LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஆதவன்

மூன்றாமவன்

 

பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம்.
‘நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!’ என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கி விட்டான் பரசு. அவனுடைய அக்காவும் அண்ணாவும் குழந்தையாயிருந்த போது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிர விரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும் அண்ணனும் ரோஷக்காரர்கள். பெற்றோர் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடக்கி விடுவார்கள். ஆனால் பரசு சரியான கல்லுளிமங்கனாக இருந்தான்.
அவனை மிரட்டுவது, திட்டுவதெல்லாம் சுவரில் போய் முட்டி கொள்வதைப் போலத்தான். யார் என்ன சொன்னாலும் லட்சியம் செய்யாமல் தன்பாட்டில் ஜரூராக விஷமம் செய்தபடி இருப்பான்: வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் நாசம் செய்வான்; வெளியே தூக்கி எறிவான்: அவனுடைய பிடிவாதம் எதையாவது சாதித்துக் கொள்ள வேண்டுமானால், ‘ஆ, ஊ’ என்று அவன் பெரிதாக ஊளையிட்டு அழுவதையும், ‘தொம்தொம்’ என்று குதிப்பதையும், தரையில் விழுந்து புரள்வதையும், இதையெல்லாம் பார்த்து, “சரி, போய்த் தொலை” என்று பெற்றோர் அவனுடைய பிடிவாதத்துக்கு இணங்குவதைப் பார்த்து லட்சுமியும் மாதவனும் ஒருவரையொருவர் சற்றே சோகத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு இந்த வித்தைகள் தெரியாமல் போயிற்றே!
சமூகத்தில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்து, அது ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்ட காலத்தில் பரசு பிறந்தது அவனுடைய தான்தோன்றித் தனத்துக்குக் காரணமாயிருக்கலாம் என்று அவனுடைய அப்பா குயுக்தியாக நினைத்துக் கொள்வார். இப்படி சமூக நிகழ்ச்சிகளுக்கும் தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், தளுக்காக முடிச்சுப்போட்டு பிறகு மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகைப்பார்த்து வியந்து கொண்டிருப்பது அவருக்கு ஒரு பொழுது போக்கு. ஆமாம் அவர் ஒரு அறிவு ஜீவி; அவருடைய வம்சமே அறிவு ஜீவிகளின் வம்சம்தான். அவருடைய அப்பா தத்துவப் பேராசிரியர். அவருடைய தாத்தா சமஸ்கிருத பண்டிதர். அவருடைய கொள்ளுத் தாத்தா அரச குடும்பத்துக்குக் கல்வி போதித்து நிலங்கள் மான்யமாகப் பெற்றவர்- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பெரிய குழந்தைகளான லட்சுமியும் மாதவனும் மிகச் சிறு வயதிலிருந்தே புத்தகங்களில் ஆர்வம் காட்டினார்கள். வீட்டில் கிடக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளையெல்லாம் வைத்துக் கொண்டு அவற்றில் அவர்கள் ‘பொம்மை’ பார்க்கத் தொடங்குவதைப் பார்த்து, அவர்களுடைய பெற்றோருக்கு ஒரே பெருமையாக இருக்கும். அப்போதே அந்தக் குழந்தைகள் படிக்கத் தொடங்கிவிட்டதைப் போல பூரித்துப் போவார்கள். ‘யாருடைய ரத்தம் அவர்களுடைய உடலில் ஓடுகிறது?’ என்று வம்சச் சிறப்பைக் கர்வமாக நினைவு கூறுவார்கள்.
ஆனால் பரசுக்குப் புத்தகங்களில் பொம்மை பார்ப்பது பிடிக்கவில்லை. நாலு, ஐந்து வயதிலும் கூட கைக்கு அகப்படும் புத்தகங்கள், பத்திரிகைகளெல்லாம் சுக்குநூறாகக் கிழித்தெறிவதுதான் அவன் பொழுதுபோக்காக இருந்தது. அந்தப் புத்தகங்களைத் தன் எதிரிகளாக அவன் நினைப்பது போலிருக்கும்.வீட்டிலிருப்பவர்கள் அவனைக் கொஞ்சிய வாறும், அவனுடைய விஷமங்களை ரசித்தவாறும் இருப்பதற்குப் பதிலாக கேவலம் அந்தப் புத்தகங்கள், பத்திரிகைகளைச் சதா கைகளில் வைத்துச் சீராட்டியவாறிருப்பதை அவன் இவ்வாறு மூர்க்கமாக எதிர்ப்பதைப் போலிருக்கும் பரசுவின் அப்பா ஒரு தடவை ஒரு மனோத்துவ நிபுணரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் இதைத்தான் கூறினார். “உங்கள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவன் கடைப்பிடிக்கும் வழிகளே இவை” என்றார் அவர். அதையே விளக்கமாகவும் கூறினார்.
அவன் ஒரு மூன்றாவது குழந்தையல்லவா? தனக்கு மூத்த இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வருடக்கணக்கான சாதனைகளை முறியடித்துத் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ளமுடியும் என்ற ஒரு பீதியும் மிரட்சியும் அவனைச் சதா ஆட்டி வைக்கின்றன. குறுக்குவழிகளில் ஹோதாவைத் தேடிக் கொள்ள முயல்கிறான். நீங்கள் அவனுடைய அண்ணாவுடனும் அக்காவுடனும் அவனை ஒப்பிடுவதாக அவன் உணரும்படி செய்யக் கூடாது. “அக்கா சமர்த்தா சாமி கும்பிடறா பாரு! அண்ணா சமர்த்தா ஸ்கூலுக்குப் போகிறான் பாரு! என்றெல்லாம் சொல்லியவாறு இருக்கக் கூடாது. அவனுடைய தனித் தன்மையை அவன் கண்டு கொள்வதற்கு நீங்கள் நாசூக்கான முறையில் உதவி, அவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்”.
டாக்டரின் முக பாவனைகளிலும் அபிநயங்களிலும் ஒரு நடிகனின் சாதுரியமும் தளுக்கும் இருந்தன. அவருடைய மூதாதையரில் சிலருக்காவது தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெநி போன்றவற்றுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று பரசுவின் அப்பாவுக்குத் தோன்றியது. ‘ஒரு வேளை பரசுவும் பெரியவனான பிறகு மனோதத்துவ டாக்டராகப் போகிறானோ?’ என்ற ஒரு குயுக்தியான எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.
மனோதத்துவ நிபுணரிடம் சென்று வந்த பிறகு பரசுவைக் கொஞ்சநஞ்சம் கண்டித்து வந்ததையும் அவனுடைய அப்பா நிறுத்திவிட்டார். பரசுவின் தனித்தன்மை விபரீதமான முறையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அவனுடைய அக்காவும் அண்ணாவும் சதா வீட்டிலேயேதான் இருப்பார்கள். இதற்கு நேரெதிரிடையாக பரசு சதா வீட்டுக்கு வெளியே அண்டை அயல் வீடுகளில் கன் நேரத்தைக் கழித்து வரத் தொடங்கினான். இந்த வீடுகளில் அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் அசட்டுப் பிசட்டென்று குழந்தைத்தனமாகப் பதில் சொல்வான். இந்தப் பதில்கள், அவர்களுக்கு சொகுசாகவும் ரசமாகவும் இருக்க, மென்மேலும் அவன் வாயைக் கிளறியபடி இருப்பார்கள். எல்லாம் வெறும் கேலிதான். இந்த உலகில் யாரும் யாரையும் தம்மைவிடக் கெட்டிக்காரனாக அங்கீகரிக்கவே மாட்டார்கள் என்பது பரசுவுக்குத் தெரியவில்லைதான். தான் அக்காவையும், அண்ணாவையும் விடக் கெட்டிக்காரனென்றும், அதனால் தான் தன்னைப் பார்த்தவுடனேயே எல்லாரும் பூரித்துப் போகிறார்கள் என்றும் அவனுடைய போட்டியுணர்வுகள் எண்ண வைத்தன.
வீட்டில் பரசுவின் அதிகார தோரணையும் முரண்டும் ரகளையும் அதிகமாயின. அக்காவும் அண்ணாவும் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது வேண்டு மென்றே உரக்கப் பாடத் தொடங்குவான். அல்லது அப்பா வாங்கித் தந்த மௌத்-ஆர்கனை வாசிப்பான்.
“ஓ! இவனுக்கு இசையில் ஆர்வமிருக்கிறது!” என்று அவனுடைய அப்பா மகிழ்ந்து போவார். மனோதத்துவ டாக்டரிடம் சென்று வந்ததிலிருந்து வெறும் புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு மேதைத்தனம் பரசுவிடம் ஒளிந்திருப்பதாகவும் அதைக் கண்டுபிடிப்பதைத் தன் பரந்த கண்ணோட்டத்துக்கு ஒரு சவாலாகவும் அவர் நினைக்கத் தொடங்கியிருந்தார். பரசுவின் பாட்டும் மௌத்-ஆர்கனும் தம்முடைய படிப்புக்கு இடைஞ்சலாக இருப்பதாக லட்சுமியும் மாதவனும் புகார் செய்தால் “கதவைச் சாத்திக் கொண்டு படியுங்கள்” என்று அவர் அவர்களுக்கு உபதேசித்தார். ரேடியோவைத் திருகிவிட்டு அவனைத் தன்னுடன் அமர்த்தி வைத்துக் கொண்டு அவற்றைக் கேட்கச் செய்வார். பரசுவும், அண்ணாவுக்கும் அக்காவுக்கும் பழிப்புக் காட்டுவதற்காகவே அந்தப் பாட்டுகளை மிகவும் ரசிப்பது போலத் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டுவான். தாளம் போடுவான். அப்பா அந்தத் தாளங்களைத் திருத்துவார்.
அவன் பாசாங்குதான் செய்கிறான். அவனுக்கு இசையில் விசே ஷப் பற்றுதல் ஏதுமில்லை என அவனுடைய அப்பா தெரிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் ஆயின. அதற்குள் அவர் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒரு பாட்டு வாத்தியாரை ஏற்பாடு செய்து, அவனைத் தன்னுடன் சங்கீதக் கச்சேரிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று—பாவம்! கடைசியில் இதனாலெல்லாம் ஏற்பட்ட விளைவு, லட்சுமிக்கும், மாதவனுக்கும் கர்நாடக சங்கீதத்தில் சிரத்தை இல்லாமல் போனது. பரசுவுக்கு அவன் பெற அருகதையற்ற கௌரவத்தை அப்பா அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், பெரியவர்கள் இருவரும் சாஸ்திரீய இசை என்றாலே அலட்சியம் காட்டினார்கள், லட்சுமிக்கு, பரசு பிறக்கிற சமயத்தில் பாட்டில் ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் ஏற்படத்தொடங்கியிருந்தது. ஆனால் , பிறகு பரசு காரணமாக இசையில் அவளுக்கு அசிரத்தை ஏற்படவும், ஏற்கனவே தெரிந்த பாட்டுக்களும் அவளுக்கு மறந்து போயின. அவள் கல்யாண வயதடைந்தபோது, பாட்டு கற்றுக் கொள்ள மாட்டேனென்ற அவளுடைய வீம்பு அதிகமாயிற்றேயொழிய குறையவில்லை. இதன் காரணமாகவே சில நல்ல இடங்கள் தட்டிப்போயின. கடைசியில், பீஹாரில் ஏதோ ஒரு நகரில், வீட்டுச் சமையலுக்காக ஆலாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பிள்ளையாண்டான், அதற்காகவே அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். அது ஒரு தனிக் கதை!
பாட்டு ஒரு உதாரணந்தான். இப்படிப் பல விதங்களில் பரசுவின் இயல்புக்கும், இந்த இயல்பு பெற்ற அங்கீகாரத்துக்கும், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற முரண்டு காரணமாகவே, லட்சுமியும், மாதவனும் தம்முடைய பல இயல்புகளைக் குறுக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய பெற்றோர்களுக்கெதிராக ஒரு இடையறாத கறுப்புக்கொடி ஊர்வலம் குழந்தையாயிருந்தபோதே மாதவன் அப்படி யொன்றும் உம்மணா மூஞ்சியாக இருக்கவில்லை. குறும்புகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடாதவனாக இருக்கவில்லை. ஆனால் பரசுவின் அட்டகாசங்கள் அதிகமாக அதிகமாக, மாதவன் தனக்குள்ளேயே சுருங்கிப் போனான்.
அவன் முகத்தில் சிரிப்பு மறைந்து, எப்போதும் ஒரு தீவிரபாவமும் கவலைப் பளுவும் தெரிந்தன. உலகத்தின் கவலையெல்லாம் அவன் ஒருவனே படுவதைப் போலிருக்கும், அவன் முகத்தைப் பார்த்தால். ஒரு வேளை தான் தன் தம்பியைப் போல இல்லை என்று எல்லாரையும் உணரச் செய்கிற தீவிரமும் கவலையுமாகவே இது இருந்திருக்கலாம். பரசு ஒரு ‘கஷ்டமான மாணவன்’ ‘அடங்காப்பிடாரி’ ‘முரடன்’ ‘போக்கிரி என்று பலவாறு, அவனுடைய உபாத்தியாயர்கள் அவனைப் பற்றிப் புகார் செய்யத்த தொடங்கியிருந்தார்கள். இந்தப் புகார்கள் முதலில் மாதவன் காதுகளைத்தான் எட்டும். அவனுள் அவமானமும் ஆத்திரமும் பொங்கி எழும். படிப்பிலோ விளையாட்டுக் களிலோ விசே ஷ சாதனை ஏதும் நிகழ்த்தாத ஒரு சராசரி மாணவன் அவன். ஆனால் குறைந்தபட்சம் மோசமானவ னென்று பெயர் வாங்கவில்லை. இப்போது அவனுடைய தம்பி இவ்வாறு பிரபலமாகிக் கொண்டிருந்தான்.
அந்தத் தம்பியின் அண்ணனாக அவனும் பிரபலமாகிக் கொண்டிருந்தான். கூச்ச சுபாவமுள்ளவனான அவன் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான். பள்ளிக்கூட வராந்தாக்களில் நடந்து போகும்போது திடீரென்று யாராவது அவனைச் சுட்டிக் காட்டி “அவன்தான் பரசுவின் அண்ணா” என்று சொல்வது காதில் விழும். அப்படியே காற்றில் கரைந்து மறைந்து விடலாம் போல அவனுக்குத் தோன்றும்.
வீட்டுக்கு வரும் உறவினர்கள், விருந்தினர்களுக்கிடையேயும் பிரபலமாக விளங்கியதும் பரசுதான். அவர்களுக்கு வேண்டிய சிசுருஷைகளை எல்லாம் அவன்தான் பார்த்துப் பார்த்துச் செய்வான். அவர்களிடம் தன் பிரதாபங்களையெல்லாம் அளந்தவாறிருப்பான். அவர்களை ஊர் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் செல்வான். கோணங்கித்தனங்கள் காட்டி அவர்களைச் சிரிக்க வைப்பான். இதற்கு மாறாக, வீட்டில் வெளி மனிதர்கள் வந்துவிட்டால் லட்சுமியும் மாதவனும் இருக்கிற இடம் தெரியாது. இது ஒனிந்து கொள்ளல் அல்ல.ஒரு பகிஷ்காரம். பரசுவின் மலிவான கவர்ச்சி உத்திகளின்பால் தம் அதிருப்தியைக் வெளிப்படுத்த அவர்கள் நிகழ்த்திய ‘சத்தியாக்கிரகம்!’.
ஆனால் சத்தியாக்கிரகங்களின் தலைமுறையைச் சேர்ந்தவராயிருந்தும் பரசுவின் அப்பாவால் இதைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதுதான் ஆச்சரியம். ‘பெரிய குழந்தைகள் இருவரும் பயந்தாங்கொள்ளிகள்; பரசுதான் துணிச்சலும் அடாவடி சாமர்த்தியங்களும் உள்ளவன்; இந்தக் காலத்தில் இத்தகைய சாமர்த்தியந்தானே தேவையாயிருக்கிறது?’ என்று அவர் மனம் மேலோட்டமான தீர்ப்பு வழங்கியது. அவருடைய ஆபீஸில் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களும் இத்தகைய எண்ண ஓட்டத்துக்கு வித்திட்டிருக்கலாம். அவருடைய ஜுனியர்கள் மேலதிகாரிகளைக் காக்காய் பிடித்து, நியாயமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளைத் தாம் அபரித்துக் கொண்டார்கள். அவருடைய எதிரிகள் அவரைப் பற்றிக் கிளப்பி விட்ட அவதூறுகளின் அடிப்படையில், சரியான விசாரணையின்றி மூன்று வருடங்கள் மேலதிகாரிகள் அவரைப் பற்றி மோசமான ரிப்போர்ட்கள் எழுதினார்கள். இதெல்லாம் கடமையுணர்வு, நேர்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் அவர் வைத்திருந்த நம்பிக்கை கலகலத்துப் போகும்படிச் செய்தன. தான் இவ்வளவு வெகுளியாக இருந்திருக்க வேண்டாமென்று தன்மீதே வெறுத்துக் கொள்ள வைத்தன. எவ்வித வம்பு தும்புகளும் பேசாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த லஷ்மியையும், மாதவனையும் பார்க்கும்போது அவருக்குத் தம் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது; வெறுப்பும் கோபமும் அதிகமாயின.
பரசுவின் அடாவடித்தனம்தான் அவருக்குக்கவர்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருந்தது. பற்றிக்கொள்வதற்கேற்ற கைத்தடியாகத் தோன்றியது. “பரசுதான் எங்களை ஷேத்ராடனமெல்லாம் கூட்டிண்டு போகப் போறான். நாங்க அவன் கூடத்தான் போய் இருப்போம். மாதவனுக்கு சமர்த்துப் போறாது” என்கிற ரீதியில் தன் முதுமையைப் பற்றி அவர் உரக்கச் சிந்திப்பார். இந்தக் கட்டத்துக்குள் லஷ்மிக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. மாதவனுக்கு பாவம் தன் மனத்தாங்கலைப் பகிர்ந்து கொள்வதற்குக் கூட ஆள் இல்லை. அவன் தன் எரிச்சலில் தானே வெந்தவாறிருந்தான். மனம் கருகிக் கொண்டே வந்தது.
வாழ்க்கையில் எதுவுமே முழுதும் கருப்பு இல்லை; முழுவதும் வெளுப்பும் இல்லை. பரசுவை அடாவடிக்காரன், பொல்லாதவன் என்று நினைத்து அவனுடைய அப்பா மகிழத் தொடங்கியதும் இது போலத்தான். ஒருவிதத்தில் பார்த்தால், சூதுவாதுகள் அல்ல-மிதமிஞ்சிய நேர்மையே பரசுவின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்று கூடச் சொல்லலாம். ஒண்ணங்கிளாஸ் டீச்சரைக் “குண்டச்சி” என்று அவள் காதுபட வர்ணித்த நேர்மை; இரண்டாங்கிளாஸ் டீச்சரின் விசுக்கு நடையையும், மூன்றாங் கிளாஸ் ஸாரின் கீச்சுக் குரலையும் ‘விமரிசனம்’ செய்த நேர்மை; தன் ஆசிரியர்களின் குறைகள் – பலவீனங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றைத் தன் சகாக்களிடம் ஒலிபரப்புவதிலேயே அவன் எப்போதும் குறியாக இருந்தான். எந்த ஸார் எந்த ஸ்டைலில் மூக்குப் பொடி போடுகிறார் என்பதிலிருந்து எந்த ஸார் எந்த டீச்சருடன் அதிகமாகக் குலாவுகிறார் என்பது வரையில் அவனுக்கு எல்லாம் அத்துப்படி. ‘முதலில் நீ ஒழுங்காக இரு. அப்புறம் எனக்குச் சொல்லித் தர வா’ என்பது போலிருக்கும் அவன் நடத்தை.
அவனுடைய ஆசிரியர்களுக்கு அவனைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.
இதைத் தவிர அவனுடைய ஆசிரியர்களின் பால் ஒரு போட்டி உணர்ச்சி வேறு. வகுப்பை ஒரு நாடகக் கொட்டகையாகவும், ஆசிரியர்களை நடிகர்களாகவும் நினைத்து (எவ்வளவு மோசமான நடிகர்கள்!) மாணவர்களின் கருத்தைக் கவருவதற்கு அந்த நடிகர்களுடன் போட்டி. ‘வாங்கடா, ஸாருக்குத் தெரியாத வித்தைகளெல்லாம் எனக்குத் தெரியும்!” என்கிற ஒரு வீம்பினால் உந்தப்பட்டு, சக மாணவர்களை மகிழ்விக்க சதா புதிது புதிதான குறும்புத் தங்கள், கோமாளித் தனங்களில் ஈடுபட்டு அவர்களிடையே அவன் ஒரு கதாநாயகனாக விளங்கினான்.
அவனுடைய ஆசிரியர்களிடையே அவ்வப்போது முதிர்ச்சியும், விவேகமும் உள்ள சிலர் இல்லாமல் போகவில்லை. அவர்கள் ‘ஏட்டுச் சுரைக்காயின்’ துணை யின்றியே கதாநாயகனாக ஜொலிக்க விரும்பிய அவனு டைய ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, அவனுடைய வேறு வகையான திறமைகளென்னவென்று தாமாகப் புரிந்து கொள்ள முயன்றார்கள். அந்தத் திசைகளில் அவனுக்கு ஊக்கமளிக்க முற்பட்டார்கள். ஒரு ஆசிரியர் அவனைப் படம் போடுமாறு உற்சாகப்படுத்தினார். இன்னொருவர் அவனை நாடகங்களில் பங்கேற்குமாறு தூண்டினார். “பரசு ரொம்ப புத்திசாலியாக்கும்” என்று இந்த ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களிடம் கூறுவார்கள். “அவனை யாரும் சரியாக அணுகவில்லை. அதுதான் பிரச்சினை”.
ஆனால் பரசுவின் மனதில் என்ன இருந்ததோ, இப்படி அவன் மீது யாராவது அனுதாபம் காட்டினால் அவர்களையும் குரூரமாகத் தண்டிக்கவே முற்பட்டாந் அவன். படம் போடுமாறு ஒரு ஆசிரியர் ஊக்குவித்ததைத் தொடர்ந்து தினசரி கரும்பலகையில் அவரைக் கிண்டல் செய்து கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினான். சில ஆபாசப் படங்களையும் அவர் வருகிற சமயம் பார்த்து-கரும் பலகையில் வரைந்து வைப்பான். இதையெல்லாம் அவர் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவன் பள்ளிக்கூடச் சுவர்களில் எங்கு பார்த்தாலும் படம் வரைந்து தள்ளத் தொடங்கினான். பிரின்ஸிபால் அவனைக் கூப்பிட்டு, விசாரித்தபோது, “கணபதி ஸார்தான் என்னை நிறையப் படம் வரையச் சொன்னார்” என்றான். அதன் பிறகு கணபதி ஸார் அவன் வழிக்கே போகவில்லை.
நாடகத்தில் நடிக்கும்படி அவனை உற்சாகப்படுத்திய உபாத்தியாயருக்கும் இதே கதிதான் நேர்ந்தது. நாடக ஒத்திகைகளின்போது தன் பங்கை அருமையாக நிறைவேற்றி னான்; அழகாக ஒத்துழைத்தான். ஆனால் நிஜமான நிகழ்ச்சி நாளன்று வேண்டுமென்றே வசனங்களைக் கொனஷ்டைத் தனமாக உச்சரித்து, சொந்தச் சரக்காக சம்பந்தா சம்பந்தமற்ற அபிநயங்கள், கூத்தாடல்களில் ஈடுபட்டு, அந்த ஆசிரியரின் முகத்தில் கரியைப் பூசினான்.
எளிமைப்படுத்தப்பட்ட லேபில்கள் தன்மீது ஒட்டப்படு வதற்கு அவன் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தானா? அல்லது தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்பது பற்றிப் பிறர் யோசனை கூற முன்வந்தது தன் அந்தரங்க வாழ்வில் அவர்கள் குறுக்கிடுவதாக அவனுக்குப்பட்டதா? அவனுடைய பிரச்சினை என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஐந்தாவது வகுப்புவரை எப்படியோ ஒழுங்காகப் பாஸ் ஆகிவிட்டான். ஆனால் ஆறாவது வகுப்பிலிருந்து அவன் பெயிலாகத் தொடங்கினான்.
ஆறாவது வகுப்பில் ஒரு தடவை, ஏழாவது வகுப்பில் இரண்டு தடவை; எட்டாவது வகுப்பில் இரண்டு தடவை; ஒன்பதாவது வகுப்பில், மறுபடி இரண்டு தடவை…
ஒரு தடவை ஒரு கட்டத்தில் தாமதாகிவிடும் ரயில் தொடர்ந்து பயணம் முழுவதும் தாமதமாகச் செல்வதைப் போல, தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் அவன் பெயிலாகிக் கொண்டே சென்றான். ஒருவிதத்தில், மென்மையும் பக்குவமும் அற்ற ஆசிரியர்களும் அவனுடைய நிலைக்கு ஒரு காரணம். அதே சமயத்தில் அவன் நாளுக்கு நாள் கையாளுவதற்கு கடினமான ஒரு மாணவனாக ஆகிக் கொண்டு வந்தானென்பதும் உண்மைதான். இது ஒரு விஷச் சுழலாகி விட்டிருந்தது. பக்காத் திருடனையும் போலீஸையும் போல். ஊரையெல்லாம் கிடுகிடுக்கச் செய்யும் ஒரு கேடி இருந்தால், அவனைப் பிடித்து அவன் திமிரை ஒடுக்குவது ஒவ்வொரு போலீஸ்காரனுடைய கனவாகவும் ஆகிறது. அதேபோல் பரசுவுடன் மோதி அவனைத் தலைகுனியச் செய்வது அந்தப் பள்ளியிலிருந்த ஒவ்வொரு ஆசிரியருடைய கனவாகவும் ஆகியது. முதன் முதலாக அவனை மாணவனாகப் பெறும் ஒவ்வொரு ஆசிரியரும் வெகுஜன வதந்திகளின் அடிப்படையில் அவனைப் பற்றித் தாமாகவே பயங்கரமாக ஏதோ கற்பனை செய்து கொண்டு, நிஷ்டூரமும் கிண்டலுமாக அவன் மீது பொழிந்து தள்ளுவார்கள். அவனுடைய கர்வத்தைச் சீண்டுவதாக நினைப்பு. உதாரணமாக ஒரு கணக்கு வாத்தியார் கரும்பலகையில் ஏதாவதொரு பிராப்ளத்தைச் செய்து காட்டிவிட்டு, “எல்லோருக்கும் புரிந்ததா?” என்று கேட்பார். ஒரு நிமிடம் இடைவெளி கொடுப்பார். பிறகு, “பரசுராமன், உனக்கு?” என்பார். கொல்லென்று வகுப்பில் சிரிப்பு பரவும். பரசுதான் அதமப் பொது மடங்கு; அவனுக்குப் புரிந்தால் எல்லோருக்கும் புரிந்தது மாதிரியாம்! இன்னொரு வாத்தியார் அவனைச் சதா ‘பெரியவாள், பெரியவாள்’ என்பார்; போலிப் பணிவுடன். வகுப்பில் எல்லா மாணவர்களையும் விட அவன்தானே வயதில் பெரியவன்!
என்ன செய்ய; பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நிரந்தரமான இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். படிக்காத மாணவர்களை இழிவுபடுத்துவதன் மூலமாகத்தான் தமக்கென ஒரு ஹோதாவைப் பெற வேண்டிய நிலை. மேலும் ஆசிரியர் தொழிலே ஒரு அறுவையான தொழில். அவ்வப்போது சிரிப்புகள் தேவைப்படுகின்றன. பரசுவைப் போன்றவர்கள் இத்தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.
ஆசிரியர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட பரசு தவிர்க்கமுடியாமல் காலிப்பையன்களின் குழுவில் போய்ச் சேர்ந்தான். ஆசிரியர் என்ற பொதுவான பகைவருக்கெதிராக இத்தகைய கூட்டணிதான் தெம்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது. சிகரெட், சுருட்டு, மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் படிப்படியாக ஏற்பட்டன. எல்லாம் அவனுடைய ஆசிரியர்கள் மீதுள்ள கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக. இப்போது அவனை அவர்கள் அவனை ரவுடி என்று சொல்லும்போது அவனுக்கு வருத்தமாக இல்லை; அவர்களைப் பார்த்து வில்லன் சிரிப்பு சிரித்தான்.
ஒருநாள் அவர்களுடைய வகுப்பில் ஒரே பரபரப்பாக இருந்தது. ஒரு பெண் விசித்து, விசித்து அழுதாள். அவளுக்கு யாரோ லவ்லெட்டர் எழுதி டெஸ்கில் வைத்திருந்தானாம். ஆசிரியருக்கு உடனே பரசுவின் மீதுதான் சந்தேகம் எழுந்தது; அவனை விசாரித்தார். பரசுவுக்கு எரிச்சலாயிருந்தது. என்ன அபாண்டமான குற்றச்சாட்டு! “எனக்கு இந்தப் பெண்களுடைய மூஞ்சியைப் பார்க்கக் கூட பிடிக்காது; அவங்களுக்கு லவ்லெட்டர் ஒரு கேடா?” என்றான் திமிராக.
“அடிக்கடி உன் பார்வை அந்தப் பக்கம் மேயறதை நான் கவனிச்சிருக்கேன்” என்றார் ஆசிரியர்.
பரசு தன் இடத்தை விட்டு எழுந்து விடுவிடுவென்று அவரருகில் சென்றான். பளாரென்று கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். புயல் போல வகுப்பை விட்டு வெளியேறினான்.
அதன் பிறகு அவன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இதுவரையில் பரசுவின் அம்மாவைப் பற்றி எதுவும் சொல்லாதது மறதியினால் அல்ல, ஒரு ஸஸ்பென்ஸ் கருதித்தான். கதையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதால் இனி அவளைப் பற்றிக் கூறலாம்.
அவள் அதிகம் படித்தவளில்லைல. ஆனாலும் கெட்டிக்காரி. புத்திசாலியும் கூடத்தான். அவளுடன் பரசுவுக்கு அன்பும் வெறுப்பும் கலந்த உறவு. பரசுவைக் கண்டிக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் அடிக்கடி அவனுடைய அப்பாவுக்கு சிபாரிசு செய்தபடி இருப்பாளாதலால் அவள் மீது வெறுப்பு. அதே சமயத்தில் அப்பாவின் அறிவு ஜீவித்தனமான ‘அசத்தல்கள்’ இல்லாமலிருந்ததால் அவளிடம் ஒரு ஒட்டுதல். சின்ன வயதிலேயே அம்மாவுக்குச் சமையலறையில் கூடமாட ஒத்தாசைகள் செய்யத் தொடங்கி அவளுடைய நன்றிக்குப் பாத்திரமானவனாகி விட்டான். அவளுடைய சமையலறை தனிமையை உணர்ந்து அதன் பளுவைக் குறைப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்டது அவன் ஒருவன்தான். “நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியதுடா!” என்று அவனுடைய அம்மா அடிக்கடி அவனிடம் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் கூறுவாள். “புத்தகம் படிச்சாப்லே ஆச்சா? வீட்டிலே என்ன நடக்கிறது, எபபடி நடக்கிறதுன்னு ஒரு கவலை கிடையாது” என்று அறிவு ஜீவிகளின் ஏட்டுச் சுரக்காய்த்தனத்தை சாடியபடி இருப்பாள்.
பத்து வயது ஆவதற்குள்ளேயே பரசுவுக்குத் தனியாக எல்லாச் சமையலும் பண்ணத் தெரிந்துவிட்டது. அவனுடைய அப்பா, அண்ணா, அக்கா மூவருடைய அறிவு ஜீவித் தனத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவன் இவ்வாறு சமையலில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கலாம். அப்பாவும், அண்ணாவும் ஆண்கள் சமையலறை வேலைகளில் ஈடுபடுவது கௌரவக் குறைச்சலென்று நினைத்தார்கள். அக்காவுக்கோ, ஒரு பெண்ணின் மரபு வழிக் கடமைகளை அதற்குள்ளாகத் தான் சுமக்கத் தொடங்க வேண்டுமா என்ற வெறுப்பு. எனவே, இம்மூவரின் எரிச்சலையும் கிளப்பி அதே சமயத்தில் அம்மாவின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு, பரசுவுக்கு சமையலறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அதே சமயத்தில் இதன் மூலம் அப்பாவை நுட்பமாக அவமதித்து அவருக்குத் தண்டனை வழங்கும் திருப்தியையும் அவன் பெற முடிந்தது. அவர் அவன் மீது மிகுந்த அனுதாபம் காட்டி வந்தவரல்லவா? எனவே அவனுடைய இயல்பின்படி அவரையும் அவன் தண்டித்தாக வேண்டும்! அவர் மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டே அவருடைய ‘அறிவுஜீவிகள் வம்சத்தில்’ பெண்கள் மட்டும் எவ்வித அறிவொளியும் பெறாமல் “ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக” விளங்கிய முரண்பாட்டை அவர் முகத்தில் எறிந்து அவரைக் காயப்படுத்துவதற்கு அவன் கையாண்ட பல வழிகளில் ஒன்று, அவனுடைய சமையலறை ஈடுபாடு.
பள்ளிக்கூடத்துக்கு இறுதியாக முழுக்குப் போட்டுவிட்டு வந்தபிறகு, வீட்டில் அநேக நாட்களில் பரசுதான் சமையல் செய்து வந்தான். அவனுடைய அம்மாவுக்கு, கல்யாணமான நாளிலிருந்து தான் செய்து வந்த இந்த வேலை, அலுப்புத் தட்டத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது ஓய்வு தேவைப்பட்டது. அவனுடைய அப்பாவுக்கும் அக்காவுக்கும் அண்ணாவுக்குமோ வேறு ‘அதிமுக்கியமானதும் உயர்வானதுமான’ தேட்டங்களுக்குத் தம் நேரத்தை அர்ப்பணித்து விட்ட நிலையில், ‘வெட்டி வேலைகளில்’ நேரத்தை ‘வீணடிக்க’ முடியாத நிர்ப்பந்தம். இதையெல்லாம் பரசு தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். அவன், சமையல் இலாகா உதவி மந்திரிப் பதவியை அபகரித்துக் கொண்ட நாளிலிருந்து, அப்பாவும் அண்ணாவும் அக்காவும் அவனை நேரடியாக விரோதித்துக் கொள்ளப் பயந்தார்கள். ஏனென்றால் பசி வேளைகளில் அவனுடைய கருணை மிகவும் தேவையாயிருந்தது;
அம்மாவினுடையதைப் போல அவனுடையது பாரபட்சமற்ற செங்கோல் ஆட்சியல்ல.
சமையலறைக் காரியங்கள் நீங்கலாகவும், ஒரு வீட்டில் பொழுது விடிந்தால் எத்தனையோ காரியங்கள். வீட்டை ஒழித்துத் துப்புறவாக வைத்திருத்தல், தோட்டி, வேலைக்காரி ஆகியோரின் வேலையை மேற்பார்வை பார்த்தல், ரே ஷன் கார்டில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அந்தந்த தினங்களில் க்யூவில் நின்று வாங்கி வருதல், பழுதான பொருள்களைச் செப்பனிடுதல், யாசகம் கேட்டு வருபவர்களை விரட்டியத்தல், பரசு இத்தகைய பல பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கி வீட்டில் தன் அதிகார தளத்தை மேலும் விஸ்தரித்து, அவனை விரோதித்துக் கொள்வதை மேலும் அசாத்தியமாக்கினான். அவனுடைய அண்ணாவும் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தான்.
அவனுக்கும் அப்பாவுக்கும் தமது வெளியுலகப் பொறுப்புக்களுக்காகத்தான் நேரம் சரியாயிருந்தது. அக்காவுக்கு அந்த வீட்டு விவகாரங்கள் யாவும் சலித்துப்போய் விட்டிருந்தன. ஒரு பெண் என்ற முறையில் அந்த வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியே சென்றுவிடக் கூடிய வாய்ப்பைத் தனக்கு வழங்கியிருந்த சம்பிரதாயங்களின் பால் நன்றி பாராட்டியவாறு, அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கோ, முன்பே சொன்னதுபோல, வீட்டு வேலைப் பளுவைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளப் பரசு முன் வந்தது சௌகரியமாகவே இருந்தது. அவன் கிட்டத்தட்ட அவதார புருஷனாகவே அவளுக்குத் தோன்றினான்.
சமையல் இலாகா உதவி மந்திரியாக இருந்தவன் சில நாட்களிலேயே உள்விவகார இலாகாவின் முழு அதிகாரம் பெற்ற மந்திரியாக உயர்ந்து விட்டான். அக்காவுக்குக் கல்யாணமான பிறகோ, அவன் கிட்டத்தட்ட வீட்டின் பிரதம மந்திரியாகவே ஆகி விட்டான். அம்மாவின் ஆதரவு அவனுக்குத்தான். அப்பாவோ கூட்டுச் சேராக் கொள்கையைக் கடைபிடித்து வந்தார். மேலும் பூஜை, கோவில் ஆகியவற்றில் பரசு தீவிர ஈடுபாடு காட்டி வந்ததால் (அது வே ஷமா, இல்லையா என்பது வேறு விஷயம்) அம்மாவுக்கும் அவன் மீது ஒரு வாஞ்சை, ஒரு நம்பிக்கை. அப்பாகூட அவன்தான் தனக்கு சிரார்த்தம் முதலியவற்றை ஒழுங்காகச் செய்து தன் ஆத்மாவைக் கடைத்தேற்றப் போகிறானென்று நம்புவதாகத் தோன்றியது. பரம்பரை அறிவு ஜீவிகளும் கூட, வயதாக வயதாக மறு உலகத்தைப் பற்றிய மாட்சியினால் ‘பல்டி’ அடிக்கத் தொடங்குவதுண்டு!
இதையெல்லாம் பார்த்த மாதவனுக்கு மரபு, சம்பிரதாயம், ஆகிய யாவற்றின் மீதும் தாளாத வெறுப்பு ஏற்பட்டது. கடைசியில் பரசு போன்றவர்கள் ஊரை ஏய்த்துப் பிழைக்கத்தான், மரபும் மண்ணாங்கட்டியும் உதவுகின்றன. கோவில், குளம் என்றாலே மாதவன் எரிந்து விழத் தொடங்கினான். பரம நாஸ்திகனாக மாறிப் போனான். அவனுடைய நாஸ்திகப் போக்கும் அவனுடைய தம்பியின் கையைப் பலப்படுத்தவே உதவியதென்பதை அவன் உணராமலில்லை. ஆனால், வேறு வழியில்லை. இத்தகைய வேஷங்களில் தம்பியுடன் போட்டியிடும் அளவிற்கு அவனுக்குப் பொறுமையில்லை. தம்பியுடன் எந்த விஷயத்திலும் போட்டியிடுவது தனக்கு கௌரவக் குறைச்சலென்று அவன் நினைத்தான். அவன் இயங்கும் தளம் வேறு, நான் இயங்கும் தளம் வேறு.
தனக்கும் தன் தம்பிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தன் பெற்றோருக்கு ஆணித்தரமாக நிரூபிக்கும் வெறி அவனுக்கு ஏற்பட்டது. தன்னைப் போலவே அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து ஃபிலிப் ராத்தையும், பெர்னாட் மாலமூடையும் இரவில் வாங்கிப் படித்துக் கொண்டிருந்த மாக்ஸ்முல்லர் பவனில் நடக்கும் மாலை நேர ஜெர்மன் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்த, ஃபிலிம் சொஸைட்டியில் ஸப்-டைட்டில் போட்ட படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் (இவள் ஒரு மார்க்ஸிய அறிவுஜீவி) சிநேகம் வளர்த்துக்கொண்டான். திடீரென்று ஒருநாள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவளுடைய பெல்ஸையும், பனியனையும் அவர்கள் மிரட்சியுடன் பார்க்க, “இவளைத்தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்” என்று மாதவன் அறிவித்து அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான். “என்னடா, பிராம்மணச்சி தானே?” என்று அவனுடைய அம்மா பிற்பாடு விசாரித்தபோது அவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
பத்மா ஐயர் (அதுதான் அந்த பெண்ணின் பெயர்) ஒரு கிருஸ்தவச்சியாகவோ, முஸ்லீமாகவோ இருந்திருக்கக் கூடாதா? என்று தோன்றியது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்” என்றான் அவன் விறைப்பாக.”ஜாதி, சடங்குகள், பூஜை கோவில் இதிலெல்லாம் என்னைப் போலவே அவளுக்கும் நம்பிக்கை கிடையாது. கிளாஸிகல் மியுசிக் என்னைப் போலவே அவளுக்கும் போரடிக்கிறது. அவளுக்கும் பாப் மியுசிக்தான் பிடிக்கிறது – நாங்கள் ஒருவருக்கொருவர் பிறந்தவர்கள். சந்தேகமேயில்லை”
பத்மா ஐயரைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தனி அபார்ட்மெண்டில் இருந்து வரலானான் மாதவன். அவளுக்கு சிகரெட்டும் விஸ்கியும் பழக்கமுண்டு. இவற்றை அவள் மாதவனுக்கும் பழக்கப்படுத்தி வைத்தாள். அவனுக்குத் தன் புதிய ரூபம் குதூகலத்தையும்,கர்வத்தையும் அளித்தது. பரசுவையும், தன் பெற்றோரையும் நன்றாகப் பழிவாங்கிவிட்டதாக மகிழ்ந்தான். அறிவு ஜீவிகளின் வட்டாரத்தில் அவனுடைய அபார்ட்மெண்ட் மிகவும் பிரபலமடைந்து போயிற்று. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் விஸ்கியருந்த வரலாயினர். பரசுவும் அங்கு ஒருதடவை வந்தான். அப்போது பத்மா ஐயரின் ஆங்கிலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் திணறியது, மாதவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ‘உன் யோக்கியதையை இப்போது தெரிந்துகொள்’ என்று மனதுக்குள் குரோதத்துடன் முணுமுணுத்தான்.
ஆனால் இறுதியாகக் கொக்கரித்தது பரசுதான். தனக்குத் தெரிந்த ஒரு சமையற்காரர் மூலமாக அமெரிக்கன் எம்பஸியில் யாரையோ பிடித்து அங்கு ஒரு ஸ்டெனோகிராபராகச் சேர்ந்தான் அவன். அங்கு தற்செயலாக ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் அவனுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவள் இந்தியர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய ஒரு தீஸிஸ் தயாரிப்பதற்காக இந்தியா வந்திருந்தாள். அவளுடைய தீஸீஸை டைப் அடிப்பதில் தொடங்கிய நட்பு, கல்யாணத்தில் போய் முடிந்தது. பரசுவின் அப்பா சொன்ன சம்ஸ்கிருத சுலோகங்கள், அவர் பாடிய கர்நாடக சங்கீத மெட்டுக்கள், அவனுடைய அம்மாவின் பூஜை புனஸ்காரங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தென்னிந்தியச் சமையலில் பரசுவின் நிபுணத்துவம் எல்லாம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. அந்த வீட்டின் மருமகளாக வரவேண்டுமென்று அவளுக்கு ஆசை ஏற்பட்டு, அந்த ஆசையைச் செயல்படுத்தினாள். பரசுவின் பெற்றோருக்கும் அவளுடைய வரவு, தம் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகிய எல்லாவற்றினுடையவும் ஓர் அங்கீகாரமாக அமைய, அவர்கள் அவளை ஆவேசத்துடன் அரவணைத்துக் கொண்டார்கள்-
மாதவன், மீண்டும் தம்பி தன் முகத்தில் கரியைப் பூசிவிட்டதாக உணர்ந்தான். தன் மனைவியின் ஆங்கிலப் பேச்சு, அவளுடைய சிகரெட் குடித்தல், மது அருந்துதல் இவையெல்லாம் இப்போது அவன் பெருமையாக உணர முடியவில்லை. அவள் ஒரு போலி என்று தோன்றியது. ஒரு நகல். அவளுடைய பாணிகள், சார்புகள் எல்லாமே நகல். அந்த அமெரிக்கப் பெண்ணோ விசாலமானவள். மனதின் அந்தந்த நேர உந்துதல்களை நேர்மையுடன் பின்பற்றுகிறவள்.
பரசுவும்தான். அவனுக்குத் தனக்கென்று ஒரு சொந்தமுகம் இருக்கிறது. ஆனால் நான்? என் உண்மையான முகம் எதுவென்று நான் தெரிந்துகொள்ளவே இல்லை. என் பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக அணிந்த ஒரு போலி முகம். என் தம்பிவை விமர்சிக்கவும், அவனிடமிருந்து என்னைப் பிரித்துக் காட்டிக் கொள்ளவும் ஒரு முகம். பிறகு என் பெற்றோரைக் காயப்படுத்த ஒரு முகம்…
இப்போது திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு மூன்றாம் மனிதன் – ஆம்! நான்தான் மூன்றாமவன், கடைசியில் –
ஒரு சனிக்கிழமை காலை பரசுவிடமிருந்து போன் வந்தது. அவனையும், பத்மாவையும் மறுநாள் டின்னருக்குக் கூப்பிட்டான். பிரண்டாவுக்கு அவர்களை நன்கு தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது என்றான் …
அந்தப் போன் அவனுள் ஏதோ ஒரு மர்மமான விசையைத் தட்டிவிட்டது போலிருந்தது …
ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த தண்ணீர் நிரம்பிய பாட்டில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கி அப்படியே ஆத்திரத்துடன் வீசியெறிந்தான் மாதவன். பாட்டில் சில்லுச் சில்லாக உடைந்து சிதறியது. அடுத்துக் கண்ணாடித் தம்ளரையும் அதே போல் வீசியெறிந்தான். பிறகு பூ ஜாடியை. பிறகு புத்தக ஷெல்ப் மீதிருந்த அழகுப் பொருட்களை; சுவரில் மாட்டியிருந்த படங்கள்; மனைவியின் ஹேர் ஆயில், ஷாம்பூ, ஸென்ட் பாட்டில்கள்; பாப் மியூசிக் இசைத் தட்டுக்களை –
போனை வைத்துவிட்டு மாதவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டான். பிரெண்டாவுக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமாம்! பிளடி பாஸ்டர்ட்.
மார்க்கெட்டுப் போயிருந்த பத்மா ஐயர் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், அவள் முகத்தில் சொத்தென்று ஒரு தக்காளி வந்து விழுந்தது. தொடர்ந்து மாதவனின் கடகடவென்ற சிரிப்பு. அடுத்ததாக ஒரு விஸ்கி பாட்டில் கிட்டத்தட்ட அவள் காதை உரசியவாறே சென்று சுவரில் மோதி விழுந்து சிதற …..
அவளைப் பீதி கவ்வியது. வந்த வழியே திரும்பி ஓடினாள். முதல் மாடித் திருப்பத்துக்கு வந்ததும் நின்றாள். இப்போது என்ன செய்வது? டாக்டருக்கு போன் செய்வதா அல்லது அவன் பெற்றோருக்கா?
மேலேயிருந்து மாதவனின் சிரிப்புச் சத்தம் மிக உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்த சிலர் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவளுக்கு அவமானம் தாங்கவில்லை. மாதவன் சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் வாழ்க்கையில் அதுவரை அவன் சிரிக்காததற் கெல்லாம் சேர்த்து வைத்து அவன் இப்போது சிரிப்பது போலிருந்தது.

          பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம்.‘நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!’ என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கி விட்டான் பரசு. அவனுடைய அக்காவும் அண்ணாவும் குழந்தையாயிருந்த போது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிர விரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும் அண்ணனும் ரோஷக்காரர்கள். பெற்றோர் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடக்கி விடுவார்கள். ஆனால் பரசு சரியான கல்லுளிமங்கனாக இருந்தான்.அவனை மிரட்டுவது, திட்டுவதெல்லாம் சுவரில் போய் முட்டி கொள்வதைப் போலத்தான்.

 

         யார் என்ன சொன்னாலும் லட்சியம் செய்யாமல் தன்பாட்டில் ஜரூராக விஷமம் செய்தபடி இருப்பான்: வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் நாசம் செய்வான்; வெளியே தூக்கி எறிவான்: அவனுடைய பிடிவாதம் எதையாவது சாதித்துக் கொள்ள வேண்டுமானால், ‘ஆ, ஊ’ என்று அவன் பெரிதாக ஊளையிட்டு அழுவதையும், ‘தொம்தொம்’ என்று குதிப்பதையும், தரையில் விழுந்து புரள்வதையும், இதையெல்லாம் பார்த்து, “சரி, போய்த் தொலை” என்று பெற்றோர் அவனுடைய பிடிவாதத்துக்கு இணங்குவதைப் பார்த்து லட்சுமியும் மாதவனும் ஒருவரையொருவர் சற்றே சோகத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு இந்த வித்தைகள் தெரியாமல் போயிற்றே!சமூகத்தில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்து, அது ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்ட காலத்தில் பரசு பிறந்தது அவனுடைய தான்தோன்றித் தனத்துக்குக் காரணமாயிருக்கலாம் என்று அவனுடைய அப்பா குயுக்தியாக நினைத்துக் கொள்வார். இப்படி சமூக நிகழ்ச்சிகளுக்கும் தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், தளுக்காக முடிச்சுப்போட்டு பிறகு மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகைப்பார்த்து வியந்து கொண்டிருப்பது அவருக்கு ஒரு பொழுது போக்கு. ஆமாம் அவர் ஒரு அறிவு ஜீவி; அவருடைய வம்சமே அறிவு ஜீவிகளின் வம்சம்தான். அவருடைய அப்பா தத்துவப் பேராசிரியர். அவருடைய தாத்தா சமஸ்கிருத பண்டிதர். அவருடைய கொள்ளுத் தாத்தா அரச குடும்பத்துக்குக் கல்வி போதித்து நிலங்கள் மான்யமாகப் பெற்றவர்- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

         பெரிய குழந்தைகளான லட்சுமியும் மாதவனும் மிகச் சிறு வயதிலிருந்தே புத்தகங்களில் ஆர்வம் காட்டினார்கள். வீட்டில் கிடக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளையெல்லாம் வைத்துக் கொண்டு அவற்றில் அவர்கள் ‘பொம்மை’ பார்க்கத் தொடங்குவதைப் பார்த்து, அவர்களுடைய பெற்றோருக்கு ஒரே பெருமையாக இருக்கும். அப்போதே அந்தக் குழந்தைகள் படிக்கத் தொடங்கிவிட்டதைப் போல பூரித்துப் போவார்கள். ‘யாருடைய ரத்தம் அவர்களுடைய உடலில் ஓடுகிறது?’ என்று வம்சச் சிறப்பைக் கர்வமாக நினைவு கூறுவார்கள்.ஆனால் பரசுக்குப் புத்தகங்களில் பொம்மை பார்ப்பது பிடிக்கவில்லை. நாலு, ஐந்து வயதிலும் கூட கைக்கு அகப்படும் புத்தகங்கள், பத்திரிகைகளெல்லாம் சுக்குநூறாகக் கிழித்தெறிவதுதான் அவன் பொழுதுபோக்காக இருந்தது. அந்தப் புத்தகங்களைத் தன் எதிரிகளாக அவன் நினைப்பது போலிருக்கும்.வீட்டிலிருப்பவர்கள் அவனைக் கொஞ்சிய வாறும், அவனுடைய விஷமங்களை ரசித்தவாறும் இருப்பதற்குப் பதிலாக கேவலம் அந்தப் புத்தகங்கள், பத்திரிகைகளைச் சதா கைகளில் வைத்துச் சீராட்டியவாறிருப்பதை அவன் இவ்வாறு மூர்க்கமாக எதிர்ப்பதைப் போலிருக்கும் பரசுவின் அப்பா ஒரு தடவை ஒரு மனோத்துவ நிபுணரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் இதைத்தான் கூறினார்.

 

      “உங்கள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவன் கடைப்பிடிக்கும் வழிகளே இவை” என்றார் அவர். அதையே விளக்கமாகவும் கூறினார்.அவன் ஒரு மூன்றாவது குழந்தையல்லவா? தனக்கு மூத்த இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வருடக்கணக்கான சாதனைகளை முறியடித்துத் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ளமுடியும் என்ற ஒரு பீதியும் மிரட்சியும் அவனைச் சதா ஆட்டி வைக்கின்றன. குறுக்குவழிகளில் ஹோதாவைத் தேடிக் கொள்ள முயல்கிறான். நீங்கள் அவனுடைய அண்ணாவுடனும் அக்காவுடனும் அவனை ஒப்பிடுவதாக அவன் உணரும்படி செய்யக் கூடாது. “அக்கா சமர்த்தா சாமி கும்பிடறா பாரு! அண்ணா சமர்த்தா ஸ்கூலுக்குப் போகிறான் பாரு! என்றெல்லாம் சொல்லியவாறு இருக்கக் கூடாது. அவனுடைய தனித் தன்மையை அவன் கண்டு கொள்வதற்கு நீங்கள் நாசூக்கான முறையில் உதவி, அவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்”.டாக்டரின் முக பாவனைகளிலும் அபிநயங்களிலும் ஒரு நடிகனின் சாதுரியமும் தளுக்கும் இருந்தன. அவருடைய மூதாதையரில் சிலருக்காவது தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெநி போன்றவற்றுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று பரசுவின் அப்பாவுக்குத் தோன்றியது. ‘ஒரு வேளை பரசுவும் பெரியவனான பிறகு மனோதத்துவ டாக்டராகப் போகிறானோ?’ என்ற ஒரு குயுக்தியான எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.மனோதத்துவ நிபுணரிடம் சென்று வந்த பிறகு பரசுவைக் கொஞ்சநஞ்சம் கண்டித்து வந்ததையும் அவனுடைய அப்பா நிறுத்திவிட்டார்.

 

       பரசுவின் தனித்தன்மை விபரீதமான முறையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அவனுடைய அக்காவும் அண்ணாவும் சதா வீட்டிலேயேதான் இருப்பார்கள். இதற்கு நேரெதிரிடையாக பரசு சதா வீட்டுக்கு வெளியே அண்டை அயல் வீடுகளில் கன் நேரத்தைக் கழித்து வரத் தொடங்கினான். இந்த வீடுகளில் அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் அசட்டுப் பிசட்டென்று குழந்தைத்தனமாகப் பதில் சொல்வான். இந்தப் பதில்கள், அவர்களுக்கு சொகுசாகவும் ரசமாகவும் இருக்க, மென்மேலும் அவன் வாயைக் கிளறியபடி இருப்பார்கள். எல்லாம் வெறும் கேலிதான். இந்த உலகில் யாரும் யாரையும் தம்மைவிடக் கெட்டிக்காரனாக அங்கீகரிக்கவே மாட்டார்கள் என்பது பரசுவுக்குத் தெரியவில்லைதான். தான் அக்காவையும், அண்ணாவையும் விடக் கெட்டிக்காரனென்றும், அதனால் தான் தன்னைப் பார்த்தவுடனேயே எல்லாரும் பூரித்துப் போகிறார்கள் என்றும் அவனுடைய போட்டியுணர்வுகள் எண்ண வைத்தன.வீட்டில் பரசுவின் அதிகார தோரணையும் முரண்டும் ரகளையும் அதிகமாயின. அக்காவும் அண்ணாவும் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது வேண்டு மென்றே உரக்கப் பாடத் தொடங்குவான். அல்லது அப்பா வாங்கித் தந்த மௌத்-ஆர்கனை வாசிப்பான்.“ஓ! இவனுக்கு இசையில் ஆர்வமிருக்கிறது!” என்று அவனுடைய அப்பா மகிழ்ந்து போவார். மனோதத்துவ டாக்டரிடம் சென்று வந்ததிலிருந்து வெறும் புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு மேதைத்தனம் பரசுவிடம் ஒளிந்திருப்பதாகவும் அதைக் கண்டுபிடிப்பதைத் தன் பரந்த கண்ணோட்டத்துக்கு ஒரு சவாலாகவும் அவர் நினைக்கத் தொடங்கியிருந்தார்.

 

           பரசுவின் பாட்டும் மௌத்-ஆர்கனும் தம்முடைய படிப்புக்கு இடைஞ்சலாக இருப்பதாக லட்சுமியும் மாதவனும் புகார் செய்தால் “கதவைச் சாத்திக் கொண்டு படியுங்கள்” என்று அவர் அவர்களுக்கு உபதேசித்தார். ரேடியோவைத் திருகிவிட்டு அவனைத் தன்னுடன் அமர்த்தி வைத்துக் கொண்டு அவற்றைக் கேட்கச் செய்வார். பரசுவும், அண்ணாவுக்கும் அக்காவுக்கும் பழிப்புக் காட்டுவதற்காகவே அந்தப் பாட்டுகளை மிகவும் ரசிப்பது போலத் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டுவான். தாளம் போடுவான். அப்பா அந்தத் தாளங்களைத் திருத்துவார்.அவன் பாசாங்குதான் செய்கிறான். அவனுக்கு இசையில் விசே ஷப் பற்றுதல் ஏதுமில்லை என அவனுடைய அப்பா தெரிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் ஆயின. அதற்குள் அவர் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒரு பாட்டு வாத்தியாரை ஏற்பாடு செய்து, அவனைத் தன்னுடன் சங்கீதக் கச்சேரிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று—பாவம்! கடைசியில் இதனாலெல்லாம் ஏற்பட்ட விளைவு, லட்சுமிக்கும், மாதவனுக்கும் கர்நாடக சங்கீதத்தில் சிரத்தை இல்லாமல் போனது. பரசுவுக்கு அவன் பெற அருகதையற்ற கௌரவத்தை அப்பா அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், பெரியவர்கள் இருவரும் சாஸ்திரீய இசை என்றாலே அலட்சியம் காட்டினார்கள், லட்சுமிக்கு, பரசு பிறக்கிற சமயத்தில் பாட்டில் ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் ஏற்படத்தொடங்கியிருந்தது. ஆனால் , பிறகு பரசு காரணமாக இசையில் அவளுக்கு அசிரத்தை ஏற்படவும், ஏற்கனவே தெரிந்த பாட்டுக்களும் அவளுக்கு மறந்து போயின. அவள் கல்யாண வயதடைந்தபோது, பாட்டு கற்றுக் கொள்ள மாட்டேனென்ற அவளுடைய வீம்பு அதிகமாயிற்றேயொழிய குறையவில்லை. இதன் காரணமாகவே சில நல்ல இடங்கள் தட்டிப்போயின.

 

          கடைசியில், பீஹாரில் ஏதோ ஒரு நகரில், வீட்டுச் சமையலுக்காக ஆலாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பிள்ளையாண்டான், அதற்காகவே அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். அது ஒரு தனிக் கதை!பாட்டு ஒரு உதாரணந்தான். இப்படிப் பல விதங்களில் பரசுவின் இயல்புக்கும், இந்த இயல்பு பெற்ற அங்கீகாரத்துக்கும், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற முரண்டு காரணமாகவே, லட்சுமியும், மாதவனும் தம்முடைய பல இயல்புகளைக் குறுக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய பெற்றோர்களுக்கெதிராக ஒரு இடையறாத கறுப்புக்கொடி ஊர்வலம் குழந்தையாயிருந்தபோதே மாதவன் அப்படி யொன்றும் உம்மணா மூஞ்சியாக இருக்கவில்லை. குறும்புகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடாதவனாக இருக்கவில்லை. ஆனால் பரசுவின் அட்டகாசங்கள் அதிகமாக அதிகமாக, மாதவன் தனக்குள்ளேயே சுருங்கிப் போனான்.அவன் முகத்தில் சிரிப்பு மறைந்து, எப்போதும் ஒரு தீவிரபாவமும் கவலைப் பளுவும் தெரிந்தன. உலகத்தின் கவலையெல்லாம் அவன் ஒருவனே படுவதைப் போலிருக்கும், அவன் முகத்தைப் பார்த்தால். ஒரு வேளை தான் தன் தம்பியைப் போல இல்லை என்று எல்லாரையும் உணரச் செய்கிற தீவிரமும் கவலையுமாகவே இது இருந்திருக்கலாம்.

 

          பரசு ஒரு ‘கஷ்டமான மாணவன்’ ‘அடங்காப்பிடாரி’ ‘முரடன்’ ‘போக்கிரி என்று பலவாறு, அவனுடைய உபாத்தியாயர்கள் அவனைப் பற்றிப் புகார் செய்யத்த தொடங்கியிருந்தார்கள். இந்தப் புகார்கள் முதலில் மாதவன் காதுகளைத்தான் எட்டும். அவனுள் அவமானமும் ஆத்திரமும் பொங்கி எழும். படிப்பிலோ விளையாட்டுக் களிலோ விசே ஷ சாதனை ஏதும் நிகழ்த்தாத ஒரு சராசரி மாணவன் அவன். ஆனால் குறைந்தபட்சம் மோசமானவ னென்று பெயர் வாங்கவில்லை. இப்போது அவனுடைய தம்பி இவ்வாறு பிரபலமாகிக் கொண்டிருந்தான்.அந்தத் தம்பியின் அண்ணனாக அவனும் பிரபலமாகிக் கொண்டிருந்தான். கூச்ச சுபாவமுள்ளவனான அவன் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான். பள்ளிக்கூட வராந்தாக்களில் நடந்து போகும்போது திடீரென்று யாராவது அவனைச் சுட்டிக் காட்டி “அவன்தான் பரசுவின் அண்ணா” என்று சொல்வது காதில் விழும். அப்படியே காற்றில் கரைந்து மறைந்து விடலாம் போல அவனுக்குத் தோன்றும்.வீட்டுக்கு வரும் உறவினர்கள், விருந்தினர்களுக்கிடையேயும் பிரபலமாக விளங்கியதும் பரசுதான். அவர்களுக்கு வேண்டிய சிசுருஷைகளை எல்லாம் அவன்தான் பார்த்துப் பார்த்துச் செய்வான். அவர்களிடம் தன் பிரதாபங்களையெல்லாம் அளந்தவாறிருப்பான். அவர்களை ஊர் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் செல்வான்.

 

           கோணங்கித்தனங்கள் காட்டி அவர்களைச் சிரிக்க வைப்பான். இதற்கு மாறாக, வீட்டில் வெளி மனிதர்கள் வந்துவிட்டால் லட்சுமியும் மாதவனும் இருக்கிற இடம் தெரியாது. இது ஒனிந்து கொள்ளல் அல்ல.ஒரு பகிஷ்காரம். பரசுவின் மலிவான கவர்ச்சி உத்திகளின்பால் தம் அதிருப்தியைக் வெளிப்படுத்த அவர்கள் நிகழ்த்திய ‘சத்தியாக்கிரகம்!’.ஆனால் சத்தியாக்கிரகங்களின் தலைமுறையைச் சேர்ந்தவராயிருந்தும் பரசுவின் அப்பாவால் இதைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதுதான் ஆச்சரியம். ‘பெரிய குழந்தைகள் இருவரும் பயந்தாங்கொள்ளிகள்; பரசுதான் துணிச்சலும் அடாவடி சாமர்த்தியங்களும் உள்ளவன்; இந்தக் காலத்தில் இத்தகைய சாமர்த்தியந்தானே தேவையாயிருக்கிறது?’ என்று அவர் மனம் மேலோட்டமான தீர்ப்பு வழங்கியது. அவருடைய ஆபீஸில் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களும் இத்தகைய எண்ண ஓட்டத்துக்கு வித்திட்டிருக்கலாம். அவருடைய ஜுனியர்கள் மேலதிகாரிகளைக் காக்காய் பிடித்து, நியாயமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளைத் தாம் அபரித்துக் கொண்டார்கள். அவருடைய எதிரிகள் அவரைப் பற்றிக் கிளப்பி விட்ட அவதூறுகளின் அடிப்படையில், சரியான விசாரணையின்றி மூன்று வருடங்கள் மேலதிகாரிகள் அவரைப் பற்றி மோசமான ரிப்போர்ட்கள் எழுதினார்கள். இதெல்லாம் கடமையுணர்வு, நேர்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் அவர் வைத்திருந்த நம்பிக்கை கலகலத்துப் போகும்படிச் செய்தன. தான் இவ்வளவு வெகுளியாக இருந்திருக்க வேண்டாமென்று தன்மீதே வெறுத்துக் கொள்ள வைத்தன. எவ்வித வம்பு தும்புகளும் பேசாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த லஷ்மியையும், மாதவனையும் பார்க்கும்போது அவருக்குத் தம் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது; வெறுப்பும் கோபமும் அதிகமாயின.பரசுவின் அடாவடித்தனம்தான் அவருக்குக்கவர்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருந்தது.

 

           பற்றிக்கொள்வதற்கேற்ற கைத்தடியாகத் தோன்றியது. “பரசுதான் எங்களை ஷேத்ராடனமெல்லாம் கூட்டிண்டு போகப் போறான். நாங்க அவன் கூடத்தான் போய் இருப்போம். மாதவனுக்கு சமர்த்துப் போறாது” என்கிற ரீதியில் தன் முதுமையைப் பற்றி அவர் உரக்கச் சிந்திப்பார். இந்தக் கட்டத்துக்குள் லஷ்மிக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. மாதவனுக்கு பாவம் தன் மனத்தாங்கலைப் பகிர்ந்து கொள்வதற்குக் கூட ஆள் இல்லை. அவன் தன் எரிச்சலில் தானே வெந்தவாறிருந்தான். மனம் கருகிக் கொண்டே வந்தது.வாழ்க்கையில் எதுவுமே முழுதும் கருப்பு இல்லை; முழுவதும் வெளுப்பும் இல்லை. பரசுவை அடாவடிக்காரன், பொல்லாதவன் என்று நினைத்து அவனுடைய அப்பா மகிழத் தொடங்கியதும் இது போலத்தான். ஒருவிதத்தில் பார்த்தால், சூதுவாதுகள் அல்ல-மிதமிஞ்சிய நேர்மையே பரசுவின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்று கூடச் சொல்லலாம். ஒண்ணங்கிளாஸ் டீச்சரைக் “குண்டச்சி” என்று அவள் காதுபட வர்ணித்த நேர்மை; இரண்டாங்கிளாஸ் டீச்சரின் விசுக்கு நடையையும், மூன்றாங் கிளாஸ் ஸாரின் கீச்சுக் குரலையும் ‘விமரிசனம்’ செய்த நேர்மை; தன் ஆசிரியர்களின் குறைகள் – பலவீனங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றைத் தன் சகாக்களிடம் ஒலிபரப்புவதிலேயே அவன் எப்போதும் குறியாக இருந்தான். எந்த ஸார் எந்த ஸ்டைலில் மூக்குப் பொடி போடுகிறார் என்பதிலிருந்து எந்த ஸார் எந்த டீச்சருடன் அதிகமாகக் குலாவுகிறார் என்பது வரையில் அவனுக்கு எல்லாம் அத்துப்படி.

 

            ‘முதலில் நீ ஒழுங்காக இரு. அப்புறம் எனக்குச் சொல்லித் தர வா’ என்பது போலிருக்கும் அவன் நடத்தை.அவனுடைய ஆசிரியர்களுக்கு அவனைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.இதைத் தவிர அவனுடைய ஆசிரியர்களின் பால் ஒரு போட்டி உணர்ச்சி வேறு. வகுப்பை ஒரு நாடகக் கொட்டகையாகவும், ஆசிரியர்களை நடிகர்களாகவும் நினைத்து (எவ்வளவு மோசமான நடிகர்கள்!) மாணவர்களின் கருத்தைக் கவருவதற்கு அந்த நடிகர்களுடன் போட்டி. ‘வாங்கடா, ஸாருக்குத் தெரியாத வித்தைகளெல்லாம் எனக்குத் தெரியும்!” என்கிற ஒரு வீம்பினால் உந்தப்பட்டு, சக மாணவர்களை மகிழ்விக்க சதா புதிது புதிதான குறும்புத் தங்கள், கோமாளித் தனங்களில் ஈடுபட்டு அவர்களிடையே அவன் ஒரு கதாநாயகனாக விளங்கினான்.அவனுடைய ஆசிரியர்களிடையே அவ்வப்போது முதிர்ச்சியும், விவேகமும் உள்ள சிலர் இல்லாமல் போகவில்லை. அவர்கள் ‘ஏட்டுச் சுரைக்காயின்’ துணை யின்றியே கதாநாயகனாக ஜொலிக்க விரும்பிய அவனு டைய ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, அவனுடைய வேறு வகையான திறமைகளென்னவென்று தாமாகப் புரிந்து கொள்ள முயன்றார்கள். அந்தத் திசைகளில் அவனுக்கு ஊக்கமளிக்க முற்பட்டார்கள். ஒரு ஆசிரியர் அவனைப் படம் போடுமாறு உற்சாகப்படுத்தினார். இன்னொருவர் அவனை நாடகங்களில் பங்கேற்குமாறு தூண்டினார். “பரசு ரொம்ப புத்திசாலியாக்கும்” என்று இந்த ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களிடம் கூறுவார்கள்.

 

 

           “அவனை யாரும் சரியாக அணுகவில்லை. அதுதான் பிரச்சினை”.ஆனால் பரசுவின் மனதில் என்ன இருந்ததோ, இப்படி அவன் மீது யாராவது அனுதாபம் காட்டினால் அவர்களையும் குரூரமாகத் தண்டிக்கவே முற்பட்டாந் அவன். படம் போடுமாறு ஒரு ஆசிரியர் ஊக்குவித்ததைத் தொடர்ந்து தினசரி கரும்பலகையில் அவரைக் கிண்டல் செய்து கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினான். சில ஆபாசப் படங்களையும் அவர் வருகிற சமயம் பார்த்து-கரும் பலகையில் வரைந்து வைப்பான். இதையெல்லாம் அவர் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவன் பள்ளிக்கூடச் சுவர்களில் எங்கு பார்த்தாலும் படம் வரைந்து தள்ளத் தொடங்கினான். பிரின்ஸிபால் அவனைக் கூப்பிட்டு, விசாரித்தபோது, “கணபதி ஸார்தான் என்னை நிறையப் படம் வரையச் சொன்னார்” என்றான். அதன் பிறகு கணபதி ஸார் அவன் வழிக்கே போகவில்லை.நாடகத்தில் நடிக்கும்படி அவனை உற்சாகப்படுத்திய உபாத்தியாயருக்கும் இதே கதிதான் நேர்ந்தது. நாடக ஒத்திகைகளின்போது தன் பங்கை அருமையாக நிறைவேற்றி னான்; அழகாக ஒத்துழைத்தான். ஆனால் நிஜமான நிகழ்ச்சி நாளன்று வேண்டுமென்றே வசனங்களைக் கொனஷ்டைத் தனமாக உச்சரித்து, சொந்தச் சரக்காக சம்பந்தா சம்பந்தமற்ற அபிநயங்கள், கூத்தாடல்களில் ஈடுபட்டு, அந்த ஆசிரியரின் முகத்தில் கரியைப் பூசினான்.

 

            எளிமைப்படுத்தப்பட்ட லேபில்கள் தன்மீது ஒட்டப்படு வதற்கு அவன் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தானா? அல்லது தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்பது பற்றிப் பிறர் யோசனை கூற முன்வந்தது தன் அந்தரங்க வாழ்வில் அவர்கள் குறுக்கிடுவதாக அவனுக்குப்பட்டதா? அவனுடைய பிரச்சினை என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஐந்தாவது வகுப்புவரை எப்படியோ ஒழுங்காகப் பாஸ் ஆகிவிட்டான். ஆனால் ஆறாவது வகுப்பிலிருந்து அவன் பெயிலாகத் தொடங்கினான்.ஆறாவது வகுப்பில் ஒரு தடவை, ஏழாவது வகுப்பில் இரண்டு தடவை; எட்டாவது வகுப்பில் இரண்டு தடவை; ஒன்பதாவது வகுப்பில், மறுபடி இரண்டு தடவை…ஒரு தடவை ஒரு கட்டத்தில் தாமதாகிவிடும் ரயில் தொடர்ந்து பயணம் முழுவதும் தாமதமாகச் செல்வதைப் போல, தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் அவன் பெயிலாகிக் கொண்டே சென்றான். ஒருவிதத்தில், மென்மையும் பக்குவமும் அற்ற ஆசிரியர்களும் அவனுடைய நிலைக்கு ஒரு காரணம். அதே சமயத்தில் அவன் நாளுக்கு நாள் கையாளுவதற்கு கடினமான ஒரு மாணவனாக ஆகிக் கொண்டு வந்தானென்பதும் உண்மைதான். இது ஒரு விஷச் சுழலாகி விட்டிருந்தது. பக்காத் திருடனையும் போலீஸையும் போல்.

 

         ஊரையெல்லாம் கிடுகிடுக்கச் செய்யும் ஒரு கேடி இருந்தால், அவனைப் பிடித்து அவன் திமிரை ஒடுக்குவது ஒவ்வொரு போலீஸ்காரனுடைய கனவாகவும் ஆகிறது. அதேபோல் பரசுவுடன் மோதி அவனைத் தலைகுனியச் செய்வது அந்தப் பள்ளியிலிருந்த ஒவ்வொரு ஆசிரியருடைய கனவாகவும் ஆகியது. முதன் முதலாக அவனை மாணவனாகப் பெறும் ஒவ்வொரு ஆசிரியரும் வெகுஜன வதந்திகளின் அடிப்படையில் அவனைப் பற்றித் தாமாகவே பயங்கரமாக ஏதோ கற்பனை செய்து கொண்டு, நிஷ்டூரமும் கிண்டலுமாக அவன் மீது பொழிந்து தள்ளுவார்கள். அவனுடைய கர்வத்தைச் சீண்டுவதாக நினைப்பு. உதாரணமாக ஒரு கணக்கு வாத்தியார் கரும்பலகையில் ஏதாவதொரு பிராப்ளத்தைச் செய்து காட்டிவிட்டு, “எல்லோருக்கும் புரிந்ததா?” என்று கேட்பார். ஒரு நிமிடம் இடைவெளி கொடுப்பார். பிறகு, “பரசுராமன், உனக்கு?” என்பார். கொல்லென்று வகுப்பில் சிரிப்பு பரவும். பரசுதான் அதமப் பொது மடங்கு; அவனுக்குப் புரிந்தால் எல்லோருக்கும் புரிந்தது மாதிரியாம்! இன்னொரு வாத்தியார் அவனைச் சதா ‘பெரியவாள், பெரியவாள்’ என்பார்; போலிப் பணிவுடன்.

 

          வகுப்பில் எல்லா மாணவர்களையும் விட அவன்தானே வயதில் பெரியவன்!என்ன செய்ய; பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நிரந்தரமான இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். படிக்காத மாணவர்களை இழிவுபடுத்துவதன் மூலமாகத்தான் தமக்கென ஒரு ஹோதாவைப் பெற வேண்டிய நிலை. மேலும் ஆசிரியர் தொழிலே ஒரு அறுவையான தொழில். அவ்வப்போது சிரிப்புகள் தேவைப்படுகின்றன. பரசுவைப் போன்றவர்கள் இத்தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.ஆசிரியர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட பரசு தவிர்க்கமுடியாமல் காலிப்பையன்களின் குழுவில் போய்ச் சேர்ந்தான். ஆசிரியர் என்ற பொதுவான பகைவருக்கெதிராக இத்தகைய கூட்டணிதான் தெம்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது. சிகரெட், சுருட்டு, மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் படிப்படியாக ஏற்பட்டன. எல்லாம் அவனுடைய ஆசிரியர்கள் மீதுள்ள கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக. இப்போது அவனை அவர்கள் அவனை ரவுடி என்று சொல்லும்போது அவனுக்கு வருத்தமாக இல்லை; அவர்களைப் பார்த்து வில்லன் சிரிப்பு சிரித்தான்.ஒருநாள் அவர்களுடைய வகுப்பில் ஒரே பரபரப்பாக இருந்தது. ஒரு பெண் விசித்து, விசித்து அழுதாள். அவளுக்கு யாரோ லவ்லெட்டர் எழுதி டெஸ்கில் வைத்திருந்தானாம்.

 

        ஆசிரியருக்கு உடனே பரசுவின் மீதுதான் சந்தேகம் எழுந்தது; அவனை விசாரித்தார். பரசுவுக்கு எரிச்சலாயிருந்தது. என்ன அபாண்டமான குற்றச்சாட்டு! “எனக்கு இந்தப் பெண்களுடைய மூஞ்சியைப் பார்க்கக் கூட பிடிக்காது; அவங்களுக்கு லவ்லெட்டர் ஒரு கேடா?” என்றான் திமிராக.“அடிக்கடி உன் பார்வை அந்தப் பக்கம் மேயறதை நான் கவனிச்சிருக்கேன்” என்றார் ஆசிரியர்.பரசு தன் இடத்தை விட்டு எழுந்து விடுவிடுவென்று அவரருகில் சென்றான். பளாரென்று கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். புயல் போல வகுப்பை விட்டு வெளியேறினான்.அதன் பிறகு அவன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இதுவரையில் பரசுவின் அம்மாவைப் பற்றி எதுவும் சொல்லாதது மறதியினால் அல்ல, ஒரு ஸஸ்பென்ஸ் கருதித்தான். கதையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதால் இனி அவளைப் பற்றிக் கூறலாம்.அவள் அதிகம் படித்தவளில்லைல. ஆனாலும் கெட்டிக்காரி. புத்திசாலியும் கூடத்தான். அவளுடன் பரசுவுக்கு அன்பும் வெறுப்பும் கலந்த உறவு. பரசுவைக் கண்டிக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் அடிக்கடி அவனுடைய அப்பாவுக்கு சிபாரிசு செய்தபடி இருப்பாளாதலால் அவள் மீது வெறுப்பு. அதே சமயத்தில் அப்பாவின் அறிவு ஜீவித்தனமான ‘அசத்தல்கள்’ இல்லாமலிருந்ததால் அவளிடம் ஒரு ஒட்டுதல்.

 

        சின்ன வயதிலேயே அம்மாவுக்குச் சமையலறையில் கூடமாட ஒத்தாசைகள் செய்யத் தொடங்கி அவளுடைய நன்றிக்குப் பாத்திரமானவனாகி விட்டான். அவளுடைய சமையலறை தனிமையை உணர்ந்து அதன் பளுவைக் குறைப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்டது அவன் ஒருவன்தான். “நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியதுடா!” என்று அவனுடைய அம்மா அடிக்கடி அவனிடம் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் கூறுவாள். “புத்தகம் படிச்சாப்லே ஆச்சா? வீட்டிலே என்ன நடக்கிறது, எபபடி நடக்கிறதுன்னு ஒரு கவலை கிடையாது” என்று அறிவு ஜீவிகளின் ஏட்டுச் சுரக்காய்த்தனத்தை சாடியபடி இருப்பாள்.பத்து வயது ஆவதற்குள்ளேயே பரசுவுக்குத் தனியாக எல்லாச் சமையலும் பண்ணத் தெரிந்துவிட்டது. அவனுடைய அப்பா, அண்ணா, அக்கா மூவருடைய அறிவு ஜீவித் தனத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவன் இவ்வாறு சமையலில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கலாம். அப்பாவும், அண்ணாவும் ஆண்கள் சமையலறை வேலைகளில் ஈடுபடுவது கௌரவக் குறைச்சலென்று நினைத்தார்கள். அக்காவுக்கோ, ஒரு பெண்ணின் மரபு வழிக் கடமைகளை அதற்குள்ளாகத் தான் சுமக்கத் தொடங்க வேண்டுமா என்ற வெறுப்பு. எனவே, இம்மூவரின் எரிச்சலையும் கிளப்பி அதே சமயத்தில் அம்மாவின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு, பரசுவுக்கு சமையலறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.அதே சமயத்தில் இதன் மூலம் அப்பாவை நுட்பமாக அவமதித்து அவருக்குத் தண்டனை வழங்கும் திருப்தியையும் அவன் பெற முடிந்தது. அவர் அவன் மீது மிகுந்த அனுதாபம் காட்டி வந்தவரல்லவா? எனவே அவனுடைய இயல்பின்படி அவரையும் அவன் தண்டித்தாக வேண்டும்! அவர் மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டே அவருடைய ‘அறிவுஜீவிகள் வம்சத்தில்’ பெண்கள் மட்டும் எவ்வித அறிவொளியும் பெறாமல் “ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக” விளங்கிய முரண்பாட்டை அவர் முகத்தில் எறிந்து அவரைக் காயப்படுத்துவதற்கு அவன் கையாண்ட பல வழிகளில் ஒன்று, அவனுடைய சமையலறை ஈடுபாடு.

 

           பள்ளிக்கூடத்துக்கு இறுதியாக முழுக்குப் போட்டுவிட்டு வந்தபிறகு, வீட்டில் அநேக நாட்களில் பரசுதான் சமையல் செய்து வந்தான். அவனுடைய அம்மாவுக்கு, கல்யாணமான நாளிலிருந்து தான் செய்து வந்த இந்த வேலை, அலுப்புத் தட்டத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது ஓய்வு தேவைப்பட்டது. அவனுடைய அப்பாவுக்கும் அக்காவுக்கும் அண்ணாவுக்குமோ வேறு ‘அதிமுக்கியமானதும் உயர்வானதுமான’ தேட்டங்களுக்குத் தம் நேரத்தை அர்ப்பணித்து விட்ட நிலையில், ‘வெட்டி வேலைகளில்’ நேரத்தை ‘வீணடிக்க’ முடியாத நிர்ப்பந்தம். இதையெல்லாம் பரசு தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். அவன், சமையல் இலாகா உதவி மந்திரிப் பதவியை அபகரித்துக் கொண்ட நாளிலிருந்து, அப்பாவும் அண்ணாவும் அக்காவும் அவனை நேரடியாக விரோதித்துக் கொள்ளப் பயந்தார்கள். ஏனென்றால் பசி வேளைகளில் அவனுடைய கருணை மிகவும் தேவையாயிருந்தது;அம்மாவினுடையதைப் போல அவனுடையது பாரபட்சமற்ற செங்கோல் ஆட்சியல்ல.சமையலறைக் காரியங்கள் நீங்கலாகவும், ஒரு வீட்டில் பொழுது விடிந்தால் எத்தனையோ காரியங்கள். வீட்டை ஒழித்துத் துப்புறவாக வைத்திருத்தல், தோட்டி, வேலைக்காரி ஆகியோரின் வேலையை மேற்பார்வை பார்த்தல், ரே ஷன் கார்டில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அந்தந்த தினங்களில் க்யூவில் நின்று வாங்கி வருதல், பழுதான பொருள்களைச் செப்பனிடுதல், யாசகம் கேட்டு வருபவர்களை விரட்டியத்தல், பரசு இத்தகைய பல பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கி வீட்டில் தன் அதிகார தளத்தை மேலும் விஸ்தரித்து, அவனை விரோதித்துக் கொள்வதை மேலும் அசாத்தியமாக்கினான். அவனுடைய அண்ணாவும் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தான்.அவனுக்கும் அப்பாவுக்கும் தமது வெளியுலகப் பொறுப்புக்களுக்காகத்தான் நேரம் சரியாயிருந்தது. அக்காவுக்கு அந்த வீட்டு விவகாரங்கள் யாவும் சலித்துப்போய் விட்டிருந்தன.

 

             ஒரு பெண் என்ற முறையில் அந்த வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியே சென்றுவிடக் கூடிய வாய்ப்பைத் தனக்கு வழங்கியிருந்த சம்பிரதாயங்களின் பால் நன்றி பாராட்டியவாறு, அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கோ, முன்பே சொன்னதுபோல, வீட்டு வேலைப் பளுவைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளப் பரசு முன் வந்தது சௌகரியமாகவே இருந்தது. அவன் கிட்டத்தட்ட அவதார புருஷனாகவே அவளுக்குத் தோன்றினான்.சமையல் இலாகா உதவி மந்திரியாக இருந்தவன் சில நாட்களிலேயே உள்விவகார இலாகாவின் முழு அதிகாரம் பெற்ற மந்திரியாக உயர்ந்து விட்டான். அக்காவுக்குக் கல்யாணமான பிறகோ, அவன் கிட்டத்தட்ட வீட்டின் பிரதம மந்திரியாகவே ஆகி விட்டான். அம்மாவின் ஆதரவு அவனுக்குத்தான். அப்பாவோ கூட்டுச் சேராக் கொள்கையைக் கடைபிடித்து வந்தார். மேலும் பூஜை, கோவில் ஆகியவற்றில் பரசு தீவிர ஈடுபாடு காட்டி வந்ததால் (அது வே ஷமா, இல்லையா என்பது வேறு விஷயம்) அம்மாவுக்கும் அவன் மீது ஒரு வாஞ்சை, ஒரு நம்பிக்கை. அப்பாகூட அவன்தான் தனக்கு சிரார்த்தம் முதலியவற்றை ஒழுங்காகச் செய்து தன் ஆத்மாவைக் கடைத்தேற்றப் போகிறானென்று நம்புவதாகத் தோன்றியது. பரம்பரை அறிவு ஜீவிகளும் கூட, வயதாக வயதாக மறு உலகத்தைப் பற்றிய மாட்சியினால் ‘பல்டி’ அடிக்கத் தொடங்குவதுண்டு!இதையெல்லாம் பார்த்த மாதவனுக்கு மரபு, சம்பிரதாயம், ஆகிய யாவற்றின் மீதும் தாளாத வெறுப்பு ஏற்பட்டது.

 

             கடைசியில் பரசு போன்றவர்கள் ஊரை ஏய்த்துப் பிழைக்கத்தான், மரபும் மண்ணாங்கட்டியும் உதவுகின்றன. கோவில், குளம் என்றாலே மாதவன் எரிந்து விழத் தொடங்கினான். பரம நாஸ்திகனாக மாறிப் போனான். அவனுடைய நாஸ்திகப் போக்கும் அவனுடைய தம்பியின் கையைப் பலப்படுத்தவே உதவியதென்பதை அவன் உணராமலில்லை. ஆனால், வேறு வழியில்லை. இத்தகைய வேஷங்களில் தம்பியுடன் போட்டியிடும் அளவிற்கு அவனுக்குப் பொறுமையில்லை. தம்பியுடன் எந்த விஷயத்திலும் போட்டியிடுவது தனக்கு கௌரவக் குறைச்சலென்று அவன் நினைத்தான். அவன் இயங்கும் தளம் வேறு, நான் இயங்கும் தளம் வேறு.தனக்கும் தன் தம்பிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தன் பெற்றோருக்கு ஆணித்தரமாக நிரூபிக்கும் வெறி அவனுக்கு ஏற்பட்டது. தன்னைப் போலவே அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து ஃபிலிப் ராத்தையும், பெர்னாட் மாலமூடையும் இரவில் வாங்கிப் படித்துக் கொண்டிருந்த மாக்ஸ்முல்லர் பவனில் நடக்கும் மாலை நேர ஜெர்மன் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்த, ஃபிலிம் சொஸைட்டியில் ஸப்-டைட்டில் போட்ட படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் (இவள் ஒரு மார்க்ஸிய அறிவுஜீவி) சிநேகம் வளர்த்துக்கொண்டான்.

 

             திடீரென்று ஒருநாள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவளுடைய பெல்ஸையும், பனியனையும் அவர்கள் மிரட்சியுடன் பார்க்க, “இவளைத்தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்” என்று மாதவன் அறிவித்து அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான். “என்னடா, பிராம்மணச்சி தானே?” என்று அவனுடைய அம்மா பிற்பாடு விசாரித்தபோது அவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.பத்மா ஐயர் (அதுதான் அந்த பெண்ணின் பெயர்) ஒரு கிருஸ்தவச்சியாகவோ, முஸ்லீமாகவோ இருந்திருக்கக் கூடாதா? என்று தோன்றியது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்” என்றான் அவன் விறைப்பாக.”ஜாதி, சடங்குகள், பூஜை கோவில் இதிலெல்லாம் என்னைப் போலவே அவளுக்கும் நம்பிக்கை கிடையாது. கிளாஸிகல் மியுசிக் என்னைப் போலவே அவளுக்கும் போரடிக்கிறது. அவளுக்கும் பாப் மியுசிக்தான் பிடிக்கிறது – நாங்கள் ஒருவருக்கொருவர் பிறந்தவர்கள். சந்தேகமேயில்லை”பத்மா ஐயரைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தனி அபார்ட்மெண்டில் இருந்து வரலானான் மாதவன். அவளுக்கு சிகரெட்டும் விஸ்கியும் பழக்கமுண்டு. இவற்றை அவள் மாதவனுக்கும் பழக்கப்படுத்தி வைத்தாள். அவனுக்குத் தன் புதிய ரூபம் குதூகலத்தையும்,கர்வத்தையும் அளித்தது. பரசுவையும், தன் பெற்றோரையும் நன்றாகப் பழிவாங்கிவிட்டதாக மகிழ்ந்தான்.

 

             அறிவு ஜீவிகளின் வட்டாரத்தில் அவனுடைய அபார்ட்மெண்ட் மிகவும் பிரபலமடைந்து போயிற்று. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் விஸ்கியருந்த வரலாயினர். பரசுவும் அங்கு ஒருதடவை வந்தான். அப்போது பத்மா ஐயரின் ஆங்கிலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் திணறியது, மாதவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ‘உன் யோக்கியதையை இப்போது தெரிந்துகொள்’ என்று மனதுக்குள் குரோதத்துடன் முணுமுணுத்தான்.ஆனால் இறுதியாகக் கொக்கரித்தது பரசுதான். தனக்குத் தெரிந்த ஒரு சமையற்காரர் மூலமாக அமெரிக்கன் எம்பஸியில் யாரையோ பிடித்து அங்கு ஒரு ஸ்டெனோகிராபராகச் சேர்ந்தான் அவன். அங்கு தற்செயலாக ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் அவனுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவள் இந்தியர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய ஒரு தீஸிஸ் தயாரிப்பதற்காக இந்தியா வந்திருந்தாள். அவளுடைய தீஸீஸை டைப் அடிப்பதில் தொடங்கிய நட்பு, கல்யாணத்தில் போய் முடிந்தது. பரசுவின் அப்பா சொன்ன சம்ஸ்கிருத சுலோகங்கள், அவர் பாடிய கர்நாடக சங்கீத மெட்டுக்கள், அவனுடைய அம்மாவின் பூஜை புனஸ்காரங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தென்னிந்தியச் சமையலில் பரசுவின் நிபுணத்துவம் எல்லாம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. அந்த வீட்டின் மருமகளாக வரவேண்டுமென்று அவளுக்கு ஆசை ஏற்பட்டு, அந்த ஆசையைச் செயல்படுத்தினாள்.

 

             பரசுவின் பெற்றோருக்கும் அவளுடைய வரவு, தம் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகிய எல்லாவற்றினுடையவும் ஓர் அங்கீகாரமாக அமைய, அவர்கள் அவளை ஆவேசத்துடன் அரவணைத்துக் கொண்டார்கள்-மாதவன், மீண்டும் தம்பி தன் முகத்தில் கரியைப் பூசிவிட்டதாக உணர்ந்தான். தன் மனைவியின் ஆங்கிலப் பேச்சு, அவளுடைய சிகரெட் குடித்தல், மது அருந்துதல் இவையெல்லாம் இப்போது அவன் பெருமையாக உணர முடியவில்லை. அவள் ஒரு போலி என்று தோன்றியது. ஒரு நகல். அவளுடைய பாணிகள், சார்புகள் எல்லாமே நகல். அந்த அமெரிக்கப் பெண்ணோ விசாலமானவள். மனதின் அந்தந்த நேர உந்துதல்களை நேர்மையுடன் பின்பற்றுகிறவள்.பரசுவும்தான். அவனுக்குத் தனக்கென்று ஒரு சொந்தமுகம் இருக்கிறது. ஆனால் நான்? என் உண்மையான முகம் எதுவென்று நான் தெரிந்துகொள்ளவே இல்லை. என் பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக அணிந்த ஒரு போலி முகம். என் தம்பிவை விமர்சிக்கவும், அவனிடமிருந்து என்னைப் பிரித்துக் காட்டிக் கொள்ளவும் ஒரு முகம். பிறகு என் பெற்றோரைக் காயப்படுத்த ஒரு முகம்…இப்போது திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு மூன்றாம் மனிதன் – ஆம்! நான்தான் மூன்றாமவன், கடைசியில் –ஒரு சனிக்கிழமை காலை பரசுவிடமிருந்து போன் வந்தது. அவனையும், பத்மாவையும் மறுநாள் டின்னருக்குக் கூப்பிட்டான்.

 

          பிரண்டாவுக்கு அவர்களை நன்கு தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது என்றான் …அந்தப் போன் அவனுள் ஏதோ ஒரு மர்மமான விசையைத் தட்டிவிட்டது போலிருந்தது …ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த தண்ணீர் நிரம்பிய பாட்டில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கி அப்படியே ஆத்திரத்துடன் வீசியெறிந்தான் மாதவன். பாட்டில் சில்லுச் சில்லாக உடைந்து சிதறியது. அடுத்துக் கண்ணாடித் தம்ளரையும் அதே போல் வீசியெறிந்தான். பிறகு பூ ஜாடியை. பிறகு புத்தக ஷெல்ப் மீதிருந்த அழகுப் பொருட்களை; சுவரில் மாட்டியிருந்த படங்கள்; மனைவியின் ஹேர் ஆயில், ஷாம்பூ, ஸென்ட் பாட்டில்கள்; பாப் மியூசிக் இசைத் தட்டுக்களை –போனை வைத்துவிட்டு மாதவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டான். பிரெண்டாவுக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமாம்! பிளடி பாஸ்டர்ட்.மார்க்கெட்டுப் போயிருந்த பத்மா ஐயர் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், அவள் முகத்தில் சொத்தென்று ஒரு தக்காளி வந்து விழுந்தது. தொடர்ந்து மாதவனின் கடகடவென்ற சிரிப்பு. அடுத்ததாக ஒரு விஸ்கி பாட்டில் கிட்டத்தட்ட அவள் காதை உரசியவாறே சென்று சுவரில் மோதி விழுந்து சிதற …..அவளைப் பீதி கவ்வியது. வந்த வழியே திரும்பி ஓடினாள். முதல் மாடித் திருப்பத்துக்கு வந்ததும் நின்றாள். இப்போது என்ன செய்வது? டாக்டருக்கு போன் செய்வதா அல்லது அவன் பெற்றோருக்கா?மேலேயிருந்து மாதவனின் சிரிப்புச் சத்தம் மிக உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்த சிலர் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவளுக்கு அவமானம் தாங்கவில்லை. மாதவன் சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் வாழ்க்கையில் அதுவரை அவன் சிரிக்காததற் கெல்லாம் சேர்த்து வைத்து அவன் இப்போது சிரிப்பது போலிருந்தது.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.