LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

அவர் - நிலாரவி

அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். 'அவர்' என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில் "வசிக்கும்" அல்லது "வசித்த" தெருவாசி தான் அவர். மனிதனே இறந்து விட்ட பிறகு அவரின் பெயர் அவ்வளவு முக்கியமில்லை தானே? " பெயரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு ..." திருமூலரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது அவனுக்கு. மரணித்தவர்கள் அனைவருக்கும் இறுதியாக இடப்படும் பெயர் பிணம் தான் என்று தோன்றியது.


"ஒரு எட்டு மரியாதைக்கு போயிட்டு வந்திடுடா".. அம்மாவின் குரல் கேட்டது. "மறக்காம மாலை வாங்கிட்டு போ" என்றாள் . அவனுக்கு அன்றய தினம் முழுவதும் இருக்கும் அலுவலக வேலைகளை நினைத்து பார்க்கும் போது மலைப்பாக இருந்தது. அதோடு, ஏதோ நாளையே இந்த உலகத்தின் இறுதி நாள் என்பது போல், சாத்தியமோ இல்லையோ, இன்றே எல்லாவற்றையும் முடித்தாகிவிட வேண்டும் என்கிற பரபரப்பில் ஒவ்வொரு நாளும் ஓட, விரட்டு விரட்டு என்று விரட்டி வேலை வாங்கும் கம்பெனி பாஸின் முகம் நினைவுக்கு வந்தது. எதற்காக எல்லோரும் இப்படி காலில் சூடு தண்ணி கொட்டிவிட்டது போல் ஆளாய் பறக்கிறார்கள். எதை நோக்கி இந்த ஓட்டம்! இறுதியில் ஒருநாள் ஒன்றுமில்லாமல் மரணித்துப் போகவா? ‘பைத்தியக்கார உலகம் இது’ என்று நினைத்துக்கொண்டான்.


அப்போது, மரணித்த அவரின் முகமும் நினைவுக்கு வர, இனி எந்த வேலையும், கவலைகளும் இல்லாமல் மரணித்துவிட்ட அவரின் மேல் கொஞ்சம் பொறாமையாக இருந்தது அவனுக்கு. பாவம் அவர் தான் மரணித்து விட்டாரே அவரைப் பார்த்தா பொறாமைப்படுவது ? மரணம் என்பது எவருக்கும் சம்மதமில்லா இவ்வுலகில், என நினைத்தான்.


சாவு வீட்டுக்கு போய் விட்டு வந்து குளித்துவிட்டு அவசரம் அவசரமாக அலுவலகத்துக்கு ஓட வேண்டும். நமது அவசரங்கள், பிரச்சனைகள் அலுவலக பஞ்ச் கார்டு இயந்திரத்திற்கு புரியுமா என்ன ? இயந்திரங்களுக்கு அடிமையாகிவரும் இந்த உலகில் மனிதர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல இயந்திரங்களாக மாறி வருகிற மாதிரி இருந்தது அவனுக்கு .


அவசியம் போகத்தான் வேண்டுமா? என இருந்தவனுக்கு, " கொஞ்சம் சிரமம் பார்க்காமல் போயிட்டு வந்திடுப்பா" என மீண்டும் குரல் கேட்க உடன் எழுந்து தயராகி புறப்பட்டு போனான்.கடையில் 150 ரூபாய்க்கு குறைவாக மாலை இல்லாததால் வேறு வழியின்றி வாங்கிக்கொண்டு சென்றான்.

அது ஒரு ரோஜா மாலை. இதழ் விரித்திருந்த பூக்கள் இன்று மாலைக்குள் வாடிவிடலாம். பூக்களின் ஆயுள் குறைவுதானே. மனிதர்களின் ஆயுளும் அப்படித்தான் என்று தோன்றியது. அன்மையில் படித்த வட இந்திய வாசகம் ஒன்று நினைவுக்கு வந்தது அவனுக்கு. "தானே தானே பர் கானே வாலா கா நாம் லிக்கா ஹை..." ஒவ்வொரு பருக்கையிலும் உண்பவரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது...

என்பது அதன் பொருள்.

பூக்களும் அப்படித்தானோ.... பூக்கும் போதே இவை கோயிலுக்கோ, கூந்தலுக்கோ வேறுபயன்பாட்டிற்கோ அல்லது சவமாலைக்காகவோ இருக்கலாம். ஒருவேளை இந்தப் பூக்களின் மேல் அவரின் பெயர் எங்காவது எழுதப்பட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.


அந்த சிறிய வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகங்களுடன் சிலர் அமர்திருத்தனர். அவனும் முகத்தில் செயற்கையாக ஒரு சோகத்தை பூசிக்கொண்டு நுழைந்தான்.


பிணத்தை ஒரு பழைய இரும்பு கட்டிலில் கிடத்தி இருந்தனர். மூலையில் சிறிய விளக்கொன்று எறிந்து கொண்டிருந்தது. சுவற்றில் இருந்த பழைய புகைப்படத்தில் அவர் இளமையோடும் சிரித்துக்கொண்டும் இருந்தார்.

பிணத்தின் நாசியிலும் காதுகளிலும் பஞ்சு வைத்து அடைத்திருந்தார்கள். எந்தக்காற்றை அவர் காலகாலமாக சுவாசித்தாரோ அது இனி அவருக்கு தேவைப்டாது என்பதாலும் இந்த பூமியின் அர்த்தமற்ற ஓசைகளை இனியாவது அவர் கேட்காதிருக்கட்டும் என்பதாலும் கூட அப்படி செய்திருக்கலாம் என அதன் சம்பிரதாய காரணங்களைக் கடந்து யோசித்தான்.


அவருக்கு மூன்று பெண்பிள்ளைகள்

ஒரு பையன் என பெரிய குடும்பம். எல்லோரையும் அநாதரவாய் விட்டு விட்டு மரணித்திருந்தார். இந்தக்காலத்திலும் இப்படியும் சில குடும்பங்களா, என வியந்தான்.


பூ வாசத்தோடு ஒரு விதமான மரண வாசமும் அங்கு இருப்பதாக பட்டது அவனுக்கு. பிணத்திற்கு சிலர் மாலையிட்டிருந்தனர். சிலர் தொட்டு வணங்கினர். பிணத்தை தொடுவதற்கு சங்கோஜமாக இருந்தது அவனுக்கு. வசதி படைத்தவர்கள் மரணத்தில் ஒரு வசதி இருக்கிறது. குளிரூட்டப்பட்ட கண்ணாடி பேழை மீது மாலை சாத்திவிட்டு வந்துவிடலாம். பிணத்தின் மீது கவனமாக தனது கை படாமல் மாலையிட்டான். ஒரு நிமிடம் அங்கு நின்றுவிட்டு வாசலுக்கு வந்தான்.


"எந்த வம்பு தும்புக்கும் போகாத நல்ல மனுஷன்.. தீடீர்னு இப்படி இப்படி போயிட்டாரே..." யாரோ சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஐம்பது வயது இருக்கலாம் அவருக்கு. வாழ்க்கையில் எதையும் பெரிதாக சாதிக்கவோ சம்பாதிக்கவோ இயலாவிட்டாலும், இறந்தபிறகு இதுபோன்ற சில வார்த்தைகளை அவர் சம்பாதித்திருக்கிறார் என்று நினைத்தான்.திடிரென்று அவனுக்குள் அவர் மீது இரக்கம் பிறந்தது. அதோடு ஒரு குற்ற உணர்வும் பற்றிக்கொண்டது. அவருக்கும் தனக்குமான பரிட்சயம் மிகவும் குறைவு தான். அவர் தெரு வாசி என்பதைவிட, அப்பாவுக்கு தெரிந்தவராக இருக்கலாம், என்று எண்ணினான்.


ஒரு முறை காலையில், அவனது "பைக்" முகப்பு விளக்கு எரிவதாக அவர் கூறினார். அணைத்துவிட்டு நன்றி சொல்வதற்குள் அவர் சைக்கிளில் அவனை கடந்து சென்றிருந்தார். பின் ஒரு கடையடைப்பு நாளில் பெட்டிக்கடை திறந்து இருக்கிறதா? என்று கேட்டறிவரிடம் அது மட்டும் திறந்திருப்பதாக, பதில் சொன்னான் . அதன் பிறகு அவரை எப்போதாவது கடக்க நேர்கையில், அவர் பார்வைகளை தவிர்த்து விட்டு சென்றிருக்கிறான்.


எந்த பெரிய அடையாளமும் இல்லாமல் மரணித்துப்போன அந்த சாதாரண மனிதனுக்கு இன்று தான் மாலை போட நேர்ந்தது, அவனை ஏதோ செய்திருந்தது. வாழும் காலத்தில் யாராவது அவருக்கு மாலையிட்டு கவுரவித்து இருந்தால் அவர் எவ்வளவு மகிழ்ந்திருப்பார். வெட்கமோ பெருவியப்போ பரவசமோ கூட அடைந்திருப்பார்.


வாழும் காலத்தில் கண்டு கொள்ளப்படாத ஒரு மனிதன், மரணித்தபின் கௌரவிக்கப்படுவது வியப்பாக இருந்தது, அவனுக்கு . இப்போது இத்தனை பேர் மாலை இடுவது எதற்காக ? சம்பிரதாயத்திற்காகவா, மரியாதைக்காகவா, நிர்பந்தத்திற்கா அல்லது தனது மரணமும் மாலை இட்டு கவுரவிக்க படவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலா ? எதற்காகவும் இருக்கலாம். எதை எதையோ எண்ணியபடி அங்கிருந்து புறப்பட்டான் அவன்.


நிலாரவி.

by Nilaravi   on 23 Jun 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
“பீனிக்ஸ்” பறவை “பீனிக்ஸ்” பறவை
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
கருத்துகள்
22-Oct-2019 13:40:37 Madhu said : Report Abuse
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்
 
14-Dec-2018 06:54:24 பாரதிராஜ்.s said : Report Abuse
ஒரு அற்புதமான ஒரு சிறுகதை.வாழ்க்கையில் நாமும் வாழும் காலங்களில் பிறரை மதித்தும் அன்போடு பேசும் பழக்கத்தை கதை மூலம் நான் நன்றாக புரிந்து கொண்டேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.