|
|||||
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது |
|||||
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறு கடம்பூர் மலை. அந்த மலையின் மீது இருக்கும் குன்றே திருநாதர் குன்றாகும். இந்தக் குன்றிற்கு மேலே செல்ல 44 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. சமணர்களுக்கும், தமிழ் தொல்லியல் நிபுணர்களுக்கும் இக்குன்று மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இம்மலைக்கு மேலே சென்று பார்த்தால் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகளைக் காண முடியும். 24 தீர்த்தநாதர்கள் அமர்ந்திருக்கும் குன்று திருநாதர் குன்று என்று அழைக்கப்படுகிறது. குன்றின் மேலே சென்றதும் முதலில் காணக்கூடியது 24 தீர்த்தநாதர்கள் அமைந்திருக்கும் பெரிய பாறையைத்தான். அதில் மேலே 12, கீழே 12 என்று இரண்டு வரிசையாக தீர்த்தநாதர்கள் அமைந்துள்ளனர்.
ஆதிநாதரே முதல் தீர்த்தநாதர்
ஆதிநாதர் முதல் மஹாவீரர் வரை செதுக்கப்பட்டுள்ளன. இது 9-ம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் சோழர்களால் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த 24 தீர்த்தநாதர்களும் வெவ்வேறு முகபாவனைகளுடன் இருக்கிறார்கள் என்பது சிறப்பு. ஆதிநாதரே முதல் தீர்த்தநாதர். மஹாவீரர் 24ம் தீர்த்தநாதராவார்.
அங்கே அழகாகச் செதுக்கப்பட்ட மஹாவீரர் சிலை சிதைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அந்தப் பாறையின் மீது இருக்கும் கல்வெட்டில், இந்தக் கோயிலுக்கு மகேந்திர வர்மன் கி.பி 8-ம் நூற்றாண்டில் 400 ஆடுகளை நிவந்தமாகக் கொடுத்து விளக்கேற்றும்படி கேட்டுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்தக் குன்றில் இரண்டு சமணர்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்துள்ளனர். அவர்களின் கல்வெட்டுகளும் இங்கேயிருக்கிறது. இங்கேயிருக்கும் கல்வெட்டில் தமிழ்ப் பிராமி, வட்டெழுத்தாக மாறிய கல்வெட்டுக்கள் உள்ளன. அது மட்டுமில்லாமல், மிக முக்கியமாக இங்கே 5-ம் நூற்றாண்டு கல்வெட்டான பிராமி தமிழ் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
இது சமண துறவிகளின் வழக்கம்
இங்கேதான் ‘ஐ’ என்ற தமிழ் எழுத்து முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை ஐயை ‘அய்’ என்றே எழுதி வந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கல்வெட்டில் சந்திரநந்தி என்ற ஆசிரியர் 57 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்று உள்ளது. இன்னொரு கல்வெட்டில் இளையபட்டாகரர் என்னும் சமண துறவி 30 நாள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார் என்றும் எழுதியுள்ளது.
‘சலேக்கனா’ என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறத்தலாகும். இது சமண துறவிகளின் வழக்கம். எனவே, இங்கிருக்கும் இரண்டு கல்வெட்டுக்களும் சலேக்கனா கல்வெட்டுகள்தான் என்று உறுதியாகிறது. இங்கே பூஜைகள் ஏதும் நடப்பதில்லை என்றாலும், சித்திரை மாதத்தில், ஏப்ரல் முதல் மேயில் ஜேயினர்கள் கூடி 24 தீர்த்தநாதர்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொன்மை வாய்ந்த தமிழுக்கு 'ஐ' என்னும் எழுத்தைத் தந்த திருநாதர் குன்றிற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது வந்து தரிசித்துவிட்டுச் செல்வது அவசியமாகும். |
|||||
by on 21 Mar 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|