LOGO

மஞ்சனை செல்வ சுடலை மாடசாமி

  கோயில்   மஞ்சனை செல்வ சுடலை மாடசாமி
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   செல்வ சுடலை மாடசாமி
  பழமை   
  முகவரி
  ஊர்   
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

ஒரு குழந்தையிடம் எத்தனை பேர் பாசம் காட்டினாலும் அக்குழந்தை தனது தாயைத் தான் விரும்பும். அதைப் போல் ஒரு மனிதனுக்கு எத்தனை தெய்வங்கள் அருள் புரிந்தாலும் அவன் மனதுக்கு நெருக்கமாக இருப்பது அவனது குலதெய்வம் மட்டுமே. ஆகையால் தான் தமிழர் மரபில் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.

எங்கள் குல தெய்வம்: சொக்கநாதன்புத்தூர் (விருதுநகர் மாவட்டம்), கிருஷ்ணாபுரம் (தென்காசி மாவட்டம் கடையநல்லூர்) மற்றும் நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம்) ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு குலதெய்வமாக விளங்கி வாழையடி வாழையாக எங்கள் வம்சத்தை தழைத்தோங்க செய்ய அருள் பாலித்து வருவது மஞ்சனை செல்வ சுடலை மாடசாமி. இத்திருக்கோவிலுக்கு மூலஸ்தானமாக இருப்பது அணைக்கரை சாஸ்தா.

திருக்கோவில் அமைவிடம்:

தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் சீலப்பேரி குளத்தின் கரையில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கணபதி, சுடலைமாடன், பேச்சியம்மன் உள்ளனர். பனை மரத்தில் கருப்பண்ணசாமி இருக்கிறார். இடையர்கள் கிருஷ்ண வழிபாட்டை மேற்கொண்டு வந்ததால், அவரையும் நினைவு கூறும் பொருட்டு கோவிந்தசாமி என்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த பீடத்தின் அருகில் பூமாதேவி பீடம் உள்ளது. அங்கிருந்து சிறிது தூரத்தில் முத்துவிநாயகபுரம் வழிமறிச்சான் கிராமத்தில் அமைந்துள்ள அணைக்கரை சாஸ்தா அய்யனார் திருக்கோவில் மஞ்சனை செல்வ சுடலை மாடசாமி திருக்கோவிலுக்கு மூலஸ்தானமாக விளங்குகிறது.

திருக்கோவில் வரலாறு:

நெல்லை ஜில்லாவிற்கு உட்பட்ட முப்புரம் கோட்டையை ஆட்சி செய்து வந்த ஜமீனுக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாததால் தனக்குப் பிறகு ஜமீன் வாரிசு இல்லாமல் போய் விடுமோ என்று கலக்கத்தில் ஆழ்ந்தார். குழந்தை வரம் வேண்டி கோவில் குளம் என சுற்றி வந்தார். சென்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜமீன்தாரின் மனைவி ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஒரே பிள்ளை என்பதால் அக்குழந்தைக்கு அதிகமாக பாசம் காட்டி வளர்த்து வந்தார்கள். மகன் ஆசைப்பட்டு கேட்கும் அனைத்தையும் எப்படியாவது ஜமீன்தார் வாங்கி கொடுத்து விடுவார். அத்துணை அன்புடன் வளர்க்கப்பட்ட மகன் பருவ வயதை அடைந்தான். கம்பீரமாக மீசையை முறுக்கிக் கொண்டு குதிரையில் வலம் வந்து பொழுது போக்கினான் இளைய ஜமீன். ஜமீன்தார் தங்களது ஜமீனில் ஒவ்வொரு பணியைச் செய்வதற்கும் ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தவரை பணியாட்களாக அமர்த்தி இருந்தார். அந்த வகையில் முப்புரம் கோட்டையை சுற்றி இருந்த 18 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஜமீனை அண்டி வாழ்ந்து வந்தனர். ஆயிரைகளை கவனிக்கவும், விவசாய பணிகளை மேற்கொள்ளவும் ஆயர்குல மக்களை ஜமீன் நியமித்திருந்தார். அவர்களில் ஒருவரான கோபாலன் என்பவரின் நான்காவது குழந்தையான சீதாலட்சுமி பெயருக்கேற்றபடி லட்சுமி கடாட்சம் பொருந்தியவளாக, வயதுக்கேற்ற வளர்ச்சியும் அழகும் கொண்டிருந்தாள். 16 வயதில் மணமுடித்த அவள், 17 வயதிலேயே விதவைக் கோலம் பூணும் சோகம் அவள் வாழ்வில் அரங்கேறியது. அழகு, அறிவு, அன்பு என அனைத்தும் பெற்றிருந்தும் அவளது வாழ்வை இருள் சூழ்ந்தது. ஒரு நாள் மாலைப்பொழுதில் தனது வீட்டின் முன்பு நின்றிருந்த சீதாலட்சுமியை அந்த வழியாக குதிரையில் சென்ற இளைய ஜமீன் பார்த்து விட்டு அவளது அழகில் தன்னையே மறந்தார். பசி, தூக்கம் துறந்து சதா சர்வ காலமும் அவள் நினைவாக இருந்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு தனது மகன் நிலையை மனைவியின் மூலம் அறிந்த ஜமீன்தார், மகனை அழைத்து விசாரித்தார். தனது மனம் கவர்ந்த மங்கையைப் பற்றி இளைய ஜமீன் எடுத்துக் கூறினார். தற்போது தொடர்ந்து அந்தப் பக்கம் சென்று வந்த போதிலும் அதன் பின்னர் ஒரு நாள் கூட அவளை காணவில்லை என்று கூறி வருந்தினார். திகைப்படைந்த ஜமீன்தார் தனது மகனிடம் வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத இந்த இடையர் குலப் பெண்ணை விட, பெரும் செல்வந்தர்களான ஜமீன்தார்கள் வீட்டு பெண்கள் பல மடங்கு அழகு கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களில் ஒருவரை தேர்வு செய்து மணமுடித்துக் கொள்,’’ என்று கூறினார். ஆயினும் அதற்கு ஒப்பாத இளைய ஜமீன் மனதை மாற்ற “விருப்பம் இருந்தால் அந்தப் பெண்ணோடு பழகிக் கொள். ஆனால் வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது என்று ஜமீன்தார் வலியுறுத்தினார். இளைய ஜமீனோ ‘‘மணந்தால் அப்பெண்ணைத் தான் மணப்பேன். இல்லையேல் மரணிப்பேன்” என தனது தந்தையிடம் உறுதியாகத் தெரிவித்தார். வேறு வழியின்றி தனது உதவியாளரை மகனுடன் அனுப்பி வைத்த ஜமீன்தார் அப்பெண்ணின் பெற்றோரை அழைத்து வருமாறு கூறினார். அப்போது அவர்களது வீட்டில் அனைவரும் வயலுக்கு சென்றிருந்ததால் அந்தப்பெண் மட்டும் தனித்து இருந்தாள். அவளிடம் இளைய ஜமீனை அறிமுகம் செய்து வைத்த ஜமீன்தாரின் உதவியாளர் அவளது பெற்றோர் வந்தவுடன் ஜமீன் பங்களாவிற்கு வரச்சொல்லுமாறு கூறி விட்டு புறப்பட்டனர். அவர்கள் சென்ற பிறகு பெற்றோரை அழைப்பதன் காரணம் புரியாமல் சீதாலட்சுமி பயத்தில் ஆழ்ந்தார்.

மாலைப் பொழுதான பின் சீதாலட்சுமியின் பெற்றோர்கள் இல்லம் வந்தனர். அவர்களிடம் சீதாலட்சுமி விவரத்தைக் கூறியவுடன் அவளது பெற்றோர் கோபாலனும், செல்லம்மாளும் பதறியடித்து ஜமீன் பங்களாவிற்கு சென்றனர். கோபாலனிடம், ஜமீன்தார் நடந்தவைகளை கூற சீதாலட்சுமிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் மணமுடித்து கணவன் மாண்டுவிட்டதை அவர்கள் கூறினர். “அறியாத வயதில் நடந்ததை திருமணம் என்பதா? அவள் வாழ வேண்டியவள். அவள் இளமையையும், எதிர்காலத்தையும் வீணடிக்காதீர்கள். அதைவிட என் மகன் வாழவேண்டும். அவனுக்கு உங்கள் மகள் வேண்டும்.” என்று அவர்களை ஜமீன்தார் மிரட்டினார். “இதில் எங்களை கட்டாயப்படுத்தாதீர்கள். தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள். எங்கள் குலம் இடையர் குலம். அறுத்த தாலிக்கு மறுதாலி இல்லை.” என்று கூறி இருவரும் கரம் கூப்பி ஜமீன்தாரை அழுது தொழுதனர். ஜமீன்தார் சினத்துடன் பங்களாவை விட்டு அவர்களை விரட்டினார். அந்த காலத்தில், அறுவடை காலம், விழாக்கோலத்திற்கு சமமானது. அறுவடை முடிந்த பிறகு தான் அத்தனை காலம் பார்த்த வேலைக்கு கூலி கிடைக்கும். நெல் மணிகள் இல்லம் வந்து சேரும் என்பதால் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். மறுநாள் அறுவடைநாள். எல்லோரும் வயல் காடுகளுக்கு சென்றனர்.

சீதாலட்சுமி, தான் வணங்கும் சுடலைமாடசாமி கோயிலுக்குச் சென்றாள். “சாமி எனக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் நீதான் காப்பாத்தணும்’’ என்று அழுதபடி பிரார்த்தனை செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள். வயற்காட்டில் எல்லோரும் கூடி நின்றார்கள். ஜமீன்தார், தனது மனைவி, மகன் மற்றும் உதவியாளர்களுடன் வந்தார். முன்னதாக வந்த கணக்குப்பிள்ளை, ‘‘ஏன் அடம்பிடிக்கிற? உன் தலைமுறையின் நிலையே மாறும். இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோயேண்டா,” என்று கோபாலனிடம் கடுமையாகச் சொன்னார். “இல்லைங்கய்யா, இது தப்பு,” என்று குரல் கம்மக் கூறினான் கோபாலன். சீதா லட்சுமியின் மாமா ராமையன் கோனார், இடைக்குல மக்களுக்கு தலைவராக இருந்தவர். அவர், “ஜமீன்தார் எங்களை நீங்கள் மன்னிக்கனும். எங்கள் சாமிக்கு பிறகு உங்களைத்தான் சாமியாக மதிக்கிறோம். நீங்கள் உங்கள் மகனுக்கு எங்களது பெண்ணைக் கேட்பது நல்லது இல்லை. எங்கள து குலத்தில் அறுத்த தாலிக்கு மறுதாலி கட்ட மாட்டோம் என்று சொல்ல ஜமீன்தாருக்கு கோபம் பொங்கியது. “என்னது, அறுத்த தாலிக்கு மறு தாலி கட்டமாட்டீர்களா? அப்படி என்றால்

நீங்கள் அறுத்த கதிரைக் கட்ட வேண்டாம். ஒருத்தரும் வயலுக்குள் நிற்கக் கூடாது. கிளம்புங்கள்” என்று தனது ஆட்களைக் கொண்டு அவர்களை விரட்டினார். அங்கிருந்து வந்த அவர்கள். அவர்கள் வழிபடும் சுடலைமாட சுவாமி கோயில் முன்பு கூடினார்கள். ‘‘ஜமீன்தாரை பகைத்துக் கொண்டு இங்கே இருக்க முடியாது, அவர் நமக்கு வேலை தரமாட்டார், பிழைப்புக்கு வழி கிடையாது, அதனால் இரவோடு இரவாக நாம், ஊரை விட்டு போய் விடுவோம்’’ என்று முடிவு செய்தார்கள். அதன்படி ஊரை விட்டுக் கிளம்பிய அவர்கள் தாங்கள் வழிபட்டு வந்த சாமி சிலைகளையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால் ஊர் எல்லையில் ஜமீன்தாரின் ஆட்கள், அவர்களை பின் தொடர்ந்தார்கள். ஊர் மக்கள் தென்காசியில் ஓடும் சித்திரா நதி என்ற இப்போதைய சித்தாற்றின் கரையில் தென்புறம் நின்றார்கள். ஆற்றில் பெருவெள்ளம். பின்னால் ஜமீன்தாரின் ஆட்கள் துரத்தி வந்தார்கள். எப்படி தப்புவது, மனைவி, மக்களை எப்படி காப்பாற்றுவது, பேசாமல் ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்து விடலாமா என ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அப்போது பெண்களில் சிலர் சீதா லட்சுமியை பார்த்து “இவளால் தான் நமக்கு இந்த நிலை. இவள் எப்படி இளைய ஜமீனை மயக்கினாளோ, அவர் இவளை தான் திருமணம் செய்வேன் என்கிறாரே, இவளால் நாம் நமது வீடு, வாசல், தோட்டம், தொறவு இழந்து அர்த்த ராத்திரியில பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு அலைகிறோமே,” என்று கூறினர்.

அப்போது சீதா லட்சுமி எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் சத்தமாக “சுடலைமாடசாமி, நான் உன்னை வணங்கியது உண்மை என்றால், நான் பத்தினி தான் என்பதும் உண்மை என்றால் ஆற்றின் கரையோரம் நிற்கும் இந்த பச்சை மரம் சரிந்து இரண்டாக பிளந்து நாங்கள் நடந்து செல்ல பாதை ஆகட்டும். அது போல வடகரையில் இருக்கும் மரமும் தாழ்ந்து பாதையாகி வழிகாட்டட்டும். மாடசாமி உன்னை கை தொழுத நான் மாசற்றவள் என்பதை என் சாதிசனம் அறிய வழிகாட்டு சுடலையாண்டவா” என்று கத்த எல்லோரும் அவளைத் திகைப்புடன் பார்த்தனர். அந்த நேரம் சிவந்த மேனியுடைய சீதாலட்சுமி கோபக்கனலில் பொன்னிறத்தால் மாறினாள். கண்கள் ரத்தத்தில் நீந்தும் மீன்களாக தெரிந்தன. சற்று நேரத்தில் அந்த ஆச்சரியம் நடந்தது. ஆம், கரையில் நின்ற மரங்கள் சரிந்து பிளவுண்டு பாதையாக மாறியது. அதில் ஏறி அனைவரும் ஆற்றின் வடகரைக்கு வந்தனர். அவர்கள் கரையை கடந்ததும். மரங்கள் மீண்டும் தன்நிலைக்கு மாறியது. விரட்டி வந்த ஜமீன்தாரின் ஆட்கள் ஆற்றின் தென்கரையில் நடந்தவற்றைப் பார்த்து திகைத்து நின்றனர். கரையை கடந்தபின், தூற்றியவர்கள் எல்லாம் சீதாலட்சுமியை பற்றி பெருமையாக பேசினர். ஆற்றின் வட கரையோரம் வந்ததும், இளைப்பாறுவோம் என்று தாங்கள் சுமந்து வந்த சுவாமி சிலைகளை இறக்கி வைத்தனர். பின்னர் அதிகாலையில் பயணத்தைத் தொடர முனைந்தனர். சுவாமி சிலைகளை எடுக்க முயன்றனர். சிலைகள் நகரவில்லை. மீண்டும் எடுக்க முயன்ற போது ‘‘நான் இங்கே இருக்க விரும்புகிறேன்" என்று அசரீரி கேட்டது. “இனி நாம் குடியேற ஒரு இடத்தை பார்த்து விட்டு பிறகு சாமி இருக்கும் இடத்தை சீர் செய்வோம்,’’ என்று தலைவர் ராமையன் கோனார் குரல் கொடுத்தார். எல்லோரும் அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். அப்போது சீதா லட்சுமி, “என் கோபம் தணிந்தது. பொறுமையில் பூமகளாய் நான் மாறிவிட்டேன். என் சாமி இருக்கும் இடத்திலே நான் இருப்பேன்,” என்று கூறியவாறு கீழே சரிந்தாள். தெய்வமானாள். அவள் இதே கோயிலில் பூமாதேவியாக பீடம் கொண்டு எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறாள். சுடலைமாடசுவாமிக்கு பிடித்தமான ஒன்று மஞ்சனை என்பதால் இந்த சாமிக்கு மஞ்சனை செல்வ சுடலை மாடசாமி என்று பெயர்.

வழிபாட்டு முறை: வெவ்வேறு ஊர்களில், மாவட்டங்களில், மாநிலங்களில் இருக்கும் இந்த மக்கள் எந்தத்திசையில் இருந்தாலும் கோவில் கொடை விழாவின் போது ஒன்று சேர்ந்து விழாவினை நடத்தி செல்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி தபசு அன்று அணைக்கரை சாஸ்தா கோவிலில் கொடை விழா 2 நாட்கள் நடைபெறும். அதனையடுத்து மக்கள் பாதயாத்திரையாக சீலப்பேரி சுடலை மாடசாமி திருக்கோவிலுக்கு வந்து அடுத்த 2 நாட்கள் கொடை விழா நடைபெறும். முறைப்படி குடமுழுக்கு இக்கோவில்களில் நடத்தப்பட்டதுடன் உபயதாரர்கள் மூலம் மாதம் தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

- திருமதி. இரா. முருகேஸ்வரி வைரமுத்து,

தமிழாசிரியை, சொக்கநாதன்புத்தூர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    அறுபடைவீடு     வீரபத்திரர் கோயில்
    விஷ்ணு கோயில்     காலபைரவர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சேக்கிழார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சித்தர் கோயில்
    சிவாலயம்     எமதர்மராஜா கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சடையப்பர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     நவக்கிரக கோயில்
    திவ்ய தேசம்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்