LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தன்னம்பிக்கை (Self Confidence )

பண்டைத் தமிழரின் மீன்பிடிக் கருவிகள் - மு. பஞ்சவர்ணம்

பரதவர் வாழ்க்கை முழுவதும் கடலோடு தொடர்புடையதாகும். நெய்தல் நிலத்துப் பரதவ மக்களின் தலையாய தொழில் மீன்பிடித்தொழிலாகும். இவர்களின் மீன்பிடித் தொழிலுக்குத் துணையாக வலைகள், பறிகள், விசைத்தூண்டில், தூண்டில், எறியுளி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவை குறித்த செய்திகளை இக்கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.

வலைகள்:

இவை சிறு சிறு கண்களையுடையவை. நெடிய கயிற்றால் பிணைக்கப்பெற்றவை. இவற்றைச் சோவிகளைக் கொண்டு முடிச்சிட்டிருந்தனர்.

''குறுங்கண் அவ்வலை'' என்று பாடல்கள் குறிப்பதால் சிறிய கண்களையுடையவனாக வலைகள் இருந்தமை விளங்கும். இவ்வலை செந்நிறமாக இருந்ததை,

''... ... ...செங்கோற்

கொடுமுடி யவ்வலை'' (நற். 303:9-10)

என்ற பாடல் வரியினின்றும் உணரலாம். சுறாமீன் மற்றும் இறால்மீன்களைப் பிடிப்பதற்கு வலைகள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. மீனவர் கடலுக்குச் சென்று உறுதிவாய்ந்த முறுக்கிய கயிற்றால் முடிக்கப்பெற்ற வலைகளைக் கடலில் வீசி விரித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சினச்சுறா வலையைக் கிழித்து விடுகிறது. இதனை,

''கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை'' (அகம். 340:21) என்ற பாடல் வரி சுட்டும். முதல்நாள் வலையை மீன் வேட்டம் நடைபெறாது போயினும் மறுநாள் மிக்க வலியுடனே சுறாமீனைப் பிடித்துக் கொண்டு வருவர். இதனை,

''கொடுமுடி அவ்வலை பரியப் போகிய

கோட்சுறாக் குறித்த முன்பொடு

வேட்டம் வாயாது எமர்வா ரலரே'' (நற். 215 : 10-12)

என்ற பாடலடிகள் குறிக்கும்.

இறால் மீனையும் வலைவீசிப் பிடித்துள்ளமையையும் பாடல்கள் சுட்டுகின்றன. இவ்வலை குறித்து நற்றிணையும், அகநானூறும் மிகுதியாகக் குறிப்பது இங்குச் சுட்டத்தக்கதாகும்.

பரதவர் கடலில் மீன் பிடிப்பதோடு கழிகளிலும் மீன் பிடிப்பர். கழிகளிலும் சுறாமீன்கள் திரிவதுண்டு. வேறுசில மீன்களும் கழிகளில் மிகுதியாக வாழும். இக்கழிகளில் மீன் பிடிக்கும் வலைகள் கடலில் மீன்பிடிக்கும் வலைகளைவிட மாறுபட்டவை. கழிகளில் பயன்படும் வலைகளில் நேரிய சிறுகோல்களைப் பொருத்திப் பிணைப்பர். அக்கோல் வலை மடிந்துவிடாமல் விரித்துப் பிடித்திருக்கும் விரிந்திருக்கும் வலையில் மீன்களும் இறால்களும் சென்று சிக்கிக் கொள்ளும். இதனை,

''இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை

முடங்குபுற இறவோடு இனமீன் செறிக்கும்'' (அகம். 220;16-17)

என்ற பாடல் சுட்டும். இதிலிருந்து பரதவர் கடலிலும் கழியிலுமாக மீன்பிடிக்க இருவேறு வலைகளைப் பயன்படுத்தியமை தெளிவுறும்.

பறிகள்:

''பறி'' என்பதும் மீன்பிடிக் கருவியாகும். இது மீன்களை வாரி எடுக்கப் பயன்பெற்றுள்ளது. இப்பறிகளைக் குறித்து அகநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்கள் சுட்டுகின்றன. இதனை,

''பறிகொள் கொள்ளையர் மறுக உக்க'' (அகம். 300:3)

''குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்'' (பெரும். 265)

என்ற பாடலடிகள் சுட்டும். இச்செய்திகளிலிருந்து மீன்களை வாரி எடுப்பதற்குப் பயன்பட்ட கருவி பறி என்பதை அறியமுடிகின்றது. ஆனால இதன் அமைப்பைப் பற்றிய விரிவான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.

விசைத் தூண்டில்:

பரதவர் கடலில் மீன்பிடிக்க வலையைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் விசைத் தூண்டிலையும் பயன்படுத்தியுள்ளனர். இஃது இழுக்கும்பொழுது விசையுடன் வெளிப்பட்டதால் இதற்கு, ''விசைத்தூண்டில்'' என்ற பெயர் வழங்கப்பெற்றதாகக் கருதலாம். இதனை,

''... ... ... பரதவர்

வாங்குவிசைத் தூண்டி லூங்கூங் காசி'' (நற். 199:6-7)

என்ற நற்றிணையடிகள் சுட்டும்.

தூண்டில்:

தூண்டில் என்பதற்கு, மீன் பிடிக்கப்பயன்படும் தக்கை இணைக்கப்பட்ட உறுதியான இழையின் நுனியில் கொக்கிபோன்ற இரும்பு முள்ளையுடைய நீண்ட கோல் என்று தற்கால தமிழகராதி விளக்கம் கூறும். குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் மீன் பிடிக்கத் தூண்டில் என்கிற கருவி பயன்படுத்தப்பெற்றுள்ளது. கோலில் நூலைக் கட்டிப்போட்டு மீன் பிடித்தனர். இக்கருவியின் மீன்களுக்கு இரையாகிய முன்பகுதி வளைந்து கூர்மையாக இருக்கும். அதன் மேற்பகுதியில் மீன்களுக்கு இரையாகிய உணவுப் பொருட்கள் கோர்க்கப்பட்டிருக்கும். இதனைக் ''கொடுவாய் இரும்பு'' என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. இதனை,

''கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த

நெடுங்கழைத் தூண்டி னடுங்க நான்கொளீ இக்

கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்

பொதுயிரை கதுவிய போழ்வாய் வளை'' (பெரும்:284-87)

என்ற பெரும்பாணாற்றுப்படை பாடலடிகள் விளக்குகின்றது.

எறியுளி:

பரதவர் சுறாமீன் போன்ற பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு ''எறியுளி'' என்னும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். இஃது எறிந்தே பயன்படுத்தப் பெற்றதாலும், இதன் அமைப்பு உளி போன்று காணப்பெற்றதாலும் இக்கருவிக்கு ''எறியுளி'' என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ''இது படகிலிருந்து மீனின்மேல் எறிதற்குரிய கருவி என்றும், இவ்வுளி உலர்ந்த மூங்கிற்கழியின் தலையிலே கயிற்றால் யாக்கப்பட்டிருப்பது'' என்றும் உரையாசிரியர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இதனை வாழ்வியல் களஞ்சியம், ''எறிஈட்டி'' என்று குறிப்பிட்டு, இவை இரண்டு வகைப்படும் எனவும், ஒன்று கழியின் முனையில் முள்வடிவிலான அமைப்புடைய அம்பைப் போன்றது என்றும், மற்றொரு வகை முனையில் முள்ளுடைய ஈட்டி போன்றது; இதன் கைப்பிடி நீண்ட கயிற்றால் ஆனது என்றும் குறிப்பிடுகின்றது. இதில் இரணடாவதாகக் கூறப்பெறும் நீண்ட கயிற்றால் ஆனதையே பண்டைக்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். இவ் எறியுளி குறித்த செய்திகள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்கள் வாயிலாக எறியுளி என்னும் கருவி முறுக்கப்பட்ட கயிற்று நுனியில் கட்டப்பட்டு எறியப்பெற்றதாக அறிய முடிகின்றது.

குறுந்தொகைப் பாடலில் ''கொல்லுந் தொழிலிற் பொலிந்த கூர்வாய் எறியுளியைப் படக்குடைய பரதவர் சுறாமீன் மீது எறியக் கரையிலிருந்து அன்னக்கூட்டம் அஞ்சி ஓடிய செய்தி கூறப்பெற்றுள்ளது. அகநானூற்றுப் பாடலில், பரதவர் எறியுளியால் எறியப்பெற்ற பெருமீன் புண் உமிழ் குருதியால் கடல் நீரைக் களங்கப்படுத்தி, வானவில் போன்று தோன்றுமாறு விண்ணிலே தாவியபின் கடலில் வீழ்ந்து உழக்கித் தோணியின் பக்கத்தே சென்றது என்று கூறப்பெற்றுள்ளது. நற்றிணை,

''கயிறுகடை யாத்த கடுநடை எறிஉளித்

திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ'' (நற். 388;3-4)

என்று சுட்டுகின்றது. இவற்றிலிருந்து கடலில் பெரிய சுறாமீன்களைப் பிடிப்பதற்கு எறியுளி பயன்பெற்றமை விளங்கும்.

தொகுப்புரை:

பரதவ மக்களின் வாழ்க்கை முழுவதும் கடலோடும் மீன்பிடித்தலோடும் தொடர்புடையது. இவர்கள் தங்கள் தொழிலுக்கு வலைகள், பறிகள், விசைத்தூண்டில், தூண்டில், எறியுளி, ஆகிய கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுறாமீன், இறாமீன்களைப் பிடிக்க வலை பயன்படுத்தப் பெற்றிருப்பதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. கடலில் மட்டுமல்லாமல் கழிகளிலும் மீன் பிடிக்க வலை பயன்பட்டுள்ளது.

மீன்களை வாரிப் பிடிப்பதற்கு பயன்பெற்ற கருவி பறி ஆகும். ஆனால் இப்பறி எவ்வகை மீனைப் பிடிப்பதற்கு எப்பொழுது பயன்பெற்றது என்பதை அறியச் சான்றுகள் கிடைக்கவில்லை.

கடலில் மீன் பிடிப்பதற்கு விசைத் தூண்டிலையும் பயன்படுத்தியுள்ளனர். தூண்டிலையும் மீன்பிடிக்கப் பயன்படுத்தியுள்ளனர். இதனை, இலக்கியங்கள் ''கொடுவாய் இரும்பு'' என்று சுட்டுகின்றன. கடலில் மீனின் மீது எரிந்து பிடிக்கப் பயன்படுத்திய கருவி எறியுளி என்று அழைக்கப்பெற்றுள்ளது. இது பெரிய சுறாமீன்களைப் பிடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பெற்றுள்ளது.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.