|
||||||||
நிலத்தின் சர்வே எண், பட்டாவை அறிய வருவாய்த்துறை உருவாக்கிய புதிய செயலி |
||||||||
![]()
சென்னை:நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, அலைப்பேசி வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய்த் துறை உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் நேரடியாகப் பார்க்கும் ஒரு நிலத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்களைச் சரியாகக் கூறுவது எளிதல்ல. வருவாய்த் துறையின் ஆவணங்களை கையில் வைத்து இருந்தாலும், அதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் இது தானா என்பதை, தெளிவாகக் கூறமுடியாது. தற்போது, 'ஸ்மார்ட் அலைபேசிகளில் உள்ள ஜி.பி.எஸ்., புவியிடத் தகவல் தொகுப்பு வசதியை, மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.
உணவு உள்ளிட்ட பொருட்களை, 'விநியோகம்' செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட நபரின் வீட்டை அடையாளம் காண்பதற்கும், இந்த வசதியை மக்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது, யார் எந்த இடத்தில் இருந்தாலும், அலைப்பேசியில், 'இருப்பிடம்' பகிர்வதன் வாயிலாக, சரியான இருப்பிடத்தை அறிய முடிகிறது. இதை அடிப்படையாக வைத்து, நிலத்தின் விபரங்களை மக்கள் அறிய, புதிய வசதியை வருவாய்த் துறை உருவாக்கி வருகிறது.
பொதுமக்கள் தங்கள் அலைப்பேசியில், 'Tamilnilam Gioinfo' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றனரோ, அந்த இடத்தின், 'கூகுள்' வரைபடத்துடன், சர்வே எண் விபரங்கள் திரையில் வந்து விடும்.
இதில், திரையைத் தேவைக்கு ஏற்ப பெரிதாக்கிப் பார்த்தால், தங்களுக்குத் தேவையான நிலத்தின் சர்வே எண் விபரங்களைத் துல்லியமாக அறியலாம். தற்போதைய நிலவரப்படி, பிரதான சர்வே எண்களை, இதில் அறிய முடியும்.
இதில், நீங்கள் ஏதாவது ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, அதன், 'அ' பதிவேடு, நில அளவை வரைபடம், பட்டா விபரம் போன்றவற்றை அறியும் வசதியும் இதில் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக அனைத்துப் பணிகளும் முடியும் போது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும், பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தலாம்.
அடுத்த சில மாதங்களில், இந்தச் செயலி முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதை மக்கள் பயன்படுத்தத் துவங்கி விட்டால், வீடு, மனை வாங்கும்போது, ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களை, மக்களே எளிதாகச் சரிபார்க்க வாய்ப்பு ஏற்படும்.
|
||||||||
by hemavathi on 21 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|