குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் நேரத்தில், விட்டுக் கொடுத்தல், மற்றவரிடம் உள்ள நல்ல பழக்கங்களை அறிந்து கொள்ளுதல், மற்றவர்களுக்கு கீழ்படிதல், இணைந்து விளையாடுதல், சொல்லித்தருதல், உதவுதல், போன்ற நல்ல குணங்கள் வர வாய்ப்பு அதிகம். நாம் இவற்றை வீட்டில் சொல்லிக் கொடுப்பதை விட அவர்களாகவே கற்றுக் கொள்ள இது போன்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக நல்ல பலன்களை விரைவில் கொண்டு வந்து சேர்க்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடும்பங்கள் எல்லோரும் விடுமுறையை இனிமையாகக் கழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்யலாம். இவ்வாறு ஒரு பொது இடத்தில் அனைவரும் கூடும் போது குழந்தைகள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், நட்பு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
விடுமுறை நாட்களில் குழந்தைகளை அநாதை ஆசிரமம், சேவை மையங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து, சுட்டித்தனம் செய்யும் குழந்தைகள், அடம்பிடித்து , அழுது காரியங்களை சாதித்துக் கொள்ளும் பிடிவாத குணம் கொண்ட குழந்தைகள், பணத்தின் அருமை தெரியாமலே வளரும் குழந்தைகள் ஆகியோரின் மனதை மாற்ற இது மிகவும் அருமையான, ஆக்கப்பூர்வமான வழியாகும்.
பல குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் இல்லாமல் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது அன்பும் அனுசரணையும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு நம்மால் முடிந்த பண உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்ய வேண்டும். இதனால் நம் மனதிற்கு நிம்மதி ஏற்படும். இது நமது கடமை. மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்வது உயர்ந்த வாழ்க்கை போன்ற நல்ல விஷயங்களை குழந்தைகள் அறிந்து கொள்ள இதனால் வழி ஏற்படும்.
நாம் தேவையில்லாமல் துணிகளுக்கும், விளையாட்டு சாமான்களுக்கும் செய்யும் தேவையற்ற செலவை மிச்சம் பிடித்தால் அந்தப் பணத்தில் நான்கு குழந்தைகள் ஒரு நாளைக்கு வயிறார சாப்பிடலாம் என்பதை நமது குழந்தைகளுக்கு அநாதை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலமாக புரியவைக்கலாம்.இதனால் வீட்டில் ஏற்படும் அநாவசியமான தேவையற்ற செலவுகள் குறையும். மற்ற குழந்தைகளின் தினசரி வாழ்க்கையே இவ்வளவு போராட்டமாக இருக்கிறது. இதில் நாம் ஆடம்பரமாக வாழ அநாவசிய செலவுகள் செய்வது தவறு என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
யானை சாப்பிடும் உணவானது யானையின் வாயில் செல்லாமல் சிதறி விழுகின்ற சோற்று உருண்டையால் ஆயிரக்கணக்கான எறும்புகள் பசி இல்லாமல் வாழும். இது தான் இயற்கை நியதி என்பதைப் போல வெற்று ஆடம்பரத்திற்காகவும் நாம் செலவழிப்பதில் ஒரு பகுதியை முதியோர் இல்லங்களுக்கும், குழந்தைகள் காப்பகத்திற்கும் தருவதால் அங்கே வாழ்கின்றவர்களது வாழ்க்கை ஒளிமயமாகும் என்பதை இத்தகைய விடுமுறை பயணங்கள் மூலமாக நாம் புரியவைக்க முடியும்.
|