கட்சி,ஜாதி,மதம்,மொழி என பேசி நம் இந்திய தேசத்தின் மக்கள் சமுதாயத்தை பிளவு படுத்துவதை கண்டு மனம் வேதனையடைகிறது.அண்ணல் மகாத்மா தூய்மையான அரசியல் நெறிகளை பின்பற்ற சொன்னார். வ.ஊ. சிதம்பரனார் "சுதேசி கொள்கை" முழக்கமிட்டு சுதேசி கப்பல் ஒட்டி சொத்து சுகங்களை இழந்து சிறையில் வாடினார். இன்று 66 ஆண்டு கால சுதந்திரத்தில் நாம் கண்டது என்ன?
1951 ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 50 மில்லியன் டன்கள், மக்கள் தொகை 33 கோடி. தற்போது மக்கள் தொகை 120 கோடி-உணவு தானிய உற்பத்தி சுமார் 245 மில்லியன் டன்கள். நாட்டின் உணவு உற்பத்தி 5 மடங்கு பெருக்கிய விவசாயிகள் சுமார் 2 லட்சம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அவல நிலைக்கு உண்மை காரணம் நாட்டின் வேளாண் கொள்கைகள் உற்பத்தியை மையமாக வைத்து வகுக்க பட்டன. உற்பத்தி மற்றும் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நலன்கள் சமமாக முக்கியப்படுத்த படவில்லை. இந்த தவறான வேளான் கொள்கைகள் திருத்த இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை. மக்களின் அடிப்படை தேவையான குடிக்கிற தண்ணீரும், படிக்கிற கல்வியும் மருத்துவமும் முழுதாக வியாபாரமான அவலம். கிராமங்கள் தேய்ந்து நகரங்கள் வீங்கி நாற்றம் எடுத்துள்ள பரிதாபம். தங்களின் லஞ்ச ஊழல்களை மக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க இலவச திட்டங்கள். இளைய தலைமுறையை குடிகாரர்கள் ஆக்கிவரும் கொடுமை. புதிய பொருளாதாரம் என்ற பெயரால் "சுதேசிகொள்கைகள்" குழி தோண்டி புதைக்கப்பட்டு நம் இந்திய தேசம் துறை வாரியாக பன்னாட்டு நிறுவனங்களிடம் ஏலம் விடப்படும் இழி நிலை. மேற்கண்டவைகள் தான் நம் தேசத்தின் உண்மை நிலை. இவைகளை மாற்ற வேண்டாமா? இன்றைய தேவை "உண்மையான தேசப்பற்று". நம் இளைய தலைமுறை இதை உணரவேண்டும். நாம் உணர்த்த வேண்டும். இந்த புத்தாண்டில் புது உறுதி ஏற்ப்போம்! கடினமாக உழைப்போம்! நேர்மையாக வாழ்வோம்! நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் அடிப்படை தேவைகள் வணிக நோக்கமின்றி அரசுகள் நிறைவேற்ற பாடுபடுவோம் சுதேசியை காப்போம்! நதி நீர் வளங்கள் தேசிய சொத்து ஆக்கபட்டு பற்றாக்குறை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.வளமான கிராமங்களால் தான் இந்திய தேசம் வலிமை பெறும். அரசுகளின் தவறான கொள்கைகள் மாற மாற்ற உறுதி கொள்வோம்! நம் இந்திய தேசத்தை உலகில் தலைசிறந்த தேசமாக்குவோம்! வல்லரசாவதைக் காட்டிலும் தன்னிறைவு பெற்ற நல்லரசாக உறுதி ஏற்போம்.
ஆறுபாதி கல்யாணம்,பொதுச் செயலாளர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
|