

பொதுவான சந்தேகங்களும் விடைகளும்

1. இம்முறை மூலம் மழைநீரைச் சேமிக்க எவ்வளவு செலவாகும்?

 

10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி (தோராயமாக)

50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி (தோராயமாக)

 

நிலத்தடித் தொட்டி அமைக்க

ரூ.90,000

ரூ.4,50,000

 

இயற்கை மழைநீர் வடிகட்டி அமைக்க

ரூ. 8,000

ரூ.10,000

ப்ளம்பிங் செலவு

ரூ.10,000

ரூ.10,000

 

மொத்தம்

ரூ. 1,08,000

ரூ.4,70,000

 

 

2. மழைநீர் குடிப்பதற்கு உகந்ததா?

     மழைநீர் சுத்தமாக இருப்பதனால் அதனைப் பருகலாம். மழைநீரை எந்த அசுத்தமும் இல்லாமல் சரியாக சேமிக்க வேண்டும். பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்ட மழைநீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதற்குப் பயன்படுத்தலாம். குடிப்பதற்கு உகந்ததாகப் பரிந்துரைக்கப்படும் pH-இன் அனவு 5 முதல் 5.5 வரை இருக்கலாம். தொட்டியில் சேமிக்கப்பட்டுள்ள pH-இன் அளவு சோதனைக்குப் பிறகு மட்டுமே உறுதிப்படுத்தப்படும். தாமிரப் பாத்திரங்களில் மழைநீரைச் சேமித்துக் குடித்தல் மேலும் சிறந்தது. இது மழைநீரின் அமிலத்தன்மையை சமன் செய்யும். மழைநீரை அருந்துவதில் ஏதேனும் அச்சம் இருப்பின் குடிப்பதைத் தவிர்த்து இதரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

3. மழைநீரில் TDS எவ்வளவு இருக்கும்?

     குடிப்பதற்கு உகந்ததாகப் பரிந்துரைக்கப்படும் TDS 500ppm. மழைநீரில் உள்ள TDS 10-20ppm வரை இருக்கும். இருந்த போதிலும் மழைநீர் சுத்தமானதாக இருப்பதனால் குடிப்பதற்கு ஏற்றது.

4. ஏன் கூழாங்கற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்? ஜல்லியைப் பயன்படுத்தக் கூடாதா?

     ஜல்லியானது பெரும்பாலும் ஒரேமாதிரியான வடிவம் கொண்டவையாக இருப்பதில்லை. இந்த ஜல்லிக்கற்களை நாம் இயற்கை மழைநீர் வடிகட்டியில் பயன்படுத்தும் போது, கற்கள் ஒன்றோடு ஒன்று மேற்பொருந்துவதனால் மழைநீர் முறையாக வருவதில்லை. கூழாங்கற்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான வடிவம் (உருண்டை) கொண்டவையாக இருக்கின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும்போது கற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நீரானது எளிமையாக வடிந்து செல்கிறது. ஆகவே ஜல்லிக் கற்களுக்குப் பதிலாகக் கூழாங்கற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது.

5. ஏன் மற்ற நீரை மழைநீருடன் கலக்கக் கூடாது?

     பொதுவிநியோகக் குழாயில் வரக்கூடிய நீரில் பாக்டீரியா மற்றும் பாசிகள் இருக்கும். மழைநீர் சுத்தமானது. மேலும், பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படுகிறது. மழைநீருடன் மற்ற நீரினைக் கலக்கும் போது, மழைநீரும் அசுத்தமடையும் என்பதனால் மற்ற நீரை மழைநீருடன் கலக்கக் கூடாது.

6. மழைநீர் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்?

     சூரியஒளி புகா வண்ணம் இருந்தால் மழைநீரில் பாக்டீரியா மற்றும் பாசிகள் வளராமல் நீர் தூய்மையானதாக இருக்கும். அசுத்தம் அடையாதவரை அந்நீரைப் பயன்படுத்தலாம்.

7. மழைநீர் சேமிப்புத் தொட்டியை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்?

     கோடைக்காலங்களில் நிலத்தடி மழைநீர் சேமிப்புத் தொட்டியின் கொள்ளளவு முடிவடையும் பட்சத்தில் தொட்டியைச் சுத்தம் செய்து, அடுத்த வரும் மழைப்பருவத்தின் போது தொட்டியினை மழைநீரால் நிரப்பலாம்.

8. ஒரு குடும்பத்திற்கு கோடைக்காலத்தில் நீர்த் தேவை எவ்வளவு இருக்கும்?

செயல்பாடு, நபர்களின் எண்ணிக்கை

குடித்தல், குளித்தல், கை கழுவுதல் (1 நாள்)

)குடித்தல், குளித்தல், கை கழுவுதல் ( 3 மாதங்கள்)

 

தனி மனிதன்

135 லிட்டர் (தோராயமாக

) 12.150 லிட்டர்

 

4-நபர் கொண்ட குடும்பம்

540 லிட்டர்

48,600 லிட்டர்

 

9. உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கொண்ட பொது இடங்களில் கோடைக்கால நீர்த் தேவை சராசரியாக எவ்வளவு?

 

செயல்பாடு, நபர்களின் எண்ணிக்கை

குடித்தல், கை மற்றும் தட்டு கழுவுதல், கழிவறைப் பயன்பாடு ( 1 நாள்)

குடித்தல், கை மற்றும் தட்டு கழுவுதல், கழிவறைப் பயன்பாடு (மூன்று மாதம் - 65 நாள்கள்)

 

250 மாணவர்கள் கொண்ட பள்ளி

1500 லிட்டர் ( 1 மாணவர் - 6 லிட்டர்)

97,500 லிட்டர் (65 பள்ளி வேலை நாட்கள் மட்டும்)

 

 

10, 1,00,000 லிட்டர் மழைநீரைச் சேகரிக்க எவ்வளவு மேற்கூரை அளவு கொண்ட கட்டடம் தேவை?

மேற்கூரையின் அளவு (சதுர அடி)

ஒரு நாளைய மழையின் அளவு (மி.மீ)

சேமிக்கப்படும் நீரின் அளவு (லிட்டர்) தோராயமாக)

மழை பொழியும் நேரம் (தோராயமாக)

 

2500

15

2080

2 மணி நேரம்

1000

15

830

2 மணி நேரம்

2500

6

830

1 மணி நேரம்

1000

6

330

1  மணி நேரம்

 

     மோர் பாளையம் (நாமக்கல்), சேலம், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட களப்பணி ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஓசூரில் ஓர் இல்லத்தில் சோதனை முறையில் இம்மழைநீர் சேகரிப்புமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

by   on 26 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.