LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாட்டின் வரிகள் மற்றும் செலுத்தும் முறை...!

தமிழ்நாட்டின் வரிகள் மற்றும் செலுத்தும் முறை...!

     சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக ஒரு  நபர் அல்லது நிறுவனம்  வசிக்கும் இடத்தை நிர்வகிக்கும் அரசு வரியை விதிக்கும். நிலம், நிலத்தில் உள்ள தென்னை, மா, பலா போன்ற மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் எனப் பல தரப்பட்ட சொத்துக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.

     தமிழ்நாடு அரசில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றிற்குச் செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது.

சொத்து வரி சீர்திருத்தம் :-

     தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்துவரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வந்தது. 1998 ஆம் ஆண்டு “தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி (விதிப்பு கணக்கீடு மற்றும் வசூல் பற்றிய) விதிகள்” என்கிற புதிய வரி மூலம் சொத்து வரி சீர்திருத்தம் செய்யப்பட்டது. இந்த சொத்து வரி, சொத்துக்கள் அமைந்துள்ள பகுதியுடன் இணைந்த  மதிப்பின் அடிப்படையில் அமைந்ததாகும்.

சொத்து வரியின் உட்கூறுகள் :-

     ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அடிப்படை வரி என்பது அந்தந்த கட்டிடத்தின் பயன்பாட்டுத் தன்மையையும், அக்கட்டிடத்தின் பயன்படுத்தும் பரப்பையும் பொருத்தது.

     கட்டிடத்தின் ‘அடிப்படை வரி’ என்பது ‘ஒரு சதுர அடிக்குக் குறிப்பிட்ட தொகை’ எனக் குறிக்கும். இதற்குக் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை வரிகளைத் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரி ஆகியவற்றுக்குட்பட்ட  ஒரு அடிப்படை வரி அளவினை உள்ளாட்சி மன்றங்கள் தீர்மானம் செய்து கொள்ளலாம்.

     கட்டிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அக்கட்டிடத்தின் கட்டுமானத்தின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் “கூடுதல் வரி விதிப்பாகச்” செய்யப்படும்.

     இக்கூடுதல் வரி, அடிப்படை வரியின் அளவில் தமிழ்நாடு அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்த மற்றும் அதிகபட்ச அளவுகளுக்குட்பட்டு ஏதேனும் ஒரு சதவிகிதத்தை உள்ளாட்சி மன்றம் தீர்மானம் செய்யலாம்.

     தமிழ்நாடு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த மற்றும் அதிகபட்ச வரி வரம்புகளுக்கிடையே உள்ளாட்சி மன்றத்தால் தீர்மானம் செய்யப்பட்ட அடிப்படை வரியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கட்டிடத்தின் வயதினை (ஆண்டினை) கணக்கில் கொண்டு கட்டிடத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த வரியிலிருந்து குறைத்து, நிர்ணயம் செய்யப்படும்.

     இவ்வாறு கட்டிடத்திற்கு வரியளவில் குறைத்து நிர்ணயம் செய்யும் முறை பொது வரிச்சீராய்வு மேற்கொள்ளப்படும் பொழுது மட்டுமே பொருந்தும்.

     ஆனால் புதிய கட்டுமானங்களுக்கு இவ்வாறு குறைவு செய்யப்படுவதில்லை இவ்வாறு கட்டிடத்தின் வயதினைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அடிப்படை வரியிலிருந்து குறைத்து மீதி வரப்பெறும் மொத்தத் தொகையே அரையாண்டுக்குரிய சொத்து வரியாகும்.

பயன்படுத்தும் பரப்பு :-

     பயன்படுத்தும் பரப்பு என்பது நிலத்தின் மீது ஒரு கட்டிடத்தின் சுவர்கள் நின்றுள்ள பரப்புத் தவிர மீதமுள்ள கட்டிடப் பரப்பின் மொத்த இடமாகும். கட்டிடத்தின் எல்லா தளங்களிலும் உள்ள கட்டிடத்தின் மொத்த பயன்படுத்தும் தரையின் அளவு (அனைத்துப் பயனுள்ள இடங்கள்) இதில் அடங்கும்.

     கட்டிடத்தின் பரப்பைக் கணக்கிடும் போது படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ள இடம் ஒரே ஒரு முறை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அடிப்படை வரி :-

     கட்டிடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப ஒரு சதுர அடிக்குரிய குறைந்த மற்றும் அதிகபட்ச அடிப்படை வரியைத் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது.

பயன்பாட்டின் அடிப்படையில் கீழ்க்கண்ட வகையாகக் கட்டிடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. இருப்பிடக் கட்டிடங்கள்

2. நிறுவனங்களாகவும், அலுவலகங்களாகவும் பயன்படுத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள்

3. வணிக வளாகங்கள்

4. தொழில் நிறுவனக் கட்டிடங்கள்

இருப்பிடக் கட்டிடங்கள் :-

     மக்கள் வசிப்பதற்காகப் பயன்படும் கட்டிடங்கள் அல்லது வசிப்பிடங்களாகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்களின் பகுதிகள் “இருப்பிடக் கட்டிடங்கள்” எனப்படுகிறது.

நிறுவனங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் :-

     அலுவலகங்களை அமைக்கவும், நிறுவனங்களின் அலுவலக உபயோகத்திற்குப் பயன்படும் கட்டிடங்கள் அல்லது கட்டிடங்களின் பகுதிகள் ‘நிறுவனங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள்’ எனப்படும்.

வணிக வளாகங்கள் :-

     வணிகம் செய்யவோ, தொழில் செய்யவோ அல்லது வணிகம் சார்ந்த ஏதேனும் செயல்பாடுகளைச் செய்யவோ பயன்படும் கட்டிடங்கள் அல்லது கட்டிடப் பகுதிகள் ‘வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்கள் அல்லது வணிக வளாகங்கள்’ எனப்படும்.

     இவற்றில் சாலையோர உணவு விடுதிகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் வங்கிகள் ஆகியன அடங்கும்.

தொழில் நிறுவனக் கட்டிடங்கள் :-

     தொழில்கள் செய்வதற்குரிய நோக்கங்களுக்காகப் பயன்படும் கட்டிடங்கள் மற்றும் கட்டிடங்களின் பகுதிகள், “தொழிற்சாலைகள், பொருட்கள் உற்பத்தி செய்யும் இடங்கள்” எனப் பொருள்படும். இதில் தொழிற்கூடங்களும் அடங்கும்.

அடிப்படை வரியில் கூடுதல் விகிதம் :-

     அடிப்படை வரியில் கூடுதல் விகிதத்தைத் தீர்மானிப்பதற்காக, கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிகள் கீழ்க்காணும் வழியில் வகைப்படுத்தப்படுகிறது.

1. சாலைகள்

2. கட்டிடங்கள்

சாலைகள் :-

உள்ளாட்சி அமைப்பின் எல்லைப் பகுதியில் உள்ள சாலைகளைக் கொண்டு கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

     1. முக்கிய சாலைகள், முதன்மைச் சாலைகளையும், முக்கியச் சாலைகளையும் இணைக்கும் பேருந்துத் தடச் சாலைகள்

மேலே 1-ல் குறிப்பிட்ட சாலைகள் தவிர்த்த பேருந்துத்தடச் சாலைகள்

     2. மக்கள் வசிக்குமிடங்களாகிய முதன்மைக் குடியிருப்புகளில் உள்ள சாலைகளும் தெருக்களும்.

முக்கியச் சாலைகள் :-

     முக்கியச் சாலைகள் என்றால் பெருநகர் மற்றும் நகரின் பெரும்பகுதிக்குள் தொடர்ச்சியாகச் செல்லக்கூடிய முதன்மையான பொது வழிகள் என பொருள்படும்.

முதன்மைச் சாலைகள் :-

     உள்ளாட்சி மன்றம் தீர்மானித்தற்கேற்ப “முதன்மைச் சாலைகள்” என்பது பெருநகரம் மற்றும் சந்தைப் பகுதிகள், முக்கியக் கடைத் தெருக்கள் உள்ள பகுதிகளில் செல்லும் ‘முக்கிய பொது வழிகள்’ எனப் பொருள்படும்

பேருந்துத் தடச் சாலைகள்:

     பேருந்துத் தடச் சாலைகள் என்றால் பொது பேருந்துகள் வழக்கமாகச் சென்று வரும் சாலைகள் எனப் பொருள்படும்.

கட்டிடங்கள் :-

     ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கப்பட்டவை

     பதப்படுத்தப்பட்ட கான்கிரீட் மற்றும் சிமெண்ட் கூரை அமைக்கப்பட்டவை மற்றும் சிமெண்ட் தரை உடையவை.

     பதப்படுத்தப்பட்ட கான்கிரீட் மற்றும் சிமெண்ட் கூரை மற்றும் ஒரு பகுதி அல்லது முழுவதுமான மொசைக் தரை அமைக்கப்பட்டவை.

     கிரானைட் மற்றும் செராமிக் ஓடு அல்லது சலவைக் கல்லால் தரையும், ஒரு பகுதி அல்லது முழுவதும் சுவரும் அமைக்கப்பட்டவை.

அடிப்படை வரியில் சலுகை :-

     கட்டிடம் கட்டப்பட்ட ஆண்டினை (கட்டிடத்தின் வயதினை) கணக்கில் கொண்டு ‘வயதுக்கான சலுகை’ கட்டிடத்தின் வயதுக்கேற்ப, அடிப்படை சொத்து வரியில் தள்ளுபடி செய்யப்படலாம்.

     ஐம்பது ஆண்டுகளும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளும் ஆன பழமை வாய்ந்த கட்டிடங்கள்

     முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 49 ஆண்டுகளுக்குட்பட்ட பழமை வாய்ந்த கட்டிடங்கள்

     இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 29 ஆண்டுகளுக்குட்பட்ட பழமை வாய்ந்த கட்டிடங்கள்.

சொத்து வரி கணக்கிடும் முறை :-

ஒரு கட்டிடத்திற்குச் சொத்து வரி கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.

     அரசு நிர்ணயித்தபடி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விகிதங்களுக்குட்பட்டு மன்றத் தீர்மானத்திற்கிணங்கவும் கட்டிடப் பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொண்டு கட்டிடத்தின் அடிப்படை வரி கணக்கிடப்பட வேண்டும்.

உதாரணமாக:-

                (க) அடிப்படை வரி + கட்டிடத்தின் அடிப்படை வரி x கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் அடிப்படை வரி விகிதம் =  இ என்க+(க) அடிப்படை வரி + கட்டிடத்தின் அடிப்படை வரி கட்டிடத்தின் கட்டுமான வகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் வரி விகிதம் =  உ என்க

     மூன்றாவதாக, மேற்கண்ட மொத்த வரித் தொகையில், கட்டிடத்தின் வயதுக்காக, அடிப்படை வரியில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விகிதங்களுக்குட்பட்டு மன்றத்தால் தீர்மானம் செய்யப்பட்டதில் ஒரு சதவிகித கணக்கிட்டு அதனைக் கழித்துவிட்டால் வரும் தொகையே அந்த அரையாண்டில், செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியாகும்.             இக்கட்டிடத்திற்கு வரி விதிப்பிற்குத் தகுதியான காலியிடம் ஏதும் அருகிலிருந்தால் அல்லது சுற்றிலும் இருந்தால் அக்காலியிடத்திற்கும் வரியைக் கணக்கிட்டு இரண்டையும் சேர்த்து வரும் வரியே அந்த சொத்துக்கான அரையாண்டு சொத்து வரியாகும்.

உதாரணம்:-

கட்டிட அடிப்படை வரி  X வயதுக்கான சலுகை விகிதம் =  எ என்க

அதாவது கட்டிடத்தின் அரையாண்டு சொத்து வரி என்பது

அ + இ + உ - எ எனும் கட்டிடத்தின் வயதுக்கான சலுகை

     கட்டிடத்திற்குச் சுற்றிலும் அருகிலும் காலிமனை இருந்தால் அந்தக் காலிமனையையும் வரிவிதிப்புக்குப்படுத்தப்படும். இதை ஒ என்க.

சொத்து வரி நிர்ணயிக்கும் போது கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்க வேண்டும்.

அ + இ + உ - எ + ஒ

காலிமனைக்கு வரிவிதிப்பு :-

1. உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைக்குட்பட்ட விவசாய விளைநிலமற்ற எந்த ஒரு காலிமனைக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலர் அல்லது ஆணையாளர், மன்றம் நிர்ணயம் செய்யும் வரி வீதத்திற்கு ஏற்ப வரி விதிப்பு செய்யலாம்.

2. குறைந்த பட்சமாக ஒரு சதுர அடிக்கு 10 பைசாக்கள் முதல் அதிகபட்சமாக, சதுர அடிக்கு 30 பைசாக்கள் வரை மன்றம் இந்த வரி வீதத்தை நிர்ணயம் செய்யலாம். கட்டிடங்களைப் போலவே காலி மனைகளுக்கும், கட்டிடத்தை ஒட்டி வரையறுக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக அமைந்த காலியிடத்திற்கும் அவைகள் அமைந்த பகுதிக்கேற்ப வரி விதிப்பில் கூடுதல் வரி விகிதம் கணக்கிடப்பட வேண்டும்.

3. கட்டிடங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரமே காலியிடங்களுக்கும் பொருந்தும். ஒரு கட்டிடத்திற்கு அருகில் மிக அதிகமான காலி இடமிருந்தால், நிர்வாக அலுவலர் அல்லது ஆணையாளர் காலியிடப் பரப்பில் மொத்த நிலப்பரப்பில், கட்டிடத்தின் தளப்பரப்பின் அளவு போன்று 3 மடங்கு பரப்பளவினைத் தவிர்த்து எஞ்சியுள்ள காலியிடத்திற்கு வரி விதிப்பு செய்ய வேண்டும்.

4. பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடமில்லாத காலி மனைகட்கு எந்த வீதத்தில் வரிவிதிப்பு செய்யுமோ அதே வீதத்தில் இப்படிப்பட்ட காலி மனைகளுக்கும் வரிவிதிப்பு செய்யலாம்.

     பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சி எல்லைக்குட்பட்ட விவசாய விளைநிலத்திற்காகப் பயன்படுத்தும் நிலத்திற்குச் சொத்து வரிவிதிப்பு செய்யக்கூடாது. இந்த நிலங்களுக்கு வருவாய்த்துறையில் நிலத்தீர்வை செலுத்தப்பட்டு வருகிறதா எனச் சோதித்து அதனடிப்படையில் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

சொத்து வரி செலுத்தும் முறை :-

     உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைக்குட்பட்ட நிலம் அல்லது சொத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்போர் ஒவ்வொரு முதல் அரை ஆண்டின் தொடக்கத்திலிருந்து முதல் இரண்டு மாதங்களுக்குள் (அதாவது முதல் அரை ஆண்டில் ஏப்ரல் முதல் நாள் முதல் மே 31 ஆம் நாள் வரையிலும், இரண்டாவது அரை ஆண்டில் அக்டோபர் முதல் நாள் முதல் நவம்பர் 30 ஆம் நாள் வரை) சொத்து வரியைச் செலுத்த வேண்டும். காலம் கடந்து செலுத்தப்படும் வரித்தொகைக்கு மன்றம் தீர்மானித்துள்ளபடி தண்டத்தொகை சேர்த்துச் செலுத்த வேண்டும்.

சொத்து வரி செலுத்தும் முறை :-

1. உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகத்திலும் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சொத்து வரி செலுத்தும் இடங்களிலும் பணமாகவோ அல்லது பணவிடையாகவோ செலுத்தலாம்.

3. வெளியூர்களிலிருந்து அனுப்பப்படும் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

3. சொத்து வரிக்காகச் செலுத்தும் காசோலைக்குரிய பணம் வங்கியில் செலுத்தப்பட்டு பணமின்றி திரும்பினால் திருப்பி அனுப்பப்பட்ட காசோலை ஒன்றிற்கு ரூபாய் ஐம்பது தண்டத்தொகையாக வசூலிக்கப்படும்

4. குறிப்பிட்ட உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஒழிய வங்கி வாயிலாக எந்தத் தொகையும் செலுத்தக் கூடாது.

5. ஒவ்வொரு அரை ஆண்டிற்கும் தனித்தனியாகக் கேட்பு அறிக்கை அளிக்கப்பட மாட்டாது.

சொத்து வரி செலுத்த விலக்களிக்கப்பட்டவை :-

கீழ்க்காணும் கட்டிடங்கள் மற்றும் நிலங்கள் சொத்துவரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவை.

1. பொதுமக்கள் மற்ற எவ்வித நோக்கத்துக்குமின்றி பொது வழிபாடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இடங்கள்.

2. வாடகை வசூல் செய்யப்படாத தர்ம சத்திரங்கள் மற்றும் அவ்வாறு வாடகை வசூலிக்கப்படும் தொகையைத் தர்ம நோக்கங்களுக்காக முற்றிலும் பயன்படுத்தும் வாடகை வாங்கும் சத்திரங்கள்.

3. மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் கட்டிடங்கள் மற்றும் மாணவர்கள் கல்வியின் பொருட்டு தங்கும் விடுதிகள், ஆதரவற்றோர், விலங்குகள் மற்றும் அனாதைச் சிறுவர்கள் தங்குவதற்கென்று தர்ம நோக்கங்களுக்காகக் கட்டி விடப்பட்ட இடங்கள், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்குக் கட்டப்பட்ட பள்ளிகள் மற்றும் கருணை இல்லங்கள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் தங்குவதற்குரிய ஆசிரமங்கள் மற்றும் இதுபோன்ற தர்ம நோக்கத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள்.

4. 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால மற்றும் வரலாற்றுச் சின்னங்கள், தொல்பொருட்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் சாதனங்கள் சட்டம் மற்றும் 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால மற்றும் வரலாற்றுச் சின்னங்கள், தொல்பொருட்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் சாதனங்கள் சட்டம் 1904 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இச்சட்டங்களின்படி அறிவிப்பு செய்யப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் சாதனங்கள் மற்றும் தொல்பொருட்கள் அமைந்துள்ள இடங்களும் அதன் பகுதிகளும், அப்பகுதிகளில் அமைந்துள்ள பொது அலுவலகங்களும் மற்றும் குடியிருப்பு இல்லங்களாகப் பயன்படுத்தாத பகுதிகள்.

5. தர்ம சேவைக்காகப் பயன்படுத்தப்படும் மருத்துவமனைகளும் சிறு மருந்தகங்களும் (இவற்றிற்கருகிலுள்ள குடியிருப்பு இல்லங்களையும், அதனைச் சார்ந்த இடங்களையும் இந்த இனத்தின் கீழ் சேர்க்கக் கூடாது.)

     பல்வேறு காலக் கட்டிடங்களில் மாநில அரசால் அறிவிப்பு செய்யப்பட்டதும், இரயில்வே நிர்வாகத்தால் பயன்படுத்தக் கூடிய மருத்துவமனைகள் மற்றும் அவற்றைச் சார்ந்த சிறு மருந்தகங்கள்.

(இவற்றிற்கருகிலுள்ள குடியிருப்பு இல்லங்களையும், அதனைச் சார்ந்த இடங்களையும் இந்த இனத்தின் கீழ் சேர்க்கக் கூடாது.)

     உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்களுக்கேற்ப அவற்றால் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளில் உள்ள இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகள்.

     கால்வாய் அல்லது ஆற்றுப்படுகை, அரசுக்குச் சொந்தமான ஆனால் அரசுக்கு எவ்வித வருவாயும் ஈட்டித் தராத எந்த ஒரு ஆறோ அல்லது கால்வாயோ பொழுது போக்கிற்காக ஒதுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான இடம் அல்லது அரசுக்குச் சொந்தமான கட்டிடமாகவோ, நிலமாகவோ இல்லாத பல்வேறு காலகட்டங்களில் அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட இடங்கள்.

( சட்டம் மற்றும் விதிகளில் கூறப்பட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காகச் சேவைக் கட்டணம் மற்றும் வாடகை செலுத்தி எந்த ஒரு நபராலும் பயன்படுத்தக் கூடிய அரசுக் கட்டிடமாகவோ அல்லது இடமோ சொத்து வரி செலுத்தாமல் இருக்கக் கூடாது. அத்தகைய கட்டிடத்திற்கோ அல்லது இடத்திற்கோ சொத்து வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டதாக மேற்சொன்ன விதிமுறைகளில் கூறப்படவில்லை)

வரி மதிப்பீடு :-

     பேரூராட்சியாக இருந்தால் நிர்வாக அலுவலரும், நகராட்சி அல்லது மாநகராட்சியாக இருந்தால் ஆணையாளரும் சொத்து வரிக்கான மதிப்பீடு செய்து அதற்கான ஆணையை அளிக்கிறார்கள். இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நிலம் அல்லது கட்டிட உரிமையாளர்கள் அதற்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும்.

வரி மேல் முறையீட்டுக் குழு :-

     சொத்து வரி விதிப்பு ஆணையைப் பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள் அந்த ஆணையின் மீது திருப்தி அடையாத நிலையில் வரி மேல் முறையீட்டுக் குழுவிடம் மேல் முறையீட்டு மனு அளிக்கலாம். வரி மேல் முறையீட்டுக் குழு பேரூராட்சி,  நகராட்சி மற்றும் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி வரி மேல் முறையீட்டுக் குழு :-

     மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களிலிலிருந்து, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மன்ற உறுப்பினர்கள், வரி மேல் முறையீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தக் குழுவிற்குத் தலைவராகப் பேரூராட்சி மன்றத் தலைவரே இருப்பார்.

நகராட்சி வரி மேல் முறையீட்டுக் குழு :-

     ஒவ்வொரு நகராட்சியிலும் நகர்மன்றத் தலைவர் வரி மேல் முறையீட்டுக் குழுவின் தலைவராக இருப்பார். இந்தக் குழுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களிலிருந்து நான்கு உறுப்பினர்கள், வரி மேல் முறையீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மாநகராட்சி வரி மேல் முறையீட்டுக் குழு :-

     ஒவ்வொரு மாநகராட்சிக்கும் மாநகராட்சி வரி மேல் முறையீட்டுக் குழுவிற்கு ஒரு சட்டத்துறை அலுவலர் அல்லது உரிமையியல் நீதிமன்ற நடுவர் தலைவராக இருப்பார்.

வரி மேல் முறையீட்டுக் குழுவில் பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் , நகராட்சி ஆணையாளர் , மாநகராட்சி ஆணையாளர் உறுப்பினராக இருப்பதில்லை.

வரி மேல் முறையீட்டுக் குழுவின் பணிகள் :-

     தமிழ்நாடு அரசு வகுத்தளித்துள்ள விகிதங்களுக்கேற்ப வரி மேல் முறையீட்டுக் குழு தனது கடமைகளைச் செய்து வரிகளைக் குறைக்க இயலும்.

வரி மேல் முறையீட்டுக் குழு முடிவுக்கு எதிர் மனு :-

     வரி மேல் முறையீட்டுக் குழுவின் முடிவுக்கு எதிராக மனுச் செய்ய விரும்புபவர்கள் அதற்கான மனுவை வரி மேல் முறையீட்டுக் குழுவின் ஆணைகள் கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இப்படி மேல் முறையீடு செய்யப்படும் நிலையில், வரி மேல் முறையீட்டுக் குழுவில் கட்ட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட வரித் தொகையையும், வைப்பு நிதியாக பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்திய பின்னரே மாவட்ட நீதிமன்ற நடுவரால் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆதாரம் :-

     தமிழ்நாடு அரசு வெளியிட்ட தமிழ்நாட்டின் புதிய சொத்து வரிச் சீர்திருத்தத்தின் சிறப்புக் கூறுகள் கையேடு (வெளியீடு-1998).

 

by   on 08 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.