LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அசோகமித்திரன்

கண்கள்

கண்களை மறைத்துக்கொள்வது நல்லதா? கண்களை மறைத்துக்கொள்பவர்களைத் தயக்கத்தோடுதான் அணுக முடிந்தது. கொளுத்தும் வெயிலும் அவன் கறுப்புக் கண்ணாடி போட்டது கிடையாது. பல வருடங்கள் முன்பு 'புதையல்' என்ற படம் வந்தது. அப்போதெல்லாம் படம் பார்க்க வேண்டுமென்றால் சினிமாக் கொட்டகையில்தான் பார்க்க வேண்டும். அவன் போனான். ஊரெல்லாம் பரவியிருந்த ஜுரம் அவனுக்கும் வந்தது. கண் சிவந்து வீங்கிப்போயிற்று. அப்போதும் அவன் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொள்ளவில்லை.

ஆனால் சிலரைப் பார்க்காதது போலத்தான் ஒதுங்கிவிட வேண்டியிருக்கிறது. ஒரு சிலரை நேருக்குநேர் பார்த்துவிட்டால் உடனே தான் அவர்களுக்குக் கடமைப்பட்டவன் போன்ற உணர்வு வந்துவிடுகிறது. அது அந்த மனிதனுக்கும் தெரிந்துவிடுகிறது. பிச்சைக்காரர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு இது ஒரு காரணமோ?
ஆனால் பல பிச்சைக்காரர்கள் வேறு வழியில்லாதபடிதான் பிச்சை எடுக்கிறார்கள். அவனறிந்து வருடக் கணக்கில் ஓர் அம்மாள் ஒரு சினிமாக் கொட்டகை முன்னால் உட்கார்ந்திருந்தாள். கண்ணில் சதை படர்ந்து அநேகமாக அவளைக் குருடியாக்கியிருக்கும். வயது ஐம்பதிலிருந்து எழுபதுவரை கூறலாம். ஒரு நாள் இரவு பதினொரு மணிக்கு அவன் அந்த வழியாகப் போக வேண்டியிருந்தது. அந்த அம்மாள் நடைபாதையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அங்குதான் எவ்வளவு பூரான், பெருச்சாளி, கரப்பான் பூச்சி, கொசு, சுண்டெலி! பத்து நிமிடம் தொடர்ந்து தூங்க முடியாது. இரவுக்கேயுரிய நகர நாற்றம். கோடைக் காலத்தில் தார்ச் சாலையிலிருந்து கிளம்பும் வெப்பம். சிறு தூறல் போட்டால்கூட ஒதுங்க இடம் தேட வேண்டும். கடைகளுக்கு முன்னால் வழக்கமாகத் தூங்குகிறவர்கள் இருப்பார்கள். புது ஆளுக்கு இடம் கிடைக்காது.

அவனுக்கு அந்த அம்மாவுக்குப் பிச்சை போடுவது கூச்சத்தைத் தந்தது. அவள் கை ஏந்தியதில்லை. ஆனால் ஏகப்பட்ட நசுங்கல்கள் கொண்ட ஒரு சிறிய அலுமினியத் தட்டு அவளருகில் இருக்கும். அவனுக்குத் தட்டில் போடுவது மரியாதைக் குறைவாகத் தோன்றியது. அவள் கையில் கொடுப்பதானால் அவள் கண்களைப் பார்க்க வேண்டும்.

பிச்சைக்காரர்களிலேயே பலர் என்ன மொழிக்காரர்கள் என்று சொல்லிவிட முடியாது. குடுகுடுப்பைக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஏதோ சங்கேத மொழி போல இருக்கிறது. அவர்கள் காசு வாங்கிக்கொண்டாலும் ஏதாவது பழந்துணி கொடுத்தால்தான் அந்த இடத்தைவிட்டு விலகுவார்கள். அவனுக்குப் பழக்கமாகிப்போய்விட்ட ஒரு குடுகுடுப்பைக்காரன் பழைய பிளேடுகளைக் கேட்பான். அது இறக்குமதியே இல்லாத காலம். அந்த பிளேடுகள் புதிதாக இருக்கும்போதே சரியாகச் சவரம் செய்யாது. பழைய பிளேடை முகச் சவரத்திற்கு என்று வாங்கிப்போனால் அந்த மனிதர் எவ்வளவு அவதிப்படுவார்?

அந்தக் குடுகுடுப்பைக்காரர் தினமும் வருவதில்லை. மாதக் கணக்கில் வராத அந்த மனிதர் நினைவுகூட மறைந்திருக்கும். திடீரென்று குரல் கேட்கும். அவனுக்குப் பொதுவான வாழ்த்துகள் தவிர வேறு எதையும் அந்தக் குடுகுடுப்பைக்காரர் கூறியதில்லை. குரல் கேட்டவுடன் அவன் பழைய பிளேடுகளைத் தேடி எடுப்பான். அவர்கள் சந்திப்பு ஒரு விநாடிகூட நீடிக்காது.

பெரிய தலைப்பாகையும் கறுப்புக் கோட்டும் வண்ண வேட்டியும் கைமணிக்கட்டிலிருந்து நீண்டு தொங்கும் கைக்குட்டையும் முகத்தில் பெரிய மீசையும் அந்தக் குடுகுடுப்பைக்காரரை மிக முக்கிய மனிதனாகத்தான் கருதும்படிச் செய்ய வேண்டும். ஆனால் யாரும் சட்டைசெய்யமாட்டார்கள். எவ்வளவு விசேஷமாக வருங்காலம் பற்றிக் குறி கூறி வாழ்த்தினாலும் லட்சியம் செய்யமாட்டார்கள். அந்தத் தெருவில் அந்தக் குடுகுடுப்பைக்காரருக்குக் கிடைக்கக்கூடியது பழைய பிளேடுதான்.

வயிற்றுக்கு ஏதும் கிடைக்காதபோது முகத்தை மழித்துக்கொள்ள என்ன தேவை இருக்கிறது? ஒருமுறை அந்தக் குடுகுடுப்பைக்காரர் பத்து நாள் மீசை தாடியோடு வந்தார். அந்த மனிதர் கிழவராகிக்கொண்டிருப்பதை முகத்தின் மீது வளர்ந்துகொண்டிருக்கும் தாடி மீசை காட்டியது. இப்போது குடுகுடுப்பாண்டிகளைக் காண்பது அரிதாகிவிட்டது.

கண்கள். . . கண்கள். . . கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை. ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை, வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டிவிடுகின்றன. அந்த மனிதனின் மனத்தையே காட்டிவிடுகின்றன. கண்களைப் பார்த்தால்தான் இதெல்லாம் தெரியும். கண்களையே பார்க்காமல் இருந்தால் இழப்புத்தான். இழப்பென்று தெரிந்தும் சிலரைப் பார்க்க வேண்டாமே என்றுதான் தோன்றுகிறது. அந்தப் பெண்ணின் கண்களைத் தவிர்க்க முடியவில்லை.

அவன் சாலையைக் கடந்தாக வேண்டும். அது மும்முரமான மரண பயமூட்டும் நாற்சந்தி. நாற்திசைப் போக்குவரத்தை முறைப்படுத்தப் பச்சை, சிவப்பு விளக்குகளும் அந்த விளக்குகள் ஒழுங்கான கவனம் பெறுகிறதா என்று கண்காணிக்க நான்கு காவல்துறைக்காரர்களும் இருந்தார்கள். விளக்கு, காவல் எல்லாம் வண்டிகளுக்குத்தான். காலால் நடக்க வேண்டியவர்கள் எதிர்சாரிப் பச்சை விளக்கைக் கண்டு சாலையைக் கடக்க வேண்டும். ஆனால் அப்போது இடப்புறம் திரும்பும் வண்டிகள் வரும். அவற்றுக்கு இடம்விட்டுக் காத்திருந்தால் மீண்டும் எதிரில் சிவப்பு விளக்கு.

ஆனால் இவ்வளவு அசாத்தியமான சூழ்நிலையிலும் சில பாதசாரிகள் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்சாரிக்குப் போய்க்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு அற்புதமான கணக்கறிவு? மயிரிழையில்தான் வண்டிகள் இவர்களைக் கடந்தன. ஆனால் இவர்களால் இவர்களுக்கோ வண்டிக்காரர்களுக்கோ எந்தப் பதற்றமும் இல்லை. இன்றைய போக்குவரத்து நெருக்கடிகளுக்கு இவர்களிடம் தீர்வு இருந்தது. எந்தச் சாலையும் எந்த நேரத்திலும் இவர்களைச் செயலிழக்கச் செய்யாது.

அவனாகச் சாலையைக் கடக்க முயற்சி செய்வதைவிடுத்துப் பாதசாரிகளில் சாமர்த்தியசாலியாகத் தோன்றிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் பக்கத்தில் போய் நின்றான். அவர் ஓரடி வைத்தாலும் அவனும் ஓரடி வைத்தான். ஆனால் அவருடைய லாகவமும் முறைதப்பாத் தன்மையும் அவனிடத்தில் இல்லை. சாலையில் கால்வாசி தாண்டுவதற்குள் நான்கு இரு சக்கர வண்டிக்காரர்கள் அவனை முறைத்துப் போனார்கள். ஒருவர் 'பொறம்போக்கு!' என்று கத்திவிட்டுப் போனார்.

நடுச் சாலையில் ஒரு சிறுமேடை. சாலைக் கடப்பு நிபுணர்கள் அதன்மீது நின்று அடுத்த தாவலுக்குக் காத்திருந்தார்கள். அப்போது எங்கிருந்தோ திடீரென்று அவன்முன் ஒரு பெண் தோன்றினாள். 'சார், சார், பத்து ரூபாதான் சார். ஒண்ணு வாங்கிக்கங்க சார்,' என்றாள். அவள் கையில் ஒரு சிறு கட்டு.

ஒரு காலத்தில் தொண்டையில் மருந்து பூச அல்லது உடலில் கிளம்பும் சொறி சிரங்குக்கு மருந்து பூச ஓர் ஈர்க்குச்சி நுனியில் பஞ்சைச் சுற்றி அதை பிரஷ் மாதிரிப் பயன்படுத்துவார்கள். ஒரு மருந்துக் கம்பெனி அந்த பிரஷ்ஷைச் சிறிதாக, நேர்த்தியாகச் செய்து விற்க ஆரம்பித்தது. பெயர் 'பட்'. அதாவது மொட்டு. அத்தகைய மொட்டுகளின் கட்டைத்தான் அந்தப் பெண் கையில் வைத்திருந்தாள். 'பட்'களைக் கொண்டுதான் காதைக் குடைபவர்கள் சுகானுபவத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.

சாலையில் ஒரு பாதியில் வண்டிகள் அணிவகுத்துப் பச்சை விளக்குக் காத்திருந்தன. மறுபாதியில் வண்டிகள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. இந்தப் பாதியிலும் பச்சை விளக்கு வந்தவுடன் அதே சீறலோடு வண்டிகள் எதிர்திசையில் பாயும். அப்போது அந்த மறுபாதியைப் பாதசாரிகள் திருடிவிட்டு ஓடுவதுபோலக் கடக்க வேண்டும். அந்த விநாடிப்போதில் ஒரு பெண் 'பட்ஸ்' விற்கிறாள்!

'எனக்குத் தேவையில்லேம்மா,' என்றான்.

அவன் பதில் தந்ததே அவளுக்கு நம்பிக்கையூட்டியது. 'சார், சார், பத்து ரூபாதான் சார். இன்னிக்கு இன்னும் ஒரு கட்டுக்கூட விக்கலை சார்.'

அவன் அங்குமிங்கும் பார்த்தான். எந்த நேரமும் அவனுக்கு வழிகாட்டியாக நின்றவர் முன்னே பாய்வார். அந்தப் பாய்ச்சலுக்கு அவன் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 'சார், சார். ஒண்ணேயொண்ணு வாங்கிக்க சார்.'

அவன் அவள் கண்களைப் பார்த்தான். முகம், கழுத்து, உடல் எல்லாமே இயல்பாக வளராமல் போஷாக்கின்மையால் சிறுத்து இருந்தன. அந்தப் பெண்ணுக்குப் பதினைந்து பதினாறு வயதுகூட இருக்கலாம். பத்து வயதுக்குள்ள வளர்ச்சிகூட இல்லை. ஆனால் அவளை எவ்வளவு பேர் எப்படியெப்படி யெல்லாம் இம்சைப்படுத்தியிருக்கிறார்களோ?

அவள் பிச்சை எடுக்கவில்லை. முதல் போட்டுப் பொருள் வாங்கி விற்கிறாள்! எந்த நேரமும் விரைவாகப் பாயும் வண்டிகளின் அபாயம் நிறைந்த இடத்தில், அபாயம் நிறைந்த நேரத்தில் அவளுடைய இயக்கம். ஒரு 'பட்ஸ்' கட்டில் என்ன லாபம் பெற முடியும்! அதிகம் போனால் இரண்டு ரூபாய். அதற்காக அவள் உயிரையே விடத் தயாராக இருக்கிறாள். உயிர் போய் விட்டால்கூடத் தேவலை. ஆனால் கை, கால் ஏதாவது போய்விட்டால் வாழ்நாள் முழுதும் சித்திரவதை. இந்த 'பட்ஸ்'கூட விற்க முடியாது.

'அம்மா, எனக்கு பட்ஸ் வேண்டாம்' அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் முன்னே பாயவேண்டிய தருணம் வந்தது. அவன் கண்களைப் பார்த்தான். அவளும் கெஞ்சுகிறபடி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'இந்தா, பத்து ரூபா. வெச்சுக்க. எனக்கு பட்ஸ் வேண்டாம். நான் போறேன்.' அவன் பாய்ந்து சென்று சாலை மறுபுறம் சென்றுவிட்டான். அவன் சாலையின் அந்தப் பாதியை முழுதும் கடப்பதற்குள் அங்கும் வண்டிகள் பாயத் தொடங்கின. அவனுடைய சட்டையை யாரோ பிடித்திழுத்தார்கள். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். அந்த 'பட்ஸ்' பெண்.

'அம்மா, எனக்கு 'பட்ஸ்' வேண்டாம். நீ பத்து ரூபாய் எனக்குத் திருப்பித் தர வேண்டாம்.' இதைச் சொல்லும்போது அவன் உடல் நடுங்கிற்று. சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் வண்டிகளின் நடுவே இந்தப் பெண் அவனுக்கு 'பட்ஸ்' கட்டு தர வந்திருக்கிறாள்! ஐயோ, இதென்ன விபரீதம்!

அந்தப் பெண் அவன் கையில் வைத்திருந்த பையினுள் கையை விட்டாள். ஒரு மஞ்சள் துணி வந்தது. 'இதை வைச்சுக்க, சார். கார் எல்லாம் ரொம்ப நன்னாத் துடைக்கும்.'

'அம்மா, என்னிடம் கார் கிடையாது. இப்போ சைக்கிள்கூடக் கிடையாது.'
'உன் மூக்குக் கண்ணாடியைத் துடைச்சுக்க சார்.'
அந்தப் பெண் ஒரு பொருட்டே இல்லாது மீண்டும் சாலை நடுவில் இருந்த மேடைக்குப் போனாள். அங்கு பச்சை விளக்குக்காகக் காத்திருந்த ஒரு மோட்டார் வண்டிக்காரரிடம் 'பட்ஸ்' விற்க முயற்சி செய்துகொண்டிருந்தாள்.

அவன் அந்த மஞ்சள் துணியை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசித்தான். மோட்டார் கண்களும் இரு சக்கர வண்டிகளும் நான்கு திசைகளிலும் அந்த நாற்சந்தியைக் கடந்து சென்றன. அவை விரையும்போது மட்டுமல்ல; நிற்கும்போதும் சீறிக்கொண்டிருந்தன.

by Swathi   on 03 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.