|
||||||||
ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம் |
||||||||
![]()
அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தத் தமிழக அரசு 'நான் முதல்வன்' என்ற திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது.
இத் திட்டத்தில், பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்களைத் தேர்வுசெய்து, உலகளாவிய செயல்முறை ஆராய்ச்சிப் பயிற்சி மேற்கொள்ள 2 வாரங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கிறது. 'நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஆறு அரசுக் கல்லூரி மாணவர்களைப் பயிற்சிக்காகத் தென் கொரியாவுக்கு முதன்முறையாகத் தமிழக அரசு அனுப்பியது.தென் கொரியாவில் செயல்பட்டுவரும் கொரியத் தமிழ்ச் சங்கம் இரண்டு மாணவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றது.
கொரியாவில் சியோல் மற்றும் புசான் விமான நிலையங்களில் வந்திறங்கிய மாணவர்களைக் கொரியத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அரவிந்த ராஜா, பத்மநாபன், செலஸ்டின் ராஜா, முத்துச்சாமி, விபின் ஆகியோர் வரவேற்றனர்.
கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் சந்துரு குமார் மற்றும் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் பால்வண்ணன் ஆகிய இரண்டு மாணவர்களுக்கும், மே 12 முதல் மே 23 வரை உள்ள பயிற்சிக் காலத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் கொரியத் தமிழ்ச் சங்கம் செய்தது.
மாணவர்களின் ஆராய்ச்சிப் பயிற்சி, தங்குமிடம், உணவு, இன்பச் சுற்றுலா, உள்ளூர்ப் போக்குவரத்து என அனைத்தையும் கொரியத் தமிழ்ச் சங்கம் பொறுப்புடன் கவனித்துக் கொண்டது. மாணவர்கள் இருவரும் புசான் பல்கலைக் கழகம், மேம்பட்ட நீடித்த ஆற்றல் ஆய்வகக்கூடத்தில் (Advanced Sustainable Energy Laboratory) பேராசிரியர் முனைவர் கந்தசாமி பிரபாகர் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டார்கள்.
கொரியத் தமிழ்ச் சங்கத்தின் ராமலிங்கம் மணிகண்டன், தீபன், செலஸ்டின் ராஜா, முத்துச்சாமி ஆகியோர் தாங்கள் பணிபுரியும் ஆய்வகங்களிலும் மாணவர்களை அழைத்துச் சென்று மேம்பட்ட சில தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தனர். முனைவர் பழனியாண்டி, அதிஷ், உஸ்மான், லூதா, ராஜ ஸ்ரீ ஆகியோர் கொரியத் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள்.
அர்ச்சனா மணிகண்டன், பிரேமினி தீபன், முகுந்தன் ஆகியோர் இருப்பிட வசதியுடன், தமிழ்நாட்டுச் சமையல் முறைப்படி மாணவர்களுக்கு அறுசுவை உணவுகளைத் தயார் செய்து கொடுத்தனர். விடுமுறை நாள்களில், கொரியத் தமிழ்ச் சங்க உறவுகளின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் பல்வேறு சுற்றுலாத் தளங்களைக் கண்டு மகிழ்ந்தனர். அதில் முக்கியமாக, பண்டைய தமிழகத்திலிருந்து கொரியா வந்தடைந்து காயா மன்னர் கிம் சுரோவை மணந்த ஆய் நாட்டைச் சார்ந்த தமிழரசி செம்பவளம் அவர்களின் நினைவிடம், காயா தேசிய அருங்காட்சியகம், பொமாசா புத்த ஆலயம், குவாங்கலி கடற்கரையில் வானூர்தி நிகழ்ச்சி (Drone show), சொங்தோ கடற்கரையில் தொங்கூர்திப் பயணம் (Rope car travel), ஒரிக்தோ கடற்கரையில் கண்ணாடிப் பாலம் ஆகியவற்றை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஆராய்ச்சிப் பயிற்சியைச் சிறப்பாக நிறைவுசெய்த மாணவர்களுக்குப் பேராசிரியர் முனைவர் கந்தசாமி பிரபாகர் பாராட்டுச் சான்றிதழை வழங்கி, அவர்களின் கல்விசார்ந்த எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தினார்.
“இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டிலிருந்து அரசுக் கல்லூரி, முதல் பட்டதாரி, எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் வரவழைத்து ஆய்வகப் பயிற்சி வழங்கிடக் கொரியத் தமிழ்ச் சங்கம் ஆயத்தமாக உள்ளது” எனச் சங்கத்தின் தலைவர் அரவிந்த ராஜா உற்சாகமாகக் கூறுகிறார்.
|
||||||||
by hemavathi on 15 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|