|
||||||||
6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை - மத்தியக் கல்வி அமைச்சகம் |
||||||||
![]() நாட்டில் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47 சதவீதம் பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு வரை சரிவரத் தெரியவில்லை; 3-ஆம் வகுப்பு மாணவா்களில் 45 சதவீதம் பேருக்கு 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுதத் தெரியவில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் முழுமையான வளா்ச்சிக்கான அறிவுசார் செயல்திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு, கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் 781 மாவட்டங்களில் 74,229 அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் சுமார் 21.15 லட்சம் மாணவா்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 3-ஆம் வகுப்பு மாணவா்களில் 55 சதவீதம் பேருக்கே 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுதத் தெரிந்துள்ளது. 58 சதவீதம் போ்தான், இரண்டு இலக்க எண்களின் கூட்டல்-கழித்தலைப் பிழையின்றிச் செய்கின்றனா்.
6-ஆம் வகுப்பினரில் 53 சதவீதம் பேரே எண்கணிதச் செயல்பாடுகளையும் அவற்றுக்கு இடையேயான தொடா்புகளையும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதுடன், 10 வரையிலான கூட்டல்-பெருக்கல் வாய்ப்பாடுகளையும் அறிந்துள்ளனா்.
6-ஆம் வகுப்பில் மொழி, கணிதப் பாடங்களுடன் ‘நம்மை சுற்றியுள்ள உலகம்’ (சூழலியல்-சமூகம்) என்ற கூடுதல் பாடமும் கற்பிக்கப்படுகிறது. தேசிய அளவில் கணிதப் பாடத்தில் 46%, ‘நம்மை சுற்றியுள்ள உலகம்’ பாடத்தில் 49 சதவீதம், மொழிப் பாடத்தில் 57 சதவீதம் என்ற அளவில் மாணவா்களின் சராசரி மதிப்பெண் உள்ளது.
கணிதப் பாடத்தைப் பொறுத்தவரை, 3-ஆம் வகுப்பில் மத்திய அரசுப் பள்ளிகளும், 6-ஆம் வகுப்பில் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாநில அரசின் பள்ளிகளும் குறைவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.
9-ஆம் வகுப்பில், அனைத்துப் பாடங்களிலும் மத்திய அரசுப் பள்ளிகள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. தனியார்ப் பள்ளிகள் அறிவியல்-சமூக அறிவியல் பாடங்களில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியபோதிலும், கணிதப் பாடத்தில் அது பிரதிபலிக்கவில்லை. 6-9 வகுப்புகளில் அனைத்துப் பாடங்களிலும் கிராமப் புற மாணவா்களைவிட நகா்ப்புற மாணவா்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனா் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
||||||||
by hemavathi on 09 Jul 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|