LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ரெ.கார்த்திகேசு

காதலினால் அல்ல!Part2

 

8
அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற எண்ணம் பொங்கிப் பொங்கி அவளை அழ வைத்தது. அவனுடைய இரண்டாவது குற்றச் சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் அவன் தண்டனை இன்னும் கடுமையாகும் என்று உதவித் துணை வேந்தர் எச்சரித்திருந்தது அவளுக்கு பயங்கரமான கற்பனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
இன்னும் கடுமையான தண்டனை என்றால் என்ன? ஒரு பருவம் தள்ளி வைப்பார்களா? ஓராண்டு தள்ளி வைப்பார்களா? அல்லது மிகக் கடுமையாகப் பல்கலைக் கழகத்தை விட்டே வெளியேற்றி விடுவார்களா? என் மானம் காக்க முன் வந்த அந்த நல்ல மனிதனுக்கு இப்படி நேர்ந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தான் சும்மா இருக்க முடியுமா? அவன் பல்கலைக் கழகத்தை விட்டுத் தள்ளப்பட்டால் தானும் விலகி விடுவது ஒன்றுதான் தான் அவனுக்குச் செய்யும் கைமாறாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் மேலும் மேலும் வலுப் பெற்றுக் கொண்டிருந்தது.
இந்த எண்ணத்தை ஜெசிக்காவிடம் சொன்ன போது அவள் தலைகுனிந்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். பின் “உன்னிஷ்டம்” என்று அலட்சியமாகச் சொன்னாள். ஆனால் இதையே அவளுக்கு நெருங்கிய தோழியாக மாறிவிட்ட மாலதியிடம் சொன்ன போது அவள் சீறினாள்: “முட்டாளே! அவசரப்பட்டு உன் எதிர்காலத்தப் பாழாக்கிக்காத! பல்கலைக் கழகத்தில கெடச்ச இடத்தக் காரணமில்லாம உதறிட்டா பின்னால சேத்துக்கவே மாட்டாங்க! நீ காலம் பூரா பட்டம் வாங்கிறத மறந்திட வேண்டியதுதான்! உங்க அப்பா அம்மாவ நெனச்சுப் பார்!” என்றாள்.
“விளங்குது மாலதி. ஆனா அவருக்கும் அப்படித்தான ஆகும்? அவர் எதிர்காலம் பாழாப் போகும்போது நான் மட்டும் நிம்மதியா படிச்சி பட்டம் வாங்கி சந்தோஷமா இருக்க முடியுமா?”
“சந்தோஷமா பட்டம் வாங்கலன்னா, கவலையோட வாங்கிக்க! கணேசனுக்கு ஏதாவது சீரியசான தண்டனை கொடுத்தாங்கன்னா அதை எதிர்த்து ஏதாகிலும் பண்ணப் பார்ப்போம். அப்படியில்லன்னா அது அவருடைய விதி! இந்த சமுகத்திலுள்ள அநீதிக்கு அவர் ஒரு பலி! நம்மால என்ன செய்ய முடியும்? நீ எதுக்கு இதில அர்த்தமில்லாத தியாகியா மாறணும்? இதில யாருக்கு லாபம் சொல்லு? அநியாயம் பண்ற அந்த ராஜனோட கேங்குக்குத்தான் லாபம்!”
மாலதி முதல் ஆண்டுதான் என்றாலும் அகிலாவுக்கு இரண்டு வயது மூத்தவள். எஸ்பிஎம் முடித்து நான்காண்டுகள் தற்காலிக ஆசிரியையாக இருந்து அனுபவம் பெற்று சொந்த முயற்சியில் எஸ்டிபிஎம் எடுத்து இரவிரவாகப் படித்து இரண்டு முறை பரிட்சை எழுதித் தேரி வந்தவள். அகிலாவை ஒரு தமக்கைக்கு உள்ள உரிமையோடு அதட்டிப் பேச அவளுக்கு முடிந்தது.
அவள் பேசுகிற நியாயம் புரிந்தது என்றாலும் கூட அகிலாவின் மனம் ஒரு பக்கம் “கணேசனின் துயரத்தில் நீ சந்தோஷம் காணலாமா?” என்று இடித்துக் கொண்டே இருந்தது.
இரவு நேரங்களில் இதைப்பற்றியே நினைவாக இருக்கும் போது கணேசனைத் தனிமையில் பார்த்து அவன் கைபிடித்து நன்றி சொல்லி அழ வேண்டும் என்று அவளுக்குப் பலமுறை தோன்றியது. ஆனால் அவனைத் தனிமையில் காண முடியவில்லை. கணேசனின் விவகாரத்தைத் தன் சொந்த விவகாரமாக எடுத்துக் கொண்டு ஜெசிக்கா வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனோடு ஒட்டிக் கொண்டேயிருந்தாள். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ பேரவையிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல அவள் பல மாணவர்களைப் பார்த்துப் பேசி கையெழுத்தும் வாங்கிக் கொண்டிருந்தாள். அறைக்கு வந்த போதும் கணேசனின் வழக்கு பற்றியே பேசித் தானும் கலங்கி அகிலாவையும் கலங்க அடித்துக் கொண்டிருந்தாள்.
முதல் விசாரணை நடந்தபோது அகிலா கணேசனோடு ஒன்றாக இருந்து எல்லாவற்றையும் சேர்ந்து அனுபவித்ததில் அவளுக்கு ஏதோ ஒருவித இன்பம் இருந்தது. அவனுடைய துயரத்தில் அவளும் அவளுடைய துயரத்தில் அவனும் பங்கு கொண்டதில் ஒரு நெருக்கம் உருவாகி இருந்தது. அவனுக்காக அழுத கண்ணீர் துயரமாக இருந்தாலும் பெருமையாக இருந்தது.
ஆனால் இனி நடத்தப்படவிருக்கும் இரண்டாவது விசாரணையில் அகிலாவுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய விவகாரம் முடிந்து விட்டது. அவள் சொன்ன உண்மைகள் தள்ளப்பட்டு விட்டன. இனியுள்ளது கணேசன் இரவில் அவன் விடுதியில் மிரட்டப்பட்ட விவகாரம். அதில் அவளுக்குச் சம்பந்தமில்லை. இனி தான் கணேசனுக்குப் பரிந்து முறையீடு கொடுக்க முடியாது. அவனுக்குப் பரிந்து சாட்சி சொல்ல யாரும் அவளை அழைக்க மாட்டார்கள். விசாரணை அறைக்கு வெளியே அவளும் அவனும் பயங்களையும் தைரியங்களையுப் பரிமாறிக் கொள்ள முடியாது.
ஜெசிக்காவைப் போல அவனுடைய வழக்கைப் பெரிதாகப் பேசி அவனுடைய வக்கீல் போல அலைந்து திரிய அவளுக்கு முடியாது. உனக்கு நான் பிரியாத துணை என அவனோடு எந்த நேரமும் ஒட்டிக் கொண்டிருக்க அவளால் முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி வந்தது. ஜெசிக்காவை விடவும் இந்த விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவளும் ஈடுபட்டவளும் நான்தானே என்ற எண்ணம் அடிக்கடி தலை தூக்கியது.
ஆனால் முடியவில்லை. வெட்கம் தடுத்தது. என்ன இருந்தாலும் அந்நியன். ஆண். ஆகவே அடக்கமில்லாமல் பழக முடியாது. அவள் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் அவள் காலையும் கையையும் கட்டி தான் நினைத்ததைச் சொல்ல முடியாமல் வாய்க்குக் கூடப் பூட்டுப் போட்டிருந்தது.
அவனுக்காக அவள் கண்ணீர் விட்டாலும் அது அவள் அறைக்குள் அவள் தலையணையில்தான். கணேசன் பார்க்க முடியாது. அழாதே என்று பாசத்தோடு ஆறுதல் கூற முடியாது. அந்த எண்ணத்தில் அவள் ஏக்கம் இன்னும் மிகையானது.
*** *** ***
ஏக்கம் துயரங்களுக்கிடையே பாடங்களில் வேலைகள் குவிந்து கொண்டிருந்தன. ஒரு எளிய கணினி செயலிக்கு புரோக்ராம் எழுதச் சொல்லி டாக்டர் தாஜுடின் இரண்டு வார அவகாசம் கொடுத்திருந்தார். டாக்டர் அயிஷா இரண்டு புத்தகங்களில் அத்தியாயங்கள் நிர்ணயித்துப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருந்தார். டியோட்டோரியலில் அந்த இரண்டு அத்தியாயங்கள் பற்றியும் அவள் பேச வேண்டும். அதற்கான புத்ததகங்கள் நூல்நிலைய அடுக்கிலிருந்து மாயமாக மறைந்திருந்தன. அதை அவள் ரிசர்வ் செய்துவிட்டு கொண்டு போனவர்கள் திருப்பித் தரக் காத்திருந்தாள்.
புறப்பாடத்தில் அவள் கலாச்சார நடனங்களுக்குப் பதிந்து கொண்டிருந்தாள். புதன்கிழமைகளில் ஐந்து முதல் ஏழு வரை பயிற்சி. புதிய மாணவர் மையக்கட்டிடத்தில் பண்பாட்டு அரங்கத்தின் மேல் மாடியில் பயிற்சி நடந்தது. இரண்டாவது வாரத்தில் மிக எளிதான ஜோகெட் நடனம் சொல்லிக் கொடுத்தார்கள். நுண்கலைப் பிரிவில் டியூட்டராக உள்ள லத்தீ·பா என்ற ஒரு இளம் மலாய்ப் பெண் பயிற்சியாளராக இருந்தார்.
அன்று அகிலா நடனத்துக்கு உரிய தொடைகளைக் கவ்வும் டைட்சும் தொளதொளவென்ற டீ ஷர்ட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். அகிலாவுக்கு பரதநாட்டியம் தெரியும். பள்ளியில் கொஞ்சம் மலாய் நடனமும் பழகியிருக்கிறாள். ஆகவே ஜோகெட்டின் அசைவுகள் எளிதாகவும் நளினமாகவும் வந்தன.
ஒரு தாடி வைத்த மலாய்க்காரர் ஓரத்தில் உட்கார்ந்து அவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அகிலாவின் மீதே இருந்தன. திடீரென தானும் எழுந்து அகிலாவின் பக்கத்தில் புகுந்து ஆட ஆரம்பித்தார். எல்லாரும் பெண்களாக ஆடிக் கொண்டிருக்கும் இடத்தில் யார் இந்தக் கரடி என்று எரிச்சலுற்றாள் அகிலா. ஆனால் பயிற்சி ஆசிரியை ஒன்றும் சொல்லாததால் அவளாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ஆள் அனுபவித்து ஆடினார். அவருடைய உடம்பு நடனத்துக்கு நன்றாக வளைந்து வந்தது. ஒரு ஜோகெட் பைத்தியமாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.
பயிற்சியில் அவள் உடல் தொப்பையாக நனைந்திருந்தது. முதுகிலும் அக்குளிலும் வியர்த்து டீ ஷர்ட் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தது. முகப் பௌடரை வியர்வை நாற்றம் தூக்கி அடித்துக் கொண்டிருந்தது.
ஆட்டம் முடிந்து அறையின் மூலைக்குப் போய் துண்டு எடுத்து அவள் கால்களைத் தூக்கி வைத்துத் தொடையில் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்த போது அந்தத் தாடிக்காரர் பின்னால் வந்தார். “நன்றாக ஆடுகிறாய். உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
சட்டென்று காலை இறக்கி டீ ஷர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள். தோற்றம் கலைந்த நிலையில் ஒரு அந்நிய ஆடவன் அவள் அருகில் நிற்பது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த ஆள் இப்படி இங்கிதமில்லாமல் வந்து பேசுவது எரிச்சலாகவும் இருந்தது. “நீங்கள் யார்?” என்று கேட்டாள்.
“நான் ஒரு ரசிகன்தான். நல்ல நடனத்தை ரசிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா?” என்றார்.
அகிலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அழகிய பெண்களைக் கண்டால் ஈயென இளிப்பவர்கள் பல்கலைக் கழகத்துக்குள்ளும் இருப்பார்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டாள். அவளுக்கு இந்த அனுபவம் தன்னுடைய பள்ளிக்கூட காலத்தில் சக மாணவர்களிடம் உண்டு. அதிலும் பெண்கள் இப்படித் தலை கலைந்து வியர்த்து சட்டை முதுகை ஒட்டியிருக்கும் காட்சியில் இவர்களுக்குப் பித்தம் தலைக்கேறிவிடும் என அவளுடைய நடனத் தோழிகள் கிளுகிளுத்திருக்கிறார்கள். இதற்காகவே ஆண்கள் அங்கு சுற்றிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்திருந்தாள். இந்த ஆளை அலட்சியப் படுத்துவதுதான் சரி என்று பட்டது. பதில் சொல்லாமல் இருந்தாள்.
“என்னோடு நடனமாட வருகிறாயா?” என்று அந்தத் தாடிக்காரர் தொடர்ந்து சீண்டினார்.
“உங்களோடு நான் ஏன் ஆடவேண்டும்?” சீறினாள்.
“உனக்கு நல்லது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்!” என்றார் அவர். அந்த ஆளின் நமட்டுச் சிரிப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஊட்டியது.
நேராக லத்தீ·பாவிடம் சென்றாள். “சே லத்தீ·பா!” என்று அழைத்து அவரிடம் இந்த ஆளைச் சுட்டிக் காட்டினாள்.
“என்ன அகிலா?” என்று கேட்டார் லத்தீ·பா.
“இந்த ஆள் என்னை அவருடன் ஆடவருகிறாயா என்று கேட்கிறார்” என்றாள்.
லத்தீ·பா சிரித்தார். “இந்த ஆள் அப்படிக் கேட்பது உனக்குப் பெரிய பெருமை அகிலா. இவரை நான் அறிமுகப் படுத்தவில்லை அல்லவா? இவர்தான் பேராசிரியர் முகமட் கௌஸ். நுண்கலைத் துறையின் தலைவர்!”
அகிலா அதிர்ந்து போனாள். பேராசிரியர் கௌஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மலாய் பாரம்பரிய நடனங்களைக் கரைத்துக் குடித்தவர். பரத நாட்டியமும் முறைப்படி கற்றவர். டெலிவிஷன் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். நவீன நடனங்களை உருவாக்கி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தியவர்.
“ஐயோ! எனக்குத் தெரியாமல் போய்விட்டது. மன்னித்து விடுங்கள் பேராசிரியர் அவர்களே! நீங்கள் இந்த இடத்தில் இவ்வளவு சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை!” என்றாள்.
“நீ என்னுடன் ஆடுகிறேன் என்று சொன்னால் மன்னித்து விடுகிறேன்!” என்றார்.
“இப்போதேவா?” என்று புரியாமல் கேட்டாள்.
“இப்போதல்ல. இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ஆகஸ்டில் நடைபெறுகிற இரவு விருந்தில் வேந்தருக்கு முன்னால் ஆட ஒரு புதிய நடனத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் வேண்டும். ஒரு ஆண் நான். இன்னும் இரண்டு ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுத்துவிட்டேன். இன்னும் ஒரு பெண் வேண்டும்!”
அகிலாவுக்குப் பயம் பற்றிக் கொண்டது. இன்னும் வேர்த்துப் போனாள். “நானா? வேந்தரின் விருந்திலா? நான் இப்போதுதான் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். எப்படி…”
“நீதான். வேந்தரின் விருந்தில்தான்! புதிதாக ஆரம்பிப்பவர்கள்தான் எனக்கு வேண்டும்!”
“ஐயோ என்னால் முடியாது!” என்றாள்.
லத்தீ·பா பின்னால் முதுகில் இடித்தார். “சரி என்று சொல் முட்டாள் பெண்ணே!”
“சரி!” என்றாள்.
“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இரவு 8 முதல் 10 வரை இங்கே பயிற்சி!” பேராசிரியர் கௌஸ் வெளியேறினார். அகிலா கொஞ்ச நேரம் அங்கேயே பிரமை பிடித்து நின்றாள்.
“என்னைக் கூப்பிடவில்லையே என்று எனக்குப் பொறாமையாக இருக்கிறது!” என்றார் லத்தீ·பா.
*** *** ***
அந்த வார இறுதியில் சனிக்கிழமை பின்காலை வேளையில் அலோர் ஸ்டார் பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்று அதில் இருந்து இறங்கிய போது அகிலாவுக்கு அந்த ஊர் புதிதாகத் தெரிந்தது. பிறந்ததிலிருந்து அவள் இந்த ஊரைவிட்டுப் பிரிந்ததில்லை. அலோர் ஸ்டார் அரசினர் தமிழ்ப்பள்ளியில் தமிழைத் தொடங்கியதிலிருந்து தேசியப் பள்ளிகளுக்கு மாறி ஆறாம் பாரம் வரை இந்த ஊருக்குள்ளேயே சுழன்று சுழன்று படித்தாகிவிட்டது. இப்போது பினாங்கிற்குப் போய் மூன்று வாரம் இருந்து திரும்பும்போது இந்த ஊர் வேறு மாதிரி இருந்தது. அந்த பஸ் ஸ்டேஷன், கடை வரிசைகள், ஆறு, பழைய பாலம், மார்க்கெட், பார்க்கும் எல்லா இடங்களிலும் ஒரு மந்திர மயமான ஈர்ப்பு இருந்தது.
அப்பா பஸ் ஸ்டேஷனில் தம்பியுடன் காத்திருந்தார். அவளைக் கண்டதும் தம்பி ஓடிவந்து அவளுடைய தோள்பையை வாங்கிக் கொண்டான். “எப்படிம்மா, பஸ் சௌரியமா இருந்திச்சா?” என்று அப்பா கேட்டார். முதல் முறை பினாங்கிலிருந்து விரைவு பஸ் பிடித்து வருகிறாள். ஒன்றரை மணி நேரப் பயணம்தான். “பஸ் நல்லா இருக்குப்பா. ஒரு கஷ்டமும் இல்ல!” என்றாள். “அம்மா எப்படிப்பா?” என்றாள்.
“இருக்காங்க, என்னா கொறச்சல்? நீ போய்ட்டியேங்கிற ஏக்கந்தான். இன்னைக்கு காலையில இருந்து மாஞ்சி மாஞ்சி சமைச்சிக்கிட்டிருக்கு வீட்டில!”
அம்மாவின் சமையலுக்கு நாக்கு ஏங்கியது. தன் வீட்டில் தனக்கே உரிய பீங்கான் தட்டில் பழகிய பாத்திரங்களிலிருந்து பழகிய கரண்டிகளில் சோற்றையும் அம்மாவின் கைவாகுவில் மணக்கும் கறிகளையும் அள்ளி இஷ்டம் போல் பிசைந்து வாயில் திணித்துப் புரையேறி “மெதுவா சாப்பிடும்மா” என்று அம்மா முதுகில் தட்டித் தண்ணீரெடுத்துக் கொடுக்கும் மனக் காட்சியில் அவள் கரைந்தாள்.
போகும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த பழைய இடங்களைப் புதிதாகப் பார்த்தாள். அவை தோற்றத்தில் முன்பு போல் இருந்தாலும் உணர்வில் மாறி இருந்தன. ஆனால் கொஞ்ச தூரம் போவதற்குள் மாறியிருப்பது ஊரல்ல, தான்தான் என்ற உணர்வு வந்தது.
நான் பழைய அகிலா இல்லை. பள்ளி மாணவி அல்ல. பட்டப்படிப்பு மாணவி. வாழ்க்கையில் விவரம்தெரிந்த நாள் முதலாய் தனக்கு முன்னுதாரணமாகக் கொண்ட அப்பாவையும் கல்வியில் மிஞ்சியாகிவிட்டது. இன்னும் நான்காண்டுகளில் தான் பட்டதாரி. தன் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி.
பட்டதாரிக்குரிய வேலை வரும். கைநிறையச் சம்பளமும் தனி அலுவலகமும் டெலிபோனும் வரும். இன்சூரன்சும் சேமிப்பும் வரும். வரும் கணவனும் பட்டதாரியாக இருப்பான். இருக்க வேண்டும். அது யாராயிருக்கும்? கணேசனா?
அவன் நினைப்பு வந்து. அவன் தன்னைக் கைப்பிடித்து அழைத்துப் போனது, ஜெசிக்காவுடன் உட்கார்ந்து சீரியசாகப் பேசியது, விசாரணை அறைக்கு முன் காத்து நின்றது, குளிர்பானம் வாங்கிக் கொடுத்தது….
அவனுடைய நினைப்பு ஏன் வரவேண்டும்? என் பிறந்த ஊரையும் எனக்கே உரிய வாசனைகளுடன் கூடிய என் அறையையும் பாசமிக்க குடும்பத்தையும் பழகிய தோழிகளையும் நினைத்து அனுபவிக்க வேண்டிய இந்த நேரத்தில் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு ஏன் அவன் நினைவு வரவேண்டும்?
நான் அவனைக் காதலிக்கிறேனா? சீச்சீ! காதல் பண்ணும் அளவுக்கு எனக்கும் அவனுக்கும் என்ன நெருக்கம்? முன்பின் தெரியாத ஆள். பார்த்து மூன்று வாரம் ஆகவில்லை. நிர்ப்பந்தத்தால் பழகியது இரண்டு மூன்று நாட்கள். அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?
அவனுக்காக நான் அழுதேன். என்னை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற வந்த இளவரசனாக அவனை நினைத்தேன். எனக்காக அவன் தண்டனை அனுபவிக்கிறான் என வருந்தினேன். அவனுக்கு நான் உதவ நினைத்து முயன்றதெல்லாம் வீணாகிவிட்டதே என ஏங்கினேன். அவன் ஆறுதல் சொல்ல நான் தேறினேன். ஜெசிக்கா அவனோடு ஒட்டியிருப்பதைப் பார்த்து பொறாமைப் பட்டேன். நான் ஒட்டியிருக்க முடியவில்லையே என மனதுக்குள் பிழியப் பட்டேன். எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுதான் காதலா?
“சீச்சீ” என மீண்டும் உதறினாள். சந்தர்ப்பங்களினால் நாங்கள் சந்தித்தோம். பஸ்ஸிலும் டெக்சியிலும் ஆட்களை சந்திப்பதில்லையா? அப்படி! பஸ்ஸில் தடுக்கித் தடுமாறுபவர்களைக் கைத்தாங்கலாகப் பிடிப்பதல்லையா? அப்படித்தான். எல்லாம் தருணங்களின் நிர்ப்பந்தங்கள். இந்த நிர்ப்பந்தங்கள் விலகியவுடன் ஒரு சிறிய புன்முறுவலுடன் உறவு நின்றுவிடும்.
“சௌக்கியமா அகிலா!”
“சௌக்கியம் கணேசன்! நீங்க எப்படி இருக்கிங்க?”
“ஓக்கே! எக்கோனமிக்ஸ் லெக்சர் இருக்கு, பை பை!”
முடிந்து விடும். அவ்வளவுதானா? அவ்வளவுதான் என்றால் வந்த இடத்தில் ஒரு வழிப் பயணி பற்றி ஏன் இத்தனை நினைவுகள்? இந்த ஊரின் காற்றை ஆழ்ந்து சுவாசித்து தோழிகளை நினைத்து நினைத்துத் தேடாமல் ஏன் கணேசனைப் பற்றியே சிந்தனை?
தம்பி பிடித்து உலுக்கினான். “பினேங்குக்குப் போயி அக்கா செவிடாப் போச்சிப்பா!” என்றான்.
திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். “என்ன அருண்?”
“அப்பா என்னமோ கேக்கிறாங்க, நீ என்னமோ யோசனையில இருக்கியே!”
“என்ன கேட்டிங்க அப்பா?”
“இல்ல, அந்த ரேகிங் கேஸ் பத்தி சொன்னிய, அது என்ன ஆச்சின்னு கேட்டம்பா!”
“ஓ அதுவா?” அகிலா பெருமூச்சு விட்டாள். “அந்தப் பையனுங்க ஒருமாதிரி சூழ்ச்சி பண்ணி எங்களையே குத்தவாளி ஆக்கப் பாக்கிறாங்கப்பா. அடுத்த வாரம் இன்னும் விசாரண இருக்கு!”
அகிலா மீண்டும் கணேசனை எண்ணிக் கவலைப் பட்டாள்.
***
——————————————————————————–
9
கொல்லன் இரும்பு உலையின் துருத்தியிலிருந்து வரும் அனல் காற்றுப் போல நெஞ்சுக் கூட்டிலிருந்து புஸ் புஸ்ஸென்று மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. கால்களின் கீழ் சப்பாத்துகளின் “தம் தம்” ஒலி காதுப் பறையில் இடித்துக் கொண்டிருந்தது.
பல்கலைக் கழகத்தின் புதிய ஓட்டப்பந்தய ஸ்டேடியத்தில் சிகப்பு வண்ண ஓட்டப் பாட்டையில் கணேசன் அப்போது பத்தாவது சுற்று ஜோகிங் வந்து கொண்டிருந்தான். அவனோடு ஓடிய ரவியும் ராகவனும் அசந்து உட்கார்ந்து விட்டார்கள். இன்னும் இருபது சுற்றாவது ஓடாமல் விடுவதில்லை என கணேசன் ஓடிக் கொண்டிருந்தான்.
புதிய பருவத்திற்குப் பல்கலைக் கழகம் புகுந்ததிலிருந்து ஜோகிங் செய்ய நேரம் கிடைக்கவில்லை. முந்தைய பருவங்களில் வாரத்திற்கு மூன்று நாள் ஓடுவான். இன்று அவன் நண்பன் ரவியும் அவர்களுக்கு அண்ணன் போல் பழகிவிட்ட மூத்த மாணவர் ராகவனும் வந்து கூப்பிட்டவுடன் ஒத்துக் கொண்டான். புதிய ஸ்டேடியத்தில் ஓடலாம் என முடிவு செய்தார்கள். அவர்களுக்கு வசதியாக அன்று ஞாயிற்றுக் கிழமை. ஸ்டேடியம் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தது. ஐந்தாறு சீன மாணவர்கள் மட்டும் மத்தியிலுள்ள புல் திடலில் தாய்ச் சீ பழகிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஸ்டேடியத்தை அண்மையில்தான் கட்டி முடித்திருந்தார்கள். அதற்கு நேர் எதிரில் ஹாக்கிக்காக செயற்கைத் திடலும் அமைத்திருந்தார்கள். புதிய ஸ்குவாஷ் கோர்ட்டுகளும் பக்கத்தில் இருந்தன.
உண்மையில் பல்கலைக் கழக வளாகத்தில் ஜோகிங் செய்ய ஸ்டேடியம்தான் வேண்டும் என்பதில்லை. அதன் சாலைகளிலும் சோலைகளிலும் எந்த இடத்திலும் ஜோகிங் செய்யலாம். ஆனால் ஸ்டேடியத்தில் சுற்றுக் கணக்கு வைத்து ஜோகிங் செய்யலாம். பாட்டை சமமாக இருக்கும். ஓடுவதற்கு அமைக்கப்பட்ட சிறப்புப் பாட்டையானதால் பாதத்தை எம்பிக் கொடுக்கும்.
ஓட ஓட கணேசனுக்கு ஆனந்தமாக இருந்தது. எண்ணம் எங்கு அலைந்தாலும் உடலின் முயற்சி அநேகமாகத் தானியங்கியாக நடந்தது. கால்கள் தாளம் தவறாமல் எம்பின. அந்த எம்புதலுக்கேற்ப கைகள் வீசின. உடல் இயக்கத்தின் வெப்பத்தில் அவன் தசை நீர் ஆவியாகி அந்தக் காலை வேளையிலும் உடல் பூராகப் பொங்கி வழிந்தது. அவன் புதிதாக வாங்கிய நைக்கி ஓடும் சப்பாத்துக்கள் மெத்து மெத்தென்றிருந்தன. போன விடுமுறையின் போதுதான் அத்தை இந்த விலையுயர்ந்த சப்பாத்துகளை வாங்கிக் கொடுத்திருந்தாள்.
அத்தையை நினைத்த போது கணேசன் நெஞ்சில் நன்றி பெருக்கெடுத்தது. அத்தை எப்போதும் அப்படித்தான். கணேசனுக்கு ஏதாகிலும் வேண்டும் என்று ஒரு குறிப்பு தெரிந்துவிட்டால் போதும். உடனே போய் எங்கிருந்தாவது வாங்கிக் கொடுத்துவிடுவாள்.
விடுமுறையில் கிள்ளானில் அத்தை வீட்டில் இருந்தபோது ஒருநாள் கால் நகங்களை வெட்டிக் கொண்டிருந்தான். “ஏன் கணேசு உன் நகம் இப்படி வளைஞ்சி வளைஞ்சி கெடக்குது?” என்று அத்தை கேட்டாள்.
“அடிக்கடி ஜோகிங் போறேன்ல அத்தை! சப்பாத்து கொஞ்சம் சரியில்ல! அது நெகத்தக் கெடுத்திருது!” என்றான்.
“ஏன் சப்பாத்து சரியில்ல?”
“என் சப்பாத்து சாதாரண விளையாட்டுச் சப்பாத்து! அதப் போட்டு ஓடுனா இப்படித்தான். ஜோகிங்கிக்கு தனி சப்பாத்து இருக்கு! ஆனா ரொம்ப விலை!”
அத்தை விடவில்லை. அடுத்த நாள் அவனைக் கூட்டிக் கொண்டு போய் கிள்ளான் கடைத் தெருவில் அலைந்து அவன் தடுத்தும் விடாமல் 200 வெள்ளி செலவழித்து உயர்தர பிரான்டான நைக்கி சப்பாத்தை வாங்கிக் கொடுத்தாள். அந்தச் சப்பாத்தை வாங்கியதில் அவன் மகிழ்ந்ததை விட அத்தையும் அவள் மகள் மல்லிகாவும் மகிழ்ந்ததுதான் அதிகம்.
அத்தைக்கு இப்போது இங்கு நடக்கின்ற குழப்பங்கள் தெரியவந்தால் எவ்வளவு கவலையும் கலவரமும் அடைவாள் என நினைத்துப் பார்த்தபோது உள்ளம் சோர்ந்தது. அவளுக்கு அவனுடைய படிப்பும் எதிர்காலமும் ஒரு பொருட்டே அல்ல. அவன் அவனாக இருப்பதுதான் பெரிது.
“ஏன் கணேசு அங்கல்லாம் போய் இப்படி லோல் பட்ற. யுனிவர்சிட்டி கினிவர்சிட்டியெல்லாம் உனக்கு எதுக்கு? பேசாம விட்டுட்டு வந்து மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு!” என்பாள்.
15வது சுற்று. மூச்சு வாங்கினாலும் உடல் இன்னும் களைக்கவில்லை. ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தான். வளாகத்துக்கு வெளியே தெற்கு கேட்டுக்கு அப்பால் யாப் சோர் ஈ சாலையில் கார்கள் விரைவாக ஓடிக் கொண்டிருந்தன. அதற்கப்பால் காம்பியர் குன்றுகள் பசுமையாகத் தெரிந்தன.
அத்தை நினைவுகவனுடைய இடைவிடாத ஓட்டத்துக்கு இடையிலும் சிதறல் சிகறலாக வந்தது. அத்தைதான் அவனுக்குக் குடும்பம். தன் தந்தைக்குத் தங்கையான இந்த அத்தை இளம் வயதில் அவர்கள் வீட்டில்தான் வளர்ந்தாள். கிள்ளானை அடுத்துள்ள ஒரு தோட்டத்தில் பால்மரம் வெட்டிப் பிழைக்கும் குடும்பம் அது. அப்பா அப்போதும் குடி, இப்போதும் குடிதான்.
பகலில் உழைப்பு, பிற்பகலில் தூக்கம். மாலையில் அம்மாவுடன் காசுக்குச் சண்டை. அப்புறம் கள்ளுக்கடையில் குடி. இரவில் பெண்டாட்டியை அடித்துவிட்டு மயக்கம் கலந்த தூக்கம். விடிகாலையில் இயந்திரம்போல் எழுந்து வேலை. இதுதான் அப்பா.
பின்னால் சமுதாய சீர்திருத்த நோக்கம் கொண்ட இளைஞர்கள் செய்த புரட்சியில் அந்தத் தோட்டத்தின் கள்ளுக்கடையை மூடிவிட்டார்கள். ஆனால் அதே வேகத்தில் அந்தத் தோட்டத்தில் கள்ளச் சாராயம் புகுந்தது. முன்பு கள் குடித்துத் தள்ளாடினாலும் இயற்கை பானத்தில் தெம்பாக இருந்த அப்பா சாராயம் குடித்து உள்ளுறுப்புக்களை எரித்துக் கொள்ள ஆரம்பித்தார்.
அம்மாவுக்கு அந்தக் குடும்பத்தில் ஒரு பங்கு இருந்ததாகவே தெரியவில்லை. வாயிருந்தும் அவள் ஊமை. அப்பாதான் அவள் உலகம். வேறு உலகம் தெரியாது. பிள்ளைகளை வளர்க்கக்கூட அவளுக்குத் தெரியாது. அப்பா சாராயம் வாங்கி வா என்றாள் இன்றும் நங்குநங்கென்று ஓடுவாள்.
பிள்ளைகள் – கணேசன், அவனுக்கு முந்திய ஒரு அக்காள், ஒரு அண்ணன் – மூவரும் தாங்களாகத்தான் வளர்ந்தார்கள். இதற்கிடையில் வேறு ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்த கணேசனின் தாத்தா இறந்து விட இந்த மங்களம் அத்தை அவர்கள் குடும்பத்தில் அடைக்கலம் தேடி வந்து அவளும் பால்வெட்டப் போய் குடும்பத்துக்கு வேலைக்காரியாகவும் இருந்து அப்பாவிடம் உதையும் வாங்கிக் கொண்டு கிடந்தாள்.
ஆனால் இந்த அத்தையிடம் சிவந்த மேனியும் வடிவான முகமும் ஒரு மயக்கச் சிரிப்பும் இருந்தன. கணேசனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவளும் “கணேசு, கணேசு” என ஒரு மகனைப் போல அவனை அணைத்துக் கொஞ்சினாள்.
அவர்கள் தோட்டத்திற்குத் துணி விற்கும் இளைஞரான வியாபாரி ஒருவர் மாதந்தோறும் வருவார். தவணைக்குச் சேலைகளும் பிற துணிகளும் விற்பார். அவர்கள் வீட்டுக்கு மாதந்தோறும் வரப்போக இருந்தவர் அத்தையைப் பார்க்க விசேஷமாகவும் வரத் தொடங்கினார். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேதோ பலகாரங்கள் வாங்கிக் கொடுத்து நண்பராகி அத்தையிடம் சிரித்துச் சிரித்துப் பேசினார்.
இதைப் பார்த்துப் பொருக்காத அவன் அப்பா ஒருநாள் அத்தையைப் போட்டு அடிக்க அதைக் கேள்விப்பட்ட துணி வியாபாரி மறுநாள் வந்து அப்பாவையும் அம்மாவையும் நேராகக் கேட்டார்: “நான் மங்களத்த கட்டிக்க விரும்புறேன்! என்ன சொல்றீங்க?”
இதைக் கேட்டு முதலில் வீட்டில் கலவரம்தான் நிகழ்ந்தது. அவர் ஏதோ பேசக் கூடாதததைப் பேசிவிட்டதைப் போலவும் இதனால் குடும்ப மானம் போய்விட்டது போலவும் அப்பா குதித்தார். அப்புறம் பேச்சு வார்த்தைகள் நடந்தன. பணம் கைமாறியது.
அவனுக்கு ஆறு வயது இருக்கும் போது தோட்டக் கோயிலில் அத்தையின் திருமணம் நடந்தது கணேசனுக்கு ஒரு பழைய மங்கிக் கிழிந்து போன புகைப்படம் மாதிரி துண்டு துண்டாக ஞாபகத்தில் இருந்தது. அத்தை புதிதாகப் புடவை கட்டிக்கொண்டு மாலை போட்டுக் கொண்டிருந்த காட்சி, அண்டாக்களில் வெந்து கொண்டிருந்த ஆட்டிறைச்சிக் குழம்பின் வாசனையோடும் வீட்டில் குவியல் குவியலாகச் சுட்டுப் போடப்பட்டிருந்த அதிரசங்களின் எண்ணெய் பிசுபிசுப்போடும் நினைவுக் குகைகளின் ஓரங்களில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
கல்யாணத்திற்குப் பின் வீட்டுக்குள் என்ன காரணத்தினாலோ பெரிய சண்டை நடந்தது. அத்தை மல்லிகைப் பூ மணமும் சந்தன மணமும் மாறாமல் கணேசனை அணைத்துக் கொண்டு ஒரு மூலையில் சுருண்டிருந்தாள். சண்டையின் உச்சத்தில் அந்த மாமா அறைக்குள் வந்து அத்தையைக் கையைப்பிடித்து எழ வைத்தார். “மங்களம், இந்த ஈன ஜனங்களோட மூஞ்சில இனி எந்த நாளும் முளிக்கவே கூடாது. வா. கடைசியா எல்லார் கிட்டயும் போயிட்டு வரேன்னு சொல்லிக்க! கார் கொண்டாந்திருக்கேன், ஏறு!” என்றார்.
அத்தை அவனைத்தான் அதிகமாகக் கட்டிப் பிடித்து அழுதாள். அப்புறம் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டுக் கார் ஏறிப் போய்விட்டாள்.
அன்றிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகள் அத்தை அந்த வீட்டுக்குத் திரும்பவில்லை. ஆனால் அவள் வாழ்க்கை முற்றாக மாற்றம் அடைந்து விட்டதை அவ்வப்போது செவிவழிச் செய்திகளாக கணேசனின் குடும்பம் கேட்டு வாய் பிளந்து கொண்டிருந்தது.
அத்தையின் கணவர் வியாபாரத்தில் வளர்ந்து விட்டாராம். கார் வைத்து வியாபாரம் செய்கிறாராம். வியாபாரம் ஓஹோ என்று நடக்கிறதாம். ஒரு பெண் குழந்தையாம். எல்லாம் இந்த மனைவி கொண்டு வந்த அதிர்ஷ்டம் என்று மனைவியைப் பாராட்டிக் கொண்டிருக்கிறாராம். பங்களா வாங்கி விட்டார்களாம். “உன் மூதேவி அண்ணன் முகத்தில முளிக்காத மங்களம். வந்த சீதேவி ஓடியே போயிடுவா!” என்ற அவருடைய மருட்டலில் மங்களம் இவர்கள் குடும்ப நினைப்பையே விட்டுவிட்டாளாம்.
“ஓ அப்படியா! அவ வரவேணாம்! வந்தா செருப்பாலியே அடிப்பேன்!” என்று இருமி இருமி பதில் சவால் விட்டார் அவன் அப்பா.
ஆனால் அத்தை ஒரு நாள் அவர்கள் வீடு தேடி வரத்தான் செய்தாள். ஓர் ஐந்து வயதுப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு டிரைவர் வைத்து ஓட்டிய சொந்தக் காரில் வந்திறங்கி அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். “ஐயோ என்ன உட்டுட்டுப் போயிட்டாங்க அண்ணி! நெஞ்சு வலிக்குதுன்னு படுத்தாங்க! பட்டுன்னு போயிட்டாங்க! எனக்கு இனி குடும்பம்னு சொல்லிக்க வேற யாரு இருக்காங்க உங்கள விட்டா….?”
** **** ***
——————————————————————————–
10
“இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்” என்றார் பேராசிரியர் முருகேசு.
கணேசனும் ராகவனும் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவருடைய அறையில் இருந்தார்கள். சரித்திரத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த அவரை மறுநாள் பார்க்க வேண்டும் என ராகவன் தொலை பேசியில் நேற்று கேட்ட போது முதலில் மறுத்து விட்டார்.
“நாளைக்கு முழுக்க எனக்கு வேலைகள் இருக்கு ராகவன். எட்டரை மணிக்கு டீன் என்னைச் சந்திக்கணும்னு சொல்லியிருக்காரு. ஒன்பது மணிக்கு நானும் டீனும் ஒரு மீட்டிங் போக வேண்டியிருக்கு. பதினொரு மணிக்கு விரிவுரை. மத்தியானம் டியுட்டோரியல். நாலு மணிக்கு என்னுடைய எம்.ஏ. மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க வர்ராரு. ஆகவே நேரம் இருக்காது. அவசரம் இல்லைன்னா இன்னொரு நாளைக்கு வாங்களேன்!” என்றார்.
ராகவன் நிலைமையின் அவசரத்தை எடுத்துச் சொன்னார். கணேசனைப் பற்றிச் சொன்னார்.
“சரி. அப்ப ஒரே வழிதான் இருக்கு. நாளைக்கு காலையில ஏழரை மணிக்கெல்லாம் வந்திருங்க. எட்டரைக்குள்ள பேசி முடிக்கலாம்!” என்றார்.
“நீங்கள் எங்களுக்காக அத்தனை வெள்ளன வரவேண்டியிருக்கே!” என்று வருத்தப் பட்டார் ராகவன்.
“பரவாயில்ல! எப்படியும் வழக்கமா நான் எட்டு மணிக்கு என்னுடைய அலுவலகத்துக்கு வந்திருவேன். அப்பதான் மாணவர்கள் தொந்தரவு இல்லாம கடிதங்களையும் ஈமெயிலையும் பார்த்து பதில் எழுத முடியும். இந்த கணேசன் கேஸ் பத்தி நானும் கணேசன் கிட்ட பேசத்தான் வேண்டியிருக்கு. அதினால ஏழரைக்கு வந்திடுங்க. பேசுவோம்!” என்றார்.
ஏழரை மணிக்கு அவர்கள் மனிதவியல் கட்டடத்தை வந்தடைந்த போது கட்டடக் கதவு திறந்திருந்தாலும் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை. அலுவலக ஊழியர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. கார் நிறுத்துமிடங்கள் வெறுமையாகக் கிடந்தாலும் பேராசிரியருடைய கார் அங்கு ஒற்றையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் தங்களுக்காக அவர் வெள்ளென வந்து காத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
முதல் மாடிக்கு ஏறிச் சென்று அவருடைய அறைக் கதவை அவர்கள் தட்டிய போது “வாங்க, வாங்க!” என்று தமிழிலேயே பதில் சொன்னார்.
அவருடைய அறையை முழுவதுமாக புத்தக அலமாரிகள் அடைத்துக் கொண்டிருந்தன. ஆசிய வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராக இருந்ததால் இந்திய, சீன, தென்கிழக்காசிய வரலாற்று நூல்கள் ஏராளமாக இருந்தன. அவரே எழுதிய “தென்னிந்தியாவில் திராவிடர் கழகத்தின் தாக்கம்” என்ற ஆங்கில நூலின் பல பிரதிகள் இருந்தன. அதே போல “தென்கிழக்காசியாவில் இந்தியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள்” என்ற அவர் எழுதி தேவான் பஹாசாவால் பதிப்பிக்கப்பட்ட மலாய் நூலும் அந்த அலமாரி ஒன்றில் இருந்தது.
தமிழ் நூல்களும் ஏராளமாக வைத்திருந்தார். தமிழ் பக்தி இலக்கியத்திலும் சைவ சித்தாந்தத்திலும் ஆராய்ச்சி ஈடுபாடு உள்ளவராதலால் அந்த நூல்கள் ஏராளமாக இருந்தன. பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஆதி சங்கரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றிய நூல்கள் இருந்தன.
நவீன இலக்கியத்திலும் ஈடுபாடு உள்ளவராதலால் பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு என பலவித நூல்கள் இருந்தன. சீலிங் உயரத்துக்கு அடிக்கப்பட்டிருந்த அலமாரிகளில் இன்னும் தடிப்புத் தடிப்பான தமிழ் ஆங்கில புத்தகங்கள் இருந்தன. அவற்றை எடுக்க ஏறுவதற்காக ஒரு ஆளுயுர ஏணியும் அவர் அறையில் இருந்தது.
கம்ப்யூட்டர் திரையில் ஏதோ ஈமெயிலைப் படித்துக் கொண்டிருந்தவர் அதை மூடிவிட்டு அவர்களைப் பார்த்தார்.
அவருடைய நாற்காலிக்கு மேலாக ஒரு பெரிய புத்தர் படம் தொங்கிக் கொண்டிருந்தது. தாமரையில் அமர்ந்து மடிமேல் திறந்த இடது உள்ளங்கை மேல் வலது புறங்கை அமர்த்தி கண்களை மூடி தியான நிலையில் அமைதி தவழும் முகத்தோடு தங்க வண்ணத்தில் அந்த புத்தர் இருந்தார். கணேசன் முன்பு ஓரிரு முறை அவரைப் பார்க்க அந்த அறைக்கு வந்திருந்த போது அந்தப் படத்தைப் பார்த்து தன் உள்ளத்திலும் பக்தியும் பரவசமும் பரவுவதை அனுபவித்திருக்கிறான்.
வணக்கம் சொல்லி அமர்ந்தபின் ராகவன் சொன்னார்: “உங்க அறையில இவ்வளவு தமிழ் புத்தகங்கள் வச்சிருக்கிறிங்களே சார். பார்க்க சந்தோஷமா இருக்கு!”
“அப்படியா ராகவன்! ஆனா அடிக்கடி குறிப்பு பாக்கிறதுக்காக உள்ள புத்தகங்கள மட்டும்தான் இங்க வச்சிருக்கேன். மற்ற தமிழ் புத்தகங்கள்ளாம் வீட்டில. அது அலமாரி அலமாரியாக குப்பை குப்பையா கிடக்கு!” என்றார் சிரித்துக் கொண்டே.
“சரி வந்த விஷயம் சொல்லுங்க! எப்படி நல்ல மாணவரான கணேசன் இந்த மாதிரி ஒரு இக்கட்டில மாட்டிக்கிட்டார்?” அவர் வெற்றுரையாடலில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; நேராக விஷயத்துக்கு வர விரும்புகிறார் என்பதை கணேசன் புரிந்து கொண்டான்.
கணேசன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான். “உண்மையில நான் புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல பேராசிரியர் அவர்களே! அன்றைக்கு நான் விசாரணையில சொன்னது அத்தனையும் உண்மை. அதே போல அந்தப் பையன் பரசுராமன் சொல்றதும் அவனுடைய கூட்டாளிகள் சொல்ற சாட்சியமும் பொய். ராஜனும் அவனுடைய காராட் கேங் நண்பர்களும் பரசுராமன மிரட்டி வச்சிருக்காங்க. அந்த பயத்திலதான் அப்படிச் சொல்றார். நான் நிரபராதி. ஒரு முதலாண்டுப் பெண்ணுக்கு நல்ல மனசோட உதவி செய்யப் போய் சந்தர்ப்ப வசத்தால என்னுடைய உண்மைய நிருபிக்க முடியாம இருக்கிறேன்!”
சொல்லும்போது அவன் கண்கள் கலங்கின. இந்தப் பேராசிரியரை நட்புச் சூழ்நிலையில் சந்தித்துச் சுமுகமாகப் பேசிக்கொண்டிருந்த காலங்கள் போய், இப்போது முறையீடு செய்து கெஞ்ச வேண்டிய நிலைமை அவனை உள்ளுக்குள் துன்புறுத்தியது. தலை குனிந்து துடைத்துக் கொண்டான். அப்போதுதான் பேராசிரியர் முருகேசு சொன்னார்: “இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்”
அவர் அந்தப் பல்கலைக் கழகத்தில் தொடக்கத்திலிருந்தே வேலை பார்த்து வந்திருக்கிறார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் அடிப்படை பட்டப் படிப்பை முடித்தபின் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயிற்சி விரிவுரையாளராகச் சேர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்புக்கும் முனைவர் பட்டப் படிப்புக்கும் உபகாரச் சம்பளங்கள் பெற்று வெளிநாடுகள் சென்று படித்து முடித்தவர். அதே பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகவும், பின்னர் முழுப் பேராசிரியராகவும் பதவிகள் பெற்றவர். இப்போது வரலாற்றுத் துறைக்குத் தலைவராகவும் உள்ளவர்.
தொடக்க காலம் முதலே இந்திய மாணவர்களோடு தொடர்பு உள்ளவர். தான் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த சில ஆண்டுகளைத் தவிர்த்து பிற எல்லா ஆண்டுகளிலும் இந்திய பண்பாட்டுச் சங்கத்திற்குத் தொடர்ந்து ஆலோசகராக இருந்து வந்திருக்கிறார்.
“தொடக்க காலத்தில இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ர மாணவர்கள் தமிழ் அவ்வளவாத் தெரியாதவங்களா இருந்தாங்க. இருந்தாலும் தமிழ் பண்பாட்டின் மேல ஆர்வம் உள்ளவங்கதான். பெரும்பாலும் நடுத்தர வகுப்புப் பிள்ளைகள். ஆனா அண்மையில தமிழ் பள்ளிக் கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கி தேசியப் பள்ளிகளுக்குப் போய் முன்னேறின தொழிலாளர் வகுப்புப் பிள்ளைகள் பலர் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வரத் தொடங்கியிருக்காங்க. இது பாக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
“தமிழ்ப் பள்ளிக்கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கிய முதல் தொகுதி பல்கலைக் கழக மாணவர்கள் ரொம்ப பணிவுள்ளவர்களாகவும் மரியாதையுள்ளவர்களாகவும் மொழி கலாச்சாரத்தில ரொம்ப பிடிப்பு உள்ளவங்களாகவும் இருந்தாங்க. ஆனா போகப் போக இந்த நிலமை மாறி வர்ரத நான் பார்க்கிறேன்.
“இப்ப வர்ர தமிழ் மாணவர்களுடைய பழக்கவழக்கங்கள் ரொம்ப கொச்சைத் தனமா இருக்கு. இதை நான் இடை நிலைப் பள்ளிகளிலியும் பார்க்கிறேன். இடைநிலைப் பள்ளிகள்ள இவங்க நடத்திர கலைநிகழ்ச்சிகள், வேற நடவடிக்கைகள் எல்லாத்திலியும் ஒரு கொச்சைத் தனம் இருக்கு. ரொம்ப கீழ்த்தரமான பேச்சுகள், சினிமா மேல பைத்தியம், சினிமாவ தங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்கள்ள காப்பியடிக்கிறது, சிகரெட் குடி போன்ற பழக்கங்கள் எல்லாம் அதிகரிச்சி வருது. அந்தப் பழக்க வழக்கங்களையே பல்கலைக் கழகத்துக்கும் கொண்டு வர்ராங்க”
நிறுத்தி ஒரு பெருமூச்சு விட்டார். பொதுவாகச் சொல்லுகிறாரா அல்லது தன்னைத்தான் குற்றவாளியாக்கிக் கூறுகிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கணேசன் இருக்கையில் நெளிந்தான்.
“அது மட்டும் அல்ல. பிறர் அவங்களுக்குப் புத்திமதி சொல்றதையும் அவங்க வெறுக்கிறாங்க. விரிவுரையாளர்கள் உட்பட யார் மேலயும் அவர்களுக்கு மரியாதை இல்லாம போச்சி. ஆகவே போன சில ஆண்டுகளாக என்னுடைய ஆலோசனய கூட அவங்க செவி மடுக்கிறது கிடையாது. யாரும் நம்ம ஒண்ணும் செய்ய முடியாது என்கிற ஒரு திமிரான போக்கு இருக்கு! இதுவே எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கு”
கணேசனை நேராகப் பார்த்தார். பேசினார்: “இந்த நிலைமையிலதான் கணேசனப் போல அமைதியான புத்திசாலித்தனமான மரியாதையுள்ள மாணவர்களப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.”
திரும்பி ராகவனைப் பார்த்தார். “உங்களையுந்தான் ராகவன். பல ஆண்டுகளாக வேல செய்து வருமானம் தேடி குடும்பத்த அமைச்சிக்கிட்ட நிலைமையிலும் படிப்புக்காக வேலய விட்டுட்டு குடும்பத்த விட்டுட்டு வந்திருக்கிற உங்களயும், நீங்க படிப்பில காட்டிற அக்கறையையும் நான் ரொம்ப மதிக்கிறேன்!”
மீண்டும் கணேசன் பக்கம் திரும்பினார்: “இந்த எண்ணத்தோட இருக்கும் போதுதான் கணேசன் ரேகிங்கில பிடிபட்டார்னு செய்தி வந்தது. எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்திச்சி. உண்மையா பொய்யான்னு முடிவு செய்ய முடியில. அப்படி உண்மையிலேயே நடந்திருந்து இப்ப பொய் சொல்லித் தப்பிக்க நினைச்சிங்கன்னா இனி இந்திய மாணவர்கள் மேல உள்ள எல்லா நம்பிக்கையையும் நான் இழந்திருவேன்!”
சொல்லி நிறுத்தினார். ராகவனும் கணேசனும் வாயடைத்துப் போயிருந்தனர். அவர் உள்ளம் இந்த நிகழ்ச்சியால் எவ்வளவு புண்பட்டுப் போயிருக்கிறது என்பது கணேசனுக்குப் புரிந்தது.
குரல் தளும்பச் சொன்னான்: “சார்! என்னப் பத்திய உங்களுடைய நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி. அந்த நல்லெண்ணத்துக்குப் பாதகமான காரியம் எதையும் நான் செய்யில. இது சத்தியம்”
ராகவன் பேசினார்: “சார்! இந்த காராட் கேங் பையன்களுக்கு கணேசன் அல்லது என் போன்றவர்கள் மேல எப்போதுமே கோபம், பொறாமை. ஏன்னா அவங்களுடைய அட்டூழியங்களுக்கு நாங்க தடையா இருக்கிறோம்கிறதுக்காக. இந்த முறை கணேசன் அவங்ககிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு. அவங்களுடைய சூழ்ச்சிக்கு பலியாகிட்டாரு. இந்த விஷயம் துணைவேந்தர் வரைக்கும் போயிட்டதினால அவருடைய நண்பர்களான நாங்கள் வருத்தத்தோட அனுதாபப் பட்றதத் தவிர வேற எதுவும் செய்ய முடியல. அதினாலதான் உங்க உதவிய நாடி வந்திருக்கோம்” என்றார்.
பேராசிரியர் சற்று நேரம் யோசித்தவாறு இருந்தார். கணேசனைப் பார்த்தார். “கணேசன். நீங்க சொல்றத உண்மைன்னே வச்சிக்குவோம். ஆனா உங்கள் பக்கம் சாட்சிகள் இல்ல. ராஜன் வெளி ஆட்களக் கொண்டு வந்து உங்கள மிரட்டினதாக நீங்க சொன்னதுக்கும் சாட்சிகள் யாரும் இதுவரையில இருக்கிறதா தெரியில. இந்த நிலையில எத வச்சி உங்கள காப்பாத்திறதுன்னு எனக்கும் தெரியில”
நிறுத்தி யோசித்தார். பின் தொடர்ந்தார்: “என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் கணேசன், டத்தோ சலீமிடம் பேசிப் பார்க்கிறதுதான். நீங்கள் சந்தர்ப்ப வசத்தால இதில மாட்டிக்கிட்டிங்கன்னு சொல்றேன். உங்களுடைய நல்ல குணத்தப்பத்தி சொல்றேன். நீங்கள் இந்தத் தவறை செஞ்சிருக்க மாட்டிங்க அப்படிங்கிற என்னுடைய நம்பிக்கையையும் சொல்றேன். அதற்கு மேல அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!” என்றார்.
கணேசன் நன்றியுடன் அவரைப் பார்த்தான். “மறு விசாரணை இந்த வெள்ளிக்கிழமை வச்சிருக்காங்க சார்!” என்றான்.
“தெரியும். எனக்கும் சொல்லிட்டாங்க. நான் இன்றைக்கே டத்தோ சலீம்கிட்ட பேசிறேன். நீங்க நாளக்குக் காலையில எட்டு மணிக்கு மீண்டும் வந்து என்னப் பாருங்களேன். என்ன பதில்னு சொல்லிட்றேன்!” என்றார்.
சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.
அவருடைய டெலிபோன் அடித்தது. எடுத்துப் பேசிவிட்டு வைத்தார். “டீன் வந்திட்டாரு. அவரப் பார்க்கிற நேரமாச்சி!” என்றார்.
ராகவனும் கணேசனும் எழுந்து புறப்படத் தயாரானார்கள். அவர்கள் கதவைத் திறக்கும்போது பேராசிரியர் கூறினார்: “மனத்த தளரவிடாதிங்க கணேசன். உண்மை வெல்லுங்கிறதில நம்பிக்கையோட இருங்க!”
“நன்றி சார்!” என்று வெளியே வந்து கதவைச் சாத்தினான் கணேசன். அவனுடைய உள்ளத்தில் புதிய நம்பிக்கைகள் தளிர் விட்டிருந்தன.
*** *** ***
அன்று இரவு ஐசெக் சங்கத்தின் செயலவைக் கூட்டம் இருந்தது. அந்த சங்கத்தின் பொருளாளர் என்ற முறையில் அவன் கட்டாயமாக அதில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டில் தென்கிழக்காசிய பல்கலைக் கழகத்தில் உள்ள பொருளாதார மாணவர்களின் கருத்தரங்கம் ஒன்று அறிவியல் பல்கலைக் கழகத்தில் நடத்த ஏற்கனவே திட்டங்கள் முடிவடைந்திருந்தன. ஆகவே அதைப்பற்றி அன்று முக்கியமாகப் பேசவேண்டியிருந்தது. ஐசெக்கின் செயலாளரான ஜெசிக்கா போன வாரம் அவனுக்கு நினைவூட்டியிருந்தாள்.
மாணவர் சங்கக் கட்டடத்தின் ஐசெக் அறைக்கு அவன் எட்டு மணியளவில் வந்த போது ஜெசிக்கா ஏற்கனவே வந்து காத்திருந்தாள். கணேசனைப் பார்த்தவுடன் “கணேசன், இங்கே வா, இங்கே வா! உனக்கு ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன்!” என்று கத்தினாள்.
அவளருகில் சென்று உட்கார்ந்தான். “என்ன செய்தி ஜெசிக்கா?” என்று கேட்டான்.
“கணேசன்! நேற்று நடந்த மாணவர் பேராளர் மன்றக் கூட்டத்தில் உன்னுடைய ரேகிங் கேஸ் பற்றி நான் பேசினேன். நீ அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டிருப்பது பற்றி துணைவேந்தருக்கு கண்டனக் கடிதம் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். மாணவர் பேராளர் மன்றத்தில் உள்ள 22 பேரில் மூன்றில் இரண்டு பங்கு – அதாவது 15 பேர் – கையெழுத்துப் போட்டால் அப்படி ஒரு கடிதம் எழுதலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்றே ஆறு பேரிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஒன்பது பேர் கையெழுத்து வாங்கிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்!” என்றாள் உற்சாகமாக.
கணேசனுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை. இப்படி மாணவர்கள் ஆதரவை வலிந்து பெற்று வளாகம் முழுவதும் தம்பட்டம் அறைந்து தன் வழக்கு வெல்லுவதை அவன் விரும்பவில்லை. “ஏன் இந்த வீண் வேலை ஜெசிக்கா? இப்படியெல்லாம் செய்தால் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எரிச்சல்தான் ஏற்படும்!” என்றான்.
“ஏற்படட்டுமே! இதை இப்படியே விடக் கூடாது. உன்னை இந்தத் தீய சக்திகள் வீழ்த்தி விட நான் அனுமதிக்க மாட்டேன். இதில் உனக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் மாணவர்களைத் திரட்டி ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தப் போகிறேன்!” என்று கத்தினாள். ஐசெக் கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற மாணவர்கள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். கணேசனுக்குத் தன் விஷயம் இப்படி உரத்த குரலில் பேசப்படுவது கூச்சமாக இருந்தது.
ஐசெக் தலைவர் லீ யென் லாவ் மேசையைத் தட்டினார். “ஓக்கே, ஓக்கே! நாம் இன்று பேசி முடிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளன. வீண் பேச்சில் நேரத்தை விரயமாக்க வேண்டாம். கூட்டத்தை ஆரம்பிப்போம். சிலாமாட் டத்தாங் உந்தோக் செமுவா!” என்று நல்வரவு கூறிக் கூட்டத்தைத் தொடங்கினார்.
தன்னுடைய விசாரணை பற்றிய விஷயம் ஜெசிக்காவைத் தவிர மற்றவர்களுக்கு “வீண் பேச்சாக” இருப்பது கணேசனுக்குப் புரிந்தது.
பத்து மணிக்கு அவர்கள் கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஜெசிக்கா அவனுடன் சேர்ந்தே வெளியே வந்தாள். மாணவர் சங்கம் மற்றும் கலாச்சார மண்டபம் கொண்ட அந்த இணைக் கட்டடம் இரவில் வெறுமையாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த மாணவர் கேன்டீன், கம்ப்யூட்டர் விற்பனை மையம், பல்கலைக் கழகக் கூட்டுறவு மினிமார்க்கெட், கூட்டுறவு புத்ததகக் கடை, பேங்க் சிம்பானான் நேஷனல் ஆகிய எல்லாமும் அடைபட்டுக் கிடந்தன. மாணவர் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த ஏராளமான அறைகளில் ஓரிரண்டு அறைகளில் மட்டுமே விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஓரறையிலிருந்து ஜோகெட் இசை வந்து கொண்டிருந்தது.
கட்டடத் தொகுதியின் மையத்தில் புல் வெளியும் பூச்செடிகளும் நட்டு அழகு படுத்தியிருந்தார்கள். ஈசல்கள் சூழ்ந்து அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
கட்டடத்தின் முன்னிருந்த சாலையை வாகனங்கள் போகமுடியா வண்ணம் அடைத்து வண்ணச் செங்கற்கள் பதித்து நடக்க மட்டுமே அனுமதிக்கப்படும் பாட்டையாக ஆக்கியிருந்தார்கள். அந்தச் சாலையின் ஓரத்தில் பழைய மழை மரங்கள் பிரம்மாண்டக் குடைகள் விரித்திருந்தன. அவற்றின் கீழ் இருந்த சக்தி மிகுந்த மின் விளக்குகள் மரத்தின் மீது ஒளி வீசி இலைகளை ஒளி-நிழல் காட்சிகளாக மாற்றியிருந்தன.
தன் மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டுக்குத் திரும்ப விரைந்த கணேசனை கைபிடித்து நிறுத்தினாள் ஜெசிக்கா. “என்ன ஜெசிக்கா?” என்று கேட்டான்.
“இப்படிக் கொஞ்ச நேரம் உட்காரலாம் கணேசன். நாளைக்கு யார் யாரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது பற்றிப் பேசவேண்டும்!” என்று அவனை இழுத்துக் கொண்டு கலாச்சார மண்டபத்திற்குச் செல்லும் படிகளில் முதல் படியில் அவனை உட்கார வைத்து அவளும் அவனுக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
“ஜெசிக்கா! நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு நான் பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க வேண்டும். இன்றிரவு அறைக்குப் போய் நண்பனிடமிருந்து கடன் வாங்கி வைத்துள்ள பாடப் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் பார்த்துக் குறிப்பெழுத வேண்டும். அப்புறம் மூன்று நான்கு மணி நேரமாவது தூங்க வேண்டாமா?” என்றான்.
ஜெசிக்கா அவனை முறைத்தாள். “அதெல்லாம் சின்ன விஷயம். நான் உன் வாழ்க்கையைக் காப்பாற்றப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். நீ புத்தகம் படிப்பது பற்றியும் தூங்குவது பற்றியும் பேசுகிறாயே!” என்றாள்.
மேலும் சொன்னாள். “உன் நலனுக்காக நான் எவ்வளவு முயற்சிகள் எடுத்திருக்கிறேன் என்பது நாளைக்குக் காலையில் மேலும் உனக்கு விளக்கமாகத் தெரியப் போகிறது” என்றாள்.
“ஏன்! நாளைக்குக் காலையில் அப்படி என்ன அதிசயம் நிகழப் போகிறது?” என்று புரியாமல் கேட்டான்.
“பொறுத்து பார். தானாகத் தெரியும்” என்றாள்
கணேசனுக்கு அவளின் முயற்சிகள் ஒன்றும் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை அதற்குரிய கண்ணியத்தோடு தீர்க்காமல் போருக்குத் தயாராவது போல அவள் பேசுவது அதிகமாகப் பட்டது. இருந்தாலும் தன் மேல் உள்ள அன்பினால் அவள் செய்வதை உணர்ந்து அடங்கிக் கேட்டான்.
தன்னுடைய கோரிக்கைக்குச் சார்பாக யார் யாரெல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதை அவனுக்குச் சொன்னாள். இன்னும் சிலர் பேரைச் சொல்லி நாளைக்கு அவர்களை எப்படியாவது பார்த்துப் பேசி கையெழுத்து வாங்க வேண்டும் என்றாள். “இதோ பார், இந்த சுதாகரன். இவரும் நிர்வாகத் துறை மாணவர்தானே? இந்திய மாணவராக இருப்பதால் உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! நீ அவரைப் பார்த்து நாளைக்குப் பேசேன்!” என்றாள்.
சுதாகரனை அவனுக்குத் தெரியும். ஆனால் அவர் மற்ற இந்திய மாணவர்களோடு சுமுகமாகப் பழகும் மாணவர் அல்ல. எப்போதும் ஒதுங்கியே இருப்பார். கொஞ்சம் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிய முற்றாகத் தமிழ் பேசத் தெரியாத கொஞ்சம் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். அவரைப் பார்ப்பதும் அவரைத் தனக்கு உதவும்படி கேட்பதும் அவனுக்குப் பிடித்த விஷயங்களாக இல்லை.
“ஜெசிக்கா! சுதாகரனோடு எனக்கு சுமுகமான பழக்கமில்லை. அவர் என்னை மதித்து இதில் கையெழுத்துப் போடுவார் என்று தோன்றவில்லை” என்றான்.
ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள். “ஏன் நீங்கள் இந்திய மாணவர்கள் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறீர்களோ தெரியவில்லை. எங்கள் சீன மாணவர் ஒருவருக்கு இப்படிப் பிரச்சினை வந்தது என்றால் நாங்கள் ஒருவருக்கொருவர் தெரியாதவர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் கூட எல்லாவற்றையும் மறந்து ஒன்றாகி விடுவோம், தெரியுமா?” என்றாள்.
தெரியும். தெரிந்த விஷயம்தான். இப்படிச் சீனர் மலாய்க்காரரின் ஒற்றுமை நிதர்சனமாகக் கண்முன் இருந்தும் இந்தியர்கள் மட்டும் எந்த விஷயத்திலும் ஒரு குரலாக இணைய முடியாததன் ரகசியம் அவனுக்கும்தான் விளங்கவில்லை. அது விளங்கியிருந்தால் அவனுக்கு இப்போது நிகழ்ந்திருக்கும் இக்கட்டுக்கே இடம் இருந்திருக்காது. ஒரு இந்திய மாணவியை ஒரு இந்தியத் தறுதலைக் கூட்டம் மானபங்கப் படுத்துவதும் அவளைக் காப்பாற்றப்போன இன்னொரு இந்தியனை இப்படி எதிர்காலத்தை இருளடையச் செய்யும் ஆபத்தில் மாட்டிவிட்டுக் கைகொட்டிச் சிரிப்பதும் இந்தியர்களிடையேதான் நடக்கும் என நினைத்துப் பார்த்தபோது அவமானமாக இருந்தது.
ஜெசிக்கா தன் பட்டியலைப் பார்த்துத் தொடர்ந்து யாரைப் பார்க்க வேண்டும் எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு வீயூகங்களை வகுத்துக் கொண்டிருந்தாள். மாடியில் உள்ள அறையில் ஜோகெட் இசை நின்று விளக்குகள் அணைந்தன. ஒரு பத்துப் பதினைந்து மாணவர்கள் கலகலவென பேசிக்கொண்டு இறங்கி வந்து அவர்களுக்கு முன்னால் நடந்தார்கள். அந்தக் கூட்டத்தில் வியர்வையைத் துடைத்தபடி அகிலாவும் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர்களைப் பார்க்காதது போல நேராக நடந்தாள்.
முழங்கால் வரையிலான தொடைகளை இறுக்கிய வெள்ளை டைட்சில் தொளதொளவென்ற வெள்ளை டீ சட்டையில் வியர்வை ஊற தலை கலைந்து நடந்தாள். அவளை இரண்டாம் முறையாக இந்தக் கோலத்தில் பார்த்தபோது அருவியில் குளித்து முழுகி ஈரத்தோடு நடக்கும் ஒரு தேவதை போல இருந்தாள்.
“இதோ போகிறாள் பார் பிசாசு! இவளால்தான் உனக்கு இத்தனை தொல்லைகள்!” என்றாள் ஜெசிக்கா. அவள் குரலில் வெறுப்பு இருந்தது. கணேசனுக்கு மனசில் துணுக்கென்றது.
“பாவம் ஜெசிக்கா! அவள் என்ன செய்வாள்? எல்லாம் சந்தர்ப்ப வசத்தால் வந்தது!” என்றான் கணேசன்.
“சரியான பேய்! இவளுடன் ஒரே அறையில் இருப்பதே வெறுப்பாக இருக்கிறது. விரைவில் அறையை விட்டு அவளைத் துரத்தப் போகிறேன் பார்!” என்றாள்.
ஏன் ஜெசிக்காவுக்கு அகிலாவின் மேல் இத்தனை வெறுப்பு வருகிறது என்பது கணேசனுக்குப் புரியவில்லை. விளக்குகளைத் தாண்டித் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று தன் விடுதி அறையை நோக்கிய திசையில் இருளில் மறைந்து கொண்டிருக்கும் அந்த அப்பாவி தேவதைமேல் அவனுக்குப் பரிதாபம்தான் மிகுந்தது.
***
——————————————————————————–
11
பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க அடுத்த நாள் காலை அவன் விடுதியிலிருந்து புறப்பட்டபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன் தெரியவில்லை. இந்த அழகிய பினாங்குத் தீவில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்று நினைத்தான். அதிகாலை வரை மழை பெய்த தடயங்கள் இருந்தன. சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியிருந்தது. மரங்கள் ஈரந் தோய்ந்திருந்தன. புதராக மண்டியிருந்த செம்பருத்திச் செடிகளின் பூக்களில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனுடைய மோட்டார் சைக்கிள் நனைந்திருந்தது. இருக்கைகளில் ஈர இலைகளும் பொடிப்பொடியான பூக்களும் கொட்டிக் கிடந்தன.
துணி எடுத்து ஈரத்தையெல்லாம் துடைத்து விட்டு, ராகவனையும் அழைத்துக்கொள்ள அவர் தங்கியிருந்த தேசா கெம்பாரா விடுதிக்குக் கிளம்பிய போது மணி ஏழேமுக்கால் ஆகிவிட்டது. கெம்பாரா விடுதியை நெருங்கியபோது வளாகத்தின் தென்பகுதியில் இருந்த காம்பியர் குன்றுகளைப் பார்த்தான். அந்தக் குன்றின் சாரல்களிலிருந்து நீராவி மூட்டம் வானை நோக்கி புஸ்ஸென்று பொங்கிக் கொண்டிருந்தது. காற்றில் பறக்கும் ஒரு வெண் துகிலை அந்தப் பச்சைக் குன்றுகள் போர்த்திக் கொண்டிருந்தது போல இருந்தது. நேற்று அகிலாவை வெள்ளை உடையில் பார்த்த நினைவு மனசை இலேசாக உராய்ந்து மறைந்தது.
கெம்பாரா விடுதியின் கீழ் ராகவனுக்காகக் காத்திருந்தான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். எட்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. விடுதியிலிருந்து மாணவர்கள் காலை உணவை முடித்துவிட்டு சாரைசாரையாக விரிவுரை அறைகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.
பேராசிரியரைப் பார்க்கத் தாமதமாகிவிடுமோ என்ற கவலை வந்தது. அவர் நேரங் காப்பதில் மிகவும் கண்டிப்பானவர் என்பது அவருடைய மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். விரிவுரை மண்டபத்தில் விரிவுரை தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னால் தயாராக இருப்பார். சரியான நேரத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தாலும் கூடத் தொடங்கி விடுவார்.
ராகவன் ஒரு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். “குட் மோர்னிங், கணேசன். லேட்டாயிடுச்சா? இல்ல, சரியா எட்டு மணிக்குப் போயிடலாம்” என்று கூறியவாறு அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்தார். கணேசனின் மோட்டார் சைக்கிள் மனிதவியல் கட்டடத்தை நோக்கிச் சீறி விரைந்த போது வளாகத்தின் குளிர் காற்று அவர்கள் முகங்களில் வீசிச் சட்டைக்குள் ஊடுருவி மார்பில் சிலிர்த்தது.
கணேசனின் மனம் பேராசிரியர் தரப் போகும் தகவலை எண்ணிப் படபடத்தது.
*** *** ***
பேராசிரியர் அவர்களுக்காகத் தயாராகக் காத்திருந்தார். அவர்களை வரவேற்று உட்கார வைத்ததுடன் “இதைப் பார்த்திங்களா ரெண்டு பேரும்…?” என்று ஒரு பத்திரிகையைத் தூக்கி அவர்கள் முன் போட்டார். அது அந்த வாரத்திய “பெரித்தா கேம்பஸ்” என்ற மாணவர் வார இதழ். அன்று காலையில்தான் விநியோகிக்கப் பட்டிருந்தது. கணேசனோ அல்லது ராகவனோ பார்க்கும் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. “மூணாம் பக்கம் பாருங்க” என்று சொன்னார்.
கணேசன் பத்திரிகையை அவசரமாகப் பிரித்து மூன்றாம் பக்கம் பார்த்தான். “மாணவர்களிடையே ரேகிங்: பல்கலைக் கழகம் நேர்மையாக நடக்கிறதா?” என்ற தலைப்பில் ஒரு நீண்ட செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியை எழுதிய நிருபர் ஜெசிக்கா ஓங் என்று பெயர் போட்டிருந்தது.
ஜெசிக்கா வளாகத்தில் ரேகிங் நடப்பதைக் கண்டித்து எழுதியிருந்தாள். அதைத் தடுக்க முடியாத பல்கலைக் கழகப் பாதுகாப்புத் துறையின் கையாலாகாத் தனத்தைச் சாடி எழுதியிருந்தாள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கையில் அகப்பட்ட அப்பாவிகளை பல்கலைக் கழகம் தண்டிக்க முயலுவதாக ஜெசிக்கா தனக்கு வேண்டிய மாணவர்களிடம் பேட்டி கண்டு படத்துடன் போட்டிருந்தாள். பல்கலைக் கழக வளாகத்துக்குள் வெளியிலுள்ள குண்டர் கும்பல்களின் உறுப்பினர்கள் நுழைந்திருப்பதாகவும் அதைப் பாதுகாப்புத் துறை மூடி மறைக்க முயலுவதாகவும் எழுதியிருந்தாள். செய்தியில் “ஒரு மாணவர் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்” எனப் பெயர் குறிப்பிடாமல் போட்டிருந்தது. அகிலாவின் ரேகிங் நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டிருந்தாலும் அகிலாவின் பெயர் குறிப்பிடப் படவில்லை. “காராட் கேங்” என ஒரு ரகசியக் கும்பல் இந்திய மாணவர்களிடையே இயங்கி வருவதும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் யார் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இந்த ரேகிங் பிரச்சினை பற்றி மாணவர் விவகார உதவித் துணை வேந்தர் டத்தோ சலீமிடம் “பெரித்தா கேம்பஸ்” கருத்துப் பெற இயலவில்லை என்று போட்டிருந்தது.
ஜெசிக்கா நாளைக்கு நடக்கும் என்று சொன்ன அதிசயம் இதுதான் என கணேசன் புரிந்து கொண்டான். இதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என அவனுக்குப் புரியவில்லை. படித்து முடித்ததும் பேராசிரியரைப் பரிதாபமாகத் தலை நிமிர்ந்து பார்த்தான்.
“இந்த செய்தி வரப் போறது உனக்கு முதலிலேயே தெரியுமா கணேசன்?” என்று கேட்டார். அவர் குரலில் கொஞ்சம் கோபமும் கவலையும் இருந்தது.
“சத்தியமாகத் தெரியாது சார். நேற்று இரவு கூட ஜெசிக்காவோடு பேசிக் கொண்டிருந்தேன். நாளைக்கு ஒரு அதிசயம் நடக்கப் போகுதுன்னு மர்மமாகச் சொன்னாங்க. ஆனால் இதுதான் அது என்று சொல்லவே இல்லை!” என்றான்.
“நான் டத்தோ சலீமோட நேற்று நீண்ட நேரம் பேசினேன் கணேசன்!” என்று சொல்லி நிறுத்தினார். இருவரும் ஒன்றும் சொல்லாமல் அவர் வாய் பார்த்துக் காத்திருந்தார்கள். “அவர் என்னுடைய கருத்தை முழுசாக் கேட்டுக் கொண்டாலும் வழக்கு விசாரணைன்னு வந்திட்டதினால இதைக் கடைசி வரை பல்கலைக் கழக நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தித்தான் ஆகணும்னு சொல்லிட்டார். யாருடைய வாதத்துக்கு சரியான சாட்சியங்கள் இருக்கு அப்படிங்கிறதையும் பாக்கணும்னு சொல்லிட்டாரு. உன்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு வர்ர வெள்ளிக்கிழமை விசாரணையில நீ என்ன நிருபணங்களைக் கொண்டு வர்ரங்கிறதப் பொறுத்துத்தான் தீர்ப்பு இருக்கும்னு உறுதியா சொல்லிட்டாரு!”
கணேசனுக்கு மனதில் கல் விழுந்தது போல இருந்தது. மேக மூட்டமான அந்தக் காலையில் பேராசிரியரின் அறை இன்னும் கொஞ்சம் இருண்டு விட்டது போல இருந்தது. குனிந்தவாறு ராகவனைப் பார்த்தான். அவர் முகமும் இறுகித்தான் இருந்தது.
“ஆனால் டத்தோ சலீம் ஒன்று சொன்னார். நீ குற்றம் செய்தியோ இல்லியோ, விஷயத்தை முத்த விடாம குற்றத்தை ஒப்புக் கொண்டு பல்கலைக் கழகம் உட்பட எல்லாத் தரப்புக் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கொண்டால், நீ கடந்த காலத்தில குற்றங்கள் இல்லாத நல்ல மாணவனா இருந்திருப்பதை கருத்தில் வச்சி, குறைந்த பட்சத் தண்டனை தரலாம்கிறார். என்ன சொல்ற?”
கணேசன் அதிர்ச்சியடைந்தான். என்ன சொல்கிறார்? குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடு என்கிறாரா? நான் செய்யாத குற்றத்தை “நான்தான் செய்தேன்” என ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரச் சொல்கிறாரா? அவனுடைய இதயத்தின் ரத்தத்துளிகள் எல்லாம் அந்த எண்ணத்தை மறுத்தன!
“சார். நான் குற்றமற்றவன். இந்த அநியாயமான குற்றச் சாட்டால இந்தப் பல்கலைக் கழகம் என்னை வெளியேத்தினாலும் சரிதான். நான் செய்யாத குற்றத்தை செய்தேன்னு சொல்லி ஒருநாளும் என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள மாட்டேன்!” என்றான்.
“அவசரப்படாம அமைதியா யோசிச்சுப் பாருப்பா கணேசன். நீ உன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சி பண்ணி அது முடியாமப் போனா உன் எதிர்காலமே பாழாப் போயிடும். அதிக பட்ச தண்டனைங்கிறது பல்கலைக் கழகத்த விட்டே நீக்கிறதாக இருக்கலாம். அப்புறம் எந்த உள்நாட்டுப் பல்கலைக் கழகத்திலும் உன்னைச் சேத்துக்க மாட்டாங்க! குறைந்த பட்சத் தண்டனை ஒரு பருவம் அல்லது ஒரு வருஷம் தள்ளி வைக்கிறதா இருக்கலாம். அதுவும் கடுமையானதுதான். அதினால விட்டுக் கொடுத்து எதிர்காலத்தக் காப்பாத்திக்கிறது விவேகமில்லையா?”
ஒரு நிமிடம் யோசித்தான். பின் தலை தூக்கிச் சொன்னான். “இல்லைங்க சார்! அது விவேகமாக எனக்குத் தெரியில. என்னை வேணுன்னா நான் காப்பாத்திக்கலாம்! ஆனா இந்த காராட் கேங் பையன்களுடைய கேலியிலும் அவமதிப்பிலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் என்னால காலந்தள்ள முடியாது. அதே போல என்னோட சேர்ந்த மற்ற நண்பர்களும் அவர்களுடைய கீழ்த்தரமான கேலிக்கு இலக்காகிறத நான் பாத்திக்கிட்டு இருக்க முடியாது. என்னுடைய தன்மானத்த விட்டுக் கொடுக்காம உண்மையக் கடைசி வர சொல்லி அந்த உண்மை எடுபடாமப் போனா இந்தப் பல்கலைக் கழகத்தவிட்டு நான் வெளியேர்ரதுதான் சரியான வழி!”
அவன் கைககள் வெடவெடவென்று ஆடின. கண்களில் நீர் தளும்பித் தளும்பி மறைந்தது.
கொஞ்ச நேரம் அறையில் அமைதி நிலவியது. பின் பேராசிரியர் பேசினார். “இந்தப் பத்திரிகைச் செய்தி நிலைமையை இன்னும் மோசமாக்கிட்ட மாதிரிதான் தெரியுது. விடியற் காலையில பாதுகாப்புத் துறைத் தலைவர் எனக்கு வீட்டுக்கு போன் செய்தாரு. இந்தப் பத்திரிகைச் செய்தியை நீயும் ஜெசிக்காவும் சேர்ந்துதான் ஏற்பாடு செய்திருக்கனும்னு சொன்னாரு. தன்னுடைய பொறுப்புக்களை நீங்க ரெண்டு பேரும் ரொம்பவும் அவமதிச்சிட்டதா கருதுறாரு. ஆகவே விசாரணையில உனக்கு அதிக பட்சத் தண்டனை தரணும்னுதான் அவர் பரிந்துரைப்பார்னு நெனைக்கிறேன். டத்தோ சலீமின் பேரும் இதில இழுக்கப் பட்டிருக்கிறதினால அவருக்கு உன் பேரில் இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் இப்ப இருக்கா இல்லையான்னு சொல்ல முடியாது. ஆகவே நீ இன்னமும் கொஞ்சம் ஆழமாக யோசி! எனக்கு நீ இப்ப பதில் சொல்ல வேண்டாம். விசாரணையின் போது உனக்கு எது சரின்னு படுதோ அப்படி பதில் சொல்லலாம்!” என்றார்.
பேராசிரியரின் பேச்சில் ஒரு நம்பிக்கை இன்மையும் சோர்வும் இருப்பது தெரிந்தது. அவரும் இதில் தோற்றுவிட்டவர் போல்தான் பேசினார்.
ராகவனும் கணேசனும் எழுந்து வணக்கம் சொல்லி கதவு நோக்கி வந்தார்கள். திடீரென்று பேராசிரியர் பேசினார்: “கணேசன், நான் இப்படி சொல்றதினால உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னு அர்த்தமில்லை. நீ சொல்றதுதான் உண்மைன்னு எனக்கு நிச்சயமா தெரியுது. ஆகவே நீ நிரபராதின்னு நான் உளப்பூர்வமா நம்புறத டத்தோ சலீமிடம் உறுதியா சொல்லத் தயங்க மாட்டேன். ஆனா சந்தர்ப்பங்கள் நமக்கு சாதகமா இல்லைங்கிறத நாம் மறந்தடக் கூடாது!” என்றார்.
“சரிங்க சார்! எனக்குப் புரியிது. உங்கள் நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி!” என்று சொல்லி கதவைச் சாத்தி ராகவன் பின் தொடர வெளியே வந்தான் கணேசன்.
மனிதவியல் கட்டடத்திற்கு வெளியே வந்து மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்த போது வானம் தொடர்ந்து மப்பும் மந்தாரமுமாகத்தான் இருந்தது. எப்போதும் பளிச்சென்றிருக்கும் பல்கலைக் கழக வளாகம் கொஞ்சம் இருண்டே இருந்தது. உண்மையிலேயே அப்படி இருக்கிறதா, தன் மனம்தான் தன்னை வெளியில் பிரதிபலித்துக் காட்டுகிறதா என கணேசன் யோசித்தான்.
“என்ன இன்னைக்கு இந்த மழை மறுபடியும் வரும் போல இருக்கே! வானம் இருட்டிக்கிட்டே இருக்கு கணேசன்!” என நிலைமையை உறுதிப்படுத்தினார் ராகவன்.
தொடர்ந்து சொன்னார்: “சரி கணேசன். இப்ப மணி ஒன்பதாகுது. எனக்கு பத்து மணிக்குத்தான் அடுத்த லெக்சர்! உனக்கு எப்படி?” என்று கேட்டார்.
“பதினொரு மணிக்குத்தான்! டுயுட்டோரியல்”
“அப்ப மாணவர் இல்லக் கேன்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போவோமே! காலையில நீ கூட பசியாறியிருக்க மாட்டியே!” என்றார்.
“ஆமாம் ராகவண்ண. நானும் இன்னும் பசியாறலதான்! வாங்க போவோம்!”
மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து மாணவர் இல்லத்தின் கேன்டீனை நோக்கிப் போனார்கள்.
*** *** ***
கணேசனின் கண்கள் ஒரு காரணமுமின்றி அலைந்தன. அவர்களைச் சுற்றி ஏராளமான மலாய், சீன, இந்திய மாணவர்கள் கலகலவென்ற பேச்சுடன் விரிவுரைக்குப் போகும் அவசரத்துடன் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வண்ண வண்ணமாக துடோங் அணிந்த மலாய் மாணவிகள் கூட்டங் கூட்டமாக உட்கார்ந்து மலாய் உணவுகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். சீன மாணவ மாணவிகள் பெரும்பாலும் ஜீன்சில் இருந்தார்கள். சில பஞ்சாபி ஆடைகளும் மேற்கத்திய ஸ்கர்ட்டுகளும் தெரிந்தன. எங்கும் புத்தகங்களும் கோப்புகளும் பைகளுமாக சாப்பாட்டு மேசைகள் நிரம்பி வழிந்தன. மொத்தமாக மாணவர்களை விட இரண்டு மடங்கு அதிகமான மாணவிகள் அங்கு இருந்தார்கள். பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் இப்போது மாணவர்களை விட மாணவிகள் தொகையே அதிகமாக இருந்தது.
இரண்டு நாசி லெமாக் பொட்டலங்கள், இரண்டு தேநீருடன் அவர்களுடைய பசியாறல் மிக மெதுவாக மிக அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அந்தக் கலகலப்பான சூழ்நிலையில் அவர்கள் இருவரும் அந்த உற்சாகங்களுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் போல சோகத் தீவாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவன் ஏதோ சொல்ல நினைப்பவர் போல கணேசனின் முகத்தைப் பார்த்துப் பார்த்துத் தயங்கினார். தன்னுடைய விழிகளில் இருந்த வெறுமையும் விரக்தியும் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும் என கணேசன் எண்ணிக் கொண்டான். கணேசனுக்கு எதைப் பற்றியும் பேசுகின்ற உற்சாகம் இல்லாமல் இருந்தது.
ராகவன் கொஞ்ச நேரம் காத்திருந்து அப்புறம் கொஞ்சம் கனைத்துச் சொன்னார்: “கணேசன், பேராசிரியர் சொன்னதை நான் திரும்பத் திரும்ப நெனைச்சிப் பாக்கிறேன். மறக்க முடியில!” என்றார்.
“எதைச் சொல்றிங்க ராகவன் அண்ண?” என்று கேட்டான் கணேசன்.
“அதான், அந்த மன்னிப்புக் கேக்கிறதப் பத்தி….!”
கணேசன் அமைதியாக இருந்தான். அவர் தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்துவிட்டுப் பேசினார்: “உனக்கு ரொம்ப மூத்தவன் அப்படிங்கிற முறையில உனக்குப் புத்தி சொல்ல உரிமை உண்டுன்னு நெனச்சித்தான் சொல்றேன் கணேசன். நீ குற்றம் செய்யிலங்கிறது உண்மை. ஆனா ஒரு பொறியில அகப்பட்ட எலி மாதிரி இப்ப நீ மாட்டிக்கிட்டு இருக்கிற. அந்தப் பொறியிலிருந்து விடுபட பேராசிரியர் ஒரு வழி காட்டியிருக்காரு.”
கணேசன் அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். “செய்யாத குத்தத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கச் சொல்றிங்களாண்ண?”
“ஆமாம் கணேசன்! வேற வழி?”
“எல்லார் முன்னிலையிலும் அவமானப்படச் சொல்றிங்களா?”
“இந்த மன்னிப்பு விஷயத்த விசாரணைக் கமிட்டி வெளிய தெரியாம ஆர்ப்பாட்டம் பண்ணாம முடிச்சிரும்னுதான் நெனைக்கிறேன்!”
“விசாரணைக் கமிட்டி அமைதியா முடிச்சிடலாம். ராஜாவும் காராட் கேங்கும் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சி கைகொட்டிச் சிரிக்க மாட்டாங்களா? என்ன மட்டுமா பாத்துச் சிரிப்பாங்க? நீங்க உட்பட என் நண்பர்கள், காராட் கேங்குக்கு எதிரா உள்ள அத்தனை பேரையும் பார்த்துச் சிரிப்பாங்களே!” சொல்லும்போது அவன் கண்களில் கொஞ்சம் நீர் ததும்பியது.
“கணேசன், எங்களப் பத்தி நீ கவலப்படாத. நிலைமைய எப்படி சமாளிச்சிக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும். இந்தச் சில்லறைச் சிரிப்புகளைக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பொறுத்துப் போயிட்டா எல்லாம் சரியாப் போயிடும். உன்னப்பத்தி சிந்திச்சிப் பாரு! படிப்பையும் எதிர்காலத்தையும் வீணாக்காத! கொஞ்சம் மனசக் கல்லாக்கிக்கிட்டு மன்னிப்புக் கேட்டுக்க! கொஞ்ச நாள் தலை குனிஞ்சி நடந்தா என்ன? எல்லாம் காலத்தால ஆறக்கூடிய புண்கள்தான்! யோசிச்சுப் பாரு!” என்றார்.
கணேசன் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து தரையைப் பார்த்திருந்தான். மீண்டும் அவனுடைய ஒவ்வொரு ரத்தத் துளியும் இந்தத் தீர்வை ஏற்காதே என்று அவனுக்குள்ளிருந்து கொதித்தது.
பின்னாலிருந்து தயக்கம் பயம் சோகம் கலந்த பெண்குரல் ஒன்று “கணேசன்” என அழைத்தது. இரண்டு நண்பர்களும் தலை தூக்கிப் பார்த்தார்கள். அகிலா புத்தகப் பையை நெஞ்சோடு அணைத்தவாறு அவர்கள் மேஜைக்குப் பின்னே நின்றிருந்தாள்.
இரண்டு பேருக்குமே என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் ராகவன்தான் சமாளித்துக் கொண்டு சொன்னார். “அகிலா! வாங்க!” என்றார்.
அகிலா கணேசனைப் பார்த்தாள். “கணேசன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” என்றாள்.
“உட்காரு அகிலா!” என்றான் கணேசன். அகிலா ராகவனுக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
அவர்கள் தனியாகப் பேச விரும்புவதைப் புரிந்து கொண்ட ராகவன் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு “எனக்கு லெக்சருக்கு நேரமாச்சி!” என்று கிளம்ப எத்தனித்தார். அகிலா உரிமையோடு அவருடைய கையைப் பிடித்தாள். “ராகவன் அண்ண! உங்கள எல்லாரும் அண்ணன்னுதான் கூப்பிட்றாங்க! நானும் அப்படிக் கூப்பிடலாமா?” என்று கேட்டாள்.
“தாராளமா கூப்பிடலாம் அகிலா!” என்றார்.
“கொஞ்ச நேரம் இருந்து போங்க அண்ண! நான் கணேசனோட பேசிறதுக்கு நீங்கள் சாட்சியா இருக்க வேணும்” என்றாள்.
ராகவன் உட்கார்ந்தார். கணேசன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். அகிலா அவன் முகத்தையும் மேஜை முகப்பையும் மாறா மாறிப் பார்த்துப் பேசினாள்: “இந்த ரேகிங் கேஸ்ல என்னக் காப்பாத்த வந்து இப்ப ரொம்ப பெரிய பிரச்சினையில நீங்க மாட்டிக்கிட்டு இருக்கிறத இந்தப் பல்கலைக் கழகக் கேம்பஸ்ல எல்லாரும் கவலையோட பேசிக்கிறாங்க. உங்க நிலைமைக்கு நானே ஒரு காரணமாயிட்டத என்னால பொறுக்க முடியில. கேம்பஸ் மாணவர்கள் என்னப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குற்றவாளியப் பார்க்கிற மாதிரிதான் பார்க்கிறாங்க!”
“அது உங்க குற்றம் இல்ல அகிலா! அப்படி நெனைச்சிக் கவலப் படாதிங்க” என்றான் கணேசன்.
தலை குனிந்து பேசினாள்: “என் குற்றமோ இல்லியோ! வர்ர வெள்ளிக் கிழமை நடக்கிற விசாரணையில உங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தா அதுக்கு நானே ஒரு முக்கிய காரணமா இருப்பேன். நான் மட்டும் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வராம இருந்தா உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதில்லையா?”
ராகவன் குறுக்கிட்டுப் பேசினார். “இதெல்லாம் தற்செயலா நடந்தது அகிலா! நீங்க எதுக்காக ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகணும்? உண்மையில இதில நீங்களும் அறியாம மாட்டிக்கிட்ட ஒரு பலி கெடாதான்!” என்றார்.
“அது எப்படியோ இருக்கட்டும்! நீங்களெல்லாம் எனக்கு ஒரு சமாதானம்தான் சொல்றிங்க. ஆனா நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். கணேசன்! உங்களுக்கு எந்தத் தண்டனையை இந்தப் பல்கலைக் கழகம் விதிக்குதோ அதே தண்டனைய நான் சுயமாகவே எனக்கு விதிச்சிக்குவேன். உங்களை ஒரு வருஷம் தள்ளி வச்சா நான் ஒரு வருஷம் விடுமுறை எடுத்துக்குவேன். உங்களப் பல்கலைக் கழகத்த விட்டே தள்ளிட்டாங்கன்னா நானும் விலகிடுவேன்!”
கணேசன் திடுக்கிட்டான். அவனை அறியாமலேயே எட்டி மேசைமேல் இருந்த அவள் கைகளைப் பற்றினான். “என்ன சொல்றிங்க அகிலா? இது என்ன பைத்தியக்காரத்தனம்? எதுக்காக நீங்க உங்கள இப்படி தண்டிச்சிக்கணும்?”
கைகளை விலக்கிக் கொள்ள அவள் முயலவில்லை. “நீங்க எதுக்காகத் தண்டிக்கப் பட்றிங்க? நீங்க ஏன் நல்லவரா இருந்து செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கணும்? அதுதான் இந்த பல்கலைக் கழகத்தில நீதின்னா, அந்த நீதி எனக்கும் பொருந்தட்டுமே!”
“வேண்டாம் அகிலா!”
“என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!”
“எனக்காகவா?”
“உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!”
அவனுடைய கைகளில் தன் கைகள் பிடிபட்டுள்ள இதமான சூழ்நிலையில் அகிலா விசும்பி அழ ஆரம்பித்தாள். ராகவன் கொஞ்சம் வெட்கத்துடன் தங்களை யாராவது கவனிக்கிறார்களா எனச் சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் அகிலாவுக்கும் கணேசனுக்கும் தங்களைச் சுற்றி மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாதது போல் இருந்தது.
***
——————————————————————————–
12
வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.
மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன் பிடித்ததும் அதற்கு மறுக்காமல் இடங் கொடுத்து அந்தத் தொடுதலில் கனிந்து அவள் அழுததும் அவள் அப்போது சொன்ன முடிவுகளும் அவனை வெகுவாக நெகிழ வைத்திருந்தன.
ஏன் அப்படிச் சொன்னாள் என்ற கேள்வி அவன் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. தான் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பதை எண்ணி அவள் மனம் வருந்துவதே அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனால் அதற்கு மேலாக “உங்களுக்கு விதிக்கப் படும் எந்தத் தண்டனையையும் நானும் எனக்கு விதித்துக் கொள்வேன்” என இத்தனை இலேசாகச் சொல்லிவிட்டாளே!
“வேண்டாம் அகிலா!”
“என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!”
“எனக்காகவா?”
“உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!”
எத்தனை உன்னதமான பெண்! தனக்காக தன் ஒருவனுக்காக அவளுடைய வாழ்க்கையை எதிர்காலக் கனவுகளை இத்தனை எளிதாக அழித்துக் கொள்ளத் தயாராகி விட்டாளே! அவளுடைய அந்தத் தியாகத்தில் அவன் முற்றாக அதிர்ந்திருந்தான். அவளுடைய இந்தச் செயலுக்குத் தான் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுவிட்டதைப் போல உணர்ந்தான்.
அவன் பல பெண்களுடன் பழகியிருக்கிறான். சில பெண்களிடம் ஈர்ப்பு அடைந்து காதல் போல ஒன்று இடையிடையே மொட்டு விட்டு மொட்டு விட்டுக் கருகியிருக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் விளையாட்டுப் போல கண்ட கண்ட பெண்களை மனசால் காதலித்து வெளியில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி அந்த உணர்வுகளெல்லாம் காலத்தால் கரைந்து போனதுண்டு.
பெண்களில் அத்தை மகள் மல்லிகா ஒருத்தியுடன்தான் அவன் நெருங்கிப் பழகியிருக்கிறான். ஆனால் சிணுங்கிச் சிணுங்கிப் பேசும் மல்லிகா அவனுக்கு ஒரு பாசமுள்ள தங்கையாகவும் விளையாட்டுத் தோழியாகவும்தான் இருந்திருக்கிறாள். அவளுக்கு எந்த விஷயத்தையும் சீரியசாகப் பேசத் தெரியாது. எதைக் கேட்டாலும் “போ மாமா! எனக்குத் தெரியாது!” என்று சிணுங்குவாள். அவளுக்கு நடக்கத் தெரியாது. ஓடத்தான் தெரியும். மென்மையாகப் பேசத் தெரியாது. சத்தம் போட்டுத்தான் பேசத் தெரியும். அவள் சிரித்தால் வீடு அதிரும்.
“சனியனே! வயசு 17 ஆச்சு, இப்படி என்ன ஒரு சத்தமும் குதிப்பும் உனக்கு!” என்று அத்தை அவள் தலையில் குட்டுவாள். “ஓ” என்று அழுது கொண்டு “பாரு மாமா இந்த அம்மா இப்படி தலையில குட்டுது” என அவனிடம் வருவாள். அவள் அவள் தலையைத் தடவி ஆறுதல் சொல்லுவான்.
“கணேசு, இவள என்னால அடக்க முடியாது. நீதான் சீக்கிரமா இவளக் கட்டிக்கிட்டு இவளை அடக்கி ஒடுக்கிப் பொம்பிளையாக்கணும்!” என அத்தை சொல்லுவாள். “போம்மா!” என்று மீண்டும் சிணுங்குவாள் மல்லிகா.
அவர்களெல்லாம் வேறு மாதிரியான பெண்கள். இந்தப் பெண் – அகிலா – வேறு மாதிரியாக இருந்தாள். முகத்தில் ஒரு பெண்மைக்குரிய பொலிவு, பார்வையில் மனசை ஊடுருவுகின்ற கூர்மை, உடுத்தும் உடையில் எளிமையிலும் ஒரு கவர்ச்சி, பேச்சில் ஒரு உறுதியும் தெளிவும், நடையில் எப்போதுமே ஒரு நளினம். மனசுக்குள் அறிவு வெளிச்சமும் சிந்தனையும் உள்ளவளாக இருந்தாள்.
அந்தச் சில கணங்கள் நடந்த நிகழ்ச்சியினால் அவனுடைய இதயத்தின் ஆழத்தைத் தொட்டு, அவளுடைய நினைவுகள் உள்ளத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்ட இப்போதைய நிலையை அவன் இதுவரை அனுபவித்ததில்லை. இது அனுதாபமா? காதலா? தன் எதிர்காலத்தை நினைத்து பயந்ததில் எழுந்த பக்க விளைவா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் எதிர்கால இருளில் அவள் ஒரு ஒளி மிக்க விளக்காக இருந்தாள். அந்த இருளில் அவள்தான் ஒரு ஆறுதல் எனத் தெரிந்தாள். உள்ளம் “அகிலா, அகிலா” என ஸ்மரணை செய்து கொண்டிருந்தது.
இன்று காலையில் அவள் மாணவர் விவகாரப் பிரிவுக்கு வருவாள். அன்று அவன் பிடியிலிருந்து கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு போகுமுன் சொன்னாள்: “வெள்ளிக் கிழமை காலையில நான் விசாரணை அறைக்கு முன்னால வந்து உங்களுடைய தீர்ப்பு என்னன்னு தெரிஞ்சிக்கக் காத்திருப்பேன். அது தெரிஞ்சவுடனே டத்தோ சலீமைப் பார்த்து என்னுடைய முடிவை அறிவிப்பேன். வர்ரேன் கணேசன், வர்ரேன் ராகவன் அண்ண!”
தீர்மானமாகப் பேசி எழுந்து திரும்பிப் பார்க்காமல் போனாள். கணேசனைப் போலவே ராகவனும் அவளுடைய செயலில் வியந்திருந்தார். “என்ன அருமையான பண்புள்ள பெண்ணப்பா இது!” என்று கணேசனிடம் வியந்து சொன்னார்.
அதற்கப்புறம் அடுத்த இரண்டு நாட்கள் அவனால் அகிலாவை எங்கும் சந்திக்க முடியவில்லை. விரிவுரைக்குப் போகும் போதும் வரும் போதும் அவளைத் தற்செயலாகச் சந்திக்க மாட்டோமா என ஏங்கினான். மாணவர் இல்ல நடனப் பயிற்சி அறைகளில் இரவில் பயிற்சிக்கு வந்திருப்பாளே என்று மோட்டார் சைக்கிளில் அந்தப் பக்கம் சுற்றினான். காணவில்லை.
விரிவுரைகளில் மனம் செல்லவில்லை. புத்ததகங்களைத் திறந்தால் அவள் முகமும் கண்ணீருமே வந்து நின்றன. இரவு நேர மாணவர் சங்கக் கூட்டங்களுக்குச் சென்ற போதும் மனம் அவற்றில் ஒன்றவில்லை.
அகிலாவின் அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒரு எண்ணம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்பட்டு வந்தது. இந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் விஷயத்தில் என்னதான் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் தன்னையே பலி கொடுத்துக் கொள்ளும் முடிவில் அவன் உறுதியாக இருந்தாலும், இப்போது அவனுடைய முடிவு அகிலாவையும் பாதிக்கும் என உறுதியாகத் தெரிந்த பொழுது அவனுடைய மனவுறுதி கொஞ்சம் ஆடிப் போயிருந்தது.
வீறாப்பாக மன்னிப்புக் கேட்காமல் இருப்பதால் தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக்கப்பட்டால் அது தன் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் அகிலாவின் எதிர்காலத்தையும் பாதிக்கப் போகிறது என உறுதியாகத் தெரிந்தது. ஆகவே அவளைக் காப்பாற்றுவதற்காகவாவது தான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு குறைந்த பட்சத் தண்டனையை ஏற்றுக் கொண்டு தன் எதிர்காலத்தையும் அவளுடைய எதிர்காலத்தையும் காப்பாற்றிக் கொள்வது முக்கியம் என நினைத்தான்.
“ஒரு பெண்ணுக்காகவா உன் கொள்கையை விட்டுக் கொடுத்து உன் எதிரிகளின் சிரிப்புக்கு ஆளாகப் போகிறாய்?” என அவன் மனம் அவனுக்குச் சவால் விடாமல் இல்லை. ஆனால் அகிலா தனக்காகச் செய்யத் தயாராகிவிட்ட தியாகத்தை விட இது ஒன்றும் பெரிய தியாகம் அல்ல என்று பட்டது. மேலும் மனதில் முன்னிருந்த ஆத்திரமும் முரட்டுத் தனமும் இப்போது இல்லை. அது இப்போது கனிந்திருந்தது. அவன் வீரமும் பிடிவாதமும் தணிந்திருந்தன.
விடியற்காலையில் எழுந்து விசாரணைக்குத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது இந்த எண்ணங்கள் மேலும் மேலும் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தன. தலை குனியலாம். மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். தண்டனை ஏற்றுக் கொள்ளலாம். அகிலாவின் எதிர்காலத்தைக் காப்பாற்றலாம். இன்னும் ஈராண்டுகள் அகிலாவுடன் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து படிக்கலாம். எல்லாம் அகிலாவிற்காக!
அவள் இந்த வெள்ளிக் கிழமை காலையில் தனக்காக வருவாள்; அவளைப் பார்த்துப் பேச முடியும் என்ற ஆசையுடன் எழுந்து குளிக்கப் போனான்.
*** *** ***
ஒன்பது மணிக்குத்தான் விசாரணை. கணேசன் எட்டரை மணிக்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்து விட்டான். மாணவர்கள் யாரையும் காணவில்லை. குறிப்பாக அகிலாவைக் காணவில்லை. ராஜாவையும் அவன் நண்பர்கள் யாரையும் காணவில்லை. இன்னும் நேரம் இருக்கிறது எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.
ஆனால் அந்த அதிகாலை வேளையிலேயே பேராசிரியர் முருகேசுவின் காரும் பாதுகாவல் துறை அதிகாரி ரித்வானின் காரும் அங்கு நின்றிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மாணவர் பிரிவின் துணைப் பதிவாளர் முத்துராமன் அவர்களின் காரும் நின்றிருந்தது. அவனுடைய மாணவர் விடுதியின் பெங்காவா (தலைவர்) காரும் இருந்தது. இவர் ஏன் இங்கு வந்தார் என்று வியந்தான். அவர்களுடைய கூட்ட அறையை உற்றுப் பார்த்த போது கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளே விளக்குகள் எரிந்து கூட்டம் நடைபெறும் அறிகுறிகள் தெரிந்தன.
என்ன செய்கிறார்கள் இவ்வளவு அதிகாலையில்? ஒன்பது மணிக்குத்தானே கூட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னரே இத்தனை காலையில் இவர்கள் கூடிப் பேசும் காரணம் என்ன? அவன் கொஞ்சம் குழப்பமடைந்து சுற்று முற்றும் பார்த்தான். இந்த விஷயம் ரொம்ப கடுமையானதாகத்தான் தெரிகிறது என நினைத்துக் கொண்டான்.
எட்டே முக்கால் மணியளவில் ராஜனும் அவனுடைய சகாக்களும் ஆரவாரமாக வந்து இறங்கி ஒரு மர நிழலில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கணேசனின் பக்கம் எள்ளலான பார்வைகளும் சிரிப்புக்களும் வந்தன. ஆனால் அந்தக் கூட்டத்தில் பரசுராமனைக் காணோம்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெசிக்கா வந்தாள். கணேசனை நோக்கி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “கணேசன். உனக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது. நேராக கல்வி அமைச்சரிடம் மேல் முறையீடு செய்வோம். இந்த காராட் கேங் பற்றி நான் தகவல்கள் சேகரித்துக் கொண்டு வருகிறேன். உள்ளூர் பத்திரிகைகளில் எழுதப் போகிறேன்!” என்றாள்.
“ஜெசிக்கா! இந்த முயற்சிகளெல்லாம் வீண் என்றுதான் தெரிகிறது. நான் விசாரணைக் குழுவிடம் மன்னிப்புப் கேட்டுக் கொள்வதாக முடிவு செய்து விட்டேன். இந்த நேரத்தில் அதுதான் எல்லாருக்கும் நல்லதாகத் தெரிகிறது!”
ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள். “சரி! உன் விருப்பம். ஆனால் இந்தப் பல்கலைக் கழகத்தையும் இந்த காராட் கேங்கையும் நான் சும்மா விடப் போவதில்லை! நான் உன் பக்கம் இருக்கிறேன் கணேசன். உனக்கு நீதி கிடைக்கும் வரையில் நான் ஓயப் போவதில்லை” என்றாள். அவன் கைகளைப் பிடித்து அழுத்தினாள்.
கணேசன் தயங்கித் தயங்கிக் கேட்டான்: “அகிலா இன்று காலை வருவதாகக் கூறியிருந்தாளே! காணோமே! உனக்குத் தெரியுமா ஜெசிக்கா?”
ஜெசிக்கா முகத்தைச் சுளித்தாள். “அந்தப் பிசாசு பற்றி ஏன் இப்போது பேசுகிறாய்? நேற்றே அவளைச் சண்டை போட்டு என் அறையிலிருந்து துரத்தி விட்டேன். வேறு அறைக்குப் போய்விட்டாள். இன்றைக்கு அதிகாலையிலேயே உடுத்திக் கொண்டு வெளியே போனதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். எங்கே போனாளோ தெரியாது. அவள் ஏன் இங்கே வரவேண்டும் என எதிர் பார்க்கிறாய்? அவள் உனக்குச் செய்திருக்கும் கெடுதல் போதாதா?”
அந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அகிலாவை அறையை விட்டு விரட்டுமளவுக்கு இந்த ஜெசிக்காவுக்கு அவள் என்ன கெடுதல் செய்தாள்? அந்தத் தீவிரமான வெறுப்பு அவனைப் புண் படுத்தியது. அகிலாவும் தானும் சந்தித்ததை பேசியதை அவளிடம் சொல்வது வீண் என்று தோன்றியது. இவளுடைய மனதில் அகிலாவைப் பொல்லாத எதிரியாக ஆக்கிக் கொண்டாள். அகிலாவுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை இவளிடம் சொன்னால் அதனால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படும் என்று நினைத்து சும்மா இருந்தான்.
ஒரு வேளை ஜெசிக்காவே அகிலாவை இங்கு வரவிடாமல் தடுத்திருப்பாளோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. சீச்சீ அப்படி இருக்காது என்று சமாதானம் செய்து கொண்டான். ஜெசிக்கா அவளைத் தடுக்கக் காரணமில்லை. தடுத்திருந்தாலும் அகிலா பயந்து நின்று விடுபவள் அல்ல. ஏன் வரவில்லை? வருவாள், எப்படியும் கடைசி நிமிடத்தில் வந்து விடுவாள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
ராகவன், ரவி ஆகியோரும் இந்திய மாணவர் பண்பாட்டுக் குழுவின் தலைவர், செயலவை உறுப்பினர்களும் வந்திறங்கினார்கள். கணேசனுக்கு ஆதரவாக அவன் பக்கம் வந்து நின்று பேசினார்கள். அங்கு ஒரு சிறிய கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. காராட் கேங் உறுப்பினர்கள் சிலரும் வந்து ராஜனின் அணியைப் பலப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பரசுராமனைக் காணவில்லை. பாதுகாப்புத் துறையிலிருந்து சீருடை அணிந்த இரு காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்கள் சாலையை அடைத்துக் கொண்டு நிற்காமல் ஓரமாக நிற்கும்படி ஆலோசனை கூறினார்கள்.
அகிலாவைக் காணவில்லை. என்ன ஆயிற்று அவளுக்கு? அதிகாலையில் எங்கே போயிருப்பாள்? ஜெசிக்காவின் தொந்தரவு பொறுக்க முடியாமல் இந்தப் பிரச்சினைக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் வேண்டாம் என முடிவு செய்து விட்டாளோ? இத்தனை ஆதரவாகப் பேசிவிட்டுக் கடைசி நேரத்தின் மனதை மாற்றிக் கொண்டாளா? இந்த ஒரு முன் பின் தெரியாத யாரோவுக்காகத் தன் எதிர்காலத்தை ஏன் பாழாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாளா? ஒரு உணர்ச்சி மயமான வேளையில் பேசிய பேச்சுக்கள் உண்மை வாழ்வைப் பாதிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற அறிவு வந்துவிட்டதோ? இந்தப் பிரச்சினைகள் தாமாக முடிந்து காற்றில் பறந்து மறையும் வரை இதிலெல்லாம் பட்டுக் கொள்ளாமல் கொஞ்சம் ஒதுங்கியும் ஒளிந்தும் இருந்து விடலாம் என எண்ணி விட்டாளோ? தான்தான் அவள் சொன்னவற்றை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொண்டு கடந்த இரண்டு நாட்கள் காதல் போன்ற அர்த்தமில்லாத அவஸ்தைகளை அனுபவித்தேனோ? மீண்டும் ஒரு முறை தான் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து இளிச்சவாயனாக ஆகியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. உள்ளுக்குள் பெருமூச்சு விட்டான்.
ஒன்பது மணி கடந்து மேலும் பத்து நிமிடங்கள் ஆகின. கதவு இன்னும் திறக்கப் படவில்லை. உள்ளே கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பொறுமை இழந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்பதே காலுக்குக் கதவு திறந்தது. துணைப் பதிவாளர் முத்துராமன் வெளியே வந்தார். தான் கையில் வைத்திருந்த பட்டியலிலிருந்து பெயர்களைப் படித்தார். “கணேசன், ராஜன், வின்சன்ட். மூவரும் உள்ளே வாருங்கள்!” என்றார்.
கணேசனின் நண்பர்கள் அவனுடன் கைகுலுக்கி “கூட் லக்” என்று வாழ்த்தி அனுப்பினார்கள். கடைசி முறையாக மீண்டும் ஒரு முறை அகிலா வந்து விட்டாளா என்று தலை தூக்கி சாலையின் இறுதி வரை பார்த்தான். அவள் வந்ததற்கான அல்லது வருவதற்கான அடையாளம் எதையும் காணோம். ஜெசிக்காதான் அவனை ஏக்கத்துடன் பார்த்து வழியனுப்பி வைத்தாள்.
ஏமாற்றத்தால் அவன் மனமும் தலையும் கனத்தன. அவன் எதிர் காலத்தை அர்த்தமற்ற இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. தன் வாழ்நாளில் மிக மோசமான நாள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே கணேசன் மனம் படபடக்க அறைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து ராஜனும் வின்சன்டும் நுழைந்தார்கள். முத்துராமன் அவர்கள் உட்கார வேண்டிய நாற்காலிகளைக் காட்டினார்.
***
——————————————————————————–

      அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற எண்ணம் பொங்கிப் பொங்கி அவளை அழ வைத்தது. அவனுடைய இரண்டாவது குற்றச் சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் அவன் தண்டனை இன்னும் கடுமையாகும் என்று உதவித் துணை வேந்தர் எச்சரித்திருந்தது அவளுக்கு பயங்கரமான கற்பனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.இன்னும் கடுமையான தண்டனை என்றால் என்ன? ஒரு பருவம் தள்ளி வைப்பார்களா? ஓராண்டு தள்ளி வைப்பார்களா? அல்லது மிகக் கடுமையாகப் பல்கலைக் கழகத்தை விட்டே வெளியேற்றி விடுவார்களா? என் மானம் காக்க முன் வந்த அந்த நல்ல மனிதனுக்கு இப்படி நேர்ந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தான் சும்மா இருக்க முடியுமா? அவன் பல்கலைக் கழகத்தை விட்டுத் தள்ளப்பட்டால் தானும் விலகி விடுவது ஒன்றுதான் தான் அவனுக்குச் செய்யும் கைமாறாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் மேலும் மேலும் வலுப் பெற்றுக் கொண்டிருந்தது.இந்த எண்ணத்தை ஜெசிக்காவிடம் சொன்ன போது அவள் தலைகுனிந்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள்.

 

         பின் “உன்னிஷ்டம்” என்று அலட்சியமாகச் சொன்னாள். ஆனால் இதையே அவளுக்கு நெருங்கிய தோழியாக மாறிவிட்ட மாலதியிடம் சொன்ன போது அவள் சீறினாள்: “முட்டாளே! அவசரப்பட்டு உன் எதிர்காலத்தப் பாழாக்கிக்காத! பல்கலைக் கழகத்தில கெடச்ச இடத்தக் காரணமில்லாம உதறிட்டா பின்னால சேத்துக்கவே மாட்டாங்க! நீ காலம் பூரா பட்டம் வாங்கிறத மறந்திட வேண்டியதுதான்! உங்க அப்பா அம்மாவ நெனச்சுப் பார்!” என்றாள்.“விளங்குது மாலதி. ஆனா அவருக்கும் அப்படித்தான ஆகும்? அவர் எதிர்காலம் பாழாப் போகும்போது நான் மட்டும் நிம்மதியா படிச்சி பட்டம் வாங்கி சந்தோஷமா இருக்க முடியுமா?”“சந்தோஷமா பட்டம் வாங்கலன்னா, கவலையோட வாங்கிக்க! கணேசனுக்கு ஏதாவது சீரியசான தண்டனை கொடுத்தாங்கன்னா அதை எதிர்த்து ஏதாகிலும் பண்ணப் பார்ப்போம். அப்படியில்லன்னா அது அவருடைய விதி! இந்த சமுகத்திலுள்ள அநீதிக்கு அவர் ஒரு பலி! நம்மால என்ன செய்ய முடியும்? நீ எதுக்கு இதில அர்த்தமில்லாத தியாகியா மாறணும்? இதில யாருக்கு லாபம் சொல்லு? அநியாயம் பண்ற அந்த ராஜனோட கேங்குக்குத்தான் லாபம்!”மாலதி முதல் ஆண்டுதான் என்றாலும் அகிலாவுக்கு இரண்டு வயது மூத்தவள்.

 

      எஸ்பிஎம் முடித்து நான்காண்டுகள் தற்காலிக ஆசிரியையாக இருந்து அனுபவம் பெற்று சொந்த முயற்சியில் எஸ்டிபிஎம் எடுத்து இரவிரவாகப் படித்து இரண்டு முறை பரிட்சை எழுதித் தேரி வந்தவள். அகிலாவை ஒரு தமக்கைக்கு உள்ள உரிமையோடு அதட்டிப் பேச அவளுக்கு முடிந்தது.அவள் பேசுகிற நியாயம் புரிந்தது என்றாலும் கூட அகிலாவின் மனம் ஒரு பக்கம் “கணேசனின் துயரத்தில் நீ சந்தோஷம் காணலாமா?” என்று இடித்துக் கொண்டே இருந்தது.இரவு நேரங்களில் இதைப்பற்றியே நினைவாக இருக்கும் போது கணேசனைத் தனிமையில் பார்த்து அவன் கைபிடித்து நன்றி சொல்லி அழ வேண்டும் என்று அவளுக்குப் பலமுறை தோன்றியது. ஆனால் அவனைத் தனிமையில் காண முடியவில்லை. கணேசனின் விவகாரத்தைத் தன் சொந்த விவகாரமாக எடுத்துக் கொண்டு ஜெசிக்கா வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனோடு ஒட்டிக் கொண்டேயிருந்தாள். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ பேரவையிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல அவள் பல மாணவர்களைப் பார்த்துப் பேசி கையெழுத்தும் வாங்கிக் கொண்டிருந்தாள். அறைக்கு வந்த போதும் கணேசனின் வழக்கு பற்றியே பேசித் தானும் கலங்கி அகிலாவையும் கலங்க அடித்துக் கொண்டிருந்தாள்.

 

       முதல் விசாரணை நடந்தபோது அகிலா கணேசனோடு ஒன்றாக இருந்து எல்லாவற்றையும் சேர்ந்து அனுபவித்ததில் அவளுக்கு ஏதோ ஒருவித இன்பம் இருந்தது. அவனுடைய துயரத்தில் அவளும் அவளுடைய துயரத்தில் அவனும் பங்கு கொண்டதில் ஒரு நெருக்கம் உருவாகி இருந்தது. அவனுக்காக அழுத கண்ணீர் துயரமாக இருந்தாலும் பெருமையாக இருந்தது.ஆனால் இனி நடத்தப்படவிருக்கும் இரண்டாவது விசாரணையில் அகிலாவுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய விவகாரம் முடிந்து விட்டது. அவள் சொன்ன உண்மைகள் தள்ளப்பட்டு விட்டன. இனியுள்ளது கணேசன் இரவில் அவன் விடுதியில் மிரட்டப்பட்ட விவகாரம். அதில் அவளுக்குச் சம்பந்தமில்லை. இனி தான் கணேசனுக்குப் பரிந்து முறையீடு கொடுக்க முடியாது. அவனுக்குப் பரிந்து சாட்சி சொல்ல யாரும் அவளை அழைக்க மாட்டார்கள்.

 

       விசாரணை அறைக்கு வெளியே அவளும் அவனும் பயங்களையும் தைரியங்களையுப் பரிமாறிக் கொள்ள முடியாது.ஜெசிக்காவைப் போல அவனுடைய வழக்கைப் பெரிதாகப் பேசி அவனுடைய வக்கீல் போல அலைந்து திரிய அவளுக்கு முடியாது. உனக்கு நான் பிரியாத துணை என அவனோடு எந்த நேரமும் ஒட்டிக் கொண்டிருக்க அவளால் முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி வந்தது. ஜெசிக்காவை விடவும் இந்த விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவளும் ஈடுபட்டவளும் நான்தானே என்ற எண்ணம் அடிக்கடி தலை தூக்கியது.ஆனால் முடியவில்லை. வெட்கம் தடுத்தது. என்ன இருந்தாலும் அந்நியன். ஆண். ஆகவே அடக்கமில்லாமல் பழக முடியாது. அவள் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் அவள் காலையும் கையையும் கட்டி தான் நினைத்ததைச் சொல்ல முடியாமல் வாய்க்குக் கூடப் பூட்டுப் போட்டிருந்தது.அவனுக்காக அவள் கண்ணீர் விட்டாலும் அது அவள் அறைக்குள் அவள் தலையணையில்தான். கணேசன் பார்க்க முடியாது. அழாதே என்று பாசத்தோடு ஆறுதல் கூற முடியாது. அந்த எண்ணத்தில் அவள் ஏக்கம் இன்னும் மிகையானது.

 

       ஏக்கம் துயரங்களுக்கிடையே பாடங்களில் வேலைகள் குவிந்து கொண்டிருந்தன. ஒரு எளிய கணினி செயலிக்கு புரோக்ராம் எழுதச் சொல்லி டாக்டர் தாஜுடின் இரண்டு வார அவகாசம் கொடுத்திருந்தார். டாக்டர் அயிஷா இரண்டு புத்தகங்களில் அத்தியாயங்கள் நிர்ணயித்துப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருந்தார். டியோட்டோரியலில் அந்த இரண்டு அத்தியாயங்கள் பற்றியும் அவள் பேச வேண்டும். அதற்கான புத்ததகங்கள் நூல்நிலைய அடுக்கிலிருந்து மாயமாக மறைந்திருந்தன. அதை அவள் ரிசர்வ் செய்துவிட்டு கொண்டு போனவர்கள் திருப்பித் தரக் காத்திருந்தாள்.புறப்பாடத்தில் அவள் கலாச்சார நடனங்களுக்குப் பதிந்து கொண்டிருந்தாள். புதன்கிழமைகளில் ஐந்து முதல் ஏழு வரை பயிற்சி.

 

      புதிய மாணவர் மையக்கட்டிடத்தில் பண்பாட்டு அரங்கத்தின் மேல் மாடியில் பயிற்சி நடந்தது. இரண்டாவது வாரத்தில் மிக எளிதான ஜோகெட் நடனம் சொல்லிக் கொடுத்தார்கள். நுண்கலைப் பிரிவில் டியூட்டராக உள்ள லத்தீ·பா என்ற ஒரு இளம் மலாய்ப் பெண் பயிற்சியாளராக இருந்தார்.அன்று அகிலா நடனத்துக்கு உரிய தொடைகளைக் கவ்வும் டைட்சும் தொளதொளவென்ற டீ ஷர்ட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். அகிலாவுக்கு பரதநாட்டியம் தெரியும். பள்ளியில் கொஞ்சம் மலாய் நடனமும் பழகியிருக்கிறாள். ஆகவே ஜோகெட்டின் அசைவுகள் எளிதாகவும் நளினமாகவும் வந்தன.ஒரு தாடி வைத்த மலாய்க்காரர் ஓரத்தில் உட்கார்ந்து அவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அகிலாவின் மீதே இருந்தன. திடீரென தானும் எழுந்து அகிலாவின் பக்கத்தில் புகுந்து ஆட ஆரம்பித்தார். எல்லாரும் பெண்களாக ஆடிக் கொண்டிருக்கும் இடத்தில் யார் இந்தக் கரடி என்று எரிச்சலுற்றாள் அகிலா. ஆனால் பயிற்சி ஆசிரியை ஒன்றும் சொல்லாததால் அவளாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ஆள் அனுபவித்து ஆடினார். அவருடைய உடம்பு நடனத்துக்கு நன்றாக வளைந்து வந்தது. ஒரு ஜோகெட் பைத்தியமாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.பயிற்சியில் அவள் உடல் தொப்பையாக நனைந்திருந்தது. முதுகிலும் அக்குளிலும் வியர்த்து டீ ஷர்ட் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தது. முகப் பௌடரை வியர்வை நாற்றம் தூக்கி அடித்துக் கொண்டிருந்தது.

 

        ஆட்டம் முடிந்து அறையின் மூலைக்குப் போய் துண்டு எடுத்து அவள் கால்களைத் தூக்கி வைத்துத் தொடையில் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்த போது அந்தத் தாடிக்காரர் பின்னால் வந்தார். “நன்றாக ஆடுகிறாய். உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.சட்டென்று காலை இறக்கி டீ ஷர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள். தோற்றம் கலைந்த நிலையில் ஒரு அந்நிய ஆடவன் அவள் அருகில் நிற்பது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த ஆள் இப்படி இங்கிதமில்லாமல் வந்து பேசுவது எரிச்சலாகவும் இருந்தது. “நீங்கள் யார்?” என்று கேட்டாள்.“நான் ஒரு ரசிகன்தான். நல்ல நடனத்தை ரசிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா?” என்றார்.அகிலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அழகிய பெண்களைக் கண்டால் ஈயென இளிப்பவர்கள் பல்கலைக் கழகத்துக்குள்ளும் இருப்பார்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டாள். அவளுக்கு இந்த அனுபவம் தன்னுடைய பள்ளிக்கூட காலத்தில் சக மாணவர்களிடம் உண்டு. அதிலும் பெண்கள் இப்படித் தலை கலைந்து வியர்த்து சட்டை முதுகை ஒட்டியிருக்கும் காட்சியில் இவர்களுக்குப் பித்தம் தலைக்கேறிவிடும் என அவளுடைய நடனத் தோழிகள் கிளுகிளுத்திருக்கிறார்கள். இதற்காகவே ஆண்கள் அங்கு சுற்றிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்திருந்தாள். இந்த ஆளை அலட்சியப் படுத்துவதுதான் சரி என்று பட்டது. பதில் சொல்லாமல் இருந்தாள்.

 

         “என்னோடு நடனமாட வருகிறாயா?” என்று அந்தத் தாடிக்காரர் தொடர்ந்து சீண்டினார்.“உங்களோடு நான் ஏன் ஆடவேண்டும்?” சீறினாள்.“உனக்கு நல்லது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்!” என்றார் அவர். அந்த ஆளின் நமட்டுச் சிரிப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஊட்டியது.நேராக லத்தீ·பாவிடம் சென்றாள். “சே லத்தீ·பா!” என்று அழைத்து அவரிடம் இந்த ஆளைச் சுட்டிக் காட்டினாள்.“என்ன அகிலா?” என்று கேட்டார் லத்தீ·பா.“இந்த ஆள் என்னை அவருடன் ஆடவருகிறாயா என்று கேட்கிறார்” என்றாள்.லத்தீ·பா சிரித்தார். “இந்த ஆள் அப்படிக் கேட்பது உனக்குப் பெரிய பெருமை அகிலா. இவரை நான் அறிமுகப் படுத்தவில்லை அல்லவா? இவர்தான் பேராசிரியர் முகமட் கௌஸ். நுண்கலைத் துறையின் தலைவர்!”அகிலா அதிர்ந்து போனாள்.

 

     பேராசிரியர் கௌஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மலாய் பாரம்பரிய நடனங்களைக் கரைத்துக் குடித்தவர். பரத நாட்டியமும் முறைப்படி கற்றவர். டெலிவிஷன் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். நவீன நடனங்களை உருவாக்கி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தியவர்.“ஐயோ! எனக்குத் தெரியாமல் போய்விட்டது. மன்னித்து விடுங்கள் பேராசிரியர் அவர்களே! நீங்கள் இந்த இடத்தில் இவ்வளவு சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை!” என்றாள்.“நீ என்னுடன் ஆடுகிறேன் என்று சொன்னால் மன்னித்து விடுகிறேன்!” என்றார்.“இப்போதேவா?” என்று புரியாமல் கேட்டாள்.“இப்போதல்ல. இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ஆகஸ்டில் நடைபெறுகிற இரவு விருந்தில் வேந்தருக்கு முன்னால் ஆட ஒரு புதிய நடனத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் வேண்டும். ஒரு ஆண் நான். இன்னும் இரண்டு ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுத்துவிட்டேன். இன்னும் ஒரு பெண் வேண்டும்!”அகிலாவுக்குப் பயம் பற்றிக் கொண்டது. இன்னும் வேர்த்துப் போனாள்.

 

      “நானா? வேந்தரின் விருந்திலா? நான் இப்போதுதான் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். எப்படி…”“நீதான். வேந்தரின் விருந்தில்தான்! புதிதாக ஆரம்பிப்பவர்கள்தான் எனக்கு வேண்டும்!”“ஐயோ என்னால் முடியாது!” என்றாள்.லத்தீ·பா பின்னால் முதுகில் இடித்தார். “சரி என்று சொல் முட்டாள் பெண்ணே!”“சரி!” என்றாள்.“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இரவு 8 முதல் 10 வரை இங்கே பயிற்சி!” பேராசிரியர் கௌஸ் வெளியேறினார். அகிலா கொஞ்ச நேரம் அங்கேயே பிரமை பிடித்து நின்றாள்.“என்னைக் கூப்பிடவில்லையே என்று எனக்குப் பொறாமையாக இருக்கிறது!” என்றார் லத்தீ·பா.அந்த வார இறுதியில் சனிக்கிழமை பின்காலை வேளையில் அலோர் ஸ்டார் பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்று அதில் இருந்து இறங்கிய போது அகிலாவுக்கு அந்த ஊர் புதிதாகத் தெரிந்தது. பிறந்ததிலிருந்து அவள் இந்த ஊரைவிட்டுப் பிரிந்ததில்லை. அலோர் ஸ்டார் அரசினர் தமிழ்ப்பள்ளியில் தமிழைத் தொடங்கியதிலிருந்து தேசியப் பள்ளிகளுக்கு மாறி ஆறாம் பாரம் வரை இந்த ஊருக்குள்ளேயே சுழன்று சுழன்று படித்தாகிவிட்டது. இப்போது பினாங்கிற்குப் போய் மூன்று வாரம் இருந்து திரும்பும்போது இந்த ஊர் வேறு மாதிரி இருந்தது. அந்த பஸ் ஸ்டேஷன், கடை வரிசைகள், ஆறு, பழைய பாலம், மார்க்கெட், பார்க்கும் எல்லா இடங்களிலும் ஒரு மந்திர மயமான ஈர்ப்பு இருந்தது.அப்பா பஸ் ஸ்டேஷனில் தம்பியுடன் காத்திருந்தார். அவளைக் கண்டதும் தம்பி ஓடிவந்து அவளுடைய தோள்பையை வாங்கிக் கொண்டான். “எப்படிம்மா, பஸ் சௌரியமா இருந்திச்சா?” என்று அப்பா கேட்டார். முதல் முறை பினாங்கிலிருந்து விரைவு பஸ் பிடித்து வருகிறாள். ஒன்றரை மணி நேரப் பயணம்தான்.

 

       “பஸ் நல்லா இருக்குப்பா. ஒரு கஷ்டமும் இல்ல!” என்றாள். “அம்மா எப்படிப்பா?” என்றாள்.“இருக்காங்க, என்னா கொறச்சல்? நீ போய்ட்டியேங்கிற ஏக்கந்தான். இன்னைக்கு காலையில இருந்து மாஞ்சி மாஞ்சி சமைச்சிக்கிட்டிருக்கு வீட்டில!”அம்மாவின் சமையலுக்கு நாக்கு ஏங்கியது. தன் வீட்டில் தனக்கே உரிய பீங்கான் தட்டில் பழகிய பாத்திரங்களிலிருந்து பழகிய கரண்டிகளில் சோற்றையும் அம்மாவின் கைவாகுவில் மணக்கும் கறிகளையும் அள்ளி இஷ்டம் போல் பிசைந்து வாயில் திணித்துப் புரையேறி “மெதுவா சாப்பிடும்மா” என்று அம்மா முதுகில் தட்டித் தண்ணீரெடுத்துக் கொடுக்கும் மனக் காட்சியில் அவள் கரைந்தாள்.போகும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த பழைய இடங்களைப் புதிதாகப் பார்த்தாள். அவை தோற்றத்தில் முன்பு போல் இருந்தாலும் உணர்வில் மாறி இருந்தன. ஆனால் கொஞ்ச தூரம் போவதற்குள் மாறியிருப்பது ஊரல்ல, தான்தான் என்ற உணர்வு வந்தது.நான் பழைய அகிலா இல்லை. பள்ளி மாணவி அல்ல. பட்டப்படிப்பு மாணவி.

 

       வாழ்க்கையில் விவரம்தெரிந்த நாள் முதலாய் தனக்கு முன்னுதாரணமாகக் கொண்ட அப்பாவையும் கல்வியில் மிஞ்சியாகிவிட்டது. இன்னும் நான்காண்டுகளில் தான் பட்டதாரி. தன் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி.பட்டதாரிக்குரிய வேலை வரும். கைநிறையச் சம்பளமும் தனி அலுவலகமும் டெலிபோனும் வரும். இன்சூரன்சும் சேமிப்பும் வரும். வரும் கணவனும் பட்டதாரியாக இருப்பான். இருக்க வேண்டும். அது யாராயிருக்கும்? கணேசனா?அவன் நினைப்பு வந்து. அவன் தன்னைக் கைப்பிடித்து அழைத்துப் போனது, ஜெசிக்காவுடன் உட்கார்ந்து சீரியசாகப் பேசியது, விசாரணை அறைக்கு முன் காத்து நின்றது, குளிர்பானம் வாங்கிக் கொடுத்தது….அவனுடைய நினைப்பு ஏன் வரவேண்டும்? என் பிறந்த ஊரையும் எனக்கே உரிய வாசனைகளுடன் கூடிய என் அறையையும் பாசமிக்க குடும்பத்தையும் பழகிய தோழிகளையும் நினைத்து அனுபவிக்க வேண்டிய இந்த நேரத்தில் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு ஏன் அவன் நினைவு வரவேண்டும்?நான் அவனைக் காதலிக்கிறேனா? சீச்சீ! காதல் பண்ணும் அளவுக்கு எனக்கும் அவனுக்கும் என்ன நெருக்கம்? முன்பின் தெரியாத ஆள்.

 

       பார்த்து மூன்று வாரம் ஆகவில்லை. நிர்ப்பந்தத்தால் பழகியது இரண்டு மூன்று நாட்கள். அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?அவனுக்காக நான் அழுதேன். என்னை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற வந்த இளவரசனாக அவனை நினைத்தேன். எனக்காக அவன் தண்டனை அனுபவிக்கிறான் என வருந்தினேன். அவனுக்கு நான் உதவ நினைத்து முயன்றதெல்லாம் வீணாகிவிட்டதே என ஏங்கினேன். அவன் ஆறுதல் சொல்ல நான் தேறினேன். ஜெசிக்கா அவனோடு ஒட்டியிருப்பதைப் பார்த்து பொறாமைப் பட்டேன். நான் ஒட்டியிருக்க முடியவில்லையே என மனதுக்குள் பிழியப் பட்டேன். எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுதான் காதலா?“சீச்சீ” என மீண்டும் உதறினாள். சந்தர்ப்பங்களினால் நாங்கள் சந்தித்தோம். பஸ்ஸிலும் டெக்சியிலும் ஆட்களை சந்திப்பதில்லையா? அப்படி! பஸ்ஸில் தடுக்கித் தடுமாறுபவர்களைக் கைத்தாங்கலாகப் பிடிப்பதல்லையா? அப்படித்தான். எல்லாம் தருணங்களின் நிர்ப்பந்தங்கள். இந்த நிர்ப்பந்தங்கள் விலகியவுடன் ஒரு சிறிய புன்முறுவலுடன் உறவு நின்றுவிடும்.“சௌக்கியமா அகிலா!”“சௌக்கியம் கணேசன்! நீங்க எப்படி இருக்கிங்க?”“ஓக்கே! எக்கோனமிக்ஸ் லெக்சர் இருக்கு, பை பை!”முடிந்து விடும். அவ்வளவுதானா? அவ்வளவுதான் என்றால் வந்த இடத்தில் ஒரு வழிப் பயணி பற்றி ஏன் இத்தனை நினைவுகள்? இந்த ஊரின் காற்றை ஆழ்ந்து சுவாசித்து தோழிகளை நினைத்து நினைத்துத் தேடாமல் ஏன் கணேசனைப் பற்றியே சிந்தனை?தம்பி பிடித்து உலுக்கினான்.

 

         “பினேங்குக்குப் போயி அக்கா செவிடாப் போச்சிப்பா!” என்றான்.திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். “என்ன அருண்?”“அப்பா என்னமோ கேக்கிறாங்க, நீ என்னமோ யோசனையில இருக்கியே!”“என்ன கேட்டிங்க அப்பா?”“இல்ல, அந்த ரேகிங் கேஸ் பத்தி சொன்னிய, அது என்ன ஆச்சின்னு கேட்டம்பா!”“ஓ அதுவா?” அகிலா பெருமூச்சு விட்டாள். “அந்தப் பையனுங்க ஒருமாதிரி சூழ்ச்சி பண்ணி எங்களையே குத்தவாளி ஆக்கப் பாக்கிறாங்கப்பா. அடுத்த வாரம் இன்னும் விசாரண இருக்கு!”அகிலா மீண்டும் கணேசனை எண்ணிக் கவலைப் பட்டாள்.***

 

       கொல்லன் இரும்பு உலையின் துருத்தியிலிருந்து வரும் அனல் காற்றுப் போல நெஞ்சுக் கூட்டிலிருந்து புஸ் புஸ்ஸென்று மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. கால்களின் கீழ் சப்பாத்துகளின் “தம் தம்” ஒலி காதுப் பறையில் இடித்துக் கொண்டிருந்தது.பல்கலைக் கழகத்தின் புதிய ஓட்டப்பந்தய ஸ்டேடியத்தில் சிகப்பு வண்ண ஓட்டப் பாட்டையில் கணேசன் அப்போது பத்தாவது சுற்று ஜோகிங் வந்து கொண்டிருந்தான். அவனோடு ஓடிய ரவியும் ராகவனும் அசந்து உட்கார்ந்து விட்டார்கள். இன்னும் இருபது சுற்றாவது ஓடாமல் விடுவதில்லை என கணேசன் ஓடிக் கொண்டிருந்தான்.புதிய பருவத்திற்குப் பல்கலைக் கழகம் புகுந்ததிலிருந்து ஜோகிங் செய்ய நேரம் கிடைக்கவில்லை. முந்தைய பருவங்களில் வாரத்திற்கு மூன்று நாள் ஓடுவான். இன்று அவன் நண்பன் ரவியும் அவர்களுக்கு அண்ணன் போல் பழகிவிட்ட மூத்த மாணவர் ராகவனும் வந்து கூப்பிட்டவுடன் ஒத்துக் கொண்டான். புதிய ஸ்டேடியத்தில் ஓடலாம் என முடிவு செய்தார்கள். அவர்களுக்கு வசதியாக அன்று ஞாயிற்றுக் கிழமை. ஸ்டேடியம் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தது.

 

       ஐந்தாறு சீன மாணவர்கள் மட்டும் மத்தியிலுள்ள புல் திடலில் தாய்ச் சீ பழகிக் கொண்டிருந்தார்கள்.இந்த ஸ்டேடியத்தை அண்மையில்தான் கட்டி முடித்திருந்தார்கள். அதற்கு நேர் எதிரில் ஹாக்கிக்காக செயற்கைத் திடலும் அமைத்திருந்தார்கள். புதிய ஸ்குவாஷ் கோர்ட்டுகளும் பக்கத்தில் இருந்தன.உண்மையில் பல்கலைக் கழக வளாகத்தில் ஜோகிங் செய்ய ஸ்டேடியம்தான் வேண்டும் என்பதில்லை. அதன் சாலைகளிலும் சோலைகளிலும் எந்த இடத்திலும் ஜோகிங் செய்யலாம். ஆனால் ஸ்டேடியத்தில் சுற்றுக் கணக்கு வைத்து ஜோகிங் செய்யலாம். பாட்டை சமமாக இருக்கும். ஓடுவதற்கு அமைக்கப்பட்ட சிறப்புப் பாட்டையானதால் பாதத்தை எம்பிக் கொடுக்கும்.ஓட ஓட கணேசனுக்கு ஆனந்தமாக இருந்தது. எண்ணம் எங்கு அலைந்தாலும் உடலின் முயற்சி அநேகமாகத் தானியங்கியாக நடந்தது. கால்கள் தாளம் தவறாமல் எம்பின. அந்த எம்புதலுக்கேற்ப கைகள் வீசின. உடல் இயக்கத்தின் வெப்பத்தில் அவன் தசை நீர் ஆவியாகி அந்தக் காலை வேளையிலும் உடல் பூராகப் பொங்கி வழிந்தது. அவன் புதிதாக வாங்கிய நைக்கி ஓடும் சப்பாத்துக்கள் மெத்து மெத்தென்றிருந்தன.

 

      போன விடுமுறையின் போதுதான் அத்தை இந்த விலையுயர்ந்த சப்பாத்துகளை வாங்கிக் கொடுத்திருந்தாள்.அத்தையை நினைத்த போது கணேசன் நெஞ்சில் நன்றி பெருக்கெடுத்தது. அத்தை எப்போதும் அப்படித்தான். கணேசனுக்கு ஏதாகிலும் வேண்டும் என்று ஒரு குறிப்பு தெரிந்துவிட்டால் போதும். உடனே போய் எங்கிருந்தாவது வாங்கிக் கொடுத்துவிடுவாள்.விடுமுறையில் கிள்ளானில் அத்தை வீட்டில் இருந்தபோது ஒருநாள் கால் நகங்களை வெட்டிக் கொண்டிருந்தான். “ஏன் கணேசு உன் நகம் இப்படி வளைஞ்சி வளைஞ்சி கெடக்குது?” என்று அத்தை கேட்டாள்.“அடிக்கடி ஜோகிங் போறேன்ல அத்தை! சப்பாத்து கொஞ்சம் சரியில்ல! அது நெகத்தக் கெடுத்திருது!” என்றான்.“ஏன் சப்பாத்து சரியில்ல?”“என் சப்பாத்து சாதாரண விளையாட்டுச் சப்பாத்து! அதப் போட்டு ஓடுனா இப்படித்தான். ஜோகிங்கிக்கு தனி சப்பாத்து இருக்கு! ஆனா ரொம்ப விலை!”அத்தை விடவில்லை. அடுத்த நாள் அவனைக் கூட்டிக் கொண்டு போய் கிள்ளான் கடைத் தெருவில் அலைந்து அவன் தடுத்தும் விடாமல் 200 வெள்ளி செலவழித்து உயர்தர பிரான்டான நைக்கி சப்பாத்தை வாங்கிக் கொடுத்தாள். அந்தச் சப்பாத்தை வாங்கியதில் அவன் மகிழ்ந்ததை விட அத்தையும் அவள் மகள் மல்லிகாவும் மகிழ்ந்ததுதான் அதிகம்.அத்தைக்கு இப்போது இங்கு நடக்கின்ற குழப்பங்கள் தெரியவந்தால் எவ்வளவு கவலையும் கலவரமும் அடைவாள் என நினைத்துப் பார்த்தபோது உள்ளம் சோர்ந்தது. அவளுக்கு அவனுடைய படிப்பும் எதிர்காலமும் ஒரு பொருட்டே அல்ல. அவன் அவனாக இருப்பதுதான் பெரிது.

 

       “ஏன் கணேசு அங்கல்லாம் போய் இப்படி லோல் பட்ற. யுனிவர்சிட்டி கினிவர்சிட்டியெல்லாம் உனக்கு எதுக்கு? பேசாம விட்டுட்டு வந்து மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு!” என்பாள்.15வது சுற்று. மூச்சு வாங்கினாலும் உடல் இன்னும் களைக்கவில்லை. ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தான். வளாகத்துக்கு வெளியே தெற்கு கேட்டுக்கு அப்பால் யாப் சோர் ஈ சாலையில் கார்கள் விரைவாக ஓடிக் கொண்டிருந்தன. அதற்கப்பால் காம்பியர் குன்றுகள் பசுமையாகத் தெரிந்தன.அத்தை நினைவுகவனுடைய இடைவிடாத ஓட்டத்துக்கு இடையிலும் சிதறல் சிகறலாக வந்தது. அத்தைதான் அவனுக்குக் குடும்பம். தன் தந்தைக்குத் தங்கையான இந்த அத்தை இளம் வயதில் அவர்கள் வீட்டில்தான் வளர்ந்தாள். கிள்ளானை அடுத்துள்ள ஒரு தோட்டத்தில் பால்மரம் வெட்டிப் பிழைக்கும் குடும்பம் அது. அப்பா அப்போதும் குடி, இப்போதும் குடிதான்.பகலில் உழைப்பு, பிற்பகலில் தூக்கம். மாலையில் அம்மாவுடன் காசுக்குச் சண்டை. அப்புறம் கள்ளுக்கடையில் குடி.

 

      இரவில் பெண்டாட்டியை அடித்துவிட்டு மயக்கம் கலந்த தூக்கம். விடிகாலையில் இயந்திரம்போல் எழுந்து வேலை. இதுதான் அப்பா.பின்னால் சமுதாய சீர்திருத்த நோக்கம் கொண்ட இளைஞர்கள் செய்த புரட்சியில் அந்தத் தோட்டத்தின் கள்ளுக்கடையை மூடிவிட்டார்கள். ஆனால் அதே வேகத்தில் அந்தத் தோட்டத்தில் கள்ளச் சாராயம் புகுந்தது. முன்பு கள் குடித்துத் தள்ளாடினாலும் இயற்கை பானத்தில் தெம்பாக இருந்த அப்பா சாராயம் குடித்து உள்ளுறுப்புக்களை எரித்துக் கொள்ள ஆரம்பித்தார்.அம்மாவுக்கு அந்தக் குடும்பத்தில் ஒரு பங்கு இருந்ததாகவே தெரியவில்லை. வாயிருந்தும் அவள் ஊமை. அப்பாதான் அவள் உலகம். வேறு உலகம் தெரியாது. பிள்ளைகளை வளர்க்கக்கூட அவளுக்குத் தெரியாது. அப்பா சாராயம் வாங்கி வா என்றாள் இன்றும் நங்குநங்கென்று ஓடுவாள்.பிள்ளைகள் – கணேசன், அவனுக்கு முந்திய ஒரு அக்காள், ஒரு அண்ணன் – மூவரும் தாங்களாகத்தான் வளர்ந்தார்கள். இதற்கிடையில் வேறு ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்த கணேசனின் தாத்தா இறந்து விட இந்த மங்களம் அத்தை அவர்கள் குடும்பத்தில் அடைக்கலம் தேடி வந்து அவளும் பால்வெட்டப் போய் குடும்பத்துக்கு வேலைக்காரியாகவும் இருந்து அப்பாவிடம் உதையும் வாங்கிக் கொண்டு கிடந்தாள்.ஆனால் இந்த அத்தையிடம் சிவந்த மேனியும் வடிவான முகமும் ஒரு மயக்கச் சிரிப்பும் இருந்தன. கணேசனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவளும் “கணேசு, கணேசு” என ஒரு மகனைப் போல அவனை அணைத்துக் கொஞ்சினாள்.அவர்கள் தோட்டத்திற்குத் துணி விற்கும் இளைஞரான வியாபாரி ஒருவர் மாதந்தோறும் வருவார். தவணைக்குச் சேலைகளும் பிற துணிகளும் விற்பார். அவர்கள் வீட்டுக்கு மாதந்தோறும் வரப்போக இருந்தவர் அத்தையைப் பார்க்க விசேஷமாகவும் வரத் தொடங்கினார்.

 

        வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேதோ பலகாரங்கள் வாங்கிக் கொடுத்து நண்பராகி அத்தையிடம் சிரித்துச் சிரித்துப் பேசினார்.இதைப் பார்த்துப் பொருக்காத அவன் அப்பா ஒருநாள் அத்தையைப் போட்டு அடிக்க அதைக் கேள்விப்பட்ட துணி வியாபாரி மறுநாள் வந்து அப்பாவையும் அம்மாவையும் நேராகக் கேட்டார்: “நான் மங்களத்த கட்டிக்க விரும்புறேன்! என்ன சொல்றீங்க?”இதைக் கேட்டு முதலில் வீட்டில் கலவரம்தான் நிகழ்ந்தது. அவர் ஏதோ பேசக் கூடாதததைப் பேசிவிட்டதைப் போலவும் இதனால் குடும்ப மானம் போய்விட்டது போலவும் அப்பா குதித்தார். அப்புறம் பேச்சு வார்த்தைகள் நடந்தன. பணம் கைமாறியது.அவனுக்கு ஆறு வயது இருக்கும் போது தோட்டக் கோயிலில் அத்தையின் திருமணம் நடந்தது கணேசனுக்கு ஒரு பழைய மங்கிக் கிழிந்து போன புகைப்படம் மாதிரி துண்டு துண்டாக ஞாபகத்தில் இருந்தது. அத்தை புதிதாகப் புடவை கட்டிக்கொண்டு மாலை போட்டுக் கொண்டிருந்த காட்சி, அண்டாக்களில் வெந்து கொண்டிருந்த ஆட்டிறைச்சிக் குழம்பின் வாசனையோடும் வீட்டில் குவியல் குவியலாகச் சுட்டுப் போடப்பட்டிருந்த அதிரசங்களின் எண்ணெய் பிசுபிசுப்போடும் நினைவுக் குகைகளின் ஓரங்களில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

 

       கல்யாணத்திற்குப் பின் வீட்டுக்குள் என்ன காரணத்தினாலோ பெரிய சண்டை நடந்தது. அத்தை மல்லிகைப் பூ மணமும் சந்தன மணமும் மாறாமல் கணேசனை அணைத்துக் கொண்டு ஒரு மூலையில் சுருண்டிருந்தாள். சண்டையின் உச்சத்தில் அந்த மாமா அறைக்குள் வந்து அத்தையைக் கையைப்பிடித்து எழ வைத்தார். “மங்களம், இந்த ஈன ஜனங்களோட மூஞ்சில இனி எந்த நாளும் முளிக்கவே கூடாது. வா. கடைசியா எல்லார் கிட்டயும் போயிட்டு வரேன்னு சொல்லிக்க! கார் கொண்டாந்திருக்கேன், ஏறு!” என்றார்.அத்தை அவனைத்தான் அதிகமாகக் கட்டிப் பிடித்து அழுதாள். அப்புறம் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டுக் கார் ஏறிப் போய்விட்டாள்.அன்றிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகள் அத்தை அந்த வீட்டுக்குத் திரும்பவில்லை. ஆனால் அவள் வாழ்க்கை முற்றாக மாற்றம் அடைந்து விட்டதை அவ்வப்போது செவிவழிச் செய்திகளாக கணேசனின் குடும்பம் கேட்டு வாய் பிளந்து கொண்டிருந்தது.அத்தையின் கணவர் வியாபாரத்தில் வளர்ந்து விட்டாராம். கார் வைத்து வியாபாரம் செய்கிறாராம். வியாபாரம் ஓஹோ என்று நடக்கிறதாம். ஒரு பெண் குழந்தையாம். எல்லாம் இந்த மனைவி கொண்டு வந்த அதிர்ஷ்டம் என்று மனைவியைப் பாராட்டிக் கொண்டிருக்கிறாராம்.

 

      பங்களா வாங்கி விட்டார்களாம். “உன் மூதேவி அண்ணன் முகத்தில முளிக்காத மங்களம். வந்த சீதேவி ஓடியே போயிடுவா!” என்ற அவருடைய மருட்டலில் மங்களம் இவர்கள் குடும்ப நினைப்பையே விட்டுவிட்டாளாம்.“ஓ அப்படியா! அவ வரவேணாம்! வந்தா செருப்பாலியே அடிப்பேன்!” என்று இருமி இருமி பதில் சவால் விட்டார் அவன் அப்பா.ஆனால் அத்தை ஒரு நாள் அவர்கள் வீடு தேடி வரத்தான் செய்தாள். ஓர் ஐந்து வயதுப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு டிரைவர் வைத்து ஓட்டிய சொந்தக் காரில் வந்திறங்கி அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். “ஐயோ என்ன உட்டுட்டுப் போயிட்டாங்க அண்ணி! நெஞ்சு வலிக்குதுன்னு படுத்தாங்க! பட்டுன்னு போயிட்டாங்க! எனக்கு இனி குடும்பம்னு சொல்லிக்க வேற யாரு இருக்காங்க உங்கள விட்டா….?

 

       இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்” என்றார் பேராசிரியர் முருகேசு.கணேசனும் ராகவனும் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவருடைய அறையில் இருந்தார்கள். சரித்திரத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த அவரை மறுநாள் பார்க்க வேண்டும் என ராகவன் தொலை பேசியில் நேற்று கேட்ட போது முதலில் மறுத்து விட்டார்.“நாளைக்கு முழுக்க எனக்கு வேலைகள் இருக்கு ராகவன். எட்டரை மணிக்கு டீன் என்னைச் சந்திக்கணும்னு சொல்லியிருக்காரு. ஒன்பது மணிக்கு நானும் டீனும் ஒரு மீட்டிங் போக வேண்டியிருக்கு. பதினொரு மணிக்கு விரிவுரை. மத்தியானம் டியுட்டோரியல். நாலு மணிக்கு என்னுடைய எம்.ஏ. மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க வர்ராரு. ஆகவே நேரம் இருக்காது. அவசரம் இல்லைன்னா இன்னொரு நாளைக்கு வாங்களேன்!” என்றார்.ராகவன் நிலைமையின் அவசரத்தை எடுத்துச் சொன்னார். கணேசனைப் பற்றிச் சொன்னார்.“சரி. அப்ப ஒரே வழிதான் இருக்கு. நாளைக்கு காலையில ஏழரை மணிக்கெல்லாம் வந்திருங்க. எட்டரைக்குள்ள பேசி முடிக்கலாம்!” என்றார்.

 

       “நீங்கள் எங்களுக்காக அத்தனை வெள்ளன வரவேண்டியிருக்கே!” என்று வருத்தப் பட்டார் ராகவன்.“பரவாயில்ல! எப்படியும் வழக்கமா நான் எட்டு மணிக்கு என்னுடைய அலுவலகத்துக்கு வந்திருவேன். அப்பதான் மாணவர்கள் தொந்தரவு இல்லாம கடிதங்களையும் ஈமெயிலையும் பார்த்து பதில் எழுத முடியும். இந்த கணேசன் கேஸ் பத்தி நானும் கணேசன் கிட்ட பேசத்தான் வேண்டியிருக்கு. அதினால ஏழரைக்கு வந்திடுங்க. பேசுவோம்!” என்றார்.ஏழரை மணிக்கு அவர்கள் மனிதவியல் கட்டடத்தை வந்தடைந்த போது கட்டடக் கதவு திறந்திருந்தாலும் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை. அலுவலக ஊழியர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. கார் நிறுத்துமிடங்கள் வெறுமையாகக் கிடந்தாலும் பேராசிரியருடைய கார் அங்கு ஒற்றையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் தங்களுக்காக அவர் வெள்ளென வந்து காத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.முதல் மாடிக்கு ஏறிச் சென்று அவருடைய அறைக் கதவை அவர்கள் தட்டிய போது “வாங்க, வாங்க!” என்று தமிழிலேயே பதில் சொன்னார்.அவருடைய அறையை முழுவதுமாக புத்தக அலமாரிகள் அடைத்துக் கொண்டிருந்தன.

 

       ஆசிய வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராக இருந்ததால் இந்திய, சீன, தென்கிழக்காசிய வரலாற்று நூல்கள் ஏராளமாக இருந்தன. அவரே எழுதிய “தென்னிந்தியாவில் திராவிடர் கழகத்தின் தாக்கம்” என்ற ஆங்கில நூலின் பல பிரதிகள் இருந்தன. அதே போல “தென்கிழக்காசியாவில் இந்தியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள்” என்ற அவர் எழுதி தேவான் பஹாசாவால் பதிப்பிக்கப்பட்ட மலாய் நூலும் அந்த அலமாரி ஒன்றில் இருந்தது.தமிழ் நூல்களும் ஏராளமாக வைத்திருந்தார். தமிழ் பக்தி இலக்கியத்திலும் சைவ சித்தாந்தத்திலும் ஆராய்ச்சி ஈடுபாடு உள்ளவராதலால் அந்த நூல்கள் ஏராளமாக இருந்தன. பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஆதி சங்கரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றிய நூல்கள் இருந்தன.நவீன இலக்கியத்திலும் ஈடுபாடு உள்ளவராதலால் பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு என பலவித நூல்கள் இருந்தன. சீலிங் உயரத்துக்கு அடிக்கப்பட்டிருந்த அலமாரிகளில் இன்னும் தடிப்புத் தடிப்பான தமிழ் ஆங்கில புத்தகங்கள் இருந்தன. அவற்றை எடுக்க ஏறுவதற்காக ஒரு ஆளுயுர ஏணியும் அவர் அறையில் இருந்தது.கம்ப்யூட்டர் திரையில் ஏதோ ஈமெயிலைப் படித்துக் கொண்டிருந்தவர் அதை மூடிவிட்டு அவர்களைப் பார்த்தார்.அவருடைய நாற்காலிக்கு மேலாக ஒரு பெரிய புத்தர் படம் தொங்கிக் கொண்டிருந்தது. தாமரையில் அமர்ந்து மடிமேல் திறந்த இடது உள்ளங்கை மேல் வலது புறங்கை அமர்த்தி கண்களை மூடி தியான நிலையில் அமைதி தவழும் முகத்தோடு தங்க வண்ணத்தில் அந்த புத்தர் இருந்தார். கணேசன் முன்பு ஓரிரு முறை அவரைப் பார்க்க அந்த அறைக்கு வந்திருந்த போது அந்தப் படத்தைப் பார்த்து தன் உள்ளத்திலும் பக்தியும் பரவசமும் பரவுவதை அனுபவித்திருக்கிறான்.வணக்கம் சொல்லி அமர்ந்தபின் ராகவன் சொன்னார்: “உங்க அறையில இவ்வளவு தமிழ் புத்தகங்கள் வச்சிருக்கிறிங்களே சார்.

 

         பார்க்க சந்தோஷமா இருக்கு!”“அப்படியா ராகவன்! ஆனா அடிக்கடி குறிப்பு பாக்கிறதுக்காக உள்ள புத்தகங்கள மட்டும்தான் இங்க வச்சிருக்கேன். மற்ற தமிழ் புத்தகங்கள்ளாம் வீட்டில. அது அலமாரி அலமாரியாக குப்பை குப்பையா கிடக்கு!” என்றார் சிரித்துக் கொண்டே.“சரி வந்த விஷயம் சொல்லுங்க! எப்படி நல்ல மாணவரான கணேசன் இந்த மாதிரி ஒரு இக்கட்டில மாட்டிக்கிட்டார்?” அவர் வெற்றுரையாடலில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; நேராக விஷயத்துக்கு வர விரும்புகிறார் என்பதை கணேசன் புரிந்து கொண்டான்.கணேசன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான். “உண்மையில நான் புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல பேராசிரியர் அவர்களே! அன்றைக்கு நான் விசாரணையில சொன்னது அத்தனையும் உண்மை. அதே போல அந்தப் பையன் பரசுராமன் சொல்றதும் அவனுடைய கூட்டாளிகள் சொல்ற சாட்சியமும் பொய். ராஜனும் அவனுடைய காராட் கேங் நண்பர்களும் பரசுராமன மிரட்டி வச்சிருக்காங்க. அந்த பயத்திலதான் அப்படிச் சொல்றார். நான் நிரபராதி. ஒரு முதலாண்டுப் பெண்ணுக்கு நல்ல மனசோட உதவி செய்யப் போய் சந்தர்ப்ப வசத்தால என்னுடைய உண்மைய நிருபிக்க முடியாம இருக்கிறேன்!”சொல்லும்போது அவன் கண்கள் கலங்கின. இந்தப் பேராசிரியரை நட்புச் சூழ்நிலையில் சந்தித்துச் சுமுகமாகப் பேசிக்கொண்டிருந்த காலங்கள் போய், இப்போது முறையீடு செய்து கெஞ்ச வேண்டிய நிலைமை அவனை உள்ளுக்குள் துன்புறுத்தியது. தலை குனிந்து துடைத்துக் கொண்டான். அப்போதுதான் பேராசிரியர் முருகேசு சொன்னார்:

 

      “இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்”அவர் அந்தப் பல்கலைக் கழகத்தில் தொடக்கத்திலிருந்தே வேலை பார்த்து வந்திருக்கிறார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் அடிப்படை பட்டப் படிப்பை முடித்தபின் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயிற்சி விரிவுரையாளராகச் சேர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்புக்கும் முனைவர் பட்டப் படிப்புக்கும் உபகாரச் சம்பளங்கள் பெற்று வெளிநாடுகள் சென்று படித்து முடித்தவர். அதே பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகவும், பின்னர் முழுப் பேராசிரியராகவும் பதவிகள் பெற்றவர். இப்போது வரலாற்றுத் துறைக்குத் தலைவராகவும் உள்ளவர்.தொடக்க காலம் முதலே இந்திய மாணவர்களோடு தொடர்பு உள்ளவர். தான் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த சில ஆண்டுகளைத் தவிர்த்து பிற எல்லா ஆண்டுகளிலும் இந்திய பண்பாட்டுச் சங்கத்திற்குத் தொடர்ந்து ஆலோசகராக இருந்து வந்திருக்கிறார்.“தொடக்க காலத்தில இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ர மாணவர்கள் தமிழ் அவ்வளவாத் தெரியாதவங்களா இருந்தாங்க. இருந்தாலும் தமிழ் பண்பாட்டின் மேல ஆர்வம் உள்ளவங்கதான்.

 

      பெரும்பாலும் நடுத்தர வகுப்புப் பிள்ளைகள். ஆனா அண்மையில தமிழ் பள்ளிக் கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கி தேசியப் பள்ளிகளுக்குப் போய் முன்னேறின தொழிலாளர் வகுப்புப் பிள்ளைகள் பலர் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வரத் தொடங்கியிருக்காங்க. இது பாக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.“தமிழ்ப் பள்ளிக்கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கிய முதல் தொகுதி பல்கலைக் கழக மாணவர்கள் ரொம்ப பணிவுள்ளவர்களாகவும் மரியாதையுள்ளவர்களாகவும் மொழி கலாச்சாரத்தில ரொம்ப பிடிப்பு உள்ளவங்களாகவும் இருந்தாங்க. ஆனா போகப் போக இந்த நிலமை மாறி வர்ரத நான் பார்க்கிறேன்.“இப்ப வர்ர தமிழ் மாணவர்களுடைய பழக்கவழக்கங்கள் ரொம்ப கொச்சைத் தனமா இருக்கு. இதை நான் இடை நிலைப் பள்ளிகளிலியும் பார்க்கிறேன்.

 

       இடைநிலைப் பள்ளிகள்ள இவங்க நடத்திர கலைநிகழ்ச்சிகள், வேற நடவடிக்கைகள் எல்லாத்திலியும் ஒரு கொச்சைத் தனம் இருக்கு. ரொம்ப கீழ்த்தரமான பேச்சுகள், சினிமா மேல பைத்தியம், சினிமாவ தங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்கள்ள காப்பியடிக்கிறது, சிகரெட் குடி போன்ற பழக்கங்கள் எல்லாம் அதிகரிச்சி வருது. அந்தப் பழக்க வழக்கங்களையே பல்கலைக் கழகத்துக்கும் கொண்டு வர்ராங்க”நிறுத்தி ஒரு பெருமூச்சு விட்டார். பொதுவாகச் சொல்லுகிறாரா அல்லது தன்னைத்தான் குற்றவாளியாக்கிக் கூறுகிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கணேசன் இருக்கையில் நெளிந்தான்.“அது மட்டும் அல்ல. பிறர் அவங்களுக்குப் புத்திமதி சொல்றதையும் அவங்க வெறுக்கிறாங்க. விரிவுரையாளர்கள் உட்பட யார் மேலயும் அவர்களுக்கு மரியாதை இல்லாம போச்சி. ஆகவே போன சில ஆண்டுகளாக என்னுடைய ஆலோசனய கூட அவங்க செவி மடுக்கிறது கிடையாது. யாரும் நம்ம ஒண்ணும் செய்ய முடியாது என்கிற ஒரு திமிரான போக்கு இருக்கு! இதுவே எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கு”கணேசனை நேராகப் பார்த்தார். பேசினார்: “இந்த நிலைமையிலதான் கணேசனப் போல அமைதியான புத்திசாலித்தனமான மரியாதையுள்ள மாணவர்களப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

 

         ”திரும்பி ராகவனைப் பார்த்தார். “உங்களையுந்தான் ராகவன். பல ஆண்டுகளாக வேல செய்து வருமானம் தேடி குடும்பத்த அமைச்சிக்கிட்ட நிலைமையிலும் படிப்புக்காக வேலய விட்டுட்டு குடும்பத்த விட்டுட்டு வந்திருக்கிற உங்களயும், நீங்க படிப்பில காட்டிற அக்கறையையும் நான் ரொம்ப மதிக்கிறேன்!”மீண்டும் கணேசன் பக்கம் திரும்பினார்: “இந்த எண்ணத்தோட இருக்கும் போதுதான் கணேசன் ரேகிங்கில பிடிபட்டார்னு செய்தி வந்தது. எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்திச்சி. உண்மையா பொய்யான்னு முடிவு செய்ய முடியில. அப்படி உண்மையிலேயே நடந்திருந்து இப்ப பொய் சொல்லித் தப்பிக்க நினைச்சிங்கன்னா இனி இந்திய மாணவர்கள் மேல உள்ள எல்லா நம்பிக்கையையும் நான் இழந்திருவேன்!”சொல்லி நிறுத்தினார். ராகவனும் கணேசனும் வாயடைத்துப் போயிருந்தனர். அவர் உள்ளம் இந்த நிகழ்ச்சியால் எவ்வளவு புண்பட்டுப் போயிருக்கிறது என்பது கணேசனுக்குப் புரிந்தது.குரல் தளும்பச் சொன்னான்: “சார்! என்னப் பத்திய உங்களுடைய நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி. அந்த நல்லெண்ணத்துக்குப் பாதகமான காரியம் எதையும் நான் செய்யில. இது சத்தியம்”ராகவன் பேசினார்: “சார்! இந்த காராட் கேங் பையன்களுக்கு கணேசன் அல்லது என் போன்றவர்கள் மேல எப்போதுமே கோபம், பொறாமை. ஏன்னா அவங்களுடைய அட்டூழியங்களுக்கு நாங்க தடையா இருக்கிறோம்கிறதுக்காக. இந்த முறை கணேசன் அவங்ககிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு. அவங்களுடைய சூழ்ச்சிக்கு பலியாகிட்டாரு. இந்த விஷயம் துணைவேந்தர் வரைக்கும் போயிட்டதினால அவருடைய நண்பர்களான நாங்கள் வருத்தத்தோட அனுதாபப் பட்றதத் தவிர வேற எதுவும் செய்ய முடியல. அதினாலதான் உங்க உதவிய நாடி வந்திருக்கோம்” என்றார்.பேராசிரியர் சற்று நேரம் யோசித்தவாறு இருந்தார். கணேசனைப் பார்த்தார்.

 

       “கணேசன். நீங்க சொல்றத உண்மைன்னே வச்சிக்குவோம். ஆனா உங்கள் பக்கம் சாட்சிகள் இல்ல. ராஜன் வெளி ஆட்களக் கொண்டு வந்து உங்கள மிரட்டினதாக நீங்க சொன்னதுக்கும் சாட்சிகள் யாரும் இதுவரையில இருக்கிறதா தெரியில. இந்த நிலையில எத வச்சி உங்கள காப்பாத்திறதுன்னு எனக்கும் தெரியில”நிறுத்தி யோசித்தார். பின் தொடர்ந்தார்: “என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் கணேசன், டத்தோ சலீமிடம் பேசிப் பார்க்கிறதுதான். நீங்கள் சந்தர்ப்ப வசத்தால இதில மாட்டிக்கிட்டிங்கன்னு சொல்றேன். உங்களுடைய நல்ல குணத்தப்பத்தி சொல்றேன். நீங்கள் இந்தத் தவறை செஞ்சிருக்க மாட்டிங்க அப்படிங்கிற என்னுடைய நம்பிக்கையையும் சொல்றேன். அதற்கு மேல அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!” என்றார்.கணேசன் நன்றியுடன் அவரைப் பார்த்தான். “மறு விசாரணை இந்த வெள்ளிக்கிழமை வச்சிருக்காங்க சார்!” என்றான்.“தெரியும். எனக்கும் சொல்லிட்டாங்க. நான் இன்றைக்கே டத்தோ சலீம்கிட்ட பேசிறேன். நீங்க நாளக்குக் காலையில எட்டு மணிக்கு மீண்டும் வந்து என்னப் பாருங்களேன். என்ன பதில்னு சொல்லிட்றேன்!” என்றார்.சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.அவருடைய டெலிபோன் அடித்தது. எடுத்துப் பேசிவிட்டு வைத்தார். “டீன் வந்திட்டாரு. அவரப் பார்க்கிற நேரமாச்சி!” என்றார்.ராகவனும் கணேசனும் எழுந்து புறப்படத் தயாரானார்கள். அவர்கள் கதவைத் திறக்கும்போது பேராசிரியர் கூறினார்: “மனத்த தளரவிடாதிங்க கணேசன். உண்மை வெல்லுங்கிறதில நம்பிக்கையோட இருங்க!”“நன்றி சார்!” என்று வெளியே வந்து கதவைச் சாத்தினான் கணேசன். அவனுடைய உள்ளத்தில் புதிய நம்பிக்கைகள் தளிர் விட்டிருந்தன.

 

       அன்று இரவு ஐசெக் சங்கத்தின் செயலவைக் கூட்டம் இருந்தது. அந்த சங்கத்தின் பொருளாளர் என்ற முறையில் அவன் கட்டாயமாக அதில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டில் தென்கிழக்காசிய பல்கலைக் கழகத்தில் உள்ள பொருளாதார மாணவர்களின் கருத்தரங்கம் ஒன்று அறிவியல் பல்கலைக் கழகத்தில் நடத்த ஏற்கனவே திட்டங்கள் முடிவடைந்திருந்தன. ஆகவே அதைப்பற்றி அன்று முக்கியமாகப் பேசவேண்டியிருந்தது. ஐசெக்கின் செயலாளரான ஜெசிக்கா போன வாரம் அவனுக்கு நினைவூட்டியிருந்தாள்.மாணவர் சங்கக் கட்டடத்தின் ஐசெக் அறைக்கு அவன் எட்டு மணியளவில் வந்த போது ஜெசிக்கா ஏற்கனவே வந்து காத்திருந்தாள். கணேசனைப் பார்த்தவுடன் “கணேசன், இங்கே வா, இங்கே வா! உனக்கு ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன்!” என்று கத்தினாள்.அவளருகில் சென்று உட்கார்ந்தான். “என்ன செய்தி ஜெசிக்கா?” என்று கேட்டான்.“கணேசன்! நேற்று நடந்த மாணவர் பேராளர் மன்றக் கூட்டத்தில் உன்னுடைய ரேகிங் கேஸ் பற்றி நான் பேசினேன். நீ அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டிருப்பது பற்றி துணைவேந்தருக்கு கண்டனக் கடிதம் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.

 

      மாணவர் பேராளர் மன்றத்தில் உள்ள 22 பேரில் மூன்றில் இரண்டு பங்கு – அதாவது 15 பேர் – கையெழுத்துப் போட்டால் அப்படி ஒரு கடிதம் எழுதலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்றே ஆறு பேரிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஒன்பது பேர் கையெழுத்து வாங்கிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்!” என்றாள் உற்சாகமாக.கணேசனுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை. இப்படி மாணவர்கள் ஆதரவை வலிந்து பெற்று வளாகம் முழுவதும் தம்பட்டம் அறைந்து தன் வழக்கு வெல்லுவதை அவன் விரும்பவில்லை. “ஏன் இந்த வீண் வேலை ஜெசிக்கா? இப்படியெல்லாம் செய்தால் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எரிச்சல்தான் ஏற்படும்!” என்றான்.“ஏற்படட்டுமே! இதை இப்படியே விடக் கூடாது. உன்னை இந்தத் தீய சக்திகள் வீழ்த்தி விட நான் அனுமதிக்க மாட்டேன். இதில் உனக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் மாணவர்களைத் திரட்டி ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தப் போகிறேன்!” என்று கத்தினாள். ஐசெக் கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற மாணவர்கள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். கணேசனுக்குத் தன் விஷயம் இப்படி உரத்த குரலில் பேசப்படுவது கூச்சமாக இருந்தது.ஐசெக் தலைவர் லீ யென் லாவ் மேசையைத் தட்டினார். “ஓக்கே, ஓக்கே! நாம் இன்று பேசி முடிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளன. வீண் பேச்சில் நேரத்தை விரயமாக்க வேண்டாம். கூட்டத்தை ஆரம்பிப்போம்.

 

      சிலாமாட் டத்தாங் உந்தோக் செமுவா!” என்று நல்வரவு கூறிக் கூட்டத்தைத் தொடங்கினார்.தன்னுடைய விசாரணை பற்றிய விஷயம் ஜெசிக்காவைத் தவிர மற்றவர்களுக்கு “வீண் பேச்சாக” இருப்பது கணேசனுக்குப் புரிந்தது.பத்து மணிக்கு அவர்கள் கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஜெசிக்கா அவனுடன் சேர்ந்தே வெளியே வந்தாள். மாணவர் சங்கம் மற்றும் கலாச்சார மண்டபம் கொண்ட அந்த இணைக் கட்டடம் இரவில் வெறுமையாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த மாணவர் கேன்டீன், கம்ப்யூட்டர் விற்பனை மையம், பல்கலைக் கழகக் கூட்டுறவு மினிமார்க்கெட், கூட்டுறவு புத்ததகக் கடை, பேங்க் சிம்பானான் நேஷனல் ஆகிய எல்லாமும் அடைபட்டுக் கிடந்தன. மாணவர் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த ஏராளமான அறைகளில் ஓரிரண்டு அறைகளில் மட்டுமே விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஓரறையிலிருந்து ஜோகெட் இசை வந்து கொண்டிருந்தது.கட்டடத் தொகுதியின் மையத்தில் புல் வெளியும் பூச்செடிகளும் நட்டு அழகு படுத்தியிருந்தார்கள்.

 

      ஈசல்கள் சூழ்ந்து அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.கட்டடத்தின் முன்னிருந்த சாலையை வாகனங்கள் போகமுடியா வண்ணம் அடைத்து வண்ணச் செங்கற்கள் பதித்து நடக்க மட்டுமே அனுமதிக்கப்படும் பாட்டையாக ஆக்கியிருந்தார்கள். அந்தச் சாலையின் ஓரத்தில் பழைய மழை மரங்கள் பிரம்மாண்டக் குடைகள் விரித்திருந்தன. அவற்றின் கீழ் இருந்த சக்தி மிகுந்த மின் விளக்குகள் மரத்தின் மீது ஒளி வீசி இலைகளை ஒளி-நிழல் காட்சிகளாக மாற்றியிருந்தன.தன் மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டுக்குத் திரும்ப விரைந்த கணேசனை கைபிடித்து நிறுத்தினாள் ஜெசிக்கா. “என்ன ஜெசிக்கா?” என்று கேட்டான்.“இப்படிக் கொஞ்ச நேரம் உட்காரலாம் கணேசன். நாளைக்கு யார் யாரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது பற்றிப் பேசவேண்டும்!” என்று அவனை இழுத்துக் கொண்டு கலாச்சார மண்டபத்திற்குச் செல்லும் படிகளில் முதல் படியில் அவனை உட்கார வைத்து அவளும் அவனுக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.“ஜெசிக்கா! நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு நான் பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க வேண்டும். இன்றிரவு அறைக்குப் போய் நண்பனிடமிருந்து கடன் வாங்கி வைத்துள்ள பாடப் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் பார்த்துக் குறிப்பெழுத வேண்டும். அப்புறம் மூன்று நான்கு மணி நேரமாவது தூங்க வேண்டாமா?” என்றான்.ஜெசிக்கா அவனை முறைத்தாள். “அதெல்லாம் சின்ன விஷயம். நான் உன் வாழ்க்கையைக் காப்பாற்றப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

 

       நீ புத்தகம் படிப்பது பற்றியும் தூங்குவது பற்றியும் பேசுகிறாயே!” என்றாள்.மேலும் சொன்னாள். “உன் நலனுக்காக நான் எவ்வளவு முயற்சிகள் எடுத்திருக்கிறேன் என்பது நாளைக்குக் காலையில் மேலும் உனக்கு விளக்கமாகத் தெரியப் போகிறது” என்றாள்.“ஏன்! நாளைக்குக் காலையில் அப்படி என்ன அதிசயம் நிகழப் போகிறது?” என்று புரியாமல் கேட்டான்.“பொறுத்து பார். தானாகத் தெரியும்” என்றாள்கணேசனுக்கு அவளின் முயற்சிகள் ஒன்றும் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை அதற்குரிய கண்ணியத்தோடு தீர்க்காமல் போருக்குத் தயாராவது போல அவள் பேசுவது அதிகமாகப் பட்டது. இருந்தாலும் தன் மேல் உள்ள அன்பினால் அவள் செய்வதை உணர்ந்து அடங்கிக் கேட்டான்.தன்னுடைய கோரிக்கைக்குச் சார்பாக யார் யாரெல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதை அவனுக்குச் சொன்னாள். இன்னும் சிலர் பேரைச் சொல்லி நாளைக்கு அவர்களை எப்படியாவது பார்த்துப் பேசி கையெழுத்து வாங்க வேண்டும் என்றாள். “இதோ பார், இந்த சுதாகரன். இவரும் நிர்வாகத் துறை மாணவர்தானே? இந்திய மாணவராக இருப்பதால் உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! நீ அவரைப் பார்த்து நாளைக்குப் பேசேன்!” என்றாள்.சுதாகரனை அவனுக்குத் தெரியும். ஆனால் அவர் மற்ற இந்திய மாணவர்களோடு சுமுகமாகப் பழகும் மாணவர் அல்ல. எப்போதும் ஒதுங்கியே இருப்பார். கொஞ்சம் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிய முற்றாகத் தமிழ் பேசத் தெரியாத கொஞ்சம் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். அவரைப் பார்ப்பதும் அவரைத் தனக்கு உதவும்படி கேட்பதும் அவனுக்குப் பிடித்த விஷயங்களாக இல்லை.“ஜெசிக்கா! சுதாகரனோடு எனக்கு சுமுகமான பழக்கமில்லை. அவர் என்னை மதித்து இதில் கையெழுத்துப் போடுவார் என்று தோன்றவில்லை” என்றான்.ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள்.

 

      “ஏன் நீங்கள் இந்திய மாணவர்கள் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறீர்களோ தெரியவில்லை. எங்கள் சீன மாணவர் ஒருவருக்கு இப்படிப் பிரச்சினை வந்தது என்றால் நாங்கள் ஒருவருக்கொருவர் தெரியாதவர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் கூட எல்லாவற்றையும் மறந்து ஒன்றாகி விடுவோம், தெரியுமா?” என்றாள்.தெரியும். தெரிந்த விஷயம்தான். இப்படிச் சீனர் மலாய்க்காரரின் ஒற்றுமை நிதர்சனமாகக் கண்முன் இருந்தும் இந்தியர்கள் மட்டும் எந்த விஷயத்திலும் ஒரு குரலாக இணைய முடியாததன் ரகசியம் அவனுக்கும்தான் விளங்கவில்லை. அது விளங்கியிருந்தால் அவனுக்கு இப்போது நிகழ்ந்திருக்கும் இக்கட்டுக்கே இடம் இருந்திருக்காது. ஒரு இந்திய மாணவியை ஒரு இந்தியத் தறுதலைக் கூட்டம் மானபங்கப் படுத்துவதும் அவளைக் காப்பாற்றப்போன இன்னொரு இந்தியனை இப்படி எதிர்காலத்தை இருளடையச் செய்யும் ஆபத்தில் மாட்டிவிட்டுக் கைகொட்டிச் சிரிப்பதும் இந்தியர்களிடையேதான் நடக்கும் என நினைத்துப் பார்த்தபோது அவமானமாக இருந்தது.ஜெசிக்கா தன் பட்டியலைப் பார்த்துத் தொடர்ந்து யாரைப் பார்க்க வேண்டும் எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு வீயூகங்களை வகுத்துக் கொண்டிருந்தாள். மாடியில் உள்ள அறையில் ஜோகெட் இசை நின்று விளக்குகள் அணைந்தன.

 

      ஒரு பத்துப் பதினைந்து மாணவர்கள் கலகலவென பேசிக்கொண்டு இறங்கி வந்து அவர்களுக்கு முன்னால் நடந்தார்கள். அந்தக் கூட்டத்தில் வியர்வையைத் துடைத்தபடி அகிலாவும் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர்களைப் பார்க்காதது போல நேராக நடந்தாள்.முழங்கால் வரையிலான தொடைகளை இறுக்கிய வெள்ளை டைட்சில் தொளதொளவென்ற வெள்ளை டீ சட்டையில் வியர்வை ஊற தலை கலைந்து நடந்தாள். அவளை இரண்டாம் முறையாக இந்தக் கோலத்தில் பார்த்தபோது அருவியில் குளித்து முழுகி ஈரத்தோடு நடக்கும் ஒரு தேவதை போல இருந்தாள்.“இதோ போகிறாள் பார் பிசாசு! இவளால்தான் உனக்கு இத்தனை தொல்லைகள்!” என்றாள் ஜெசிக்கா. அவள் குரலில் வெறுப்பு இருந்தது. கணேசனுக்கு மனசில் துணுக்கென்றது.“பாவம் ஜெசிக்கா! அவள் என்ன செய்வாள்? எல்லாம் சந்தர்ப்ப வசத்தால் வந்தது!” என்றான் கணேசன்.“சரியான பேய்! இவளுடன் ஒரே அறையில் இருப்பதே வெறுப்பாக இருக்கிறது. விரைவில் அறையை விட்டு அவளைத் துரத்தப் போகிறேன் பார்!” என்றாள்.ஏன் ஜெசிக்காவுக்கு அகிலாவின் மேல் இத்தனை வெறுப்பு வருகிறது என்பது கணேசனுக்குப் புரியவில்லை. விளக்குகளைத் தாண்டித் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று தன் விடுதி அறையை நோக்கிய திசையில் இருளில் மறைந்து கொண்டிருக்கும் அந்த அப்பாவி தேவதைமேல் அவனுக்குப் பரிதாபம்தான் மிகுந்தது.

 

      பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க அடுத்த நாள் காலை அவன் விடுதியிலிருந்து புறப்பட்டபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன் தெரியவில்லை. இந்த அழகிய பினாங்குத் தீவில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்று நினைத்தான். அதிகாலை வரை மழை பெய்த தடயங்கள் இருந்தன. சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியிருந்தது. மரங்கள் ஈரந் தோய்ந்திருந்தன. புதராக மண்டியிருந்த செம்பருத்திச் செடிகளின் பூக்களில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனுடைய மோட்டார் சைக்கிள் நனைந்திருந்தது. இருக்கைகளில் ஈர இலைகளும் பொடிப்பொடியான பூக்களும் கொட்டிக் கிடந்தன.துணி எடுத்து ஈரத்தையெல்லாம் துடைத்து விட்டு, ராகவனையும் அழைத்துக்கொள்ள அவர் தங்கியிருந்த தேசா கெம்பாரா விடுதிக்குக் கிளம்பிய போது மணி ஏழேமுக்கால் ஆகிவிட்டது. கெம்பாரா விடுதியை நெருங்கியபோது வளாகத்தின் தென்பகுதியில் இருந்த காம்பியர் குன்றுகளைப் பார்த்தான். அந்தக் குன்றின் சாரல்களிலிருந்து நீராவி மூட்டம் வானை நோக்கி புஸ்ஸென்று பொங்கிக் கொண்டிருந்தது. காற்றில் பறக்கும் ஒரு வெண் துகிலை அந்தப் பச்சைக் குன்றுகள் போர்த்திக் கொண்டிருந்தது போல இருந்தது. நேற்று அகிலாவை வெள்ளை உடையில் பார்த்த நினைவு மனசை இலேசாக உராய்ந்து மறைந்தது.கெம்பாரா விடுதியின் கீழ் ராகவனுக்காகக் காத்திருந்தான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

 

        எட்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. விடுதியிலிருந்து மாணவர்கள் காலை உணவை முடித்துவிட்டு சாரைசாரையாக விரிவுரை அறைகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.பேராசிரியரைப் பார்க்கத் தாமதமாகிவிடுமோ என்ற கவலை வந்தது. அவர் நேரங் காப்பதில் மிகவும் கண்டிப்பானவர் என்பது அவருடைய மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். விரிவுரை மண்டபத்தில் விரிவுரை தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னால் தயாராக இருப்பார். சரியான நேரத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தாலும் கூடத் தொடங்கி விடுவார்.ராகவன் ஒரு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். “குட் மோர்னிங், கணேசன். லேட்டாயிடுச்சா? இல்ல, சரியா எட்டு மணிக்குப் போயிடலாம்” என்று கூறியவாறு அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்தார். கணேசனின் மோட்டார் சைக்கிள் மனிதவியல் கட்டடத்தை நோக்கிச் சீறி விரைந்த போது வளாகத்தின் குளிர் காற்று அவர்கள் முகங்களில் வீசிச் சட்டைக்குள் ஊடுருவி மார்பில் சிலிர்த்தது.கணேசனின் மனம் பேராசிரியர் தரப் போகும் தகவலை எண்ணிப் படபடத்தது.

 

       பேராசிரியர் அவர்களுக்காகத் தயாராகக் காத்திருந்தார். அவர்களை வரவேற்று உட்கார வைத்ததுடன் “இதைப் பார்த்திங்களா ரெண்டு பேரும்…?” என்று ஒரு பத்திரிகையைத் தூக்கி அவர்கள் முன் போட்டார். அது அந்த வாரத்திய “பெரித்தா கேம்பஸ்” என்ற மாணவர் வார இதழ். அன்று காலையில்தான் விநியோகிக்கப் பட்டிருந்தது. கணேசனோ அல்லது ராகவனோ பார்க்கும் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. “மூணாம் பக்கம் பாருங்க” என்று சொன்னார்.கணேசன் பத்திரிகையை அவசரமாகப் பிரித்து மூன்றாம் பக்கம் பார்த்தான். “மாணவர்களிடையே ரேகிங்: பல்கலைக் கழகம் நேர்மையாக நடக்கிறதா?” என்ற தலைப்பில் ஒரு நீண்ட செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியை எழுதிய நிருபர் ஜெசிக்கா ஓங் என்று பெயர் போட்டிருந்தது.ஜெசிக்கா வளாகத்தில் ரேகிங் நடப்பதைக் கண்டித்து எழுதியிருந்தாள். அதைத் தடுக்க முடியாத பல்கலைக் கழகப் பாதுகாப்புத் துறையின் கையாலாகாத் தனத்தைச் சாடி எழுதியிருந்தாள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கையில் அகப்பட்ட அப்பாவிகளை பல்கலைக் கழகம் தண்டிக்க முயலுவதாக ஜெசிக்கா தனக்கு வேண்டிய மாணவர்களிடம் பேட்டி கண்டு படத்துடன் போட்டிருந்தாள். பல்கலைக் கழக வளாகத்துக்குள் வெளியிலுள்ள குண்டர் கும்பல்களின் உறுப்பினர்கள் நுழைந்திருப்பதாகவும் அதைப் பாதுகாப்புத் துறை மூடி மறைக்க முயலுவதாகவும் எழுதியிருந்தாள்.

 

       செய்தியில் “ஒரு மாணவர் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்” எனப் பெயர் குறிப்பிடாமல் போட்டிருந்தது. அகிலாவின் ரேகிங் நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டிருந்தாலும் அகிலாவின் பெயர் குறிப்பிடப் படவில்லை. “காராட் கேங்” என ஒரு ரகசியக் கும்பல் இந்திய மாணவர்களிடையே இயங்கி வருவதும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் யார் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இந்த ரேகிங் பிரச்சினை பற்றி மாணவர் விவகார உதவித் துணை வேந்தர் டத்தோ சலீமிடம் “பெரித்தா கேம்பஸ்” கருத்துப் பெற இயலவில்லை என்று போட்டிருந்தது.ஜெசிக்கா நாளைக்கு நடக்கும் என்று சொன்ன அதிசயம் இதுதான் என கணேசன் புரிந்து கொண்டான். இதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என அவனுக்குப் புரியவில்லை. படித்து முடித்ததும் பேராசிரியரைப் பரிதாபமாகத் தலை நிமிர்ந்து பார்த்தான்.“இந்த செய்தி வரப் போறது உனக்கு முதலிலேயே தெரியுமா கணேசன்?” என்று கேட்டார். அவர் குரலில் கொஞ்சம் கோபமும் கவலையும் இருந்தது.“சத்தியமாகத் தெரியாது சார். நேற்று இரவு கூட ஜெசிக்காவோடு பேசிக் கொண்டிருந்தேன். நாளைக்கு ஒரு அதிசயம் நடக்கப் போகுதுன்னு மர்மமாகச் சொன்னாங்க. ஆனால் இதுதான் அது என்று சொல்லவே இல்லை!” என்றான்.“நான் டத்தோ சலீமோட நேற்று நீண்ட நேரம் பேசினேன் கணேசன்!” என்று சொல்லி நிறுத்தினார். இருவரும் ஒன்றும் சொல்லாமல் அவர் வாய் பார்த்துக் காத்திருந்தார்கள்.

 

     “அவர் என்னுடைய கருத்தை முழுசாக் கேட்டுக் கொண்டாலும் வழக்கு விசாரணைன்னு வந்திட்டதினால இதைக் கடைசி வரை பல்கலைக் கழக நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தித்தான் ஆகணும்னு சொல்லிட்டார். யாருடைய வாதத்துக்கு சரியான சாட்சியங்கள் இருக்கு அப்படிங்கிறதையும் பாக்கணும்னு சொல்லிட்டாரு. உன்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு வர்ர வெள்ளிக்கிழமை விசாரணையில நீ என்ன நிருபணங்களைக் கொண்டு வர்ரங்கிறதப் பொறுத்துத்தான் தீர்ப்பு இருக்கும்னு உறுதியா சொல்லிட்டாரு!”கணேசனுக்கு மனதில் கல் விழுந்தது போல இருந்தது. மேக மூட்டமான அந்தக் காலையில் பேராசிரியரின் அறை இன்னும் கொஞ்சம் இருண்டு விட்டது போல இருந்தது. குனிந்தவாறு ராகவனைப் பார்த்தான். அவர் முகமும் இறுகித்தான் இருந்தது.“ஆனால் டத்தோ சலீம் ஒன்று சொன்னார். நீ குற்றம் செய்தியோ இல்லியோ, விஷயத்தை முத்த விடாம குற்றத்தை ஒப்புக் கொண்டு பல்கலைக் கழகம் உட்பட எல்லாத் தரப்புக் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கொண்டால், நீ கடந்த காலத்தில குற்றங்கள் இல்லாத நல்ல மாணவனா இருந்திருப்பதை கருத்தில் வச்சி, குறைந்த பட்சத் தண்டனை தரலாம்கிறார். என்ன சொல்ற?”கணேசன் அதிர்ச்சியடைந்தான். என்ன சொல்கிறார்? குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடு என்கிறாரா? நான் செய்யாத குற்றத்தை “நான்தான் செய்தேன்” என ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரச் சொல்கிறாரா? அவனுடைய இதயத்தின் ரத்தத்துளிகள் எல்லாம் அந்த எண்ணத்தை மறுத்தன!“சார். நான் குற்றமற்றவன். இந்த அநியாயமான குற்றச் சாட்டால இந்தப் பல்கலைக் கழகம் என்னை வெளியேத்தினாலும் சரிதான். நான் செய்யாத குற்றத்தை செய்தேன்னு சொல்லி ஒருநாளும் என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள மாட்டேன்!” என்றான்.

 

      “அவசரப்படாம அமைதியா யோசிச்சுப் பாருப்பா கணேசன். நீ உன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சி பண்ணி அது முடியாமப் போனா உன் எதிர்காலமே பாழாப் போயிடும். அதிக பட்ச தண்டனைங்கிறது பல்கலைக் கழகத்த விட்டே நீக்கிறதாக இருக்கலாம். அப்புறம் எந்த உள்நாட்டுப் பல்கலைக் கழகத்திலும் உன்னைச் சேத்துக்க மாட்டாங்க! குறைந்த பட்சத் தண்டனை ஒரு பருவம் அல்லது ஒரு வருஷம் தள்ளி வைக்கிறதா இருக்கலாம். அதுவும் கடுமையானதுதான். அதினால விட்டுக் கொடுத்து எதிர்காலத்தக் காப்பாத்திக்கிறது விவேகமில்லையா?”ஒரு நிமிடம் யோசித்தான். பின் தலை தூக்கிச் சொன்னான். “இல்லைங்க சார்! அது விவேகமாக எனக்குத் தெரியில. என்னை வேணுன்னா நான் காப்பாத்திக்கலாம்! ஆனா இந்த காராட் கேங் பையன்களுடைய கேலியிலும் அவமதிப்பிலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் என்னால காலந்தள்ள முடியாது. அதே போல என்னோட சேர்ந்த மற்ற நண்பர்களும் அவர்களுடைய கீழ்த்தரமான கேலிக்கு இலக்காகிறத நான் பாத்திக்கிட்டு இருக்க முடியாது. என்னுடைய தன்மானத்த விட்டுக் கொடுக்காம உண்மையக் கடைசி வர சொல்லி அந்த உண்மை எடுபடாமப் போனா இந்தப் பல்கலைக் கழகத்தவிட்டு நான் வெளியேர்ரதுதான் சரியான வழி!”அவன் கைககள் வெடவெடவென்று ஆடின. கண்களில் நீர் தளும்பித் தளும்பி மறைந்தது.கொஞ்ச நேரம் அறையில் அமைதி நிலவியது. பின் பேராசிரியர் பேசினார்.

 

     “இந்தப் பத்திரிகைச் செய்தி நிலைமையை இன்னும் மோசமாக்கிட்ட மாதிரிதான் தெரியுது. விடியற் காலையில பாதுகாப்புத் துறைத் தலைவர் எனக்கு வீட்டுக்கு போன் செய்தாரு. இந்தப் பத்திரிகைச் செய்தியை நீயும் ஜெசிக்காவும் சேர்ந்துதான் ஏற்பாடு செய்திருக்கனும்னு சொன்னாரு. தன்னுடைய பொறுப்புக்களை நீங்க ரெண்டு பேரும் ரொம்பவும் அவமதிச்சிட்டதா கருதுறாரு. ஆகவே விசாரணையில உனக்கு அதிக பட்சத் தண்டனை தரணும்னுதான் அவர் பரிந்துரைப்பார்னு நெனைக்கிறேன். டத்தோ சலீமின் பேரும் இதில இழுக்கப் பட்டிருக்கிறதினால அவருக்கு உன் பேரில் இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் இப்ப இருக்கா இல்லையான்னு சொல்ல முடியாது. ஆகவே நீ இன்னமும் கொஞ்சம் ஆழமாக யோசி! எனக்கு நீ இப்ப பதில் சொல்ல வேண்டாம். விசாரணையின் போது உனக்கு எது சரின்னு படுதோ அப்படி பதில் சொல்லலாம்!” என்றார்.பேராசிரியரின் பேச்சில் ஒரு நம்பிக்கை இன்மையும் சோர்வும் இருப்பது தெரிந்தது. அவரும் இதில் தோற்றுவிட்டவர் போல்தான் பேசினார்.ராகவனும் கணேசனும் எழுந்து வணக்கம் சொல்லி கதவு நோக்கி வந்தார்கள். திடீரென்று பேராசிரியர் பேசினார்: “கணேசன், நான் இப்படி சொல்றதினால உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னு அர்த்தமில்லை. நீ சொல்றதுதான் உண்மைன்னு எனக்கு நிச்சயமா தெரியுது. ஆகவே நீ நிரபராதின்னு நான் உளப்பூர்வமா நம்புறத டத்தோ சலீமிடம் உறுதியா சொல்லத் தயங்க மாட்டேன். ஆனா சந்தர்ப்பங்கள் நமக்கு சாதகமா இல்லைங்கிறத நாம் மறந்தடக் கூடாது!” என்றார்.“சரிங்க சார்! எனக்குப் புரியிது. உங்கள் நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி!” என்று சொல்லி கதவைச் சாத்தி ராகவன் பின் தொடர வெளியே வந்தான் கணேசன்.

 

      மனிதவியல் கட்டடத்திற்கு வெளியே வந்து மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்த போது வானம் தொடர்ந்து மப்பும் மந்தாரமுமாகத்தான் இருந்தது. எப்போதும் பளிச்சென்றிருக்கும் பல்கலைக் கழக வளாகம் கொஞ்சம் இருண்டே இருந்தது. உண்மையிலேயே அப்படி இருக்கிறதா, தன் மனம்தான் தன்னை வெளியில் பிரதிபலித்துக் காட்டுகிறதா என கணேசன் யோசித்தான்.“என்ன இன்னைக்கு இந்த மழை மறுபடியும் வரும் போல இருக்கே! வானம் இருட்டிக்கிட்டே இருக்கு கணேசன்!” என நிலைமையை உறுதிப்படுத்தினார் ராகவன்.தொடர்ந்து சொன்னார்: “சரி கணேசன். இப்ப மணி ஒன்பதாகுது. எனக்கு பத்து மணிக்குத்தான் அடுத்த லெக்சர்! உனக்கு எப்படி?” என்று கேட்டார்.“பதினொரு மணிக்குத்தான்! டுயுட்டோரியல்”“அப்ப மாணவர் இல்லக் கேன்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போவோமே! காலையில நீ கூட பசியாறியிருக்க மாட்டியே!” என்றார்.“ஆமாம் ராகவண்ண. நானும் இன்னும் பசியாறலதான்! வாங்க போவோம்!”மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து மாணவர் இல்லத்தின் கேன்டீனை நோக்கிப் போனார்கள்.

 

     கணேசனின் கண்கள் ஒரு காரணமுமின்றி அலைந்தன. அவர்களைச் சுற்றி ஏராளமான மலாய், சீன, இந்திய மாணவர்கள் கலகலவென்ற பேச்சுடன் விரிவுரைக்குப் போகும் அவசரத்துடன் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வண்ண வண்ணமாக துடோங் அணிந்த மலாய் மாணவிகள் கூட்டங் கூட்டமாக உட்கார்ந்து மலாய் உணவுகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். சீன மாணவ மாணவிகள் பெரும்பாலும் ஜீன்சில் இருந்தார்கள். சில பஞ்சாபி ஆடைகளும் மேற்கத்திய ஸ்கர்ட்டுகளும் தெரிந்தன. எங்கும் புத்தகங்களும் கோப்புகளும் பைகளுமாக சாப்பாட்டு மேசைகள் நிரம்பி வழிந்தன. மொத்தமாக மாணவர்களை விட இரண்டு மடங்கு அதிகமான மாணவிகள் அங்கு இருந்தார்கள். பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் இப்போது மாணவர்களை விட மாணவிகள் தொகையே அதிகமாக இருந்தது.இரண்டு நாசி லெமாக் பொட்டலங்கள், இரண்டு தேநீருடன் அவர்களுடைய பசியாறல் மிக மெதுவாக மிக அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அந்தக் கலகலப்பான சூழ்நிலையில் அவர்கள் இருவரும் அந்த உற்சாகங்களுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் போல சோகத் தீவாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவன் ஏதோ சொல்ல நினைப்பவர் போல கணேசனின் முகத்தைப் பார்த்துப் பார்த்துத் தயங்கினார். தன்னுடைய விழிகளில் இருந்த வெறுமையும் விரக்தியும் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும் என கணேசன் எண்ணிக் கொண்டான்.

 

      கணேசனுக்கு எதைப் பற்றியும் பேசுகின்ற உற்சாகம் இல்லாமல் இருந்தது.ராகவன் கொஞ்ச நேரம் காத்திருந்து அப்புறம் கொஞ்சம் கனைத்துச் சொன்னார்: “கணேசன், பேராசிரியர் சொன்னதை நான் திரும்பத் திரும்ப நெனைச்சிப் பாக்கிறேன். மறக்க முடியில!” என்றார்.“எதைச் சொல்றிங்க ராகவன் அண்ண?” என்று கேட்டான் கணேசன்.“அதான், அந்த மன்னிப்புக் கேக்கிறதப் பத்தி….!”கணேசன் அமைதியாக இருந்தான். அவர் தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்துவிட்டுப் பேசினார்: “உனக்கு ரொம்ப மூத்தவன் அப்படிங்கிற முறையில உனக்குப் புத்தி சொல்ல உரிமை உண்டுன்னு நெனச்சித்தான் சொல்றேன் கணேசன். நீ குற்றம் செய்யிலங்கிறது உண்மை. ஆனா ஒரு பொறியில அகப்பட்ட எலி மாதிரி இப்ப நீ மாட்டிக்கிட்டு இருக்கிற. அந்தப் பொறியிலிருந்து விடுபட பேராசிரியர் ஒரு வழி காட்டியிருக்காரு.”கணேசன் அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். “செய்யாத குத்தத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கச் சொல்றிங்களாண்ண?”“ஆமாம் கணேசன்! வேற வழி?”“எல்லார் முன்னிலையிலும் அவமானப்படச் சொல்றிங்களா?”“இந்த மன்னிப்பு விஷயத்த விசாரணைக் கமிட்டி வெளிய தெரியாம ஆர்ப்பாட்டம் பண்ணாம முடிச்சிரும்னுதான் நெனைக்கிறேன்!”“விசாரணைக் கமிட்டி அமைதியா முடிச்சிடலாம்.

 

      ராஜாவும் காராட் கேங்கும் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சி கைகொட்டிச் சிரிக்க மாட்டாங்களா? என்ன மட்டுமா பாத்துச் சிரிப்பாங்க? நீங்க உட்பட என் நண்பர்கள், காராட் கேங்குக்கு எதிரா உள்ள அத்தனை பேரையும் பார்த்துச் சிரிப்பாங்களே!” சொல்லும்போது அவன் கண்களில் கொஞ்சம் நீர் ததும்பியது.“கணேசன், எங்களப் பத்தி நீ கவலப்படாத. நிலைமைய எப்படி சமாளிச்சிக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும். இந்தச் சில்லறைச் சிரிப்புகளைக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பொறுத்துப் போயிட்டா எல்லாம் சரியாப் போயிடும். உன்னப்பத்தி சிந்திச்சிப் பாரு! படிப்பையும் எதிர்காலத்தையும் வீணாக்காத! கொஞ்சம் மனசக் கல்லாக்கிக்கிட்டு மன்னிப்புக் கேட்டுக்க! கொஞ்ச நாள் தலை குனிஞ்சி நடந்தா என்ன? எல்லாம் காலத்தால ஆறக்கூடிய புண்கள்தான்! யோசிச்சுப் பாரு!” என்றார்.கணேசன் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து தரையைப் பார்த்திருந்தான். மீண்டும் அவனுடைய ஒவ்வொரு ரத்தத் துளியும் இந்தத் தீர்வை ஏற்காதே என்று அவனுக்குள்ளிருந்து கொதித்தது.பின்னாலிருந்து தயக்கம் பயம் சோகம் கலந்த பெண்குரல் ஒன்று “கணேசன்” என அழைத்தது.

 

     இரண்டு நண்பர்களும் தலை தூக்கிப் பார்த்தார்கள். அகிலா புத்தகப் பையை நெஞ்சோடு அணைத்தவாறு அவர்கள் மேஜைக்குப் பின்னே நின்றிருந்தாள்.இரண்டு பேருக்குமே என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் ராகவன்தான் சமாளித்துக் கொண்டு சொன்னார். “அகிலா! வாங்க!” என்றார்.அகிலா கணேசனைப் பார்த்தாள். “கணேசன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” என்றாள்.“உட்காரு அகிலா!” என்றான் கணேசன். அகிலா ராகவனுக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.அவர்கள் தனியாகப் பேச விரும்புவதைப் புரிந்து கொண்ட ராகவன் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு “எனக்கு லெக்சருக்கு நேரமாச்சி!” என்று கிளம்ப எத்தனித்தார். அகிலா உரிமையோடு அவருடைய கையைப் பிடித்தாள். “ராகவன் அண்ண! உங்கள எல்லாரும் அண்ணன்னுதான் கூப்பிட்றாங்க! நானும் அப்படிக் கூப்பிடலாமா?” என்று கேட்டாள்.“தாராளமா கூப்பிடலாம் அகிலா!” என்றார்.“கொஞ்ச நேரம் இருந்து போங்க அண்ண! நான் கணேசனோட பேசிறதுக்கு நீங்கள் சாட்சியா இருக்க வேணும்” என்றாள்.ராகவன் உட்கார்ந்தார். கணேசன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். அகிலா அவன் முகத்தையும் மேஜை முகப்பையும் மாறா மாறிப் பார்த்துப் பேசினாள்: “இந்த ரேகிங் கேஸ்ல என்னக் காப்பாத்த வந்து இப்ப ரொம்ப பெரிய பிரச்சினையில நீங்க மாட்டிக்கிட்டு இருக்கிறத இந்தப் பல்கலைக் கழகக் கேம்பஸ்ல எல்லாரும் கவலையோட பேசிக்கிறாங்க. உங்க நிலைமைக்கு நானே ஒரு காரணமாயிட்டத என்னால பொறுக்க முடியில.

 

     கேம்பஸ் மாணவர்கள் என்னப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குற்றவாளியப் பார்க்கிற மாதிரிதான் பார்க்கிறாங்க!”“அது உங்க குற்றம் இல்ல அகிலா! அப்படி நெனைச்சிக் கவலப் படாதிங்க” என்றான் கணேசன்.தலை குனிந்து பேசினாள்: “என் குற்றமோ இல்லியோ! வர்ர வெள்ளிக் கிழமை நடக்கிற விசாரணையில உங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தா அதுக்கு நானே ஒரு முக்கிய காரணமா இருப்பேன். நான் மட்டும் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வராம இருந்தா உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதில்லையா?”ராகவன் குறுக்கிட்டுப் பேசினார். “இதெல்லாம் தற்செயலா நடந்தது அகிலா! நீங்க எதுக்காக ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகணும்? உண்மையில இதில நீங்களும் அறியாம மாட்டிக்கிட்ட ஒரு பலி கெடாதான்!” என்றார்.“அது எப்படியோ இருக்கட்டும்! நீங்களெல்லாம் எனக்கு ஒரு சமாதானம்தான் சொல்றிங்க. ஆனா நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். கணேசன்! உங்களுக்கு எந்தத் தண்டனையை இந்தப் பல்கலைக் கழகம் விதிக்குதோ அதே தண்டனைய நான் சுயமாகவே எனக்கு விதிச்சிக்குவேன். உங்களை ஒரு வருஷம் தள்ளி வச்சா நான் ஒரு வருஷம் விடுமுறை எடுத்துக்குவேன்.

 

      உங்களப் பல்கலைக் கழகத்த விட்டே தள்ளிட்டாங்கன்னா நானும் விலகிடுவேன்!”கணேசன் திடுக்கிட்டான். அவனை அறியாமலேயே எட்டி மேசைமேல் இருந்த அவள் கைகளைப் பற்றினான். “என்ன சொல்றிங்க அகிலா? இது என்ன பைத்தியக்காரத்தனம்? எதுக்காக நீங்க உங்கள இப்படி தண்டிச்சிக்கணும்?”கைகளை விலக்கிக் கொள்ள அவள் முயலவில்லை. “நீங்க எதுக்காகத் தண்டிக்கப் பட்றிங்க? நீங்க ஏன் நல்லவரா இருந்து செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கணும்? அதுதான் இந்த பல்கலைக் கழகத்தில நீதின்னா, அந்த நீதி எனக்கும் பொருந்தட்டுமே!”“வேண்டாம் அகிலா!”“என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!”“எனக்காகவா?”“உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!”அவனுடைய கைகளில் தன் கைகள் பிடிபட்டுள்ள இதமான சூழ்நிலையில் அகிலா விசும்பி அழ ஆரம்பித்தாள். ராகவன் கொஞ்சம் வெட்கத்துடன் தங்களை யாராவது கவனிக்கிறார்களா எனச் சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் அகிலாவுக்கும் கணேசனுக்கும் தங்களைச் சுற்றி மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாதது போல் இருந்தது.***

 

 

     வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன் பிடித்ததும் அதற்கு மறுக்காமல் இடங் கொடுத்து அந்தத் தொடுதலில் கனிந்து அவள் அழுததும் அவள் அப்போது சொன்ன முடிவுகளும் அவனை வெகுவாக நெகிழ வைத்திருந்தன.ஏன் அப்படிச் சொன்னாள் என்ற கேள்வி அவன் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. தான் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பதை எண்ணி அவள் மனம் வருந்துவதே அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனால் அதற்கு மேலாக “உங்களுக்கு விதிக்கப் படும் எந்தத் தண்டனையையும் நானும் எனக்கு விதித்துக் கொள்வேன்” என இத்தனை இலேசாகச் சொல்லிவிட்டாளே!“வேண்டாம் அகிலா!”“என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!”“எனக்காகவா?”“உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!”எத்தனை உன்னதமான பெண்! தனக்காக தன் ஒருவனுக்காக அவளுடைய வாழ்க்கையை எதிர்காலக் கனவுகளை இத்தனை எளிதாக அழித்துக் கொள்ளத் தயாராகி விட்டாளே! அவளுடைய அந்தத் தியாகத்தில் அவன் முற்றாக அதிர்ந்திருந்தான். அவளுடைய இந்தச் செயலுக்குத் தான் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுவிட்டதைப் போல உணர்ந்தான்.அவன் பல பெண்களுடன் பழகியிருக்கிறான். சில பெண்களிடம் ஈர்ப்பு அடைந்து காதல் போல ஒன்று இடையிடையே மொட்டு விட்டு மொட்டு விட்டுக் கருகியிருக்கிறது.

 

      பள்ளிக்கூட நாட்களில் விளையாட்டுப் போல கண்ட கண்ட பெண்களை மனசால் காதலித்து வெளியில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி அந்த உணர்வுகளெல்லாம் காலத்தால் கரைந்து போனதுண்டு.பெண்களில் அத்தை மகள் மல்லிகா ஒருத்தியுடன்தான் அவன் நெருங்கிப் பழகியிருக்கிறான். ஆனால் சிணுங்கிச் சிணுங்கிப் பேசும் மல்லிகா அவனுக்கு ஒரு பாசமுள்ள தங்கையாகவும் விளையாட்டுத் தோழியாகவும்தான் இருந்திருக்கிறாள். அவளுக்கு எந்த விஷயத்தையும் சீரியசாகப் பேசத் தெரியாது. எதைக் கேட்டாலும் “போ மாமா! எனக்குத் தெரியாது!” என்று சிணுங்குவாள். அவளுக்கு நடக்கத் தெரியாது. ஓடத்தான் தெரியும். மென்மையாகப் பேசத் தெரியாது. சத்தம் போட்டுத்தான் பேசத் தெரியும். அவள் சிரித்தால் வீடு அதிரும்.“சனியனே! வயசு 17 ஆச்சு, இப்படி என்ன ஒரு சத்தமும் குதிப்பும் உனக்கு!” என்று அத்தை அவள் தலையில் குட்டுவாள். “ஓ” என்று அழுது கொண்டு “பாரு மாமா இந்த அம்மா இப்படி தலையில குட்டுது” என அவனிடம் வருவாள். அவள் அவள் தலையைத் தடவி ஆறுதல் சொல்லுவான்.“கணேசு, இவள என்னால அடக்க முடியாது. நீதான் சீக்கிரமா இவளக் கட்டிக்கிட்டு இவளை அடக்கி ஒடுக்கிப் பொம்பிளையாக்கணும்!” என அத்தை சொல்லுவாள்.

 

      “போம்மா!” என்று மீண்டும் சிணுங்குவாள் மல்லிகா.அவர்களெல்லாம் வேறு மாதிரியான பெண்கள். இந்தப் பெண் – அகிலா – வேறு மாதிரியாக இருந்தாள். முகத்தில் ஒரு பெண்மைக்குரிய பொலிவு, பார்வையில் மனசை ஊடுருவுகின்ற கூர்மை, உடுத்தும் உடையில் எளிமையிலும் ஒரு கவர்ச்சி, பேச்சில் ஒரு உறுதியும் தெளிவும், நடையில் எப்போதுமே ஒரு நளினம். மனசுக்குள் அறிவு வெளிச்சமும் சிந்தனையும் உள்ளவளாக இருந்தாள்.அந்தச் சில கணங்கள் நடந்த நிகழ்ச்சியினால் அவனுடைய இதயத்தின் ஆழத்தைத் தொட்டு, அவளுடைய நினைவுகள் உள்ளத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்ட இப்போதைய நிலையை அவன் இதுவரை அனுபவித்ததில்லை. இது அனுதாபமா? காதலா? தன் எதிர்காலத்தை நினைத்து பயந்ததில் எழுந்த பக்க விளைவா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் எதிர்கால இருளில் அவள் ஒரு ஒளி மிக்க விளக்காக இருந்தாள். அந்த இருளில் அவள்தான் ஒரு ஆறுதல் எனத் தெரிந்தாள். உள்ளம் “அகிலா, அகிலா” என ஸ்மரணை செய்து கொண்டிருந்தது.இன்று காலையில் அவள் மாணவர் விவகாரப் பிரிவுக்கு வருவாள். அன்று அவன் பிடியிலிருந்து கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு போகுமுன் சொன்னாள்: “வெள்ளிக் கிழமை காலையில நான் விசாரணை அறைக்கு முன்னால வந்து உங்களுடைய தீர்ப்பு என்னன்னு தெரிஞ்சிக்கக் காத்திருப்பேன். அது தெரிஞ்சவுடனே டத்தோ சலீமைப் பார்த்து என்னுடைய முடிவை அறிவிப்பேன். வர்ரேன் கணேசன், வர்ரேன் ராகவன் அண்ண!”தீர்மானமாகப் பேசி எழுந்து திரும்பிப் பார்க்காமல் போனாள். கணேசனைப் போலவே ராகவனும் அவளுடைய செயலில் வியந்திருந்தார்.

 

     “என்ன அருமையான பண்புள்ள பெண்ணப்பா இது!” என்று கணேசனிடம் வியந்து சொன்னார்.அதற்கப்புறம் அடுத்த இரண்டு நாட்கள் அவனால் அகிலாவை எங்கும் சந்திக்க முடியவில்லை. விரிவுரைக்குப் போகும் போதும் வரும் போதும் அவளைத் தற்செயலாகச் சந்திக்க மாட்டோமா என ஏங்கினான். மாணவர் இல்ல நடனப் பயிற்சி அறைகளில் இரவில் பயிற்சிக்கு வந்திருப்பாளே என்று மோட்டார் சைக்கிளில் அந்தப் பக்கம் சுற்றினான். காணவில்லை.விரிவுரைகளில் மனம் செல்லவில்லை. புத்ததகங்களைத் திறந்தால் அவள் முகமும் கண்ணீருமே வந்து நின்றன. இரவு நேர மாணவர் சங்கக் கூட்டங்களுக்குச் சென்ற போதும் மனம் அவற்றில் ஒன்றவில்லை.அகிலாவின் அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒரு எண்ணம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்பட்டு வந்தது. இந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் விஷயத்தில் என்னதான் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் தன்னையே பலி கொடுத்துக் கொள்ளும் முடிவில் அவன் உறுதியாக இருந்தாலும், இப்போது அவனுடைய முடிவு அகிலாவையும் பாதிக்கும் என உறுதியாகத் தெரிந்த பொழுது அவனுடைய மனவுறுதி கொஞ்சம் ஆடிப் போயிருந்தது.

 

      வீறாப்பாக மன்னிப்புக் கேட்காமல் இருப்பதால் தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக்கப்பட்டால் அது தன் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் அகிலாவின் எதிர்காலத்தையும் பாதிக்கப் போகிறது என உறுதியாகத் தெரிந்தது. ஆகவே அவளைக் காப்பாற்றுவதற்காகவாவது தான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு குறைந்த பட்சத் தண்டனையை ஏற்றுக் கொண்டு தன் எதிர்காலத்தையும் அவளுடைய எதிர்காலத்தையும் காப்பாற்றிக் கொள்வது முக்கியம் என நினைத்தான்.“ஒரு பெண்ணுக்காகவா உன் கொள்கையை விட்டுக் கொடுத்து உன் எதிரிகளின் சிரிப்புக்கு ஆளாகப் போகிறாய்?” என அவன் மனம் அவனுக்குச் சவால் விடாமல் இல்லை. ஆனால் அகிலா தனக்காகச் செய்யத் தயாராகிவிட்ட தியாகத்தை விட இது ஒன்றும் பெரிய தியாகம் அல்ல என்று பட்டது. மேலும் மனதில் முன்னிருந்த ஆத்திரமும் முரட்டுத் தனமும் இப்போது இல்லை. அது இப்போது கனிந்திருந்தது. அவன் வீரமும் பிடிவாதமும் தணிந்திருந்தன.

 

      விடியற்காலையில் எழுந்து விசாரணைக்குத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது இந்த எண்ணங்கள் மேலும் மேலும் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தன. தலை குனியலாம். மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். தண்டனை ஏற்றுக் கொள்ளலாம். அகிலாவின் எதிர்காலத்தைக் காப்பாற்றலாம். இன்னும் ஈராண்டுகள் அகிலாவுடன் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து படிக்கலாம். எல்லாம் அகிலாவிற்காக!அவள் இந்த வெள்ளிக் கிழமை காலையில் தனக்காக வருவாள்; அவளைப் பார்த்துப் பேச முடியும் என்ற ஆசையுடன் எழுந்து குளிக்கப் போனான்.ஒன்பது மணிக்குத்தான் விசாரணை. கணேசன் எட்டரை மணிக்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்து விட்டான். மாணவர்கள் யாரையும் காணவில்லை. குறிப்பாக அகிலாவைக் காணவில்லை. ராஜாவையும் அவன் நண்பர்கள் யாரையும் காணவில்லை. இன்னும் நேரம் இருக்கிறது எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.ஆனால் அந்த அதிகாலை வேளையிலேயே பேராசிரியர் முருகேசுவின் காரும் பாதுகாவல் துறை அதிகாரி ரித்வானின் காரும் அங்கு நின்றிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

      மாணவர் பிரிவின் துணைப் பதிவாளர் முத்துராமன் அவர்களின் காரும் நின்றிருந்தது. அவனுடைய மாணவர் விடுதியின் பெங்காவா (தலைவர்) காரும் இருந்தது. இவர் ஏன் இங்கு வந்தார் என்று வியந்தான். அவர்களுடைய கூட்ட அறையை உற்றுப் பார்த்த போது கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளே விளக்குகள் எரிந்து கூட்டம் நடைபெறும் அறிகுறிகள் தெரிந்தன.என்ன செய்கிறார்கள் இவ்வளவு அதிகாலையில்? ஒன்பது மணிக்குத்தானே கூட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னரே இத்தனை காலையில் இவர்கள் கூடிப் பேசும் காரணம் என்ன? அவன் கொஞ்சம் குழப்பமடைந்து சுற்று முற்றும் பார்த்தான். இந்த விஷயம் ரொம்ப கடுமையானதாகத்தான் தெரிகிறது என நினைத்துக் கொண்டான்.எட்டே முக்கால் மணியளவில் ராஜனும் அவனுடைய சகாக்களும் ஆரவாரமாக வந்து இறங்கி ஒரு மர நிழலில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கணேசனின் பக்கம் எள்ளலான பார்வைகளும் சிரிப்புக்களும் வந்தன. ஆனால் அந்தக் கூட்டத்தில் பரசுராமனைக் காணோம்.அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெசிக்கா வந்தாள். கணேசனை நோக்கி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “கணேசன். உனக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது. நேராக கல்வி அமைச்சரிடம் மேல் முறையீடு செய்வோம். இந்த காராட் கேங் பற்றி நான் தகவல்கள் சேகரித்துக் கொண்டு வருகிறேன். உள்ளூர் பத்திரிகைகளில் எழுதப் போகிறேன்!” என்றாள்.

 

      “ஜெசிக்கா! இந்த முயற்சிகளெல்லாம் வீண் என்றுதான் தெரிகிறது. நான் விசாரணைக் குழுவிடம் மன்னிப்புப் கேட்டுக் கொள்வதாக முடிவு செய்து விட்டேன். இந்த நேரத்தில் அதுதான் எல்லாருக்கும் நல்லதாகத் தெரிகிறது!”ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள். “சரி! உன் விருப்பம். ஆனால் இந்தப் பல்கலைக் கழகத்தையும் இந்த காராட் கேங்கையும் நான் சும்மா விடப் போவதில்லை! நான் உன் பக்கம் இருக்கிறேன் கணேசன். உனக்கு நீதி கிடைக்கும் வரையில் நான் ஓயப் போவதில்லை” என்றாள். அவன் கைகளைப் பிடித்து அழுத்தினாள்.கணேசன் தயங்கித் தயங்கிக் கேட்டான்: “அகிலா இன்று காலை வருவதாகக் கூறியிருந்தாளே! காணோமே! உனக்குத் தெரியுமா ஜெசிக்கா?”ஜெசிக்கா முகத்தைச் சுளித்தாள். “அந்தப் பிசாசு பற்றி ஏன் இப்போது பேசுகிறாய்? நேற்றே அவளைச் சண்டை போட்டு என் அறையிலிருந்து துரத்தி விட்டேன். வேறு அறைக்குப் போய்விட்டாள். இன்றைக்கு அதிகாலையிலேயே உடுத்திக் கொண்டு வெளியே போனதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். எங்கே போனாளோ தெரியாது. அவள் ஏன் இங்கே வரவேண்டும் என எதிர் பார்க்கிறாய்? அவள் உனக்குச் செய்திருக்கும் கெடுதல் போதாதா?”அந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அகிலாவை அறையை விட்டு விரட்டுமளவுக்கு இந்த ஜெசிக்காவுக்கு அவள் என்ன கெடுதல் செய்தாள்? அந்தத் தீவிரமான வெறுப்பு அவனைப் புண் படுத்தியது.

 

      அகிலாவும் தானும் சந்தித்ததை பேசியதை அவளிடம் சொல்வது வீண் என்று தோன்றியது. இவளுடைய மனதில் அகிலாவைப் பொல்லாத எதிரியாக ஆக்கிக் கொண்டாள். அகிலாவுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை இவளிடம் சொன்னால் அதனால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படும் என்று நினைத்து சும்மா இருந்தான்.ஒரு வேளை ஜெசிக்காவே அகிலாவை இங்கு வரவிடாமல் தடுத்திருப்பாளோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. சீச்சீ அப்படி இருக்காது என்று சமாதானம் செய்து கொண்டான். ஜெசிக்கா அவளைத் தடுக்கக் காரணமில்லை. தடுத்திருந்தாலும் அகிலா பயந்து நின்று விடுபவள் அல்ல. ஏன் வரவில்லை? வருவாள், எப்படியும் கடைசி நிமிடத்தில் வந்து விடுவாள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.ராகவன், ரவி ஆகியோரும் இந்திய மாணவர் பண்பாட்டுக் குழுவின் தலைவர், செயலவை உறுப்பினர்களும் வந்திறங்கினார்கள். கணேசனுக்கு ஆதரவாக அவன் பக்கம் வந்து நின்று பேசினார்கள். அங்கு ஒரு சிறிய கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. காராட் கேங் உறுப்பினர்கள் சிலரும் வந்து ராஜனின் அணியைப் பலப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பரசுராமனைக் காணவில்லை. பாதுகாப்புத் துறையிலிருந்து சீருடை அணிந்த இரு காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்கள் சாலையை அடைத்துக் கொண்டு நிற்காமல் ஓரமாக நிற்கும்படி ஆலோசனை கூறினார்கள்.அகிலாவைக் காணவில்லை. என்ன ஆயிற்று அவளுக்கு? அதிகாலையில் எங்கே போயிருப்பாள்? ஜெசிக்காவின் தொந்தரவு பொறுக்க முடியாமல் இந்தப் பிரச்சினைக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் வேண்டாம் என முடிவு செய்து விட்டாளோ? இத்தனை ஆதரவாகப் பேசிவிட்டுக் கடைசி நேரத்தின் மனதை மாற்றிக் கொண்டாளா? இந்த ஒரு முன் பின் தெரியாத யாரோவுக்காகத் தன் எதிர்காலத்தை ஏன் பாழாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாளா? ஒரு உணர்ச்சி மயமான வேளையில் பேசிய பேச்சுக்கள் உண்மை வாழ்வைப் பாதிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற அறிவு வந்துவிட்டதோ? இந்தப் பிரச்சினைகள் தாமாக முடிந்து காற்றில் பறந்து மறையும் வரை இதிலெல்லாம் பட்டுக் கொள்ளாமல் கொஞ்சம் ஒதுங்கியும் ஒளிந்தும் இருந்து விடலாம் என எண்ணி விட்டாளோ? தான்தான் அவள் சொன்னவற்றை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொண்டு கடந்த இரண்டு நாட்கள் காதல் போன்ற அர்த்தமில்லாத அவஸ்தைகளை அனுபவித்தேனோ? மீண்டும் ஒரு முறை தான் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து இளிச்சவாயனாக ஆகியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. உள்ளுக்குள் பெருமூச்சு விட்டான்.ஒன்பது மணி கடந்து மேலும் பத்து நிமிடங்கள் ஆகின.

 

     கதவு இன்னும் திறக்கப் படவில்லை. உள்ளே கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பொறுமை இழந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஒன்பதே காலுக்குக் கதவு திறந்தது. துணைப் பதிவாளர் முத்துராமன் வெளியே வந்தார். தான் கையில் வைத்திருந்த பட்டியலிலிருந்து பெயர்களைப் படித்தார். “கணேசன், ராஜன், வின்சன்ட். மூவரும் உள்ளே வாருங்கள்!” என்றார்.கணேசனின் நண்பர்கள் அவனுடன் கைகுலுக்கி “கூட் லக்” என்று வாழ்த்தி அனுப்பினார்கள். கடைசி முறையாக மீண்டும் ஒரு முறை அகிலா வந்து விட்டாளா என்று தலை தூக்கி சாலையின் இறுதி வரை பார்த்தான். அவள் வந்ததற்கான அல்லது வருவதற்கான அடையாளம் எதையும் காணோம். ஜெசிக்காதான் அவனை ஏக்கத்துடன் பார்த்து வழியனுப்பி வைத்தாள்.ஏமாற்றத்தால் அவன் மனமும் தலையும் கனத்தன. அவன் எதிர் காலத்தை அர்த்தமற்ற இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. தன் வாழ்நாளில் மிக மோசமான நாள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே கணேசன் மனம் படபடக்க அறைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து ராஜனும் வின்சன்டும் நுழைந்தார்கள். முத்துராமன் அவர்கள் உட்கார வேண்டிய நாற்காலிகளைக் காட்டினார்.

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
“பீனிக்ஸ்” பறவை “பீனிக்ஸ்” பறவை
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.