பத்து, பன்னிரண்டு அகவையில் பம்பரம் விளையாடி இருக்கிறீர்களோ?
("அட நீங்க ஒண்ணு, யாருங்க இப்பவெல்லாம் பம்பரம் விளையாடுறா?
இப்போதுதான் எங்கு பார்த்தாலும் மட்டையும் பந்துமா, ஆங்கிலக் கிட்டிப்புள் அல்லவா ஆடுகிறார்?
எத்தனை இளையருக்கு நாம் பம்பரம் சொல்லிக் கொடுக்கிறோம்? " - என்கிறீர்களோ? "நீங்கள் சொல்வதும் சரிதான், மொத்தத்தில் இன்னொரு பண்பாட்டுச் சின்னம் போயே போச்சு!")
பம்பரத்தை நூலோடு பிணைத்து சொடுக்கித் தரையில் குத்தும் போது, அது 4 விதமான இயக்கங்களைக் காட்டும்.
முதலில், கூரான அச்சில் இருந்தவாறே தன்னைத்தானே பம்பரம் உருட்டிக் கொள்ளும். (பம்முதல் = நூலோட்டுதல்)
2 ஆவதாகத் தரையில் பரவி (பம்புதல் = பரவுதல்) ஒரு முழு வலயமோ, பாதி வலயமோ போடும்.
இதுபோக 3 ஆவது இயக்கமும் காட்டும். கிறுவாட்டம் (gyration) எனும் இந்த இயக்கத்தை வாழ்வின் பலகாலங்களில் பார்த்துள்ளோம். கீழே விவரமாகப் பார்ப்போம்..
4 ஆவது இயக்கம் தலையாட்டுவது; அதை நெற்றாட்டம் (nutation) என ஆங்கிலத்தில் குறிப்பர்.
சில போதுகளில் தலை கிறுகிறுக்கிறது என்கிறோம் அல்லவா? குறிப்பாக உருளைக் கூட்டைகளில் (roller coaster) ஏறி இறங்கிச் சுற்றி விளையாடி முடிந்தபின் ஏற்படுகிற கிறுகிறுப்பு இக் கிறுவாட்டத்தால் ஏற்படுகிறது. (கிர்ரென்று சுற்றுகிறது, கிறுவுதல், கிறுக்கு, கிறுக்காட்டம், கிறங்கு, கறங்கு போன்றவை இதனோடு தொடர்புடைய சொற்கள்.)
ஊரிலே தென்னம் பாளையைக் குடத்திலிட்டு அம்மனுக்கு மதுக் குடம் எடுக்கிறார்; இதுபோல முருகனை நினைந்து பழனிக்குப் பால்குடம், காவடியாட்டம் எடுத்துப் போகிறார்; இப்பொழுதுகளில் சிலருக்கு மெய்ம் மறந்த நிலையில் கிறுவாட்டம் வருகிறது; தன்னினைவு உள்ளபோது ஆடமுடியாத இக்கிறுவாட்டம் மெய்ம்மறந்து முருகனை நினைக்கும் போது தன்னுளே ஈடுபட்டுச் சட்டென வந்துவிடும். அதில் ஏதோ ஒரு துரித கதி, தாளக் கட்டு, மொத்தத்தில் ஒரு கிறுகிறுப்பு. இக் கிறுகிறுப்பிலும் குடம் கீழே விழாது நிற்கிறது. காவடி அசராது நிற்கிறது.
கிறுவாட்டத்தில் கூடக்குறையத் தலையாட்டுவதைத் தான் நெற்றாட்டம் என்று சொல்லுகிறோம். (நெற்று = nut, இந்த nut -ல் இருந்துதான் nucleus, nuclear science எல்லாம் பிறந்தன. தமிழில் நெற்றுழை என்ற சொல்லே nucleus என்பதை மிகச் சரியாகக் குறிக்கும். தேங்காய் நெற்றை எண்ணிப்பார்த்தால் பொருத்தம் புலப்படும். நெற்றுழை அறிவியல் = nuclear science. நெற்றுவதைத் தான் பேசும் தமிழில் நொட்டுவது என்கிறோம்.)
சூரியனைச் சுற்றி வரும் புவியும் தன்னுருட்டல், வலைத்தல், கிறுவாடல், நெற்றாடல் என 4 இயக்கங்கங்களைக் காட்டுகிறது.
புவியின் தன்னுருட்டு நமக்கு ஞாயிற்றின் ஒளி கூடிக் குறைந்து காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், விடியல் என்ற சிறு பொழுதுகள் வாயிலாகத் தெரிகிறது,
புவியின் வலையம் நமக்கு ஞாயிற்றின் வலயமாகத் தெரிகிறது. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்ற காலங்களாகப் பெரும் பொழுதுகளை உணருகிறோம்.
இந்த ஞாயிற்றின் வலயத் தோற்றத்தைத்தான் புறநானூறு 30-ல், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும் போது சொல்லுவார்:
"செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே"
"எப்படி, எப்படி?"
" நேரே சென்று அளந்து அறிந்தாற் போல".
"செலவு என்றது செல்லப்படும் வீதியை (path); பரிப்பு (speed) என்றது இத்தனை நாழிகைக்கு இத்தனை யோசனை செல்லும் எனும் இயக்கத்தை (motion); மண்டிலம் என்றது வட்டமாதலின் ஈண்டு நிலவட்டத்தைப் பார்வட்டம் என்றார்" என்று உரைகாரர் சொல்லுவார். நாம் என்னடா என்றால், அறிவியலைத் தமிழில் சொல்ல வழியில்லை என்கிறோம்.
மறுபடியும் பம்பரத்துக்கு வருவோம். எடைகுறைந்த பம்பரத்தின் கிறுவாட்டம் சிறுநேரத்தில் முடிவதால் நம் கண்ணுக்கு உடனே தெரிந்து விடுகிறது; தவிரவும் நாம் பம்பரத்தின் மேல் வாழவில்லை. புவியின் கிறுவாட்டம் நமக்குச் சட்டெனப் புரிவதில்லை. ஏனெனில் நாம் புவியின் மேலேயே இருக்கிறோம்; தவிர, புவியின் எடை மிகப் பெரியது. வெறுமே பின் புலத்தை மட்டுமே பார்த்து மிகவும் மெதுவான கிறுவாட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது சரவலாகிறது. இதை ஆண்டின் 2 நாட்களில் மட்டுமே ஆழப் புரியமுடிகிறது. அது எப்படி?
ஒவ்வொரு பருவகாலத்திலும் பகலும் இரவும் ஒரே பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீள்கிறது; வாடையில் இரவு நீள்கிறது. ஆனாலும் ஆண்டில் 2 நாட்கள் மட்டும் பகலும் இரவும் ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என மேலையர் அழைக்கிறார்.
இளவேனில் தொடக்கத்தில், கிட்டத்தட்ட மார்ச்சு 21/22-ல் ஏற்படும் ஒக்க நாள் பசந்த ஒக்க நாள் [வடமொழியில் வசந்த ஒக்கநாளென்று இச்சொல் மாறும். பசந்த இருது> வசந்த ருது; இருது = 2 மாதம். பசந்தம் எனும்பொழுது இயற்கை பச்சையாடை போடத் துவங்கி விட்டது என்று பொருள். பச்சை, பசலை, பசிதல், பசந்தம் போன்றவை ஒருபொருட்சொற்கள். ஆங்கிலத்தில் இந்நிகழ்வை spring equinox என்பர்.]
கூதிர்காலத் தொடக்கத்தில் ஏறத்தாழ செப்டம்பர் 22/23 -ல் ஏற்படும் ஒக்க நாள் கூதிர் ஒக்கநாள் [இலைகள் கூய்ந்து (குவிந்து) கொட்டத் தொடங்கும் காலம் கூதிர் காலம்; இக்காலத் தமிழில் நீட்டிமுழக்கி இலையுதிர் காலம் என்போம். கூதிர் என்றாலே போதும். இலைகள் கழன்று சொரிவதால் இதைச் சொரிதற் காலம் என்றும் சொல்லலாம். சொரிதல் இருது>சரத் ருது என வடமொழியில் திரியும். ஆங்கிலத்தில் autumn என்பர்]
பசந்த ஒக்கநாளை மேழ விழு என்றும், கூதிர் ஒக்கநாளை துலை விழு என்றும் வானியல் வழி சொல்லுகிறோம். அதை உணரப் புவிவலயம் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும்.
புவிவலயம் ஓர் இயல்வட்டமல்ல. அது நீள்வட்டம். ஓர் இயல்வட்டத்திற்கு ஒரு கூர்ந்தம் (centre) மட்டுமே உண்டு. ஆனால், நீள்வட்டத்திற்கு 2 கூர்ந்தங்கள் குவியமாக (focus) உண்டு. 2 கூர்ந்தங்களில் ஒன்றில்தான் சூரியன் இருக்கிறது. மற்றது வானவெளியில் வெறும் புள்ளி. அங்கே எந்தத் தாரகையோ, கோளோ கிடையாது.
இந் நீள்வட்டத்தில் செல்லும் புவியிலிருந்து சூரியனின் தூரத்தை அளந்தால், ஓரிடத்தில் அதிகத் தூரமாயும் இன்னொரிடத்தில் குறை தூரமாகவும் அமையும். கூடிய தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாள் பனி முடங்கல் (முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல்) என்கிறோம். இது திசம்பர் 22-ம் நாள் ஆகும்.
அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாள் வேனில் முடங்கல் (வேனில் = வெய்யிற் காலம்.) இது சூன் 22ம் நாள்.
பனி முடங்கலில், இரவுநேரம் கூடியும், வேனில் முடங்கலில் பகல்நேரம் கூடியுமிருக்கும். இந்த 2 முடங்கல்களுக்கும் இடையே ஆண்டின் 2 நாட்களில் தான் ஒக்கநாட்கள் வருகின்றன. இன்னொரு விதமாயும் ஒக்க நாட்களைப் புரிந்து கொள்ளலாம். சூரியனின் சுற்றுத்தளம் புவியின் நடுக்கோட்டு வரையை வெட்டும்புள்ளிகள் விழுக்களென ஏற்கனவே கூறினோம் அல்லவா? அவ்விழுக்கள் தான் இந்த ஒக்கநாட்கள். ஒக்கநாட்களில் சூரியனைப் பார்க்கும் போது பின்புலமாகத் தெரியும் நாள்காட்டு, ஓரையின் மூலம் ஒரு மெதுவான இயக்கம் புலப்படும். [மறந்து விடாதீர். நாள்காட்டுக்களும் ஒரைகளும் (இராசிகளும்) வெறும் பின்புலங்களே.]
இன்றைக்கு பசந்த ஒக்கநாளின் போது தெரிகிற பின்புலம் மீன ஓரையாகும். அதுவும் அஃகர ஓரைக்குச் (aquarius) சற்றுமுந்தைய சில பாகைகளில் உள்ள நிலை. (அஃகு = நீரூற்று. அஃகு>aqua; இலத்தீனிலிருந்து பல சொற்கள் இந்தையிரோப்பிய மொழிகளில் இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ளன.) இன்னும் பத்தே ஆண்டுகளில் பசந்த ஒக்க நாள் மீன ஓரையும் அஃகர ஒரையும் கூடும் சந்திப்பிற்கு வந்துசேரும்.
அதேபோல் கூதிர் ஒக்கநாளில் இன்று தெரியும் பின்புலம் கன்னி ஓரை. ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் துலை ஓரை இருந்தது. இனிவரும் 10 ஆண்டுகளுக்குப் பின் மடங்கல் ஒரை (ஆளி ஓரை = leo) வந்து சேரும்.
இந்திய வானியல் அக்கால அறிவின் தொடக்கத்தை இன்னும் மறவாது, பழம் நினைப்பில் பசந்த ஒக்க நாளை மேழ விழு (மேஷாதி என்று வடமொழியில் கூறுவர்) என்றும் கூதிர் ஒக்க நாளை துலைவிழு என்றும் கூறி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒக்கநாள் சிச்சிறிதாய் முன்நகர்ந்து கொண்டுள்ளது. இதை முன்செலவம் (precession; precede = முன்செல்லு) என்கிறோம். ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரைக்கு முன்வந்த ஒக்கநாள் இன்று மார்சு 21/22-இலேயே நிகழ்கிறது. மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று மீனத்தில் விழுகிறது. கூடிய விரைவில், இன்னும் பத்தாண்டுகளில், கி.பி. 2012 - ல் அஃகர ஓரையில் விழும். அப்படி விழும்போது, புதிய உகத்திற்கு (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga in Sanskrit) நாம் போகிறோம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்.
மொத்த முன் செலவம் முடிய கிட்டத்தட்ட 25800 ஆண்டுகள் ஏற்படும்.. அளவு கோல்கள் நுணுக நுணுக இவ்வியக்கத்தின் நடவுகாலம் துல்லியப்பட்டு வருகிறது. 25800 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஓர் ஓரையில் (உகத்தில்) 25800/12 = 2150 ஆண்டுகள் என்ற பருவ காலம் அமையும்.
ஏசு பெருமான் பிறந்ததற்கு உலகம் எற்றுக் கொண்ட ஆண்டில் இருந்து (இப் பிறந்த நாளே ஆய்வின்பின் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அவர் பிறந்தது 29 சூலை கி.மு. 7 என விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு விவரங்களை வானியலோடு பொருத்தி "Magi - The quest for a secret tradition" என்ற நூலில் Adrian G. Gilbert என்பார் நிறுவுவார்.) 148 ஆண்டுகளின் முன் ஒக்கநாள், மேழத்தைத் தாண்டியிருக்க வேண்டும். அதற்கும் 2150 ஆண்டுகளின் முன் மேழத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.
ஏசுவின் காலத்தில் இரட்டை மீன் அடையாளம் கிறித்தவர்களைக் குறிக்கப் பயன்பட்டது தமிழ் வரலாற்றிலும் இரட்டைமீன், இணைகயல் எனக் குறிக்கப் பட்டு பாண்டியரின் சின்னமானது. இவையெலாம் உகப்பொருத்தம் பற்றியே. மீன உகத்திற்கு முன்னிருந்த ஆட்டையுகம் பற்றித் தான் ஆடு>ஆண்டு என்ற சொல் பிறந்தது. ஆட்டையின் மறு பெயரே மேழம். மேழத்திற்கும் முன் இருந்தது விடை யுகம்.
உகம் உகமாகக் காலம் போய்க் கொண்டுள்ளது. இதோ நேற்றுத்தான் நாம் பிறந்தது போல இருக்கிறது; இன்றோ நம் பிள்ளைகள்; நாளை நம் பெயரர்; அதற்குப்பின் கொள்ளூப் பெயரர்; பின் எள்ளுப் பெயரர். மொத்தத்தில் மாந்த வரலாறு உகங்களால் கணிக்கப் படுகிறது.
காலப் பரிமானங்கள் பலவிதமாக வெளிப்படும். ஆண்டுகள் ஒரு தலை முறையைக் குறிக்கவும், உகங்கள் வாழையடி வாழையைக் குறிக்கவும் பயன்படுகின்றன. போன அதிகாரத்தில் ஆண்டைப் பார்த்தோம். இந்த அதிகாரத்தில் உகங்களைப் பார்க்கிறோம்.
பாவலர் ஏறு பெருஞ் சித்திரனார் காலங்களின் நகர்ச்சி பற்றி ஒரு சுவையான பா இயற்றியுள்ளார். இது அவரின் நூறாசிரியத்தில் எட்டாவது பாவாக வரும்.
---------------------------------------------------------
வலிதே காலம்
வலிதே காலம்; வியப்பல் யாமே!!
முலைமுகம் பதிய மாந்திப் பாஅல்
ஒழுக வாய்வாங்கி "ஊ, ஆய்" என உமிழ்ந்து
தந்தை கழிநகை பெறக் காட்டி, இழிந்து
குறுநடந்தும் ஒடியும் முதுகு இவர்ந்து ஓச்சியும்
நெருநல் ஓவத்து நினைவு அழியாமே,
பார்த்த மேனி படர நடை நெற்றி
ஆடு சிறுகால் அதைந்து உரம் ஏற
மெலிந்த புன் மார்பு பொலிந்து வலியக்
குரல் புலர்ந்தே அணல் தாவ
உளை பொதிந்து கழுத்து அடர
வளை மாதர் மனம் மிதிப்பத்
திமிர்ந்து எழுந்து நின்றார்க்குப்
பணைந்து எழுந்த இணை நகிலம்
குறு நுசுப்புப் பேர் அல்குல்
வால் எயிற்றுக் கழை தோளி
முனை ஒருநாள் வரைக் கொண்டு
மனை தனி வைக்க என் சிறுமகன் தானும்
பெறல் தந்த பெரு மகன் உவக் காண்,
திறல் நந்த யாங்கு இவன் தேடிக் கொண்டதே!
- நூறாசிரியம் - 8
பொழிப்பு:
வலிவுடையது காலம்; வியப்புறுவோம் யாம்! தாயிடத்து முலையின் மிசை, குழவியின் முகம் முற்றும் பதியும் படி பாலை வயிறு முட்ட அருந்தி, அஃது ஒழுகிக் கொண்டிருக்கும் படி தன் வாயை மீட்டு வெளியெடுத்தும், "ஊ, ஆய்" என உமிழ்ந்து, தன் தந்தை பெருநகை செய்யுமாறு காட்டி, எம் மடியின் நின்று இறங்கிக் குறுகிய அடிகள் சார்ந்த நடை இட்டும், சில பொழுது ஓடியும், சிலகால் தன் தந்தையின் முதுகின் மிசை ஏறி, அவரைக் குதிரையாக எண்ணி ஓச்சியும் நின்ற, நேற்றையப் பொழுதின் ஓவியம் எனப் பதிந்த என் நினைவுகள் அழியாமல் நிற்கவும், யாம் பார்த்து மகிழ்வுற்ற மேனி படர்ந்து பொலியவும், நடை தடுமாறி அடி நின்ற சிறிய கால்கள் விம்மிப் புடைத்து உரம் ஏறி நிற்கவும், மெலிந்து நின்ற சிறிய மார்பு அழகு பெற, வலிவு பெற்று நிற்பவும், குரல் தடிப்பவும், முக வாயினும் தாடையினும் அடர்ந்த மீசையும் தாடியும் தாவி நிற்பவும், தலை மயிர் அடர்ந்து, வளர்ந்து கழுத்தை அளாவி நிற்பவும், உடல்கட்டு மிகுந்து வளர்ச்சியுற்று நிற்கவும் செய்தானுக்குப் பருந்து விம்மி இணைந்து நின்ற முலைகளும், குறுகி ஒடுங்கிய இடைகளும், அகன்ற இடைக்கீழ் கடிதடமும், வெள்ளிய எயிறும், மூங்கில் போன்ற தோள்களும் கண்டாள் ஒருத்தியை, முன்னைய ஒரு நாள் மணங் கொண்டு, தனி மனையில் வதியும் படி வைக்க, எம் சிறு மகனாகிய அவன் தானும் பெற்றுத் தந்த பெருமை பொருந்திய தன் மகனை உதோ, இவன் காண்! தன்க்குற்ற திறமை நிறையும் படி அவ்வாற்றலைத் தேடிக் கொண்டது யாங்ஙன்?
விரிப்பு:
இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.
தன் மகனின் குழவிப் பருவத்தையும், அவன் விரைந்து வளர்ந்து இளைஞனாகி மணம் புரிந்து, ஈண்டொரு மகனுக்குத் தந்தையாகி நின்ற காலத்தையும் கண்ட தாய் ஒருத்தி, வன் இத்திறம் பெற்றது எங்ஙனோ என வியந்து கூறியதாக அமைந்தது இப்பாட்டு.
இது தாயொருத்தித் தன் தாய்மையுள்ளத்தால் தன் மகன் பெற்ற பிள்ளையைக் கண்டு மகிழ்ந்து கூறிக் காலத்தை வியந்தது.
இஃது இல்லிருந்து மனையறாம் பூண்ட தன் மகன் திறம் உரைத்ததாகலின் முல்லையென் திணையும், கிளந்த தமர் வயின் நற்றாய் கிளத்தல் என் துறையுமாம்.
காலத்தின் பெரிய பரிமானம் பார்த்தோம்.
அன்புடன்,
இராம.கி.