LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 931 - நட்பியல்

Next Kural >

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும்.(வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.)
மணக்குடவர் உரை:
வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான்வெல்லுந் திறமையும் வாய்ப்பும் உடையனாயினும் சூதாட்டை விரும்பற்க ; வென்றதூஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கிய அற்று-வென்று பொருள் பெற்றதும் இரையால் மறைக்கப்பட்ட தூண்டில் முள்ளை இரையென்று கருதி மீன் விழுங்கினாற் போன்றதே. வெல்லுதல் உறுதியன்மையின் 'வென்றிடினும்' என்றும், தீயவழியிற் பொருள் வருதலான் 'வேண்டற்க' என்றும், கூறினார். தொடக்கத்தில் வென்ற பொருள் சூதாட்டை விட்டு ஒருபோதும் நீங்காதவாறு பிணிக்கும் பொறியென்பதும், அதனாற் பின்பு பொருளெல்லாம் இழந்து உயிரும் துறக்க நேருமென்பதும், உவமையாற் பெறப்படும். சூதாட்டின் தன்மையுள்ள சீட்டாட்டும் சூதாட்டே. சூதாட்டின் தன்மைகள்; வெற்றி உறுதியின்றிக்குருட்டு வாய்ப்பாயிருத்தல், சில வலக்காரங்கள் கையாளப் பெறுதல், தோற்றார் வைத்த பணந்திரும்பாமை,ஒருவன் உழைப்பின்றி விரைந்து பிறர் பணத்தாற் செல்வனாதல், இழக்குந்தொறும் ஆசையுண்டாகி மேன்மேலும் வறுமை மிகுதல், வென்றார் மீது பொறாமையுண்டாதற் கிடமாதல், உழைப்பில் விருப்பஞ் செல்லாமை என்பனவாம். சீட்டின் விலை மிகக்குறைந்தும் பரிசுத் தொகை மிகவுயர்ந்தும் பரிசுகள் மிகப்பல்கியும் இருப்பது, தூண்டில் முள்ளை மறைக்கும் இரைபோற் கவர்ச்சிக்குரியதாம். செல்வரது பொருளாலன்றி வறியவரது பொருளால் ஒருவன் செல்வனாதல், திருவள்ளுவர் அறநெறிக்கும் பொருள்நூற் கொள்கைக்கும் முற்றும்மாறாம். 'வென்றதூஉம்' இன்னிசை யளபெடை. 'பொன், ஆகு பெயர். இங்குப் பொன்னென்றது கரும்பொன்னாகிய இரும்பை.
கலைஞர் உரை:
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.
Translation
Seek not the gamester's play; though you should win, Your gain is as the baited hook the fish takes in.
Explanation
Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
Transliteration
Ventarka Vendritinum Soodhinai Vendradhooum Thoontirpon Meenvizhungi Atru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >