LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 575 - அரசியல்

Next Kural >

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும். (வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும். இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்-ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் அழகு செய்வது கண்ணோட்டமே; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் -அவ்வணிகலமின்றேல் அது அறிவுடையோராற் புண்ணென்றே கருதப்படும். மையூட்டும் பெண்டிர் கண்ணிற்கும் மையூட்டா ஆடவர் கண்ணிற்கும், செல்வம் போன்றே வறியாரும் அணியக்கூடிய சிறந்த அணிகலம் கண்ணோட்டம். அஃதின்றி இவ்வுறுப்பிற்கு வேறு அணிகலமுமில்லை.ஆதலால், அவ்வணிகல மில்லாதார் கண் அழகிழப்பதுடன் பல்வேறு வகையில் நோவுதரும் உறுப்பாயிருப்பது பற்றி, 'புண்ணென்றுணரப் படும்' என்றார். பல்வேறு வகை நோவாவன கண்ணோயும் தூசியுறுத்தலும் தீய ஆசையுண்டாக்குதலுமாம்.
கலைஞர் உரை:
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கண்ணின் சிறப்பே, கண்டவுடன் தரமறிந்து தாட்சிண் ணியம் காட்டுவதற்குத்தான்), கண்களுக்குச் சிறப்பு, கண்ணோட்ட மென்னும் தாட்சிண்ணியம். அது இல்லாத கண்கள் வெறும் புண்களே.
Translation
Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face.
Explanation
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.
Transliteration
Kannirku Anikalam Kannottam Aqdhindrel Punnendru Unarap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >