LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 216 - இல்லறவியல்

Next Kural >

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின்; பயன் மரம் உள்ளூர்ப்பழுத்த அற்று - அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். ஒப்புரவு நேர்மை மிக்க செயலாதலின் அதை நயன் என்றார். நச்சு மரத்தை விலக்கப் பயன்மரம் என்றார். ஊருள் என்பது உள்ளூர் என முறை மாறியது இலக்கணப் போலி. ' ஆல் ' அசைநிலை.
கலைஞர் உரை:
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அறிவு கொண்டு உபகாரம் செய்கிறவனை விட உயர்ந்தவனாகிய அன்பு கொண்டு உபகாரம் செய்கிறவன் ஒப்புரவு எப்படி யென்றால்) அன்புடையவனிடததில் செல்வமிருந்தால், நல்ல பழந்தரக் கூடிய மரம் நடு ஊரில் பொது நிலத்தில் பழுத்திருப்பது போல் அவரவர்கள் விரும்பிய படி அவர்களுடைய தேவைகளுக்கு அதிகமாகவும் அவர்களே எடுத்துக் கொள்ள உதவும்.
Translation
A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart.
Explanation
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.
Transliteration
Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam Nayanutai Yaankan Patin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >