LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

தற்சார்பு கிராம பஞ்சாயத்து பேசுவோம் - முனைவர். திரு. பழனித்துரை

தற்சார்பு கிராம பஞ்சாயத்து பேசுவோம் - முனைவர். திரு. பழனித்துரை

அறிமுகம்:

    கிராம பஞ்சாயத்துத் திட்டத்தின் படி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும், ஒரு வார்டு உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று பஞ்சாயத்தைப் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வைத் தமிழகத்தில் ஏற்படுத்தியவர் முனைவர் திரு. பழனித்துரை அவர்கள். கிராம வளர்ச்சி, கிராம மேம்பாடு, கிராம புணரமைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதியுள்ளார்.

சாதாரண மனிதனின் கருத்துக்களை உள்வாங்கிய காந்தி:

    இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு. அந்த நாட்டில் இந்த ஏழைகளை வைத்துக் கொண்டுதான் சுதந்திரப் போராட்டத்தை நடத்தி, சுதந்திரம் பெற்று ஒரு புதிய இந்தியாவைப் படைக்க வேண்டும் என்று காந்தியடிகள் கருதினார். அவர் இந்தியா முழுவதும் நடத்திய கிட்டத்தட்ட 2000 கூட்டங்களில் சாதாரண மனிதனுடைய கருத்துக்களை நன்கு உள்வாங்கிக் கொண்டார். அந்த சாதாரண மனிதர்களுடைய ஆத்மபலம், அவர்களுடைய துணிவு, பார்வை, அவர்களுக்கிருந்த ஞானம், அறிவு போன்றவற்றை ஒட்டுமொத்தமாகக் காந்தியடிகள் புரிந்து கொண்டார்.

    ஏனென்றால் அவர் மேற்கத்திய நாட்டில் படித்திருந்தாலும், மேற்கத்திய முறைப்படி இந்தியாவைப் பார்க்கவில்லை. இந்தியாவை இந்திய மக்களுடன் உறவாடி, இந்தியா முழுவதும் சுற்றி, இந்தியாவுடைய பன்முகத்தன்மை என்ன, அந்த பன்முகத்தன்மையில் எது உயிர்ப்புடனும் உணர்வுடனும் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டார்.

புணரமைக்கப்பட வேண்டிய கிராமங்கள்:

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கிராமங்கள் புணரமைக்கப்பட வேண்டும். அந்த புணரமைப்பு அரசாங்கத்தால் நடைபெறக் கூடாது, சாதாரண மனிதர்களின் பங்களிப்பினால் அந்த புணரமைப்பு செயல்படுத்தப்பட வேண்டும் என்று கருதினார். நவீன இந்தியாவை உருவாக்குகிற போது, சாதாரண மனிதனின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதி, அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டார். அதுதான் ‘கிராம நிர்மாண ஊழியர்கள் தயாரிப்பு’ ஆகும். எந்தத் தடத்தில் இந்திய கிராமங்கள் உருவானதோ, அந்தத் தடத்தில் அவை செல்ல வேண்டும். அதில் இடைச்செருகலாக வந்த ஏற்றத்தாழ்வுகள், ஒதுக்குதல், ஒடுக்குதல், தீண்டாமை போன்ற பல்வேறு அழுக்குகள் நீக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்.

ஆன்மீகத்தை இழக்காத கிராமங்கள்:

    தற்சார்பு கிராமங்களை உருவாக்க வேண்டும் என அவர் கனவு கண்டார். இயற்கையைச் சார்ந்து வாழ்தல், எளிய வாழ்வு வாழ்தல் போன்ற கருத்துக்களை முன்வைத்தார். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் கிராம மக்களுடைய பணியைச் சிறப்பாக எடுத்துச் செல்லும் வகையில் அமைய வேண்டும். அவற்றோடு அவர்களின் ஆன்மீகமும் அங்கே இருக்க வேண்டும் எனக் காந்தியடிகள் விரும்பினார். ஆக, காந்தியடிகள் தற்சார்பு கிராமங்கள் குறித்து மிகப்பெரிய மக்கள் தயாரிப்பைக் கட்டமைப்புடன் செய்தார்.

கிராம முன்னேற்றம் குறித்த வாதம்:

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கிராம முன்னேற்றம் குறித்த வாதம் நேருவிற்கும், காந்தியடிகளுக்கும் இருந்தது. அவற்றை அவர்கள் கடிதங்களால் பரிமாறிக் கொண்டனர்.

நேருவின் வாதம்:

    கிராமங்கள் குறித்த தவறான தாழ்வான பார்வையை நேரு கொண்டிருந்தார். கிராமங்களில் தொழில்நுட்பம் கிடையாது, விஞ்ஞானம் கிடையாது. கிராம மக்கள் ஜாதியில் உறழ்கிறார்கள், மதத்தில் உறழ்கிறார்கள், ஏற்றத் தாழ்வுகளில் இருக்கிறார்கள். ஆகையால் கிராமம் என்பது மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. அவர்களை மாற்ற வேண்டும். அது அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என நேரு கருதினார்.

 காந்தியடிகளின் வாதம்:

    கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களுடைய குணத்தில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது, அவர்களின் சிந்தனை போக்கில் நல்ல பார்வையும் இருக்கிறது, தீய பார்வையும் இருக்கிறது. எனவே கிராமத்தில் இருக்கக் கூடிய மக்களின் மனமாற்றத்தின் மூலம் தான் ‘கிராம முன்னேற்றம்’ நடத்த வேண்டுமே அன்றி, அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என நினைப்பது தவறு எனக் காந்தியடிகள் கருதினார்.

பயனாளிகளாக மாற்றப்பட்ட கிராம மக்கள்:

    தொழில் மயமான இந்தியாவை உருவாக்கப் போகிறோம், அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறோம், அதனால் கிராமங்கள் முன்னேறிவிடும், அரசாங்கம் கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களின் வறுமையைப் போக்கும், கிராமங்களின் மேம்பாட்டைப் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லி கிராம மக்களைப் பயனாளிகளாக மாற்றி விட்டனர். இதனால் கிராம மக்களின் கைகளிலிருந்த விவசாயம், கலை, இலக்கியம், இசை, வாழ்வியல், வாழ்வாதாரம் ஆகியவை அரசாங்கத்தின் கைகளுக்கு வந்து விட்டது.

இன்றைய கிராமங்களின் நிலை:

    இன்று கிராமம் என்பது கிராம மக்களுடைய கைகளில் கிடையாது. கிராமங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற 37 அரசாங்கத் துறைகளின் கைகளில் தான் கிராமங்கள் இருக்கின்றன. கிராம மக்களின் வாழ்வியல் இருக்கின்றன. கிராமங்கள் மேம்பாடு அடைந்திருக்கின்றனவா என்று கேட்டால், மருத்துவ வசதி, பள்ளிக்கூடங்கள், சாலை வசதிகள் போன்ற கட்டமைப்புகளைக் கிராமங்கள் பெற்று விட்டன. ஆனால் விஞ்ஞானப்பூர்வமான, சுதந்திரமான, மதிக்கத்தக்க, மரியாதைக்குரிய, எல்லாத் தரப்பு மக்களும் கிராமத்தில் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் கிராமங்களில் நகரமயமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் அல்லது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் புலம் பெயர்கிறார்கள்.

நம்முடைய கிராமம்:

    மனிதனின் ஆசைக்குத் தீனி போட இயற்கை கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புணரமைப்பு என்பது மிகக் கடினமான உழைப்பில் தான் செய்ய வேண்டியிருக்கிறது. பஞ்சாயத்துத் தலைவருக்குக் கிராமத்தை நிர்வகிக்கக் கூடிய சக்தியும், ஆற்றலும் இருக்க வேண்டும். நம்முடைய கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்கக் கூடிய வாய்ப்பை கிராம பஞ்சாயத்துகள் நமக்கு உருவாக்கித் தந்திருக்கின்றன. உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு நாகாPக சின்னமாக ஒரு கிராமத்தை அடையாளப்படுத்திக் காண்பிக்க முடியும். அது வெளிப்புறத்தில் மட்டுமல்ல, அகத்திலும் கூட. அந்த அளவிற்குப் பின்புலம் நம்மிடையே இருக்கிறது.

பஞ்சாயத்திற்கேற்ப செயல்பட வேண்டிய துறைகள்:

    இன்றைய பஞ்சாயத்து அரசாங்கம், மக்களைத் தயார் செய்து, மக்களுடைய பங்களிப்பின் மூலமாகக் கிராமங்களை உருவாக்க வேண்டும். நீடித்த வளர்ச்சியையும், ஆரோக்கியமான கிராம கலாச்சாரத்தையும், மேம்பாட்டையும் கொண்டு வரக் கிராம மக்களின் வாழ்க்கைச் சூழல் தற்சார்பு கொண்டதாக இருக்க வேண்டும். அதை நோக்கி கிராம பஞ்சாயத்துகள் செல்ல வேண்டும். கிராமம் குறித்த சரியான புரிதலைப் பஞ்சாயத்துகள் கொண்டிருக்க வேண்டும். தற்சார்பு கொண்டவையாகக் கிராமங்களை மாற்ற வேண்டும். பஞ்சாயத்து அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிந்திக்கின்ற திட்டங்களுக்கு ஏற்ப 37 துறைகளைச் செயல்பட வைக்க வேண்டும்.

by Lakshmi G   on 02 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.