|
||||||||
கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்! |
||||||||
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்த நாட்டின் கிராமப்புறங்களும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் போது, ஒரு நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்கிறார் நெல்லை மாவட்ட இளைஞரான பழனிராஜன். தேங்காய் ஓடுகளால் உருவான தேநீர் கோப்பைகள், பாய்களால் தயாரான கைப்பைகள், மூங்கிலால் அமைக்கப்பட்ட விளக்குகள், பனைமரச்சிறகினால் செய்யப்பட்ட சுத்திகரிப்பான்கள், தென்னை நாரில் உருவான கைவினைப் பொருட்கள் என கிராமப்புற பெண்கள் தயாரிக்கும் ஏராள பொருட்களை விற்கும் தளமான ரூரல் ஷாப் என்னும் வணிக நிறுவனத்தை வணிக நோக்கின்றி பயனுள்ள நோக்கில் உருவாக்கி இருப்பவர் பழனிராஜன். அதென்ன பயனுள்ள நோக்கு என்கிறீர்களா? இதோ அவர் சொல்லக் கேட்போம். எனது சொந்த ஊர், நெல்லை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி கிராமம். நான் படித்தது கோவில்பட்டியில். 2012-ம் ஆண்டு இன்ஜினீயரிங் முடித்தேன். முடித்தவுடன் பெங்களூருக்கு சென்றுவிட்டேன். அங்கு எனக்கு மார்க்கெட்டிங் வேலைதான் கிடைத்தது. ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் மார்கெட்டிங் பணியில் இணைந்தேன். தொடர்ந்து சீமென்ஸ் நிறுவனத்திலும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றினேன். கர்நாடகாவில் நான் செல்லும் இடத்தில் பலரும் தமிழர்கள் என்பதால் தமிழில் பேசுவோம். என் அம்மா சாம்பார் பொடி சிறப்பாக செய்வார்கள். அதனால் அடுத்த முறை சாம்பார் பொடி வேண்டுமா எனக் கேட்டேன். பலரும் தேவை என்றே கூறினார்கள். அதனால் அல்வா மற்றும் சாம்பார் பொடியை கொண்டு செல்லத் தொடங்கினேன். சொந்தமாக ஒரு சொத்து கூட இல்லையே என்கிற எனது அம்மாவின் ஏக்கத்தைப் போக்க முடிவு செய்தேன். அப்போது தான் எங்கள் ஊரில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழு பற்றி தெரிய வந்தது. அவர்கள் செய்யும் பொருட்களை எங்களுக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது அவர்கள் தயாரிக்கும் பல பொருட்களுக்கு சந்தையில் தேவை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதனால் இதற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கினால் என்ன என்பதை யோசித்தேன். அதன் எதிரொலியாக, பார்த்து வந்த வேலையை 2017-ம் ஆண்டில் விட்டுவிட்டேன். சிறிய அளவில் நான் தொடங்கிய வலைத்தள வியாபாரத்தை ’ரங்கோலி டாட் காம்’ என்னும் பெயரில் தொடங்கினேன். அப்போது தான் மதுரையில் இயங்கிய "நேட்டிவ் லீட்" எனும் அமைப்பு வாயிலாக நிறுவனம் என்றால் என்ன, வியாபார யோசனைகள், முதலீட்டை எப்படிப் பெறுவது, எப்படி விற்பனை செய்வது போன்ற பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். "நேட்டிவ் லீட்" அமைப்பின் மூலமாக பிரபாகரன் முருகையா என்பவருடன் தொடர்பு கிடைத்தது மட்டுமின்றி, அவர் மூலமாக அலுவலகம் அமைக்கவும் வாய்ப்பு கிடைத்தது. பெயர் உலக அளவில் தெரிய வேண்டும் என நினைத்ததால் ரூரல் ஷாப் என்றே மாற்றினேன். அதுமட்டுமல்ல, நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடங்கி, பல மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்டறிந்து அவர்கள் தயாரிக்கும் பொருட்களை எங்களுக்கு ஏற்றவாறு மாற்றித்தரச் சொன்னோம். எப்படி எனக் கேட்கலாம். பத்தமடைப் பாய் பிரசித்தி பெற்றது. அவர்களைப் பாய் மட்டுமின்றி வித்தியாசமான முறையில் கைப்பை தயாரிக்கச் சொன்னோம். தெரிந்த தொழில் ஆனால் வடிவம் வேறு. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு கிராமப்புற தொழில் முனைவோருக்கு உற்சாகமும் ஏற்பட்டது. பலருக்கு புதிதாகப் பயிற்சிகள் வழங்கினோம். கன்னியாகுமரி, தூத்துக்குடி கடலோரப் பகுதிகள் என்பதால் அங்கு கிடைக்கும் சிப்பிகளில் வண்ணம் தீட்டி, அதனை விற்பனை செய்வதற்கு வழி வகை செய்து தந்தோம்.
தற்போது சுமார் 2,000 பொருட்களின் பட்டியல் எங்களது தளத்தில் உள்ளது. மேலும் புதிய பொருட்களை இணைக்கத் தொடங்கி இருக்கிறோம். விவரம் அறிந்தவர்கள் தாங்களாகவே எங்களுடன் இணைகிறார்கள். நாங்களும் எங்களுக்குத் தெரிந்த கைவினைப் பொருட்களை இணைத்து வருகிறோம். இணைப்பதற்கு நாங்கள் விதிக்கும் முக்கியமான நிபந்தனை என்னவெனில், பொருள் பெரிய இயந்திரங்கள் மூலம் அல்லாமல் கைகளில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதே. www.Ruralshop.com தளத்தில் பல வகையான இயற்கைப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளன. தேங்காய் ஓட்டில் இருந்து செய்யப்பட்ட தேனீர் கோப்பைகள், பாய் கொண்டு செய்யப்பட்ட கைப்பைகள், மூங்கில் விளக்குகள், பனைமரச்சிறகு சுத்திகரிப்பான்கள், கைவினைப்பொருட்கள் எனப் பல பொருட்கள் விதம்விதமான வகைகள் உள்ளன. ரூ.50 முதல் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. இப்போதைக்கு எங்களுக்கு உள்ள முக்கியமான சவாலுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அது என்ன நீங்கள் கேட்பது புரிகிறது. ஒருவருக்கே 5 பொருட்கள் தேவைப்படும். ஒன்று மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். பிற மாவட்டத்தில் உருவான பொருட்கள் மற்றவை எனில், 5 பொருட்களும் ஒரு இடத்தில் இருந்தால் மட்டுமே அனுப்புவது சாத்தியம் ஆகும். எனவே எங்களிடத்தில் அதிகம் விற்பனையாகும் பொருட்களை நாங்களே அதிகமாக வாங்கி வைத்துக்கொள்கிறோம். ஆரம்பத்தில், எங்களுக்கு ஆர்டர் வரும் பட்சத்தில் பொருள் உருவாக்குபவர்களுக்கு சொல்லிவிடுவோம். அவர்கள் பார்சல் செய்து அனுப்புவார்கள். ஒருவர் ஐந்து வேறுவிதமான பொருட்களை ஆர்டர் செய்தால் ஐந்தும் தனித்தனியாகத்தான் டெலிவரி செய்யப்படும் சூழல் இருக்கிறது. முடிந்தவரை ஒரே இடத்திற்குக் கொண்டு வருகிறோம். இப்போதைக்கு திருநெல்வேலியில் இருந்தே நிறுவனத்தை நடத்தி வருகிறோம். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பல பகுதிகளை சேர்ந்த பொருட்களை மட்டுமே இணைந்து இருக்கிறோம். இன்னும் பல மாவட்டங்களில் பிரத்யேகமான பொருட்கள் உள்ளன. அவற்றையும் இணைக்க வேண்டும். கடந்த சில மாதங்களில் சீரான வளர்ச்சி இருந்தாலும் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. மேலும் பல பொருட்களை இணைக்க வேண்டும், விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் பல குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், நிதி திரட்ட வேண்டும், குழுவின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. தற்போது கைத்தொழில் முனைவோருக்கு ஒரு மாதப்பயிற்சி இலவசமாக அளித்து வருகிறோம். அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகை செய்வதே எங்கள் நோக்கம். தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து வருவதால் மற்றவர்களைத் தொடர்பு கொள்வது மிகவும் எளிதாகி வந்தாலும் கூட கிராமப்புற வளர்ச்சிக்கு அரசும் உதவ வேண்டும். உதாரணமாக பத்தமடைப் பாய் தொழில் குறைந்து வருகிறது.அதனை ஊக்குவிக்க வேண்டும். சிறு, குறு தொழில்கள் எனப் பிரித்து வங்கிக்கடன் வழங்குகின்றனர். கடன் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒருபுறம் உதவினாலும் மறுபுறம் அவர்கள் உருவாக்கும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவ வேண்டும். ஒவ்வொரு பகுதியிலுமே அரசுக்குச் சொந்தமான இடங்கள் இருக்கும். அதனைக் கைவினைப் பொருட்களைப் பாதுகாத்து வைத்து விற்பனை செய்வதற்குத் தரலாம். இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வளரும். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர முடியும். கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் உயரும். ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு பழனிராஜன் கூறினார். இவரது வலைத்தள முகவரி: www.Ruralshop.com
வலைத்தமிழுக்காக சிறப்பு நேர்காணல் செய்தவர் :கவிஞர்.மணிபாரதி |
||||||||
by Swathi on 17 Feb 2019 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|