LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா

ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாடு வட அமெரிக்காவின் சிகாகோ நகரில், முத்தான மூன்று நாட்களில், ஏப்ரல் மாதம் 5-7 தேதிகளில் சிறப்பு விருந்தினர்களுடன் பங்கு பெற்ற அனைவரையும் மன நிறைவு செய்யும் வகையில் செவிக்கும் அறிவுக்கும் பல்வேறு நிகழ்வுகளுடனும் வயிற்றுக்கு பல்சுவை உணவுடனும் சிறப்புடன் நடந்தேறியது. இம்மாநாடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமெரிக்கா கிளையின் முதல் முன்னெடுப்பாகும். அவரோடு மாநாட்டின் அமைப்பாளராய்ச் சிகாகோ தமிழ்ச் சங்கம் மற்றும் ஆசியவியல்‌ நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்த மாநாட்டை, அனைத்து வசதிகளும் நிறைந்த ஷெரட்டன் லைல் (Sheraton Lisle) என்ற உயர்தர விடுதியின் சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட உள்ளரங்கத்தில் சிறப்புற நடத்திக்காட்டினர்.

திருக்குறள் நூலுக்கு யுனெஸ்கோவின்‌ உலகு தழுவிய தகுதிப்‌ பாட்டினைப்‌ பெறவும், திருக்குறளை வட அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கும், உலக அரங்கிற்கும் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறப்பான முறையில் இம்மாநாடு நடைபெற்றது.

முதல் நாள், ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி, தமிழகப் பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க, திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு தமிழறிஞர்கள் வணங்க, கலந்து கொண்ட ஒவ்வொருவரும் திருக்குறளை கூறி திருக்குறள் ஓதலுடன் மாநாடு துவங்கியது. மாலை 5 மணி வாக்கில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், ஆங்காங் அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்தும் அறிஞர்களின் அறிமுகங்கள் நடைபெற, விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பாடல்களைப் பாட, சிகாகோ இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி அனைவரது மனதையும் கவரும் வண்ணம் நடைபெற்றது. அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டு இசையோடு கூடிய இரவாய் அது அமைந்தது.

இரண்டாம் நாள் காலை பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, அறிஞர் பெருமக்கள் கூடி வலம் வர, அரங்கத்தில் வரவேற்பு சிறப்பாய் நிகழ்ந்தது. அனைத்து தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் அமெரிக்க நாட்டு தமிழர்கள் அனைவரது முன்னிலையில் தமிழ் தாய் வாழ்த்துடன் திருக்குறள் ஓதலுடன், குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. முத்தமிழ் பேரறிஞர், கலைமாமணி, பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர், மாநாட்டை ஒருங்கிணைத்த திரு நம்பிராஜன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் திரு அரசர் அருளாளர் அவர்களின் ஆய்வு அரங்கங்களின் முதன்மை ஆய்வு அரங்கத்தின் தொடக்க உரையைத் தொடர்ந்து, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல் அவர்கள் நோக்க உரை வழங்கினார். அரசின் சார்பாக மாநாட்டில் கலந்து கொண்ட அயலகத் தமிழர் வாரியத்தின் உறுப்பினர் திரு புகழ் காந்தி, அயலகர் தமிழர் வாரியத்தின் வட அமெரிக்க உறுப்பினர் திரு கால்டுவெல் வேல்நம்பி அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் திரு பாலா சுவாமிநாதன் அவர்கள், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் வீரா ஆகியோர் இந்த மாநாடு சிறக்க வாழ்த்துரை கூறினார்கள்.

அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் 2017 முதல் இல்லினாய்ஸின் 8வது காங்கிரஸ் மாவட்டத்தின் அமெரிக்க பிரதிநிதியாய் பணியாற்றும் தமிழரான திரு ராசா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியபோது திருவள்ளுவர் கூறிய வாழ்க்கை நெறியில் நின்று, இங்கு வாழும் தமிழர்கள் அரசியலில் முக்கிய பங்கு எடுத்து பதவிகள் வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க காங்கிரஸில் எந்தவொரு முழுக் குழுவின் தரவரிசை உறுப்பினராக அல்லது தலைவராக பணியாற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் அல்லது தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இந்திய தூதரகத்தின் தூதுவர் திரு சோமனார் கோஷ் அவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய தமிழகத்தின் உடனான தொடர்பை வலியுறுத்தி மாநாடு சிறப்பாய் நடக்க வாழ்த்துரை வழங்கினார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் முதன்மை ஆய்வு அரங்கத்தின் சிறப்பு உரையை ஆற்றினார். அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் பகிர்தல் இணை அமர்வுகளாய் (Parallel sessions) மூன்று அரங்குகளில் இனிதே தொடங்கியது.

மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் மிகச் சிறப்புடன் திருமதி சம்மு ரவி அவர்கள் ஒருங்கிணைத்துக் கொடுக்க கலை நிகழ்ச்சிகளின் தொடக்கமாய், கல்வியும் கேள்வியும் என்ற பகுதியில் 30 பேர்கள் கலந்து கொண்ட திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி திரு நாஞ்சில் இ பீற்றர் அவர்களது முன்னெடுப்பில் திரு குழந்தைவேல் ராமசாமி அவர்களும் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களும் வினாடி வினாவை மிகவும் சிறப்பாய் நடத்திக் காட்டினர். அமெரிக்காவில் திருக்குறளை கற்ற மாணவர்களை திருக்குறள் இளவரசன் திருக்குறள் அரசன் என்று கூறி பெருமைப்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து சிகாகோ தமிழ் சங்கத்தைச் சார்ந்த பறை இசைக் குழுவினர் அரங்கம் அதிர அனைவரது மனங்களையும் குளிர்விக்கும் வகையில் சிறப்பாய் இசையோடு நடனத்தை தந்தனர். அமெரிக்க தமிழ் பள்ளிகள் நடத்திய உலக மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் ஆராய்ச்சி பற்றிய பகிர்வு நம் மாணவர்களின் செயல் திறனை காட்டும் வண்ணம் இருந்தது. அதை அடுத்து பரதநாட்டிய குழு நடனம் நடைபெற்றது. மருத்துவர் சொக்கலிங்கம் ஐயா அவர்களின் வள்ளுவம் கூறும் மருத்துவம் கூடியிருந்தோருக்கு மருத்துவ ஆலோசனையை திருக்குறளின் வாயிலாய் நகைச்சுவையுடன் கூறியது அனைவரது பாராட்டையும் பெற்றது. சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்ட குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் இந்த நிகழ்வில் ஓர் சிறப்பு அம்சமாய் அமைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று இந்த நிகழ்வில் நம்முடைய பண்பாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் நடனமாடி மகிழ்வித்தனர்.

திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளாண்மை (Thirukkuralnership) பற்றி அமெரிக்காவில் பெரும் நிறுவனங்களில் உயர் பதிவுகளில் வகிக்கும் திரு வேலுச்சாமி சங்கரலிங்கம், திரு. சுரேஷ் சம்மந்தம், திரு. சேது கிருஷ்ணமூர்த்தி, திரு கே டி ஸ்ரீனிவாச ராஜா, திரு ஸ்ரீதரன் ஆகிய தமிழர்கள் தங்களுடைய வாழ்வை திருக்குறள் எப்படி செதுக்கியது என்று எடுத்துக் கூறியதும் கூடியிருந்தோரின் பாராட்டைப் பெற்று ஊக்கத்தையும் தந்தது.

பட்டிமன்ற நாயகர் பேராசிரியர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்களால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன், சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.நம்பிராஜன் வைத்திலிங்கம், தமிழறிஞர் முனைவர் ப. மருதநாயகம், ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் மருத்துவர். விஜய் ஜானகிராமன், மருத்துவர் சம்மந்தம், திருக்குறள் ஆர்வலர் திரு தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இந்த நூலின் நோக்கத்தை பற்றி வலைத்தமிழ் நிறுவனரான திரு பார்த்தசாரதி அவர்கள் உரைப்பதிவைத் தொடர்ந்து, இதன் இணை ஆசிரியர்களான மிசௌரி திரு.இளங்கோ தங்கவேல், டெக்ஸாஸ் திரு.செந்தில் துரைசாமி அவர்களும் திருக்குறளை உலக அளவில் எடுத்துச் செல்ல செய்யப்படும் முயற்சிகளை எடுத்துக் கூறினர்.

மிசௌரி தமிழ் சங்கம், மில்வாக்கி தமிழ் சங்கம், சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களின் உறுப்பினர்கள் சிலம்பாட்டம், நாடகம் ஆகியவற்றை நடத்தி மாநாட்டில் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். இசையமைப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பயிற்சி தந்து தமிழ் இலக்கிய பாடல்கள் மாணவர்களாலும் பெரியவர்களாலும் பாடப்பட்டது நம் இலக்கியத்தின் பெருமையை உணரச் செய்தது. இரவு உணவிற்குப் பிறகு அமெரிக்காவில் இசையில் புகழ்பெற்ற இளம் பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சி குறளோடு குரல் என்ற பெயரில் அனைவரது மனம் கவர்ந்த திரைப்படப் பாடல்கள் அரங்கத்தில் ஒலித்தன.

ஏப்ரல் ஏழாம் தேதி பெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் ப மருதநாயகம் அவர்கள், இலங்கைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள், திருக்குறள் சிறப்புரை (Planery session speech) ஆற்றி இரண்டாம் நாள் நிகழ்வு தொடங்கியது. அறிஞர்களின் ஆய்வு கட்டுரைகள் நான்கு அரங்குகளில் இணை அமர்வுகளாய் பேராசிரியர்களின் தலைமையில் வழங்கப்பட்டன. இந்த ஆய்வு அரங்குகளின் நிகழ்வுகளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமெரிக்கக் கிளையின் துணைத்தலைவர் திரு ரவி பாலா அவர்களால் சிறப்பாய்த் திட்டமிடப்பட்டிருந்தன. அதனை அடுத்து மதியம் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் விவாத மேடை நடந்தது. வட அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்கள் அவருடன் விவாதம் செய்தது மாநாட்டிற்கு மெருகேற்றியது.

திருக்குறளை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இயக்கப்பட்ட அமெரிக்க தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திருக்குறள் நாடகம், சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்களின் முன்னிலையில், அவரது பாராட்டைப் பெற்று அரங்கேறியது. வள்ளுவம் வலியுறுத்துவது ஒழுக்கமா? கல்வியா? என்ற தலைப்பில் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் பட்டிமன்றம், நம்முடைய அடுத்த தலைமுறையினர் தமிழை எவ்வளவு கற்று இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது.

இந்த மாநாட்டை ஒட்டி பல போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநாட்டின் மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் பெற்ற மாணவர்களின் பெருமிதமான முகங்கள் இந்த மாநாடு வெற்றி பெற்றதை எடுத்துக் காட்டியது என்றே சொல்லலாம்.

இந்த நிகழ்வில் சிறப்புப் பங்காற்றிய ஆதரவாளர்கள், புரவலர்கள், கொடையாளர்கள் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. சிகாகோ நகரில் உள்ள அடையார் ஆனந்த பவன் உணவகம் சுவையான உணவைத் தந்து அனைவரையும் மகிழ்வித்தது. அனைத்து தரப்பினரையும் மனநிறைவு கொள்ளும் படியாய் காலை, மதியம், மாலை, இரவு அனைத்து வேளைகளிலும் பல்வேறு வகையான அறுசுவை உணவு தந்து செவிக்கும் அறிவுக்கும் மட்டுமல்லாது பயிற்றுக்கும் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை திரு விஜய் சாந்தலிங்கம் அவர்கள் செம்மையாக செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் திரு. அரசர் அருளாளர் அவர்கள் மாநாட்டை நடத்திக் கொடுத்த அனைவரையும் பாராட்டிய பின், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சரவணக்குமார் மணியனின் நன்றி நவிலலுடன் மாநாடு முடிவற்றது.

இந்த நிகழ்வின் வெற்றியே இதை மிகுந்த தன்னார்வத்துடன் கவனத்துடன் அன்புடன் அனைத்துப் பணிகளையும் செய்த தன்னார்வலர்கள் தான் என்று கூறினால் மிகையாகாது. இணையதளம் உருவாக்கம் தொடங்கி, ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றை ஆய்ந்து, ஆய்வாளர்களை அமெரிக்காவிற்கு வர ஏற்பாடு செய்து, நிகழ்வு தினத்தில் பதிவு செய்வது, நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப்பது, விருந்தினர்களுக்கு உணவு படைப்பது என்று தமிழுக்காக எத்தனையோ பணிகளை, உயர் பதவிகளை வகித்திருந்த போதும், கடுமையான பணிகளுக்கு நடுவே, முனைந்து செய்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி கூறாமல் இருக்க முடியாது.

இம்மாநாட்டில்‌ திருக்குறளோடு பிறமொழிகளில்‌ தோன்றிய அறநூல்கள்‌ பல்வேறு நாடுகளைச்‌ சார்ந்த 30 அறிஞர்களால்‌ பல்வேறு கோணங்களில்‌ ஒப்பிட்டு ஆராயப்பட்டது. இத்தகைய ஒப்பீட்டு ஆய்வின்‌ மூலம்‌ திருக்குறளின்‌ தனித்தன்மை தக்க தரவுகளின்‌ அடிப்படையில்‌ ஆராய்ந்து நிலைநாட்டப்‌பட்டதோடு திருக்குறளின்‌ உலகளாவிய பரந்த தகுதிப்‌பாடும்‌ அனைத்துலக அறிஞர்களும்‌ ஏற்றுக்கொள்ளும்‌ நிலையில்‌ நிலைநாட்டப் பெற்றது.

முனைவர் மெய் சித்ரா
தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
ஆங்காங்

by Swathi   on 15 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.