LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சு.மு.அகமது

உலர்ந்த பொழுதுகள் - சு.மு.அகமது

மனைவியை மட்டுமே புணரும் ஆண்களின் கூட்டம் மிகுதியான நகரமாக அது இருக்க வாய்ப்பேயில்லை.தெருவோரங்களில் கிடக்கின்ற எறும்புகள் சுவைத்து விட்ட விந்தணுக்களின் மிச்சங்களைச் சுமந்து சிதறிக்கிடக்கும் பல நிறத்து ஆணுறைகளே புதிதாய் அங்கு வருபவர்களுக்கு அதை எடுத்து கூறிவிடும்.

ஆபாசத்திரைப்படத்தின் சுவரொட்டியில் நடிகையின் மார்பகத்தை மறைக்க ஒட்டப்பட்டிருக்கும் திரையரங்கின் பெயர் சிட்டையை கிழித்து எதையோ காண விழைபவர்கள் அதிகம் போலும்.சுவர் சரியாக அந்த இடத்தில் வெளியே தெரிந்தபடி இருந்தது.

இருள் கவ்விய அறையினுள் அடைந்துக்கிடந்தவனுக்கு சுவரிலே ஒட்டிக்கொண்டிருந்த பல்லியின் நகப்பிடிப்பு உறுதி போல் ’அந்த’ நினைப்பு அப்பிக்கொண்டது.மிக அருகில் யாரோ புணரும் வாசம் நாசிக்குள் லேசாய் நுழைய, சப்தமில்லா அந்த இரவின் வெளியிலே புணர்தலும் புணர்தல் நிமித்தமாய் அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

                            

மூன்று நாட்களுக்கு முன்பு தான் பாசனத்திற்காய் தேக்கி வைத்திருந்த பேந்தமங்கலம் ஏரி நிரம்பி வழிவதாயும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியின் கரை உடையும் அபாயம் இருப்பதாயும் செய்திகள் வெளியாகியிருந்தது.

இவன் செருப்பணியாத வெறுங்காலோடு ஆற்றோரம் நடந்து கொண்டிருக்கிறான்.காலை நேரத்திலேயே ஆள் நடமாற்றமற்று வெறிச்சோடி கிடந்தது ஆறு.பரந்த மணல்வெளி. கொருக்கந்தட்டுகளின் காய்ந்த இலைச்சருகுகள் லேசாக ஏற்படுத்தின சலசலப்பை தவிர இரண்டொரு சிட்டுக்குருவிகளின் ‘கீச்கீச்’ தான் எங்கும் பரவிக் கிடந்தது.நெடுங்காலமாய் ஆற்றிலே நீர்வரத்தில்லாமல் மணல் மீது  தூசி

 

படிந்து கிடந்தது.ஒருவித அசூசையான நெடி இவன் மூக்கை துளைத்துக்கொண்டு ஊடுறுவியது.

கொருக்கன் புதரிலிருந்து ஒரு நாய் எதையோ கவ்விக்கொண்டு மணலில் பரபரவென்று ஓடியது.சிறிது தூரமே ஓடிய அந்த நாய் தன் வாயிலிருந்ததை கீழே விட்டுவிட்டு “லொள்லொள்’ என்று குரைத்தபடியே திரும்பி ஓடி வர ஆரம்பித்தது. இரண்டடி எடுத்து வைத்து பின்பு திரும்பி எதிர் திசை நோக்கி மீண்டும் குரைத்தபடியே கரைக்கு திரும்பி வந்தது.

அப்போது தான் இவன் அதை உணர்ந்தான்.மணலின் நறநறக்கும் சத்தம். கூடவே ஆற்று மணல்வெளியில் கொப்பரையில் காய்ச்சப்படும் வெல்லப்பாகு நிறத்தை போன்ற குமிழிகளை  உடைத்தபடி வெளியாகும் திரவத்தையும் கண்டான். அதோடு அது ஏற்படுத்தின நாசிக்கு உகாத வாசனை வேறு.நாற்றத்தின் மேலோங்கல் இவனுள் ஒரு இரசாயனக் கலவையை உண்டாக்கி அடிவயிற்றிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்து நின்று மீண்டும் உள்ளேயே சென்றது.

இவனுக்கு வயிற்றினுள் புரட்டல் ஏற்பட்ட போது தான் அது நிகழ்ந்தது.

ஆற்றிலே வெள்ளம் ஏற்படும் அபாயத்தை அறிவித்தன பறந்து பறந்து கீச்சிட்ட வால்குருவிகள்.விநோதமான முன்பு எப்போதும் கண்டிராத  பூச்சியினங்கள் பறப்பதும் ஊர்வதுமாய் கரை நோக்கி வேகமாய் வருவதை கண்டவனின் மனம் கலக்கமுற்றது.நீளமான பாம்பு ஒன்று  மெதுவாக மணலில் ஊர்ந்து கரை தொட்டுவிட முன்னெறிக்கொண்டிருந்தது.

தூரத்தில் செந்நிறமாய் ஆற்றிலே நீர் வருவது கண்களுக்கு தெரிந்தது.மனதிலே அச்சத்தின் சாயல் படர்ந்து பரவியது. முன்னெப்போதும் கண்டிராத காட்சிகளால் கலக்கமுற்றவன் வேகமாக மேடான பகுதிக்கு சென்று நின்று கொண்டான்.

தண்ணீர் வந்தது.  அழுக்கேறிய பஞ்சுப்பொதிகளை போன்ற பெரிய நுரைத் திட்டுகளை ஏந்தி.மேகக்குவியல் போலும் சிதறிய நுரைக்கங்குகளாயும் அனல் கக்கியவாறு சரசரத்தபடி முன்னேறிக்கொண்டிருந்தது ஆறு.

 

நுரை தளும்ப முன்னேறும் ஆற்றின் அக்கரையில் தூரமாய் இசக்கிமுத்துவின் ’தண்டோரா’ ஒலித்தது.

எச்சரிக்கை.

மனித குலம் எவ்வளவு தான் முன்னேற்றமடைந்து எச்சரிக்கையாய்  இருந்தாலும் இயற்கையின் சீற்றத்துக்கு முன்பு ஏதும் செய்வதற்கு இயலாது போய் தோற்பதை வெள்ளநீரின் அளவு பெருகப்பெருக அதில் மிதந்து வந்தவைகள் நிரூபித்தன.

பெட்டி படுக்கைகள் ஆடு மாடுகள் ஓலைக்குடிசையின் மேற்கூரைகள் என சொல்லில் சிக்காத பொருட்களெல்லாம் மிதந்து வந்தன. இவனுக்கு நேராக நேர்க்கோட்டில் நெருங்கி வேகமாக கடந்து புள்ளியாய் மறைந்தபடியிருந்தன.

தண்டோரா ஒலித்தபடியே இருந்தது.

ஊருக்கு அருகில் மக்கள் திரள ஆரம்பித்திருந்தனர். கரையிலிருந்தபடியே நீண்ட மூங்கில் வாரைகளையும் கயிற்றையும் கொண்டு வெள்ளத்தில் மிதந்தவைகளை கரை சேர்ப்பதில் மும்முரமாய் இயங்க ஆரம்பித்தது ஒரு குழு.எங்கும் மனிதக்கூவல்கள்.

தண்டோரா ஓய்ந்திருந்தது.

இவன் நின்றிருந்த இடமோ ஊருக்கு வெகு தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்ததால் எந்தவித ஆரவாரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாது இயற்கையின் ஒலிக்கலவை மட்டுமே விரவியிருந்தது.சற்று நேரம் நின்றபடி இருந்தவனின் கைகளில் பரபரப்பு.ஏதாவது செய்ய வேண்டுமென்ற உத்வேகம்.ஆனால் ஏதோ ஒன்று அதை தடுப்பதாய் உணர்ந்தான்.அதனால் அமைதியாய் நின்றிருந்தான்.

வெள்ளப்பெருக்கு அதிகமாக அதிகமாக நீர்மட்டம் உயர்ந்து இவன் நின்றிருந்த இடத்தை தொட வேகமாய் நெருங்கி வந்தது.நெருங்கி வந்த ஆற்றுநீர் எலிப்பொந்து போன்ற குழிக்குள் வேகமாக நழுவி நிரம்ப ஆரம்பித்தது.நீர் நுழைந்த சற்றைக்கெல்லாம் கருநீல நிறமோ கருஞ்சாம்பலோ கொண்ட நிறத்தில் நனைந்து போன நீளமான பாம்பு

 

அதிலிருந்து வெளிப்பட்டு வெள்ளப்பெருக்கில் ஐக்கியமானது. நீர்பரப்பின் மீது மிதந்த அதன் உடல் சூரிய ஒளியில் தகதகத்தது.பிடறியில் தெரிந்த வரிவடிவம் அதை நாகம் என்பதாய் அடையாளப்படுத்தியது.

பயமும் பதற்றமும் இவனுக்குள் குடிகொண்டன.இன்னும் வேறு எதாவது கரையை தொட முயற்சிக்கலாம் என்ற எண்ணமெழ அந்த  இடத்தை விட்டு எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தான்.கொருக்கம் புதரில் சலசலப்பு கேட்டது.நரியாய் இருக்க வாய்ப்பில்லை.இதற்கு மேல் நண்டு பிடிக்க வரலாம்.

புதரின் அருகே சென்றான்.

நையப்புடைத்து உமி அகற்றிய வெந்நெல்லரிசி போன்ற நிறத்தில்    இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணின் ஆடை மேலேறின  அரை நிர்வாண உடல் கிடந்தது அங்கு.

பாவப்பழம் உண்ணாத நிர்வாணத்தை கண்டுணராத  ஆதிமனிதனின் மனநிலையை ஒத்தவன் இவன்.இவனுக்குள் எந்தவித சலனமும் ஏற்படவில்லை.எதுவும் புரியாத நிலையில் முழு உடலையும் கண்களால் ஆராய ஆரம்பித்தான்.

வலது பாதத்தில் நெருஞ்சி முள் குத்தி நிலைத்திருந்தது.கெண்டைக்காலில் லேசான கீறல்.அதில் மெல்லிய இரத்தக்கோடு கருஞ்சிவப்பாய் பொங்கி காய்ந்திருந்தது.கைகளில் இறுகப்பற்றியிருந்த கொருக்கஞ்சருகுகள். தொடையிடுக்கில் பிறப்புறுப்பிலிருந்து வழிந்திருந்தது வெந்நிறக்கோடு.அதன் மீது  கற்றையாய் அப்பியிருந்தது கட்டெறும்பு கூட்டம்.மார்பின் மேடான பகுதி அசைவற்றிருந்தது.கண்களின் இமைகள் பாதி மூடின  நிலையில் இருந்தன.

பார்த்தபடியே நின்றிருந்த அவனுக்கு அந்த உடலின் மீது பரவிக்கிடந்த வன்புணர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து தெரிந்திருக்கவில்லை. அமைதியாய் நின்றிருந்தான். இவன் இப்படியே இருந்து விடுவானா?

அங்கிருந்த உடலின் நிலை உலகுக்கு நிகழ்ந்தேறியிருந்த விபரீதத்தை வெளிச்சமிட்டாலும் இச்சையறியாத புரியாத மனதுடைய அவனது பார்வை

 

மறுபடியும் மார்பின் மேடான பகுதியின் மீது படர்ந்தது.மனதுள் சிறு சந்தேகத்துளி துளிர்த்தது.உடலின் வித்தியாசத்தை உணர ஆரம்பித்தான்.ஏதோ உந்துதலில் தன்னுடைய உடல் மறைக்கப்பட்டிருப்பதை போல அந்த உடலும் மறைக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்க மேலேறியிருந்த உடையை கீழிறக்கினான்.அவனது புறங்கை வயிற்றுப்பகுதியில் பட்ட போது சில்லிட்டிருந்தது உடல்.

ஆதிமனிதனின் இச்சையை கிளறின பழம் பற்றி இவன் அறிந்தானில்லை. அனிச்சையாய் நிகழ்ந்தேறிய நிகழ்வின் தொடரிணையாக தான் இந்த பிரபஞ்சம் பல்கி பெருகியிருக்க வேண்டும்.அனிச்சை இச்சையாய் மாறி பின்பு தேவையாய் பரிணாமம் பெற்ற நிகழ்வில் வன்முறையால் அதை கைக்கொள்ளும் நிலைக்கு மனித குலம் தள்ளப்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ? இவன் ஆதிமனிதன்.பரிணாமங்களின் வளர்ச்சியையும் மீறி நின்று நிலைத்துவிட்ட ஆதியன்.அனிச்சையான நிகழ்வு மட்டுமே இவனுள் இச்சையை புகுத்தி இவனை தேவைக்கு  அடிமையாக்க முடியும். அடிமையாகும் முதற்படியில் காலடியெடுத்து வைக்கக்கூடிய சிலிர்ப்பான உணர்வு தனக்குள் எழுவதை உணர முடிந்தது அவனால்.

தன்னிலை மறந்த இவனது உடலில் வேதியியல் மாற்றம் இயல்பாய் உருவெடுக்க அதன் ஈரக்கசிவில் காமம் பிறப்புறுப்பு வழி பெருகுவதை அவனால் அடக்க முடியாத நிலையில் கீழே கிடந்த உடலை பார்த்தான்.

உயிரற்ற பெண்ணுடல்.

இவன் கண்களால் துழாவினான்.அதன் நிலைக்குத்தி போயிருந்த வெறித்த கண்கள்.அந்த கண்களின் வெறுமை இவனுள் பயக்களறியை பாய்ச்சியது.இவன் பார்வையை விலக்கிக்கொண்டான்.

எதிரிலிருந்த மேட்டுப்பகுதி முட்புதரின் மறைவில் சென்று நின்றான்.உடலின் உஷ்ணப்பந்து எழும்பியெழும்பி அடங்கியது.கைகளில் நடுக்கத்தை துல்லியமாய் கண்ணுற முடிந்தது அவனால்.ஆவலின் அடக்கலை துவக்கும் முன்னரே தனக்கு பின்னால் சரசரவென மணல் சரியும் ஓசை கேட்டு திரும்பி பார்த்தான்.

 

வெள்ளப்பெருக்கு கரை மணலை அரித்தபடி வேகமெடுத்து முன்னேறி உயிரற்ற அந்த பெண்ணுடலை மெதுவாக சரித்து ஈரமாக்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டது.

 

அதீத ஈரப்பரவுதலால் கட்டியிருந்த  லுங்கி நனைந்திட, எரிச்சல் மிகுந்த அரிப்பால் இவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து அமர்ந்தான்.அறையின் சுவற்றில் இன்னும் தொற்றிக்கொண்டிருந்த பல்லிகள் கண்களில் தென்பட்டது.பக்கத்து அறையிலிருந்து கேட்டது லேசான குறட்டையொலி. எல்லாம் முடிந்திருக்கலாம்.

அம்மா நேற்று சொன்ன வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலிக்கிறது.

“பெரியவளுக்கும் சின்னவளுக்கும் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சி முடிச்சாச்சி. உனக்கும்  நாற்பத்தஞ்சி ஆவப்போகுது. நீ ’உம்’முனு சொல்லு பொண்ணு குடுக்க அவனவன் காத்திட்டு இருக்கான்.உடனே கலியாணம் பண்ணிடலாம்”

‘உம்’மென்று சொல்லிவிட வேண்டுமென்று முடிவெடுத்தவனாய் குளியலறைக்குள் நுழைந்து தாளிட்டான்.

தூரத்தில் ’பஜ்ர்’ தொழுகைக்கான பாங்கொலி பள்ளிவாசலில் இருந்து கேட்க ஆரம்பித்தது.

நகரம் விழிக்கப்போகிறது.இச்சைகளும் விழித்துக்கொள்ளும்.தேவைகளும் பிறப்பெடுக்கும்.இவைகளை அடைய வன்முறையாய் செயல்படும் நிகழ்வுகளும் நிகழலாம்.

நினைவெனும் ஆற்றிலே வெள்ளப்பெருக்கு அதிகரித்தபடியே இருந்தது.

இவன் நடுங்கும் உடலோடு  வெந்நீரில் குளிக்க ஆரம்பித்தான்.

- சு.மு.அகமது

by Swathi   on 08 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்னா செய்தாரை இன்னா செய்தாரை
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.