உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மருதீசரே மூலவராக உள்ளார். விநாயகப் பெருமான் மிகப்பெரிய வடிவில் பரிவார மூர்த்தியாக அருள் செய்கிறார். நெல்லையில் விநாயகரை மூலவராகக் கொண்டு கொடிமரத்துடன் கூடிய இரண்டு விநாயகர் கோயில்கள் உள்ளன.
ஒன்று நெல்லை டவுனிலுள்ள சந்திப்பிள்ளையார் கோயில், மற்றொன்று நெல்லையில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்திலுள்ள பேட்டை சர்க்கரை விநாயகர் கோயில். ஆனால், உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட அளவில் மிகப்பெரிய கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் திருப்பணி சுவாமி சங்கரானந்தா தலைமையிலான கமிட்டியால் செய்யப்பட்டு வருகிறது. கோயில் முழுமையாக சிதிலமடைந்துள்ளதால், இந்த அபூர்வக் கோயிலை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் 65லட்சம் ரூபாய்க்கு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. |