பன்னாட்டுத் தமிழ் தொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத் தொழிலை விரிவாக்க, நல்ல நட்பை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மூன்று நாள் எழுமின் மாநாடு.. எழுமின் மூன்றாவது உலகத் தமிழ் தொழில்முனைவோர் , திறனாளர்கள் மாநாடு நவம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்களுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது..
நவம்பர் 14, வியாழன் அன்று தொடங்கிய இம்மாநாடு பல்வேறு நாடுகளிலிருந்து பல தொழில் சார்ந்த ஆளுமைகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைந்தது. முதல்நாள் மாநாடு மேள-நாதஸ்வரம் இசைக்க, குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் , அரங்க வளாகம் முழுக்கத் தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றும் கண்கவர் வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. 35 நாடுகளில் இருந்து வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் "The Rise - எழுமின்" எனும் ஒற்றைக்குடையின் கீழ் ஒன்று கூடி 3 நாட்கள் தமிழ் வணிகம் சார்ந்த மாநாடு அருட்தந்தை திரு.ஜெகத் காஸ்பர் சிந்தனையில், தலைமையில், மேற்பார்வையில், ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கிறித்தவ மகளிர் கல்லூரி முனைவர்.லிலியன் ஜாஸ்பர், ஹரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலர் திரு.தேவசகாயம் இ. ஆ. ப. (ஓய்வு), ஒரிசா மாநில முன்னாள் தலைமைச் செயலர் திரு.பாலகிருஷ்ணன் IAS(ஓய்வு), சித்த மருத்துவர் கு.சிவராமன், திரு.மோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் , தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் , எஸ்.ஆர்.எம். வேந்தர்
திரு.பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள், தலைவர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு தூதரக அதிகாரிகள் என்று பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். திரு.பாலகிருஷ்ணன் IAS(ஓய்வு) அவர்களின் துவக்க உரையில் "தமிழர்கள் வணிகத்தில் மேலோங்கியவர்கள்" என்பதைச் சிந்து, கீழடி அகழ்வாராய்ச்சியில் தக்கச் சான்றுடன் உள்ளது எனவும், சங்கப் பாடல்கள், புறநானூறு, திருக்குறள் இன்னும் சில படைப்புகளை மேற்கோள் காட்டி "வணிகத்தால் வளம் பெற்றவர் தமிழர்" என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். முனைவர். முகம்மது ஆசிப் அலி அவர்கள் தனது உரையில் "ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் எங்ஙனம் தமிழகம் சிறந்த மதநல்லிணக்கத்துடன் இருந்திருக்கிறது" என்பதைப் பற்பல வரலாற்றுச் சான்றுகள் மூலம் எடுத்துரைத்தார். குறிப்பாக மயிலை கபாலீசுவரர் கோயில் தெப்பக்குளம் நிலம் இசுலாமியர்கள் கொடையாக வழங்கியது என்பது ஒரு ஆச்சர்யத் தகவல். உலக நாடுகளில் தமிழர்களை எப்படி உயர்வாக மதிக்கிறார்கள், ஆனால் சொந்த நாட்டில் அந்த அளவிற்கு இல்லை என மிகவும் ஆதங்கப்பட்டார். அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த திரு.சிவா நடராசன் "செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence)" பற்றி மிக எளிமையாகப் பேசினார், இதில் தமிழகம் முதன்மை பெற்று விளங்கினால், பல தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு பெருகும் எனக் கூறினார். தமிழகம் இத்துறையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். Flextronics நிறுவன இந்தியத் தலைவர் தமிழர் திரு. ஜோஷ் ஃவோல்கர் கைப்பேசி மற்றும் இதர மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பதில் தமிழகம் முன்னோடி என்பதைச் சுட்டிக்காட்டி அதை இன்னும் பன்மடங்கு உயர்த்த சாத்தியக்கூறுகள் உள்ளது எனத் திட்டவட்டமாகப் பேசினார். அதிலும் இத்துறையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவருவது கூடுதல் சிறப்பு.
ETA மற்றும் Crescent கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.அகமது புகாரி பேசுகையில் வட தமிழகத்தில் கோவை, கிழக்கில் சென்னை பகுதியில் வணிகம்+தொழில் இருக்கிறது. திருச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இன்னும் பரவவேண்டும் எனச் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இந்தப் பரந்த மனம் படைத்தவர். குறிப்பாக மின் உற்பத்தி பற்றி உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழகம் தொழில் முனைவோர் மாநிலமாக உருமாற வேண்டும். அதற்கான தளம் நமக்குச் சாதகமாக உள்ளது எனவும், தமிழகக் கல்விக் கொள்கை, பெண் கல்வி, சமூக நீதி, இருமொழிக் கொள்கையின் வெற்றியால் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலமாகத் தமிழகம் சிறந்து
விளங்குவதைப் பற்றிப் புள்ளி விவரத்தோடு விவரித்து வசீகரித்தார் நண்பர் "Orangescape" நிறுவன அதிபர் திரு.சுரேசு சம்பந்தம்.
இம்மாநாட்டில் பல விருதுகள் வழங்கப்பட்டன. அதிலும் குறிப்பாக "20 காளைகளை அடக்கிய சல்லிக்கட்டு வீரர் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிலம் தந்தவர்களுக்கு" விருது வழங்கிய போது அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டி, ஆர்ப்பரித்து, மனதார தங்களது உற்சாகமான உணர்வை வெளிப்படுத்தினர். புதிய, நலிந்த, மாற்றுத்திறனாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதால் இசையமைப்பாளர் இமானுக்குச் சிறப்பு விருது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் சுமார் 90 நிமிடங்கள் இன்னிசை மழையில் அனைவரையும் மனமகிழச் செய்தார். திருக்குறள், சங்கப்பாடல், புறநானூற்றுக் கவிதை, பாரதிதாசன்
பாடல்களுக்குத் தனது இசையால் புத்துணர்ச்சி தந்தார். ஒரு சேர 75+ பேர் பாட இசைக்குழுவின் ஒருங்கிணைந்த இசை மழை! பொதுவாக வணிக மாநாடுகளில் குறிப்பிட்ட ஒரு துறை, தலைப்பு, இடம் மற்றும் ஒத்த சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே ஒன்று கூடுவார்கள். அதிலும் குறிப்பாக நுனி நாக்கு ஆங்கிலம் விளையாடும் மற்றும் ஒரு அளவிற்கு மட்டுமே பேசவோ, பழகவோ முடியும். ஆனால் எழுமின் அதைத் தகர்த்து உலகத் தமிழ் தொழில் முனைவோர் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கூடித் தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்களும், சிறிய அளவில் தொழில் செய்பவர்களையும் உத்வேகப்படுத்தி ஒன்றிணைக்கப் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. மேலும் தொழிலில் வெற்றிபெற்றவர்கள் தமிழ் என்ற தங்கள் அடையாளத்தைக் காட்டிக்கொள்வதில்லை என்ற நிலையை மாற்றி உங்கள் அடையாளத்துடன் நிமிர்ந்து தொழில்செய்யுங்கள், பிற நாட்டுத் தமிழ் தொழிலதிபர்களின் தொடர்புகள் உங்களை உயர்த்தும் என்ற சிந்தனையை உயர்த்திப்பிடித்தது எழுமின் மாநாடு. இந்நிகழ்வுக்கு வலைத்தமிழ் ஊடக ஒத்துழைப்பை வழங்கியதுடன், நிகழ்ச்சியின் நேரலையை www.Facebook.com/ValaiTamil - ல் உடனுக்குடன் ஏற்பாடுசெய்து , காணொளிப் பதிவுகளை www.YouTube.Com/ValaiTamilTV -ல் பதிவிட்டு வருகிறது.
|