ஆஸ்திரேலியக் கண்டம் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் மோத வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
தனித்தீவு போலக் காட்சியளிக்கும் ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும், இருக்கும் இடத்திலிருந்து 2.8 அங்குலம் நகர்ந்து செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித விரல் நகங்கள் வளரும் வேகத்தில் ஆஸ்திரேலியா நகர்ந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கையாக நடக்கும் இந்த மாற்றத்தினால் சர்வதேச அளவில் புவியியல் ரீதியாகவும், காலநிலை, பல்லுயிர் ரீதியாகப் பல மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டங்கள் நகர்வதை 'பிளேட் டெக்டோனிக்ஸ்' என அழைக்கின்றனர். புவியில் பல ஆயிரம் கோடி ஆண்டுகளாகக் கண்டங்கள் நகர்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிக்காவுடன் இணைந்திருந்த ஆஸ்திரேலிய நிலப்பரப்பு பின்னர் தற்போது இருக்கும் இடத்துக்கு வந்துள்ளது ஆசியாவுடன் சேருவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும் எனத் தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், அதன் தாக்கத்தைத் தற்போதே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.