|
|||||
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8 |
|||||
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8 புரிந்து கொள்வோம் மக்கள் பாராளுமன்றம் கிராமசபையை கிராம சபை: பஞ்சாயத்து அமைப்புகளிலேயே கிராம சபை என்பது மிகவும் முக்கியமான கூறு ஆகும். ஏனெனில் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றியமைக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாகக் கிராமசபை உள்ளது. இந்திய ஜனநாயகம் பாராளுமன்ற ஜனநாயகமாகப் பிரதிநிதித்துவ ஜனநாயகமாக அமைந்துள்ளது. இப்பிரதிநிதித்துவ ஜனநாயகத்துடன் பங்கேற்பு ஜனநாயகத்தை இணைக்கும் ஆற்றலைக் கிராம சபை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. பங்கேற்பு ஜனநாயகத்தின்வழி இதுவரை ஒதுக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பதாகக் கிராமசபை அமைந்திருக்கின்றது. ஒரு கிராமப் பஞ்சாயத்து என்பது கிராம சபை கூறுவதைக் கேட்டே செயல்பட வேண்டும். இதன்மூலம் கிராம சபையே கிராமப் பஞ்சாயத்து அமைப்பிற்கு அடிப்படை என்பதை உணரலாம். ஒருவர் 18 வயது நிரம்பியவராகவும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவராகவும் இருப்பின் அவர் கிராம சபையின் உறுப்பினர் என்ற பதவியை அடைய முடியும். இதனால் கிராம சபை பலதரப்பட்ட மக்களுக்கும் பாலமாக இருப்பதைக் காணலாம். மேலும் கிராம சபையின் மூலம் கிராமப் பஞ்சாயத்து என்பது தலைவர்க்கானது என்றில்லாமல் அது மக்களுக்கானது என்பதை உணரவைக்க முடியும். கிராம சபையின் அதிகாரங்கள்: தமிழக அரசு கிராம சபைகளுக்குச் சட்டத்தின்வழி அதிகாரங்களைத் தராவிட்டாலும் ஆணைகளின்வழி சிலவற்றை அளித்துள்ளது. கிராம சபையில் எடுக்கப்படும் முடிவுகள் அரசின் ஆணைகளின் கீழ் இருப்பின் அவற்றைத் தீர்மானங்களாக நிறைவேற்றலாம். ஒரே ஒரு கிராம சபை உறுப்பினர் சட்டங்களை முழுமையாக அறிந்திருப்பாராயின் அவர் கிராம சபையின் மூலம் கிராமப் பஞ்சாயத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்வி கேட்கும் அதிகாரம் உடையவராகலாம். கிராம சபைக் கூட்டத்தின் முறை: கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலின்போது கண்டிப்பாகக் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றாக வேண்டும். அவ்வாறு கூட்டத்தை நிகழ்த்துவதற்கு உரிய விதிமுறைகள் உள்ளன. அவற்றைக் கிராம சபைத் தலைவர் மட்டுமின்றி உறுப்பினர் அனைவரும் அறிந்திருத்தல் அவசியமாகும். • கிராம சபைக் கூட்டம் அரசாணைப்படி நிகழ்த்த வேண்டும். • அவ்வாறு கூட்டம் நிகழ்த்துவதற்கு முன் கூட்டத்தில் விவாதிக்கும் பொருள், கால அளவு, இடம் போன்றவற்றைக் குறித்த புரிதல்களை நிகழ்த்த வேண்டும். • கூட்டத்தில் பேசும் நபர் கண்ணியத்துடன் பேசுவதற்கோ, நடப்பதற்கோ தவறுவாராயின் அவர் மீது சபைத் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அதிகாரங்களின் பயன்பாடு: தமிழக அரசு கிராம சபைகளுக்கு அளித்துள்ள அதிகாரங்கள் பல இடங்களில் பயன்பாடற்று இருக்கின்றன. அரசாணைகளின்வழி கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறைவர செயலாற்றினால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நிதிநிலை அறிக்கையை ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரத்தைக் கிராமசபை பெற்றுள்ளது. மேலும் கிராம வளர்ச்சிக்கானத் திட்டங்களை அனுமதிப்பதும் கிராம சபையின் அதிகாரங்களுள் ஒன்றாகும். இவற்றை பெரும்பாலான கிராமசபைகள் பயன்படுத்தியிருக்குமா என்பது ஐயத்திற்குரியது. கிராம மேம்பாட்டுத் திட்டத்தை அனுமதிப்பது மட்டுமின்றி அத்திட்டத்திற்குப் பங்காற்றவும் கிராம சபைக்கு அதிகாரம் உண்டு. ஆனால் இதைப்பற்றிய வழிகாட்டுக்குறிப்புகள் இல்லாத காரணத்தால் பலருக்கும் இவற்றைப்பற்றிய புரிதல் இல்லை என்பதே நிதர்சனம். அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் கிராம சபையினர்க்குத் தேவையாக உள்ளன. ஒரு கிராமப் பஞ்சாயத்தின் கீழ் 37 துறைகள் கிராம மேம்பாட்டிற்காக இயங்குகின்றன. இந்தத் துறைகளின் பணிகளையும் அவற்றின் நிதி செலவுகளையும் கிராம சபை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எந்த கிராமப் பஞ்சாயத்துகளும் இதனை அறிந்துவைத்திருப்பது இல்லை. இதற்குத் தீர்வு காணும் பொருட்டு கர்நாடக அரசு ‘கிராம ஸ்வராஜ்’ என்ற சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி அரசின் திட்டங்கள் எவையாயினும் கிராமத்தில் அமல்படுத்த வேண்டுமாயின் அவை கிராம சபையின் அனுமதியுடனே செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதன்மூலம் கிராமத்தின் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட 37 துறைகளும் இன்னின்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்று முன்னரே அறிக்கைகளைத் தரும் சூழல் ஏற்பட்டது. இதனால் கிராமசபை கிராமத்தின் அனைத்து தகவல்களையும் அறிந்திருக்க வேண்டிய வாய்ப்புகள் அதிகமாயின. இத்தகைய சட்டங்களின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்துவது சாத்தியமாகும். கிராம சபை பற்றிய விழிப்புணர்வு: 1. நிதி ஒதுக்கீடு செய்யும் போது குறிப்பிட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதற்குக் கிராம சபையினருக்கு அரசு தெரிவிக்க வேண்டும். பயனாளிகளைத் தேர்வு செய்யும் வழிகாட்டுதல் இருந்தால் இது எளிதாகும். 2. வழிகாட்டுதல்கள் கிராம சபை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய கையேடாக மாநில அரசு நல்கினால் சிறப்பாகும். 3. தீண்டாமை போன்ற சமூக இடர்பாடுகள் ஒரு கிராமத்தில் இருப்பின் அதற்குத் தீர்வுகளைக் கிராமப் பஞ்சாயத்து மட்டுமின்றி கிராம சபையும் செய்ய முற்பட வேண்டும். இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படும். 4. கிராமத்தில் சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவது கிராம சபையின் தலையாய கடமையாகும். 5. குறிப்பிட்ட திட்டத்திற்குக் குறித்த செலவு செய்யப்பட்டிருக்கப்படுமாயின் அது போதிய பயனை நல்கியுள்ளதா என்பதைக் கண்காணிப்பது கிராம சபையின் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும். 6. பஞ்சாயத்திற்குட்பட்ட 5 குழுக்களும் அக்குழுக்களுக்குத் தரப்பட்ட ஆணைப்படி அறிக்கைகளை உருவாக்கியுள்ளதா என்பதைக் கிராம சபையே கண்காணிக்கவேண்டும். பலரும் இதனைப்பற்றி அறிந்திருப்பது இல்லை. 7. கிராம சபையின் செயல்பாடுகள் வெற்றிகரமாக நடப்பதற்குக் காரணம் சபையினைக் குறித்த முறையான விழிப்புணர்வே ஆகும். 8. கிராம சபை ஒரு தீர்மானம் எடுக்கும் போது அதனைப்பற்றி மக்களிடம் கலந்தாய்வு செய்த பின்பே நிறைவேற்ற வேண்டும். 9. கிராமத்திலுள்ள நீர் மற்றும் நில வளங்கள், குடும்ப உறுப்பினர்கள், முதியோர்கள், சிறுவர் சிறுமியர், மாற்றுத்திறனாளர்கள், தனிநபர்கள் போன்றவை அடங்கிய புள்ளி விவரப்பட்டியல் அனைத்து கிராமசபைகளிலும் இருக்கவேண்டும். இதனால் கிராம மக்களும் அறிந்து கொள்வர். 10. கேரளத்தில் நிதிநிலை தாக்கலின்போது செயல்படும் ‘பஞ்சாயத்துச் சாளரம்’ போன்ற அமைப்பின் மூலம் தங்களுக்கான நிதியை அவர்கள் அறிந்துகொள்வதைப் போல தமிழகப் பஞ்சாயத்திலும் மக்களும் கிராம சபையினரும் ஏதேனும் திட்டமிட்டு அறிந்துகொள்ளலாம். 11. அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு இணைப்புப்பாலமாக கிராம சபை அமைந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே சிறந்த திட்டங்கள் மக்களைச் சென்றடையும். இறுதியாகக் கிராமசபை என்பது பயனாளிகளுக்கு என்றில்லாமல் பொறுப்புள்ள குடிமக்களுக்கு உரியதாக மாறும்போதே சிறந்த ஜனநாயகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை. |
|||||
by Lakshmi G on 16 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|