புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு,67 பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் 52 ஆண்டுக்காலத் தவில் இசை சேவையைப் பாராட்டி இந்த விருதினைப் புதுச்சேரி அரசின் பரிந்துரை பேரில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவர், நாடு முழுதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருதினையும், அம்பேத்கர் தேசிய விருதையும், அம்பேத்கர் கலா ஸ்ரீ தேசிய விருதினையும் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருது தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டதை அறிந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
68 வயதான பி. தட்சிணாமூர்த்தியின் தவில் இசை நுட்பங்கள் பரவலான பாராட்டைப் பெற்றவை. தவில் வாசிப்பிலும் கற்பித்தலிலும் தட்சிணாமூர்த்தியின் புதுமையான அணுகுமுறைகள் இசை உலகில் மிகவும் பெயர் பெற்றவை. தவில் இசையைப் பரவலாக்குவது, தவில் கலைஞர்களின் சமூக மேம்பாடு ஆகியவற்றில் தட்சிணாமூர்த்தியின் பங்களிப்பு முக்கியமானது.
பத்மஸ்ரீ விருது பெற்றது குறித்து தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், "இசைக் கருவிகளில் ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படும் தவில் என்றாலே சின்ன வயசிலிருந்து கொள்ளை பிரியம். 52 ஆண்டுகள் தவில் இசைப் பயணத்தில் எனக்குப் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பரிந்துரை செய்த புதுச்சேரி அரசுக்கு நன்றி" என்றார்.
|