அமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர் குறித்து தகவல்கள் கிடைத்து உள்ளன.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னராஜ் (வயது 46). இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணத்தில் விவசாயத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2000ம் ஆண்டில் முதுகலைப் படிப்பை முடித்து விட்டு, அமெரிக்கா சென்ற அன்னராஜ் தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். விவசாயத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டதனது வீட்டருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து தானே உழவு பணிகளை மேற்கொண்டார். அதில் கீரை வகைகள், முள்ளங்கி, பீன்ஸ், சோயா, தக்காளி, சுரைக்காய் போன்ற அன்றாட வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்.
மேலும் அதிகமாக உள்ள காய்கறிகளை அமெரிக்காவில் தனது வீட்டருகே வாழும் தமிழர்களுக்கும் கொடுத்து வருகிறார். இதற்காக தனியாக வாட்ஸ் அப் குரூப் ஒன்றைத் துவங்கி காய்கறிகளை விற்பனை செய்தும் வருகிறார்.
இதுகுறித்து அன்னராஜ் கூறுகையில், "நான் அமெரிக்காவுக்கு சென்று 18 ஆண்டுகள் ஆகின்றன. தமிழகத்தில் கிடைக்கும் பல காய்கறிகள் அங்கு கிடைப்பது இல்லை. இதற்காக விவசாயத்தில் இறங்க முடிவு செய்தேன். வார விடுமுறை நாட்களிலும் காலை, மாலை வேளைகளில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி கிடைக்கிறது" என்றார்.
|