|
||||||||
வனத்துக்குள் தமிழ்நாடு |
||||||||
வனத்துக்குள் தமிழ்நாடு அறிமுகம்: மரங்கள் இல்லையேல் மனிதன் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு மனிதனுடைய வாழ்க்கையில் மரங்கள் முக்கியமான பங்கை வகிக்கின்றன. அத்தகைய சிறப்பு மிக்க மரங்கள் தமிழ்நாட்டில் தற்போது மனிதனாலும், மற்ற இயற்கை சீற்றத்தாலும் அழிந்து வருகின்றன. அழிந்து வரும் மரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மரங்கள் நிறைந்த வனமாக மாற வேண்டும் என்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சோலைவனமும் ஒன்றாகும். அந்த ‘சோலைவனம்’ அமைப்பின் தோற்றம், செயல்பாடுகள் குறித்து இங்குக் காணலாம். சோலைவனம்: மரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தால் இணைந்த குழுவே ‘சோலைவனம்’ என்ற அமைப்பாகும். இது தமிழ்நாடு முழுக்க தன் கிளைகளைப் பரப்பி பசுமையாக்கிக் கொண்டு இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி இவ்வமைப்பு இயங்குகிறது. பல துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுடைய அலுவல் பணிகளின் மத்தியிலும் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ ‘சோலைவனம்’ சார்ந்த பணிகளையும் செய்து வருகின்றனர். கலங்க வைத்த கஜா புயல்: கஜா புயலானது டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது நாம் அறிந்ததே. கோடிக்கணக்கான மரங்களை காற்றுடன் கொண்டு போனது கஜா புயல். அந்த பகுதிகளை மீட்டுக் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளில் சோலைவனமும் ஒன்றாகும். ஒரு புறம் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்றாலும், மற்றொருபுறம் இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் சோலைவனம் செயல்பட்டது. அந்த வகையில் 13000 மரங்களை நட்டது. நாட்டு மரங்கள்: பணப்பயிர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். நாட்டு மரங்களை அனைவரும் வளர்க்க வேண்டும். தேற்றான் கொட்டை மரம், கருங்காலி, பாலா மரம், கொடுக்காப்புளி மரம் போன்ற மரங்களை அழிவின் விளிம்பில் நிறுத்தி விட்டோம். இவை அனைத்தும் நமக்கு நன்மை அளிக்கக் கூடிய மரங்கள்.
கருங்காலி மரம் இடியைத் தாங்கும் தன்மை கொண்டது. கொடுக்காப்புளியைப் பயன்படுத்திய வரை சர்க்கரை வியாதியே தமிழக மக்களுக்கு கிடையாது. பாலா மரம் பெண்களைக் காக்கும் உலக்கை செய்யப் பயன்படுத்தப்பட்டது. தேற்றான் கொட்டை நீரைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய மரங்களை மீட்டு வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் சோலைவனம் செயல்படுகிறது. செயல்பாடுகள்: வீரியமிக்க விதைகளைத்தேடி அலைந்து கண்டுபிடித்து அவற்றை வளர்ப்பது சோலைவனத்தின் செயல்பாடாகும். மரத்தில் அறையப்பட்ட ஆணிகளை நீக்குவது, மரத்தை வெட்டாமல் வேரோடு வேறொரு இடத்திற்கு நகர்த்துவது போன்ற பணிகளைச் செய்து வருகிறது. எந்த வகை மண்ணில் எத்தகைய மரங்களை வளர்க்கலாம், எப்படி வளர்க்க வேண்டும் போன்ற முறைகளையும் கற்றுத் தருகிறது. விதைகள் தேவைப்படும் இடத்திற்கு விதைகளை அனுப்புவது, ஏரிக் கரைகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் அனுமதியுடன் மரங்களை நடுவது போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. குறுங்காடுகள்: குறைந்த இடத்தில் அடர்த்தியான மரங்களை வளர்ப்பது ‘குறுங்காடுகள்’ ஆகும். ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டு வளரக் கூடிய மரங்களைக் குறுங்காடுகளில் வளர்க்க வேண்டும். அவ்வாறு குறுங்காடுகள் அமைக்கும் போது 50 சதவீத மரங்களையும், 50 சதவீத செடி, கொடிகளையும் வளர்க்க வேண்டும். அப்போது தான் செடி, கொடிகள் இலைகளை உதிர்க்கும் போது அவை உரமாக மரங்களுக்குப் பயன்படும். எதிர்கொள்ள இருக்கும் இலக்குகள்: மலை சார்ந்த பகுதிகளில் ஆங்காங்கே விதை வங்கிகள் அமைத்து, என்ன வகையான மரங்கள் எங்கே காணப்படுகிறது போன்றவை தொழில்நுட்ப ரீதியாகப் பதிவு செய்து, இதற்கான இணையதளத்தை உருவாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது, மேலும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் மற்ற தன்னார்வ அமைப்புகளையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் சோலைவனம் செயல்படுகிறது. இந்த அமைப்பில் முழு சுதந்திரம் உண்டு. யார் வேண்டுமானாலும் எளிதில் இணையலாம். அது மட்டுமில்லாமல் இதில் பயனும், அனுபவமும் பெற்றவர்கள் தாங்களாகவும் முழு முயற்சியில் ஈடுபடலாம்.
|
||||||||
by Lakshmi G on 28 Nov 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|