LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

ஒரு ஒவியத்தின் கதை

"தந்தை மகளின் கழுத்தில் கத்தி வைப்பதும், குருதி பெருக்கெடுத்து வழிவதும்...' என்ற வரிதான் கவரை உடைத்து கடிதத்தை எடுத்தவுடன் கண்ணில் பட்டது. அப்போது அந்தக் கடிதம் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருக்கிற ஒரு இடத்திலிருந்து ஓவியரான என் நண்பர் அனுப்பியிருக்கும் கடிதம் என்று நினைக்கவில்லை. அடியில் எழுதப்பட்டிருந்த பெயரைப் பார்த்த பிறகுதான் நண்பர் எழுதிய கடிதம் என்பதே தெரியவந்தது. கடிதத்தில் அவர் எழுதியிருந்த விஷயம் சமீபத்தில் அவர் வரைந்த ஒரு புதிய ஓவியத்தைப் பற்றியே இருந்தது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற ஒரு கொலை நிகழ்ச்சியைக் காட்டும் படமே அது. அந்த ஓவியத்தைப் பொதுமக்கள் எல்லாரும் பார்க்கும் வண்ணம் கண்காட்சியில் வைக்கவேண்டும் என்பது அவரின் விருப்பம். ஆனால், கொலை வழக்கின் தீர்ப்பு இன்னும் சொல்லப்படாததால், என்ன செய்வது என்று தெரியாமல் திரிசங்கு நிலைமையில் இருக்கிறார் என் நண்பர். தான் கஷ்டப்பட்டு வரைந்த ஓவியத்தை இன்னொருவர் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு ஓவியன் ஆசைப்படுவது நியாயமான ஒன்றே. அவர் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய ஓவியத்தைப் பற்றி கடிதத்தில் இப்படி விவரிக்கிறார்.



""நடந்த காட்சிகள் ஒவ்வொன்றும் என் மனதில் ஆழமாகப் பதிந்துபோனதன் விளைவு, என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நான் நன்கு உறங்கி எத்தனை நாட்கள் ஆகிவிட்டன தெரியுமா? என்னால் வெறுமனே இருக்க முடியவில்லை. அவ்வப்போது என்னை மீறி ஏதாவது நான் உளறுகிறேன். நான் கண்ணால் கண்ட காட்சிகள் என் முன்னால் மீண்டும் தோன்றுகின்றன. எனக்கு எங்கே பைத்தியம் பிடித்துவிடப் போகிறதோ என்று அந்தக் காட்சிகளை எல்லாம் ஓவியமாகத் தீட்டினேன். பிரகாசமான அடர் சிவப்பு வண்ணத்தில் என் இடது கையில் இருந்து நான் எடுத்த ரத்தத்தையும் கலந்து சேர்த்து உண்டாக்கிய புது ரத்தத்தில் நான் வரைந்த ஓவியமே "மாதிரி தந்தை' என்ற இந்தப் படம்.'' தொடர்ந்து ஓவியம் வரைவதற்கு உதவியாக இருந்த விஷயங்களை கடிதத்தில் அவர் விவரிக்கிறார். ""கல்லூரி பிரின்ஸிபாலும் டாக்டரும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். அவர்களின் பிள்ளைகள் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாத அளவிற்கு எப்போதும் ஒன்றா கவே இருப்பவர்கள். சிறு வயது முதல் அவர்கள் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இப்படியே வளர்ந்து இருபது, இருபத்திரெண்டு வயது வாலிபர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு இரண்டு தந்தைகளும், இரண்டு தாய்களும் இருப்பதாகவே எல்லாரும் பொதுவாகக் கூறுவார்கள். அந்த அளவிற்கு- நட்புக்கு இலக்கணம் என்றால் இவர்கள்தான் என்கிற அளவிற்கு- வாழ்க்கையில் அவர்கள் ஒன்றுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடக் கடைசியிலும் அந்த இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் பதினான்கு புகைப்படங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புகைப்படத்திலும் நடுவில் தோளில் கை போட்டு புன்சிரிப்பு தவழ நின்றிருப்பார்கள் அந்த இரண்டு நண்பர்களும். அவர்களைச் சுட்டிக்காட்டி அந்த இரண்டு அம்மாமார்களும் கூறுவார்கள்.

"எங்களோட நட்புச் சங்கிலியோட தொடர்ச்சிதான் இவங்க ரெண்டு பேரும்.' எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்த நட்புக்கு எந்தக் கேடும் வராது என்று திடமாக நம்பினார்கள் அவர்கள். என்ன இருந்தாலும், மனித வாழ்க்கை நடந்து கொண்டிருப்பதே இந்த மாதிரியான நல்ல எதிர்பார்ப்புகளை வைத்துத்தானே! சில நேரங்களில் சாதாரண காரணங்களால் கூட காலம் காலமாக இருந்து வருகிற உறவுகள் அறுந்து போவது உண்டு. இதை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதான் மனிதர்கள் உறவுகளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் கவனத்துடன் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. இருந்தாலும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நல்ல பகல் சமயத்தில், மக்களே ஆச்சரியப்படுகிற அளவிற்கு ஒரு மிகப்பெரிய இடியே நம்மேல் விழுந்ததுபோல், நகரத்தையே நடுங்க வைத்த அந்தச் சம்பவம் ஒரு நாள் நடந்தது. பிரின்ஸிபாலின் வீட்டில் வைத்து டாக்டரின் பெரிய அரிவாள் ஒன்றால் பிரின்ஸிபாலின் மகனைக் குத்திக் கொன்று விட்டான். இதுதான் அந்தச் சம்பவம்.

சம்பவத்தைக் கேட்டு நான் ஓடிச் சென்றபோது, பிரின்ஸிபாலின் மகன் செத்துப் போயிருந்தான். அவன் தலை டாக்டரின் மடியில் இருந்தது. அப்போது வெளியே நல்ல வெளிச்சம். சிவப்பு நிறத்தில் ரத்தம் அவனின் வெள்ளைச் சட்டையின் முன்பக்கம் முழுவதும் நெஞ்சில் உள்ளே இறங்கிய அரிவாளின் கைப்பிடி மட்டும் வெளியே தெரிகிறது. இரண்டு தாய்மார்களும், இரண்டு தந்தைகளும் அங்குதான் இருக்கிறார் கள். அவர்களைச் சுற்றி அவர்களின் மற்ற பிள்ளைகள். ஓவியத்தில் இருப்பதுபோல, சம்பவம் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு சம்பவம்தான். யாரும் ஒரு வார்த்தைகூட வாய் திறந்து பேசவில்லை. டாக்டரின் முகம் வெளிறிப் போய் இருந்தது. கண்கள் கோபத்தால் சிவப்பேறின. நெஞ்சில் இருந்த அரிவாளை உருவி எடுத்த டாக்டர் பைத்தியம் வந்த மனிதனைப்போல எழுந்து, தன்னுடைய மகன் அருகில் போய் நின்றார்.

"நீ ஏண்டா இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சே?...' டாக்டர் அலறினார். ஆனால், டாக்டரின் மகன் ஒரு வார்த்தைகூட பதில் சொல்லாமல், சிலை என நின்றிருந்தான்.

"அப்படின்னா நீ ஏன் உயிரோட இருக்கே? நீயும் செத்துப் போ...' என்று இதயம் நொறுங்க கத்தியவாறு மகனின் நெஞ்சை நோக்கி அரிவாளை ஓங்கினார் டாக்டர். அடுத்த வினாடி... பிரின்ஸிபால் ஓடி வந்து டாக்டரின் கையைத் தடுத்தார். ""வேண்டாம்...''- பிரின்ஸிபால் சொன்னார்.

அந்த நேரத்தில் என் நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வந்து சேர்ந்தார்.

அதற்குப் பிறகு நடந்தது என்ன? "இந்தக் காரணத்திற்காகத்தான் என் நண்பனை நான் கொன்றேன்' என்று கொலை செய்த குற்றவாளி விளக்கம் தரவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லார் முன்னிலையிலும் விசாரணை செய்தார். தனியாக அழைத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்தும் விசாரித்துப் பார்த்தார். எவ்வளவு நேரம் விசாரித்தும் உயிருக்குயிரான அந்த நண்பர்கள் எப்படி கொலை செய்கிற அளவிற்கு விரோதிகளாக மாறினார்கள் என்பதைக் கடைசிவரை போலீஸ் இன்ஸ்பெக்டரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எந்தவித மறுப்பும் இல்லாமல், தான்தான் அந்தக் கொலையைச் செய்ததாக டாக்டரின் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒத்துக் கொண்டான். ஆனால், அவனுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அனேகமாக அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றுதான் மக்கள் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சட்டம் என்று வருகிறபோது எந்தவொரு பச்சாதாபமும் காட்டக் கூடாது என்றெண்ணிய நீதிபதி, வழக்காடு மன்றமே நடுங்குகிற அளவிற்கு கம்பீரமான குரலில், கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அந்த நகரத்தையே உலுக்கிய இன்னொரு கொலைச் சம்பவம் நடந்தது. இந்த முறை நீதிபதி தன் அன்பு மகளைக் கொலை செய்திருந்தார்.

மரணமடைகிறபோது அந்தப் பெண்ணுக்கு பத்தொன்பது வயது நடந்து கொண்டிருந்தது. பெண்களுக்காக, பெண்களின் முன்னேற்றத்திற்காக, பெண்களின் உரிமைகளுக்காக நடந்த எல்லா போராட்டங்களுக்கும் அவள் தலைமை தாங்கி நடத்தியிருந்தாள். பலரும் அவளின் பங்களிப்பை பலமுறை பாராட்டி இருக்கிறார்கள்.

நீதிபதியும் அவர் வீட்டு வேலைக்காரனும் இப்போது லாக்-அப்பில் இருக்கிறார்கள். என்னுடைய நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் இவர்களின் வழக்கைப் பதிவு செய்தவர். தன்னுடைய காதலியின் தந்தையையே கைது செய்து தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்த அமைதியான காதலனின் நிலைதான் உண்மையிலேயே பரிதாபமானது.

""அவளோட பார்வை'' தாடியில் கை வைத்தவாறு, ஆழ்ந்த சிந்தனையுடன் என்னுடைய நாற்காலியில் அமர்ந்தவாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்லுவார்: ""என்னோட நண்பனே, வெண்ணெய் போலிருந்த என்னோட மனசில சூரியனின் ஒரு பிரகாசமான கதிர் ஒரு நாள் வந்து விழந்துச்சு. அது எந்த அளவுக்கு சுகமான ஒரு அனுபவம் தெரியுமா?''

இது நடந்தது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு. என் ஸ்டுடியோவிற்கு அவள் ஒவ்வொரு நாளும் இரண்டு வார காலம் பதிவாக வந்தாள். நீதிபதி கேட்டுக் கொண்டார் என்பதற்காக, அவரின் அன்பு மகளை நான் ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் இன்ஸ்பெக்டரும் அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். ஒரே நேரத்தில் நான் அவளின் இரண்டு படங்களை வரைந்தேன். ஒன்று எனக்கு. இன்னொன்று நீதிபதிக்கு. அவள் அது குறித்து ஒன்றுமே சொல்லவில்லை. மேஜை மேல் கைகைள ஊன்றிக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அவளின் படத்தை நான் நீதிபதிக்குக் கொடுத்தேன். மென்மையான வெள்ளை ஆடை அணிந்து பூமியைத் தேடி வந்திருக்கும் அப்சரஸ் என மென்னகை புரிந்து கொண்டிருக்கும் அவளின் இரண்டாவது படத்திற்கு "சொர்க்கத்தில் இருந்து ஒரு கவிதை' என்று பெயரிட்டு நான் வைத்துக் கொண்டேன். ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. இது ஒருபுறமிருக்க, அதே ஓவியத்தை ஒரு காலண்டர் கம்பெனி ஆறாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. இந்த விவரங்களை எல்லாம் ஒரு பரிசுப் பொருளுடன் அவளுக்கு எழுதி அனுப்பினேன். அதற்கு அவள் என்ன பதில் எழுதினாள் தெரியுமா?... "ஓவியரே! நீங்கள் அனுப்பியிருந்த இந்தத் தங்கத்தால் ஆன கைக் கடிகாரம் மிக விலை உயர்ந்தது என்று நினைக்கிறேன். இதை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது வேண்டாம் என்று கூறிவிடலாமா என்று பலமுறை யோசித்தேன். கடைசியில், ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்று தீர்மானித்தேன். ஆனால், என் அறையில் இருக்கிற ஓவியத்தின் முகத்தில் ஒரே கவலை... ஏக்கம்... சோகவயப்பட்ட விழிகளால் அந்த ஓவியம் என்னையே பார்க்கிறது. அதனால் எப்போதும் இதைக் கையில் கட்டிக் கொண்டிருப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.'

அதற்கு அடுத்த நாள் அவள் கல்லூரிக்குச் செல்லும்போது, மார்போடு சேர்த்து புத்தகங்களைப் பிடித்திருந்த இடது கையின் மணிக்கட்டில் நான் அனுப்பியிருந்த தங்கக் கடிகாரம் பொன் னொளி வீசியதைப் பார்த்தேன். அவள் ஸ்டுடியோவுக்கு வரும்போதும் போகும்போதும் பெரும்பாலும் இன்ஸ்பெக்டர் அங்கு இருப்பார். இப்படி தனக்குள் ஒரு அமைதியான காதலை அவர் நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டிருந்தார். அந்த ரகசியக் காதலுக்கு சாட்சி நான் மட்டுமே. என்னுடைய கவனம் முழுவதும் அவரின் காதல் தீயை எப்படி அணைப்பது என்பதிலேயே இருந்தது.

"நீங்க ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர்'- ஒருநாள் நான் சொன்னேன்: ""அவளோ நீதிபதியோட மகள்...! இந்தக் காதல் நடக்கக் கூடியதா? உங்களுக்குள் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கு பார்த்தீங்களா...?'

"சரிதான்...'- அவர் நான் சொன்னதை ஒப்புக் கொண்டார். இது நடந்து இரண்டு மாதங்கள் கழித்து அவர் என்னிடம் கேட்டார்: "நான் ஒரு போலீஸ் கமிஷனரா ஆயிட்டா?'

"பிரச்சினையே இல்ல...'-நான் சொன்னேன்.

அவர் சொன்னார்:

"அப்படின்னா அதற்கு நான் முயற்சிக்கிறேன்.'

நான் அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். இந்தச் சமயத்தில்தான் டாக்டரின் மகன் பிரின்ஸிபாலின் மகனைக் கொலை செய்த சம்பவமும் அதைத் தொடர்ந்து டாக்டரின் மகனைத் தூக்கில் தொங்க விட்டதும் நடந்தது. இது நடந்து நூற்று நான்காம் நாள்- அதாவது போனமாதம் இரண்டாம் தேதி இரவு நீதிபதி தன் மகளைக் கொலை செய்தார்.

இந்தக் கொலையைப் பற்றி நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சத்தியமான உண்மை என்று குற்றவாளிகள் ஒத்துக் கொண்டனர்.

அந்தச் சம்பவம் நடந்தது இரவு பத்து மணிக்குமேல். விவரிக்கப்படும் சம்பவத்தைப் பற்றி எதுவுமே இன்ஸ்பெக்டருக்கு- சொல்லப்போனால் தெரியவே தெரியாது. ஸ்டேஷன் பாரா பார்த்துக் கொண்டிருந்த ஆளை ஒரு கப் காப்பியும், ஒரு பாக்கெட் சிகரெட்டும் வாங்கி வரச் சொல்லி அனுப்பிய இன்ஸ்பெக்டர் மேஜை மேல் கால்கள் இரண்டையும் தூக்கிப் போட்டு நீட்டியவாறு நாற்காலியில் மல்லாக்க சாய்ந்து அமர்ந்திருக்கிறார். அவரின் மனதில் என்னென்னவோ சிந்தனைகள். எல்லாவற்றையும் அசை போட்டவாறு கண்கள் மூடி அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். நகரத்தின் ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி விட்டிருந்தது. சுண்ணாம்பு பூசிய சுவர்களில் மின்விளக்கின் ஒளிபட்டு பிரகாசிப்பதை அவர் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சுவர்களுக்கு நீல வண்ணம் பூசினால் இன்னும் நன்றாக இருக்குமே என்று அவர் மனம் அப்போது நினைத்தது. இதை நினைத்தவாறு அவர் கண்களை மூடினார். இரண்டு நிமிடங்கள் அவர் கண்களை மூடியிருப்பார். வெளியே காலடி ஓசைகள் கேட்டன. ஸ்டேஷன் பாராதான் வந்து கொண்டிருக்கிறார் என்று அவர் நினைத்தார். ஆனால், வந்த ஆள் உள்ளே வரவில்லை.

"இங்கே கொண்டு வரவேண்டியதுதானே... எவ்வளவு நேரமாச்சு...' இன்ஸ்பெக்டர் கூறினார்.

பதிலுக்கு கம்பீரமான- அதே சமயம், மரியாதை கலந்த குரல்.

"இன்ஸ்பெக்டர்...'

இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டு, கழுத்தைப் பின்பக்கமாய் திருப்பிப் பார்த்தார். பார்த்தவர் ஸ்தம்பித்துப் போனார். அவருக்கு முன்னால் பயந்து நடுங்கிக் கொண்டே வீட்டு வேலைக்காரன்; அவனுக்குப் பின்னால் பயங்கர கோபத்துடன் நீதிபதி! வேலைக்காரன் தன் கையில் கனமான ஏதோ ஒரு பொருளை உருண்டையாக வெள்ளைத் துணியில் சுற்றி வைத்திருக்கிறான். அந்த உருண்டையான துணிப் பொட்டலத்துக்குக் கீழே சிவப்பாக ரத்தம் "சொட், சொட்' என்று விழுந்து கொண்டிருக்கிறது. நீதிபதியின் வலது கையில் கூர்மையான ஒரு பெரிய கத்தி, இடது கையில் ஒரு கட்டு கடிதங்கள். நீதிபதியின் விழிகளில் கோபமும், ஆக்ரோஷமும் ஏராளமாகத் தெரிந்தன!

"நீங்க என்னை இப்போ கைது பண்ணலாம்'- என்று கூறியவாறு நீதிபதி அறைக்குள் நுழைந்தார். பின்பக்கம் திரும்பி வேலைக்காரனிடம் உரத்த குரலில் அதிகாரத் தொனியில் கட்டளையிட்டார்.

"அதை மேஜைமேல் வை.'

ஆச்சரியமான கண்களுடன் எதுவுமே பேச முடியாமல் விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர். அவரால் மூச்சு விடக்கூட முடியவில்லை. வேலைக்காரன் கையில் வைத்திருந்த அந்தத் துணிப் பொட்டலத்தை மேஜை மேல் வைத்தான். கத்தியின் நுனியால் நீதிபதி துணியை நீக்கினார். இன்ஸ்பெக்டர் அது என்னவென்று ஆர்வத்துடன் பார்த்தார்... உள்ளே ஒரு பெண்ணின் தலை மட்டும். உடல் இல்லாமல் தனியாக... நடுஉச்சி எடுத்து வாரப்பட்ட சுருண்ட முடி... வெளுப்பான ஒளி வீசும் நெற்றி... இன்னும் மூடாமல் திறந்திருக்கும் விழிகள்... திறந்த வாய்.

பயங்கரமான அமைதி ஒரு நிமிடம் அங்கு நிலவியது. ஆனால், பல நிமிடங்கள் ஓடி மறைந்ததுபோல் இருந்தது இன்ஸ்பெக்டருக்கு. அவர் அசையவே இல்லை. உலகமே ஒரு நிமிடம் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டதுபோல் இருந்தது அவருக்கு. சிறிது நேரம் கழித்துத்தான் அவரால் சுய உணர்வுக்கே வர முடிந்தது. சுவரில் கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. காலடி ஓசை ஏதோ கேட்கிறது. கேட்டைத் திறந்து விட்டதற்காக ஸ்டேஷன் பாரா பார்க்கும் ஆள் யாரையோ திட்டுகிறார்.

இன்ஸ்பெக்டர் மெல்ல எழுந்து வெளியே வந்தார். அப்போது குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. ஸ்டேஷன் பாரா கொண்டு வந்த காப்பியை வராந்தாவில் இருந்தவாறு குடித்த இன்ஸ்பெக்டர் ஒர சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தார். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான- அதே நேரத்தில் கடுமையான காரியத்தை நீதிமானான ஒரு நீதிபதி எப்படிச் செய்தார்? அவரை இந்த அளவிற்குச் செய்யத் தூண்டிய காரியம் என்னவாக இருக்க முடியும்? நீதிபதிக்கு ஒருவேளை மூளை ஏதாவது குழம்பிப் போய்விட்டதா? வீட்டு வேலைக்காரனை எதற்கு இங்கு அழைத்து வரவேண்டும்? இப்படிப் பல விஷயங்களையும் அலசிப் பார்த்த இன்ஸ்பெக்டர் மீண்டும் அறைக்குள் வந்தார். நீதிபதி எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். கண்களைக் கூட சிமிட்டாமல் அமைதியாக இருந்தார். அவரின் புருவத்தில் இருந்த வெள்ளை ரோமங்கள் வெள்ளிக் கம்பிகளைப்போல் மின்னின. அவரின் வேலைக்காரன் எதுவுமே பேசாமல் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். உடலில்லாத அந்தத் தலை கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு... உறைந்து கிடக்கும் ரத்தத்தில் முடி மூழ்கிப் போயிருந்தது.

பயங்கரமான அந்த அமைதியை நீதிபதிதான் கலைத்தார். மெதுவான- அதே சமயம் கம்பீரமான தன் குரலில் அவர் பேசினார்:v"இந்தத் தலையோட உடல் அவளோட படுக்கை அறையில் கிடக்கு. நான் ஒரு "மாதிரி நீதிபதி'யாகவும் ஒரு "மாதிரி தந்தை'யாகவும் இருந்தவன், இருப்பவன். இப்போ எனக்கு நாற்பத்தேழு வயசு நடக்குது. இவளோட அம்மா சாகுறப்போ இவளுக்கு வயசு ஏழு. இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைக்கவே இல்லை. ஏன்னா... அப்படி நான் கல்யாணம் பண்ற ரெண்டாவது மனைவி என் மகளை சரியாகக் கவனிக்கலைன்னா...? மொத்தத்தில்- நான் இவளுக்குத் தந்தையாக மட்டுமில்ல... தாயாகவும் இருந்தேன்.

"ஆமா...' நீதிபதி தொடர்ந்தார்: "ஒரு பொண்ணை எப்படி வளர்க்கணுமோ அப்படி நான் இவளை வளர்த்தேன். காலங்கள் படுவேகமாக ஓடிடுச்சு. என் மகளோட ஒவ்வொரு வாக்கும், பார்வையும் எனக்கு அத்துப்படி. இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்ணை வச்சே நான் கண்டுபிடிச்சிடுவேன். உண்மையாகவே அதுதான் என்னோட பெரிய திறமைன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனா... முந்தாநாள்தான் எனக்கே தெரியவந்தது முகம் இதயத்தோட கண்ணாடி இல்லைன்றதே. விபச்சாரம் வறுமையின் கொடுமையால் இல்லைன்றதே எனக்கே இப்பத்தான் புரிஞ்சது. விஞ்ஞானத்தோட வெளிச்சம் கடந்து செல்ல முடியாத ஒரு இருண்ட உலகம்தான் மனித இதயம். அங்கே என்ன நடக்குதுன்றதை இன்னொருத்தரால கண்டு பிடிக்கவே முடியாது. நல்ல சுத்தமான இதயத்தின் கண்ணாடி அழகான முகமாக இருக்குமா? இப்போது நான் இந்த விஷயத்தில் சந்தேகப்படுகிறேன்.

நான் எத்தனையோ ஆட்களை ஜெயிலுக்கு அனுப்பியிருக் கிறேன். எத்தனையோ பேரை தூக்குமரத்திற்கு அனுப்பியிருக் கிறேன். இதெல்லாம் எதற்காக? மனித சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும்ன்ற ஒரே எண்ணத்துல. தீமையை அழிக்க வேண்டும்ன்ற ஒரே வெறியில. இப்போ என்னோட கொள்கைகள், லட்சியங்கள், ஆசைகள், நம்பிக்கைகள் எல்லாமே தரை மட்டமாக கீழே விழுந்திருச்சு. இப்போ எனக்கு எதிலயுமே நம்பிக்கை இல்ல... நன்மைன்னா என்ன...? தீமைன்னா என்ன?

ஒரு நாளென்றால் அதற்கு எப்படி இரவு, பகல்னு இருக்கோ அதே மாதிரி ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வெளிச்சம், இருள்னு ரெண்டு பக்கங்கள் இருக்கு. இப்படி இல்லாம உலகத்துல யார் இருக்கிறது? ஆனால், அறிவு வேலை செய்யி றதே எல்லாம் முடிஞ்சுபோன பிறகுதான். எனக்கு அறிவுன்றது சரியா வேலை செய்ய ஆரம்பிச்சதே முந்தா நாள் சாயங்காலம்தான். நான் அப்போ தோட்டத்துல நின்னுக்கிட்டு இருந்தேன். இவளோட அறையின் ஜன்னல் இடைவெளி வழியா பாக்குறப்போ இவள் அறைக்குள் இருக்குறது தெரிஞ்சது. அப்போது எனக்கு ஒரே ஆச்சரியம். இவள் மகளிர் சங்கத்தோட கூட்டத்துல பேசுறதுக்காகப் போயிருக்கிறாளே... ராத்திரி எட்டு மணிக்குத்தானே இவள் திரும்பி வர்றதாச் சொல்லியிருக்கா... ஆனால், பக்கத்துல போன பிறகுதான் என்னோட தவறு என்னன்னு எனக்கே தெரிய வந்துச்சு. நான் பார்த்தது இவளோட ஓவியத்தை. அந்த ஓவியத்தோட கலைத் திறமையை நான் உண்மையிலேயே பாராட்டி ஆகணும். அந்த ஓவியத்தையே சில மணி நேரங்கள் உற்றுப் பார்த்தவாறு அந்த இடத்திலேயே நின்னுட்டேன். அந்த நிமிடத்தில் என் மனசுல உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. இப்படிப்பட்ட அழகான- பண்பாடுள்ள பொண்ணை எனக்கு மகளா படைச்சதற்காக நான் கடவுளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னேன். என்னோட மகளின் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றி நான் கனவு காணத் தொடங்கினேன். அவள் மேற்படிப்பு படித்து பாசாகி, அழகான கணவனோடு சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளுக்குத் தாயாகி...

என் மகளைப் பற்றி ஆனந்தமயமான நினைவுகளை அசை போட்டவாறு நான் ஜன்னலை அடைச்சிட்டு திரும்ப நடந்தேன். அப்போ திடீர்னு நான் நின்னேன். என் காலடியில ஒரு பழைய பேப்பர் துண்டு. டாக்டரின் மகன் பெயருக்கு என்னோட மகள் எழுதிய காதல் கடிதத்தோட ஒரு நகல் அது.''

தான் சொல்லி வந்ததை நிறுத்திய நீதிபதி கையில் இருந்த கடிதக் கட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து இன்ஸ்பெக்டர் கையில் கொடுத்தார்.

"பிரியமான என்...

உங்களின் நண்பரை நான் காதலிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? நம்முடைய காதலை ஒன்றுமில்லாமல் செய்வதற்காக அந்த மனிதர் போடும் தந்திர நாடகம் இது. இதை தயவுசெய்து நம்பாதீர்கள். உங்களுக்கு முன்னால் நான் உங்கள் நண்பரைக் காதலித்தேன் என்பது முழுக்க முழுக்கப் பொய். அந்த மனிதருக்கு நான் ஒருபோதும் கடிதம் எழுதியதே இல்லை. நான் எழுதியதாக ஒரே ஒரு கடிதத்தையாவது அவரைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்.'

தொடர்ந்து நீதிபதி சொன்னார்: "இந்தக் கடிதத்தை நான் படிச்சேன். அதற்குப் பிறகு நான் மவுனமாக தோட்டத்தில் இருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தேன். சூரியன் அஸ்தமனம் ஆனதோ, இரவு நேரம் வந்ததோ ஒண்ணும் எனக்குத் தெரியாது. வீட்டு வாசற்படியில் இவளின் குரல் கேட்டுத்தான் நான் சுய உணர்விற்கே வந்தேன். நான் எழுந்து நடந்து போறப்போ, இவள் மின்விளக்குக்குக் கீழே கழுத்து நிறைய முல்லைப்பூ மாலையை அணிந்து நின்னுக்கிட்டு இருந்தா. தான் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி நல்லபடியாக நடந்ததா சொன்னா. எனக்கு உடம்புக்கு சரியில்லைன்னு சொல்லி விட்டு நான் மாடிக்குப் போயிட்டேன். ராத்திரி நான் ஒண்ணுமே சாப்பிடல. இரவு முழுக்க எனக்கு உறக்கமும் வரல.

நேற்று நான் நீதிமன்றத்துக்கே போகல. இவள் வழக்கம்போல நல்ல ஆடை அணிஞ்சு கல்லூரிக்குப் போனா. இவள் போனபிறகு, இவளோட அறையை மாற்று சாவியை வைத்துத் திறந்தேன். ஆனால், இவளோட பெட்டியைத் திறக்க முடியல. இதற்காக கொல்லன் ஒருத்தனைத் தேடிப் பிடிச்சேன். யாருக்கும் தெரியாமல் புது சாவி ஒண்ணு உண்டாக்கினேன். அதை வச்சு இவளோட பெட்டியைத் திறந்து பார்த்தப்போ, நான் சந்தேகப்பட்டது உறுதியாயிடுச்சு. கட்டுக்கட்டாக இவள் நாலு கட்டு காதல் கடிதங்கள் வச்சிருந்தா.

முதலாவது... இவள் பிரின்ஸிபால் மகனுக்கு அனுப்பிய காதல் கடிதங்கள். "என் உயிர் காதலனே' என்ற வாசகத்தோடதான் ஒவ்வொரு கடிதத்தையும் ஆரம்பிச்சிருக்கா. எல்லா கடிதங்களையும் அந்த ஆள் திருப்பி அனுப்பியிருக்கிறான். இரண்டாவது, பிரின்ஸிபாலின் மகன் எழுதிய கடிதங்கள். மூணாவது, டாக்டரோட மகன் எழுதிய கடிதங்கள். நாலாவது கட்டு, பெயரே இல்லாத ஒரு ஆண் எழுதிய கடிதங்கள்.

எல்லாக் கடிதங்களையும் நான் படிச்சேன். எல்லாக் கடிதங்களையும் அழிச்சிடலாமான்னு தோணிச்சு. இருந்தாலும் இதைப் பற்றி என்னன்னு விசாரிக்கணும்னு நினைச்சேன். இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு கீழே இருக்கிற இவளோட அறையின் வாசல்ல போய் நின்னேன். உள்ளே இருந்து மெதுவான குரலில் வந்த உரையாடலைக் கேட்டு நான் உண்மையாகவே நடுங்கிப் போனேன்.

"என் தங்கம்ல... இதைக் குடி... மூணு மாசம் ஆயிடுச்சுன்னா... தேவையில்லாத பிரச்சினை வரும். அதுக்குப் பிறகு கவலைப்பட்டு பிரயோஜனமே இல்ல. பேசாம குடி...'

"என்னால குடிக்க முடியாது. இதைக் குடிச்சா தொண்டை என்ன ஆகுறது?'

"போன வருஷம் குடிச்சே... அப்ப தொண்டைக்கு ஏதாவது ஆச்சா என்ன...?'

நான் சாவித் தூவாரத்தின் வழியே உள்ளே பார்த்தேன். ஒரு பாத்திரத்தில் இருந்து எதையோ எடுத்து குடிச்சிக்கிட்டு இவள் மல்லாந்து படுத்துக் கிடக்கிறா. லேசா வீங்கியிருக்கிற இவளோட வயிறைத் தடவிக்கிட்டு இவன்...''-நீதிபதி, வீட்டு வேலைக்காரனைச் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து அவரே சொன்னார்:

""இவளோட கட்டில்ல இவன் உட்கார்ந்திருக்கான். என் வீட்டுல கடை நிலையில இருக்கிற இந்த வேலைக்காரன்... எனக்கு அதைப் பார்த்ததும் தொண்டையே வற்றிப் போச்சு. பேச வாய் எடுத்தேன். ஆனால் வார்த்தை வெளியே வரல. பைத்தியம் பிடிச்சவனைப்போல திரும்பி நடந்தேன். வீட்டையே நெருப்பு வச்சு எரிச்சுடலாமான்னு நினைச்சேன். கத்தியை எடுத்துக்கிட்டு திரும்பவும் வாசல்கிட்ட போய் நின்னது மட்டும் ஞாபகத்துல இருக்கு. நான் கதவைத் தட்டினேன். இவன் பயந்துபோய் எந்திரிச்சான். இவனைக் கட்டிலுக்குக் கீழே போய் ஒளிஞ்சிக்கிடச் சொன்னா இவ. இவன் ஒளிஞ்ச பிறகு இவ புத்தகம் ஒண்ணை எடுத்து விரிச்சு தலையணை மேல வச்சிக்கிட்டு ஆடைகளைச் சரிப்படுத்திக்கிட்டு கதவைத் திறந்தாள்.

நான் கையிலிருந்த கடிதக் கட்டை இவ கையில தந்தேன். அப்போ இவளோட முகத்தைப் பார்க்கணுமே... பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டா இவ. "யாரைக் கேட்டு என்னோட பெட்டியைத் திறந்தீங்க'ன்னு என்னைப் பார்த்துக் கேட்டா.

நான் விசாரித்து அந்த மூணாவது காதலனைப் பற்றித்தான். இவ ஒண்ணுமே பதில் சொல்லல. கையில் கட்டியிருந்த தங்கக் கைக் கடிகாரத்தோட செயினைக் கையால தடவிக்கிட்டே, என்னையே உற்றுப் பார்த்தா. இவளைப் பார்த்தா விஷப் பாம்பைப் பார்ப்பது மாதிரியே எனக்கு இருந்துச்சு. அடுத்த நிமிஷம் இவள் கன்னத்துல ஒரு அடி, அடிச்சேன். அதைத் தாங்க முடியாம "பொத்து'னு கீழே போய் விழுந்தா. கட்டிலுக்குக் கீழே இருந்து இவன் நடுங்குறான். இவனைக் கொன்னுட்டா என்னன்னு என் மனசு சொல்லுச்சு. இருந்தாலும், அதை என் னோட வேலை இல்லைன்னு நினைச்சு விட்டுட்டேன். இவளோட கழுத்தைக் கத்தியால கோழியை அறுக்குற மாதிரி அறுத்தேன். தலையும் உடலும் தனித்தனியா ஆயிடுச்சு.'' நீதிபதி முழுவதையும் சொல்லி முடித்தார். இன்ஸ்பெக்டர் விசிலை எடுத்து வாயில் வைத்து குறைவான சப்தத்தில் ஊதினார். நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சொன்னது இதுதான். ஓவியரான என் நண்பர் தொடர்ந்து எழுதுகிறார்:

""இவ்வளவு விஷயங்களையும் நான் இந்த ஓவியத்தில் கூறியிருக்கிறேன். இந்த ஓவியத்தைப் பற்றிய உங்கள் கருத்தை நான் அறிய விரும்புகிறேன். இந்த ஓவியத்தை "ப்ளாக்' எடுத்து பல வர்ணங்களில் அச்சடித்து விற்பனை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் ஒவ்வொரு பிரதியும் எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் இரண்டு வாரங்களில் கூறப் பட்டு விடும். நீதிபதியை என்ன செய்வார்கள்? தூக்கில் போட்டு விடுவார்களா? அல்லது... எதைப் பற்றியுமே இப்போது தீர்மானிக்க முடியவில்லை. நான் இந்த ஓவியத்தைத் தீட்டி இருப்பது- திறந்து கிடக்கும் வாசல் வழியே நடக்கும் சம்பவத்தைப் பார்ப்பதுபோல. மேஜையில் இருக்கின்ற தலையின் உதடுகள் பூசியிருக்கும் சிவப்பு சாயத்தில் என் ரத்தமும் கலந்திருக்கிறது. சுவரில் தொங்க விடுவது மாதிரி மூன்று ஓவியங்கள் இருக்கின்றன. முதலாவது- டாக்டர் மகனைக் கொல்ல கத்தியை ஓங்குவது. இரண்டாவது- தந்தை மகளின் கழுத்தில் கத்தியை வைப்பதும், அவளின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிடுவதும்... மூன்றாவது- பிரகாசமான படுக்கையறையில் மல்லாக்கக் கிடக்கும் தலை இல்லாத பெண்ணின் உடல்...''

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.