LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் பழனித்துரைநிகழ்வு 11

கிராம ஊராட்சியில் நடைபெற வேண்டிய கூட்டங்கள்

கூட்டத்திற்கான அடிப்படைக் காரணம்:

    ஒட்டுமொத்த பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு உள்ளாட்சியே நாற்றங்கால் ஆக அமைந்துள்ளது. பாராளுமன்றத்திற்குச் செல்லும் உறுப்பினர் உள்ளாட்சியில் முன்பு பணியாற்றித் திறம்படச் செயலாற்றிச் செல்வாராயின் அவர் சிறந்த உறுப்பினராகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை. எனவே உள்ளாட்சி பயிற்சிக் களமாக அமைந்துள்ளது. மேலும் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல், கட்சியின் அடிப்படையில் நடைபெறாது. ஏனெனில் கிராமங்களில் கட்சியை விட சமூகம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே கிராமங்களில் சமூகரீதியில் முன்னேற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற காரணத்தால் சமூக அடிப்படையில் தேர்தல் நடைபெறுகின்றது. கிராமப் பஞ்சாயத்துக் கூட்டங்களை நடத்துவதன் மூலமே கிராமத்தில் மக்களிடம் சமத்துவம் பற்றிய புரிதலையும் தெளிவையும் கொண்டுவர முடியும். எனவே பஞ்சாயத்துக் கூட்டம் அவசியமாக உள்ளது.

கூட்டத்தின் குறிக்கோள்:

கிராமக் கூட்டங்களின் மூலம் செய்ய வேண்டிய இலக்குகள் அல்லது குறிக்கோள்கள் உள்ளன.

1. கிராமத்தில் ஒற்றுமையை நிலைநாட்டல். இவ்வொற்றுமை பொதுக்கருத்தை உருவாக்குவதன் மூலமாக அமைய வேண்டும். இங்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது.

    மதுரையருகில் உள்ள கொட்டாம்பட்டியூரிலுள்ள கம்பூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒரு பொது முடிவினை மேற்கொண்டனர். அதன்படி கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தங்களுடைய ஜாதி தடையாக இருக்கக்கூடாது என்றும் வெவ்வேறு கட்சி அடிப்படையிலும் கிராம மேம்பாட்டிற்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும் முடிவெடுத்தனர். இதன்மூலம் அந்த இளைஞர்கள் தங்கள் கிராம சபையை வலுப்படுத்திக் கொண்டிருப்பதை ஒற்றுமைக்கு உதாரணமாகக் கூறலாம். ஒரு பஞ்சாயத்துக் கூட்டம் இத்தகைய புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

2. மக்களாட்சியினை விரிவுபடுத்துதல். இதன்மூலம் அனைவரும் சமம் என்ற உணர்வினை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய எண்ணத்தை விதைப்பதாகக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

3. பஞ்சாயத்து நிர்வாகம் வெளிப்படைத்தன்மை உடையதாக இருக்க வேண்டுமாயின் கூட்டம் நிகழ்த்தப்பட வேண்டும்.

4. இதைத்தவிரக் கூட்டம் கூட்டப்பட வேண்டியது ஒரு கட்டாயக் கடமையாகும்.

கூட்டத்தின் முறைமை:

    கிராமப் பஞ்சாயத்துக் கூட்டங்கள் ஏதுவாக இருப்பினும் அதற்கு உரிய முறைமையுடன் கூட்டம் கூட்டப்பட வேண்டும். கூட்டத்தின் உறுப்பினர்களை வரவேற்பது தொடங்கி நிறைவு வரை பல்வேறு முறைமைகள் உள்ளன. கூட்டத்திற்கு எனத் தனி பேச்சுமொழி உண்டு. சாதாரணமாக வெளியில் பேசுவது போலில்லாமல் பிறரை மரியாதையுடன் நடத்துவதாகப் பேச்சுமொழி அமைய வேண்டும். உறுப்பினர் அனைவரையும் இவ்வாறு பேச நெறிப்படுத்துவது தலைவரின் கடமையாகும். எனவே பஞ்சாயத்துத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியரினுடைய திறன் தேவைப்படுகின்றது என்றால் அது மிகையாகாது. சபையில் அமரும் முறையிலிருந்து முறைமைகள் தொடங்குகின்றன. அனைவருக்கும் சமநேரம் பேச வாய்ப்பளித்து நெறிப்படுத்தும் வகையில் கூட்டம் அமைய வேண்டும். பிறர் பேசும் கருத்தை உள்வாங்கி அதிலுள்ள நியாயங்களை அலசி கலந்துரையாடிய பின்பே ஒருமித்த பொது முடிவிற்கு வர வேண்டும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட முறையில் குறித்த பொருளினை பேச வேண்டும். எனவே அதற்கான சட்டதிட்டங்கள் குறித்த புரிதல் தலைவருக்கு மட்டுமின்றி உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும். முக்கியமாகக் கூட்டத்தில் தனிமனித குணநலன்கள் குறித்த விவாதங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த முறைமைகளின் அடிப்படையில் கூட்டத்தை நிகழ்த்துதல் முக்கியமாகும்.

கூட்டத்தின் வகைகள்:

    கிராமப் பஞ்சாயத்துக் கூட்டங்கள் நான்கு வகையாக உள்ளன. அவையாவன,

1. சாதாரண கூட்டம்

2. சிறப்புக் கூட்டம்

3. அவசரக் கூட்டம்

4. வேண்டுகோள் கூட்டம்

என்பவை ஆகும்.

சாதாரண கூட்டம்:

    இவ்வகைக் கூட்டங்கள் வழக்கமாக நடைபெறக் கூடியன. இதன்படி வரவு செலவு கணக்குகள், அடுத்த மூன்று மாத திட்டங்கள், அதற்கானச் சூழல் ஆகியன மேற்கொள்ளப்படுவனவாகும். இக்கூட்டத்திற்கான விவாதப்பொருள் குறித்த அறிவிப்பை 3 நாட்களுக்கு முன் தரவேண்டும். அவ்வறிவிப்பில் அக்கூட்டத்திற்கான பேசுபொருள், இடம், நேரம் ஆகியவை இடம்பெறல் வேண்டும். கூட்டத்தில் பேசப் போகும் பொருள் குறித்து அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் பேசத் தலைவர் வாய்ப்பளித்த பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

அவசரக் கூட்டம்:

    இவ்வகைக் கூட்டங்கள் தேவைப்படும்போது மட்டும் நடைபெறக் கூடியவை. இதற்கு முன் அறிவிப்பு ஒரு நாளைக்கு முன்பு வழங்கினால் போதும். இக்கூட்டம் நடைபெற முக்கியக் காரணம் இருக்க வேண்டும். குறிப்பாகப் பேரிடர், பெருந்தொற்று போன்ற சூழல்களில் இவை நடைபெறுகின்றன.

சிறப்புக் கூட்டம்:

    இவ்வகைக் கூட்டங்களும் தேவைப்படும் போது நடைபெறுகின்றன. இக்கூட்டத்தில் ஒரே ஒரு பொருள் குறித்து மட்டுமே பேச இயலும். பிறவற்றை விவாதிக்கக் கூடாது. இக்கூட்டத்திற்கு முன்னறிவிப்பு 5 நாட்களுக்கு முன் வழங்க வேண்டும்.

வேண்டுகோள் கூட்டம்:

    பொதுவாக ஒரு கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்களுக்கு உடன்பாடின்றி இருக்கும் சமயத்தில் தங்களுக்கு ஒரு கூட்டம் நிகழ்த்த வேண்டும் என்று எண்ணுவர். அவ்வாறு அவர்களின் வேண்டுகோளின்படி நடைபெறும் கூட்டம் வேண்டுகோள் கூட்டமாகும். இக்கூட்டத்தைத் தலைவர் கண்டிப்பாகக் கூட்ட வேண்டும். அவ்வாறு இல்லையேல் இதற்குரிய நடவடிக்கையைப் பஞ்சாயத்து ஆய்வாளர் மேற்கொள்ளுவார். இக்கூட்டம் நடைபெறும் முன்னறிவிப்பை 7 நாட்களுக்கு முன் தர வேண்டும். பஞ்சாயத்துத் தலைவர் கூட்டம் கூட்டத் தவறினால் கூட்டத்தை நிகழ்த்த விரும்பும் குழுவிலிருந்து ஒருவர் தலைமை தாங்கலாம். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை பெயர்களடங்கிய பேரேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

இந்நான்கு கூட்டங்களையும் கூட்ட வேண்டிய பொறுப்புடையவர் பஞ்சாயத்துத் தலைவரே ஆவார். இனி கூட்டங்களுக்கான பொருண்மைகளைக் காணலாம்.

சாதாரணக்கூட்டத்தின் பொருள்:

1. ஊராட்சியின் மாதாந்திர வரவுசெலவு அறிக்கைகளும் கணக்குகளும்

2. அடுத்த மாதம் வரை செயல்படுத்தப்படவேண்டிய திட்டப்பணிகள்

3. ஆண்டு வரவுசெலவு அறிக்கை

4. ஊராட்சியின் தணிக்கை அறிக்கை

5. பிறதுறை அதிகாரிகளின் திட்டங்களும் தீர்மானங்களும்

6. இன்னபிற பொருட்கள்

அவசர கூட்டத்தின் பொருள்:

1. இயற்கைப் பேரிடர் மற்றும் செயற்கைப் பேரிடர் போன்றவை. உதாரணமாகப் புயல், வெள்ளம் போன்றவை இயற்கை பேரிடர்களுக்கும் தீவிபத்து போன்றவை செயற்கைப் பேரிடர்களுக்கும் கூறலாம். இவையே பொருட்களாகும்.

சிறப்புக்கூட்டத்தின் பொருள்:

இக்கூட்டத்தில் குறித்த பொருள் பற்றியே பேச வேண்டும்.

1. தலைவரோ அல்லது பிற உறுப்பினர்களோ முதன்முதலில் பதவியேற்பது

2. வரிவிகிதம் உயர்த்துதல், திருத்தியமைத்தல்

3. எடுக்கப்பட்ட தீர்மானங்களை நீக்கும் பொருட்டு கூடுதல்

4. நம்பிக்கையில்லாத் தீர்மானம்

5. தலைவரோ, உபதலைவரோ அல்லது வேறு ஒரு பதவியிலிருப்பவரோ பதவி விலகல் செய்யும்போது அதனை மீண்டும் ஏற்குமாறு கூடுவது

6. தலைவரோ அல்லது பிற உறுப்பினரோ பதவியைச் சரிவரச் செய்யாத நிலையில் அவரை பதவிநீக்கம் செய்ய எண்ணும் பொருட்டு கூடுவது ஆகியனவாகும்.

வேண்டுகோள் கூட்டம்:

    குறிப்பிட்ட காரணத்தால் தலைவர் கூட்டம் நிகழ்த்தாத போது ஒரு பிரிவினர் இணைந்து கூடுதல் என்ற ஒரு பொருள் மட்டுமே ஆகும்.

நிகழ்ச்சிநிரல் அறிக்கை:

    கூட்டங்கள் நிகழ்த்துவதற்குரிய பொருட்கள் உள்ளடங்கிய விரிவான தகவல்களே நிகழ்ச்சி நிரல்களாகும். கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருளைத் தெளிவாகத் திட்டமிட்டு உருவாக்கி கூட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சிநிரல் அறிக்கைப்பணியைச் செய்பவர் தலைவரே ஆவார். இப்பணிக்கு உதவியாளரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    உதாரணமாகச் சாதாரண கூட்டத்தினை எடுத்துக்கொண்டால் அதில் முக்கியப்பொருள் மாதாந்திர வரவுசெலவு ஆகும். இதற்கு அம்மாதம் பஞ்சாயத்திற்கு வந்த நிதி, அம்மாத செலவு ஆகியவை உள்ளடங்கிய அறிக்கையைத் தலைவர் உருவாக்க வேண்டும். கூட்டம் சார்ந்த நிகழ்ச்சிநிரல் அறிக்கையை உறுப்பினர் அனைவரது இருப்பிடத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்பித் தெரிவிக்க வேண்டும்.

கூட்டத்தில் கலந்துகொள்ளுதல்:

• ஊராட்சிமன்ற கூட்டத்தில் உறுப்பினர் அல்லாத பிறர் பங்கேற்க விரும்பினால் அவர் குறிப்பிட்ட காரணத்துடன் பங்கேற்கலாம். இதற்கான முடிவைக் கூட்டத் தலைவரே செய்பவராக உள்ளார்.

• கூட்டத்தில் உறுப்பினர் கலந்துகொள்ளும் போது வருகைப் பதிவேட்டிலும் தீர்மானப் பேரேட்டிலும் பதிவிட வேண்டும்.

• கூட்டம் கூட்டுவதற்குரிய குறைவெண் வருகை அடிப்படையில் கூட்டம் நிகழ வேண்டும். மூன்று நபர் அல்லது மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் நிறைந்ததாகக் கூட்டம் அமைய வேண்டும்.

தீர்மானம் நிறைவேற்றல்:

            தீர்மானங்கள் ஒவ்வொன்றாகப் படிக்கப்பட வேண்டும். படித்தபின்பு அவற்றைக் கைப்பட எழுத வேண்டும். எழுதிய பின்பு மீண்டும் ஒருமுறை தெளிவாகப் படிக்கப்பட வேண்டும். இவ்வாறு படித்த பின் அனைவரும் ஒருமனதாகச் சரி என இசையும் வகையில் ஒருமித்த கருத்து அமையவேண்டும். அவ்வாறு இல்லையேல் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படலாம். இத்தீர்மானங்கள் பிற்காலத்தில் திருத்தங்கள் செய்துகொள்ளக் கூடியவை. பஞ்சாயத்துக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தலைவரின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

by Lakshmi G   on 25 Dec 2020  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8
கருத்துகள்
03-Feb-2021 11:39:25 kollywoodinfo said : Report Abuse
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.