LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1169 - கற்பியல்

Next Kural >

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)
மணக்குடவர் உரை:
கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள். இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
இரா இந்நாள் நெடிய கழியும் - முன்பு நம் காதலரொடு கூடி யின்புற்ற நாட்களிலெல்லாம் குறிய வாயிருந்த இரவுகள், இன்று அவரினின்று பிரிந்து துன்புறுங் காலத்தில் மிக நீண்டு செல்கின்றனவா யுள்ளன ; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - ஆதலால், அக் கொடியார் கொடுமையினும் மிஞ்சிய கொடுமை செய்வனவாகும். தன் ஆற்றாமை கருதாது பிரிந்தமையின் ' கொடியார் ' என்றும், வரவு நீட்டித்தமையின் 'கொடுமை ' என்றும், தன் துன்பங்கண்டிரங்காமையானும் முன்னினும் நெடியவாய்க் கழிந்தமையானும் ' கொடுமையிற்றாங்கொடிய' என்றும், கூறினாள்.
கலைஞர் உரை:
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.
Translation
More cruel than the cruelty of him, the cruel one, In these sad times are lengthening hours of night I watch alone.
Explanation
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.
Transliteration
Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal Netiya Kazhiyum Iraa

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >