|
|||||
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 |
|||||
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 சுதந்திரத்திற்கு பிறகான பஞ்சாயத்து ராஜ் திட்டம் வரலாற்றுப் பார்வை: எந்த ஒரு செயலையும் செய்யும் முன் அதன் வரலாற்றுப் பார்வையையும் ஒரு முறை பார்க்க வேண்டும். புதிய பஞ்சாயத்து அரசாங்கத்தில் அதிகாரப்பரவலானது இது வரை யார் கையிலிருந்ததோ, அவர்களிடமிருந்து ஏழைகளிடம், ஒடுக்கப்பட்டவர்களிடம், ஒதுக்கப்பட்டவர்களிடம் செல்கிறது. இத சாதாரண நிகழ்வு அல்ல. இந்தியச் சூழல்: பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியா ரணமாகிக் கொண்டிருக்கிறது. 1940, 50களில் சுதந்திரம் அடைந்த நாடுகள் ‘தேசத்தை உருவாக்கல், தேசத்தைக் கட்டுமானம் செய்தல்’ ஆகிய பணிகளை மிக முக்கிய பணியாகச் செய்து வந்தன. சுதந்திர இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நமக்கு இந்தியாவை உருவாக்குவது, கட்டமைப்பது, வலுப்படுத்துவுதே முதன்மையான நோக்கமாக இருந்தது. இதுதான் அனைவரின் சிந்தனையாகவும் இருந்தது. அதற்காகத் தான் அரசியல் சாசனச்சட்டம் உருவாகின்றது. இந்த நோக்கத்தில் எல்லோரும் செயல்பட்ட போது காந்தியடிகள் ‘கிராமிய மேம்பாட்டு அடிப்படையில் இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும்’ என்ற பலமான வாதத்தினை முன்வைத்தார். அதற்கான ஆயத்தப்பணிகளை சுதந்திரப் போராட்ட காலத்திலேயே காந்தியடிகள் செய்து கொண்டிருந்தார். கிராம நிர்மாண ஊழியர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று அதையும் செய்து கொண்டிருந்தார், கிராம நிர்மாண வேலைகள் என்னென்ன என்பதையும் வரைவு செய்து கொண்டிருந்தார். காந்தியடிகளின் போக்கு: இந்திய நாடு உருவாவது, இந்திய அரசாங்கத்தால் மட்டுமல்ல, இந்திய மக்களாலும் அது உருவாக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சியில், மேம்பாட்டில், கட்டமைப்பில் மிக முக்கியமான பங்கு, அந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்க வேண்டும் என்று காந்தியடிகள் திடமாக நம்பினார், வற்புறுத்தினார், தலைவர்களுக்கும் கட்டளையிட்டார். ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு இருந்த சூழல், அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்கு எடுத்த முன்னெடுப்புகள் பஞ்சாயத்தை வலுப்படுத்த முடியாமல் போய்விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிராமங்களைக் குறித்த பார்வை: கிராமம் என்பதைக் குறித்து காந்தி, நேரு, அம்பேத்கர், படேல் ஆகிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருந்தது. நேரு, படேல், அம்பேத்கர் ஆகியோர் கண்ட கிராமங்களில் ஜாதியக் கட்டுமானங்கள் இருந்தன, மக்கள் பழமை வாதத்தில் ஊறிப்போய் இருந்தார்கள், இதைக் காந்தியடிகள் நிராகரிக்கவில்லை. ஆனால் இந்தியா என்பது கிராமங்களில் தான் வாழ்கிறது, கிராம முன்னேற்றம் தான் இந்தியாவினுடைய முன்னேற்றம், கிராம மறுமலர்ச்சி தான் இந்தியாவினுடைய மறுமலர்ச்சி. கிராமத்தில் தான் 80 சதவீத மக்கள் வாழ்கிறார்கள். ஆகையினால் கிராமத்தை மேம்படுத்துவதன் மூலமாகத்தான் இந்தியாவை புணரமைக்க முடியும் என்கின்ற சரியான வாதத்தினை வைத்து காந்தி அவர்களுடன் போராடுகிறார். கடைசியில் அரசியல் சாசனச் சட்டத்தில் Article 40ல் இந்த பஞ்சாயத்து அரசாங்கத்தை உருவாக்கி, மக்களுக்கு அதிகாரம் கொடுத்து, மக்களையும் இந்த மேம்பாட்டுச் செயல்பாடுகளில், ஆளுகைச் செயல்பாடுகளில் அவர்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அதை உருவாக்கி விட்டார்கள். சமூக மேம்பாட்டுத் திட்டம்: பஞ்சாயத்து ராஜ் திட்டம் வரவில்லை. ஆனால் சமூக மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒன்று வந்தது. இத்திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்திய போதும் இதில் தொய்வு ஏற்பட்டதாக உணர்ந்தார்கள். எனவே 1957ல் பல்வேந்திரா மேத்தா கமிட்டியை ஒரு ஆய்வு நடத்தச் சொல்கிறார்கள். அக்குழுவும் இந்தியா முழுவதும் ஆய்வு நடத்தியது.. அக்குழு ‘இந்த சமூகநலத் திட்டம் என்ன விளைவைக் கிராம சமூகத்தில் ஏற்படுத்த வேண்டுமோ அந்த வினைவினை ஏற்படுத்த முடியவில்லை, அதற்கு பல்வேறு இடர்பாடுகள் இருக்கிறது. இதற்குத் தீர்வாக, கிராம மக்களுக்குப் பக்கத்தில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அங்கே இருந்தால் இந்தத் திட்டங்கள் சரிவர யெல்படும். ஆகையால் பஞ்சாயத்துகளை சட்டப்பூர்வமாக மாநிலங்களில் உருவாக்கிச் செயல்படவைப்பது மிக முக்கியம்’ என்று கூறியது. இக்குழு தான் முதன்முதலில் சுதந்திர இந்தியாவில் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த வேண்டும்’ என்று கூறியது. மக்களால் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய மூன்று நிறுவனங்கள்: பஞ்சாயத்துகள் என்பது தனியாக இயங்கக்கூடிய ஒரு நிறுவனமல்ல. கிராமங்களில் மூன்று நிறுவனங்கள் மக்களால் மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து அரசாங்கம் என்பது ஒன்று. கூட்டுறவு என்பது இரண்டாவது ஆகும். கிராமங்களுடைய பொருளாதார செயல்பாட்டிற்கான இடுபொருட்களைத் தருவித்துக் கொடுக்கக்கூடிய நிறுவனமாகவும் அது செயல்பட வேண்டும், நிதி உதவி செய்வதற்கான நிறுவனமாகவும் அது இருக்க வேண்டும், கிராமத்தில் உற்பத்தி செய்த பொருட்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனமாகவும் இருக்க வேண்டும். மூன்றாவது கல்விக் கூடங்கள். அவை மாணவர்கள் மூலமாகச் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த மூன்றும் மிகப்பெரிய இயக்கங்களாக வர வேண்டும். ஆனால் மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் கிராமம் என்பது மிகப்பெரிய செயல்பாட்டுக் களமாக, பொருளாதார செயல்பாட்டுக் களமாக, அரசியல் செயல்பாட்டுக் களமாக மாறும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நேருவின் பேச்சு: மரியாதையுடன் கூடிய உதவி அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது என்ற சிந்தனை மக்களிடையே வர வேண்டும். ‘அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது’ என்ற உணர்வுடன் அரசாங்கத் திட்டங்களை அவர்கள் பெற்றுக்கொண்டு, அந்தத் திட்டங்களை வைத்து முன்னேற்றச் செயல்பாடுகளைக் கிராமங்களில் முன்னெடுக்க வேண்டும் என்று நேரு பேசினார். அந்த பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சாகக் கருதப்படுகிறது. அப்பேச்சினை ‘மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரை’ என்றே கூறலாம். தமிழகத்தில் அன்று இருந்த தலைவர் காமராஜர் அவர்கள் நேரு பேசிய பேச்சின் கருத்துக்களை உள்வாங்கிய மனிதர். சமூகத்தில் இன்று ஏற்பட்டிருக்கக் கூடிய மேம்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் காமராஜர் என்றே கூறலாம். அதற்குப் பிறகு பல மாநிலங்களில் புதிய உள்ளாட்சியை உருவாக்கிச் செயல்படுத்தினார்கள். செயல்பட வேண்டிய மக்கள் போராட்டம்: 1963, 1964, 1965களில் நேரு அவர்கள் முன்னெடுத்த பஞ்சாயத்து அமைப்புகள் தொய்வடையும் சூழல் ஏற்பட்டது. 1964ல் நேரு அவர்கள் இறந்த பிறகு பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநாடு ஒன்று பெங்களூரில் நடக்கிறது. அந்த நிகழ்வின் தலைவராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் உரையாற்றுகிறார். அவர், ‘கிராமத்தில் இருக்கக் கூடிய கடைக்கோடி மனிதனுக்கும் அதிகாரம் சென்றுவிட வேண்டும், கடைக்கோடி மனிதனுடைய குரலும் கேட்கப்பட வேண்டும், அப்படிப்பட்ட அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று காந்தி நினைத்தார். ஆனால் அப்படிப்பட்ட அரசாங்கம் 1964 ஆகிய இன்று வரை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதிகாரப்பரவல் என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. இந்த அதிகாரப் பரவலைச் சட்டத்தின் மூலமாக நமக்கு யாரும் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள் என்றும் நாம் நினைக்க முடியாது. ஆகையினால் இந்த அதிகார பரவலுக்கு மிகப்பெரிய அளவில் மக்களைத் தயார் செய்து மக்கள் போராட்டமாக மாறினால் தான் இங்கு அதிகாரப்பரவல் நடைபெறும்’ என்று கூறினார். ஒற்றுமையும், வேறுபாடும்: 1963, 1978,. 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் சந்தானம் கமிட்டி, அசோக் மேத்தா கமிட்டி உள்ளிட்ட பல கமிட்டிகளை போடுகிறார்கள். அனைத்து குழுக்களும் ‘பஞ்சாயத்துகள் வலுப்பெற வேண்டும், சட்டப்பூர்வமாக்க வேண்டும்’ என்ற ஒரே முடிவையே அறிவித்தன. இதனால் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் நல்ல முன்னெடுப்புகள் நிகழ்ந்தன. இந்த பஞ்சாயத்துகளை மூன்றடுக்கு முறையாக வைத்துக் கொள்வதா, இரண்டடுக்கு முறையாக வைத்துக் கொள்வதா என்பதில் தான் வேறுபாடு காணப்படுகிறது ஆளுகையிலும், நிர்வாகத்திலும் சீர்திருத்தம்: ராஜீவ்காந்தி அவர்கள் தலைவராக வந்த போது ஒரு முனைப்பு ஏற்படுகிறது. ராஜுவ் காந்தி அவர்கள், ‘நான் இளைஞன். எனக்கு ஒரு சிந்தனை இருக்கிறது. நான் இந்தியாவை 21ம் நூற்றாண்டிற்கு இட்டுச் செல்ல வேண்டும். அந்த இந்தியா என்பது வலிமையான இந்தியா. அதற்கு நான் பல முன்னெடுப்புகளைச் செய்ய இருக்கிறேன். ஆளுகையிலும், நிர்வாகத்திலும் சில சீர்திருத்தங்களைச் செய்ய இருக்கிறேன். இதுவரை நமது அரசாங்கம் செய்திருக்கக் கூடிய பல்வேறு விதமான ஏழைகளுக்கானத் திட்டங்கள், வறியவர்களுக்கான திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள், ஒதுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் மக்களுக்கு போய்ச்சேரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு இப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்’ என்று கூறினார். ஒரு நிர்வாகம் அவ்வது ஆளுகை மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்க வேண்டும். உள்ளாட்சியில் மக்களுக்குச் சேவை செய்வதற்கான சேவகர்கள் தேவை. என்பதை உணர்ந்து கொண்டு ராஜீவ்காந்தி அவர்கள் உள்ளாட்சியை அரசாங்கமாக்க வேண்டும் என்று சட்ட முன்வரைவைக் கொண்டு வருகிறார். புதிய பஞ்சாயத்து அரசாங்கம்: அடுத்ததாக நரசிம்மராவ் அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்கிறார். அவர் 73மற்றும் 74வது சட்டத்திருத்தங்களை 1992ல் வெளியிடுகிறார். அப்போது தான் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் வருகிறது. இது அரசியல் சானசச் சட்டத்தில் பகுதி 9ல் சேர்க்கப்படுகிறது. 1994ல் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் எல்லா மாநிலங்களிலும் கொண்டுவரப்பட்டது. அதிகாரப்பரவல் வருகிற போது பொருளாதாரம் குவிக்கப்படுகிறது. இந்த அதிகாரப்பரவலால் ஒரு சாரார் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பது இயற்கை. புதிய பஞ்சாயத்து அரசாங்கம் மக்கள் இயக்கமாக வருகிறது. அதோடு பிரபத்துவ மனோபாவத்தை, ஆதிக்க சக்திகளை உடைக்கிறது. பெண்கள் மேம்பாட்டிற்கு உதவுகிறது. புதிய பஞ்சாயத்து அரசாங்கத்திற்காகத் தொடர் முயற்சிகள் செய்த மத்திய அரசாங்கம் கூட, தான் கொண்டு வரும் திட்டங்களைச் செயல்படுத்த துறைகளைத் தான் நம்புமேயன்றி, பஞ்சாயத்து அரசாங்கத்தை நம்பாது. மிகப்பெரிய மக்கள் இயக்கம் என்பது அதிகாரப்பரவலுக்காக உருவானாலன்றி முழுமையான அதிகாரம் பெற்ற பஞ்சாயத்துகளாக, உள்ளாட்சிகளாக எங்கேயும் செயல்பட முடியாது. |
|||||
by Lakshmi G on 18 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|