நாம் விளையாட்டிற்காக அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய செலவழிப்பது மிகவும் உயர்ந்தசெயல். நமது உடனடித் தேவைகளை விட மற்றவர்களின் பசியை , கண்ணீரைப் போக்குவது மிகவும் உயர்ந்த செயல் என்பதை இதன் மூலமாக குழந்தைகளுக்கு எளிதாக கற்றுக் கொடுங்கள்.
தன்னிடம் இருக்கின்ற ஒரு பொம்மையை வசதி குறைந்த அல்லது பெற்றோரை இழந்த மற்றொரு குழந்தைக்கு கொடுப்பதன் மூலமாக சேவையின் பெருமையை நமது குழந்தை கற்றுக் கொள்கிறது.
செலவழிப்பதற்கு முன் அதன் அவசியம், வறுமையைத் தாங்குதல், தேவையைக் குறைத்தல், போன்ற குணங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ள அவர்களை நாம் சமூகசேவைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமுதாயம், கவனிக்கப்படாதவர்கள், வசதி வாய்ப்புக்களைப் பெறாதவர்கள், கல்வி அறிவு பெறாதவர்கள், வயதானவர்கள், பெற்றோர்களினால் ஒதுக்கப்பட்ட குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புப் பெறாத குழந்தைகள், வயதானவர்கள் என்று பலதரப்பட்ட மக்களை அவர்கள் சந்திக்கும் போது வாழ்க்கையின் பலவிதமான சூழ்நிலைகளையும், துன்பங்களையும், தொல்லைகளையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.இதன் மூலமாக நாம் இவர்களை விட நல்ல நிலையில் இருக்கிறோம். நமக்கு உதவி செய்ய பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். நாம் மிகவும் அதிருஷ்டம் செய்தவர்கள். நம்மிடம் இருக்கின்ற வசதிகளை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். இவற்றை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். இல்லாதவற்றை பெரிதாக நினைத்து சலிப்படைவதோ, எரிச்சல் அடைவதோ, குறை கூறுவதோ அல்லது துன்பப்படுவதோ, அதற்காக குடும்பத்தில் சச்சரவு செய்வதோ கூடாது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.
நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் எனவே நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு உடலாலும், பொருளாலும், பணத்தாலும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவர்களது மனத்தில் ஆழமாகப் பதியும். இது குழந்தைகள் வளர வளர தானும் வளர்ந்து அவர்களை பெரிய சேவைகளில் ஈடுபட்டு செயலாற்ற வைத்துவிடும்.
எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் ஏழைகளுக்கு, முதியோர்களுக்கு, ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்யும் போது உதவி பெற்றவர்களின் முகம் மகிழ்ச்சியால் மலரும். அதை பார்க்கும் போது நமது மனமும் மகிழ்ச்சி அடையும். இதை ஒரு முறை ஓரு குழந்தை அனுபவித்து விட்டால் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான விலைமதிப்பே இல்லாத நேரம் அது தான் என்பதை தெரிந்து கொள்ளும். அதற்குப் பிறகு அந்தக் குழந்தை தன்னால் முடிந்த உதவிகளை தேவைப்பட்டவர்களுக்குச் செய்யத் தயங்காது.
உங்களது தகுதிக்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் ஒரு சேவை மையத்தையோ அல்லது அநாதை விடுதியையோ தேர்வு செய்து குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். இதனால் அந்த விடுதியில் உள்ளவர்கள் பயனடைவதோடு, உங்கள் குழந்தைகளும் மிகுந்த பயனடைவார்கள். அவர்கள் விலைமதிக்க முடியாத வாழ்க்கைப் பாடங்களை விளையாட்டாகக் கற்றுக் கொள்வார்கள்.இதனால் நீங்கள் வசிக்கும் சமுதாயத்திற்கும் நன்மைகள் ஏற்படும். உங்களைப் பார்த்து மற்ற குடும்பத்தினரும் இந்த நல்ல வழியைப் பின்பற்ற வாய்ப்புக்கள் உருவாகும்.
|