LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் . பழனித்துரைநிகழ்வு 10

கிராமப் பஞ்சாயத்து ஆளுகை மற்றும் நிர்வாகம்

கிராமப் பஞ்சாயத்தின் பணிகள்:

            மூன்றடுக்குப் பஞ்சாயத்தில் அதிகளவு அதிகாரம் பெற்றுள்ள பஞ்சாயத்துக் கிராமப் பஞ்சாயத்து ஆகும். இப்பஞ்சாயத்திற்கு அதிக பொறுப்புகளும் பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கிராமப் பஞ்சாயத்தில் இரண்டு பணிகள் பிரதானமாக உள்ளன. அவையாவன

1. ஆளுகை

2. நிர்வாகம்

ஆகியனவாகும். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு நிலையில் ஆளுகை செய்பவராகவும் மற்றொரு நிலையில் அவரே நிர்வாகம் செய்பவராகவும் அமைந்துள்ளார். கிராமப் பஞ்சாயத்துப் பணிகளைத் தவிரப் பிற பணிகளும் உள்ளன. உதாரணமாகக் கிராம மேம்பாட்டிற்காகச் செயல்படும் துறைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு திட்டத்தைக் கிராமத்தில் செயல்படுத்த எண்ணி அப்பணியினை மேற்கொள்ளும் போது இத்தனையையும் கிராமப் பஞ்சாயத்து ஆளுகை செய்ய வேண்டிய நிலையில் அமைகின்றது.

இந்தியாவில் நடைபெற்ற ஆய்வு:

            கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு ஆய்வு நிகழ்த்தப்பெற்றது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை இந்தியாவின் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்களும் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்றும் அந்தந்த பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இவற்றைத் திறம்படச் செயலாற்ற ஆற்றல் உள்ளனவா என்றும் இவ்வாய்வு நடைபெற்றது. இதன் முடிவுகளின் படி இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் மட்டும் இத்தகைய ஆளுமைத்திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் பிற இடங்களில் அவ்வாறு மேம்படவில்லை என்றும் அறிய முடிந்தது. இவ்வாறு மேம்படாததற்குக் காரணம் அதற்கு வலுவான பயிற்சி நிறுவனங்கள் கிடையாது என்று ஆய்வு முடிவுகள் வெளியிட்டன.

ஆற்றலின் முக்கியத்துவம்:

            கிராமப் பஞ்சாயத்தின் வடிவமைப்பு என்பது கூட்டுப்பொறுப்பாக, மக்களை மையமிட்டதாக அமைந்துள்ளது. மேலும் ஆழமாக நோக்கினால் இந்தியாவினுடைய போக்கு, ஆளுகை, நிர்வாகம் ஆகியவை சிக்கல் நிறைந்தவையாக இருப்பதைக் காணலாம். இவற்றைப் புரிந்துகொண்டு ஆளுகை செய்வது மிகவும் சிரமமான செயலாகும். இதற்குச் சிறந்த ஆற்றல் அடிப்படைத் தேவையாக உள்ளது.

            மேலும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு அதிகமானதாகும். உதாரணமாக இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் நிலையைக் கூறலாம். பொதுவாகக் கிராம மக்களின் முன்னேற்றம் சார்ந்து 2000 திட்டங்கள் தோராயமாக உள்ளன. இவ்வளவு திட்டங்கள் இருந்தும் ஒரு நிலைக்கு மேல் இம்மக்களை வறுமைக்கோட்டிலிருந்து அரசால் மீட்க முடிவதில்லை. இதற்குத் தீர்வாக உலக வங்கி வறுமையை ஒழிக்க மக்களிடம் அவர்களாகத் திட்டத்தை உருவாக்கி அதனைச் செயல்படுத்தினால் மட்டுமே முடியும் என்பதைக் கூறியுள்ளது. ஆக இவ்வளவு பொறுப்பு மிகுந்த நாட்டில் உள்ள தலைவர்களுக்கு எத்தனை ஆற்றல் தேவை என்பதை இதன்மூலம் உணரலாம்.

பஞ்சாயத்தின் பொறுப்பு:

            கிராமப் பஞ்சாயத்து என்பது கிராமத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி சமூக நீதிகளுக்கும் செயல்பட வேண்டும். உதாரணமாகத் தீண்டாமை போன்ற சமூக இடர்பாடுகள் கிராமத்தில் இருப்பின் அதனை நீக்க காவல்துறை மட்டுமின்றி பஞ்சாயத்தும் பொறுப்பாக வேண்டும் என்பது அவசியம். மேலும் கோவிலுக்குச் செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அதனை நீக்கி நல்வழியாற்ற வேண்டியது பஞ்சாயத்தின் பொறுப்பாகும். மத்திய மாநில அரசுகள் சமூகத்தில் செய்ய முடியாத சமூக நல்லிணக்கத்தை சமூகத்தில் கொண்டுவர வேண்டியது உள்ளாட்சியின் பிரதான பணியாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நிர்வாகச் சிக்கல்:

            1962 ஆம் ஆண்டு பால் ஆப்பிள் பி என்ற பொது நிர்வாக அறிஞர் சிறந்த ஆளுமையாக இருந்தவர். இவர் இந்தியாவின் நிர்வாகம், விடுதலைக்குப்பின் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆய்ந்து அறிக்கையை வெளியிட்டார். அவர் இந்திய நிர்வாகம் என்பது ஒரு சுதந்திர நாட்டிற்கான நிர்வாக அமைப்பினை கொண்டிருக்கவில்லை என்றும் வெள்ளையர்கள் அளித்த நிர்வாகத்தின் விரிவாகவே அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இவருடைய கூற்றை நோக்கினால் இந்தியாவில் நிர்வாகத்துக்கல் படர்ந்துள்ளதைக் காணலாம். இத்தகைய நிர்வாகத்தைப் புரிந்துகொண்டு செயலாற்றுவது அசாதாரணப் பணியாகவே உள்ளது. பெரும்பாலானத் தலைவர்களுக்கு நிர்வாகக் கட்டமைப்பு பற்றியும் அதனுடைய போக்கு பற்றியும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்திருப்பாராயின் நிர்வாகச் சிக்கல் பெரும் சிக்கலாக இருக்காது.

விருப்பக்கடமைகள்:

            பஞ்சாயத்திற்குரிய மூன்று முக்கிய கடமைகளில் கட்டாயக்கடமைகள் 19 ஆக உள்ளன. அதற்கடுத்துள்ள விருப்பக்கடமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவையாவன,

1. சாலை ஓரங்களில் மரம் நட்டு வளர்த்தல்.

2. சாலைகளிலும் கட்டிடங்களிலும் பொது இடங்களிலும் தெருவிளக்குகள் அமைத்தல்.

3. பொதுச்சந்தைகளை அமைத்தல்.

4. உள்ளூர் திருவிழாக்களின் போது சுகாதார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்துதல்.

5. பேருந்து நிறுத்தம், வண்டிப்பேட்டைகள், பொதுக்கால்நடைத் தொழுவங்கள் ஏற்படுத்திப் பராமரித்தல்.

6. பொது இறைச்சி கொட்டகைகளை உருவாக்கிப் பராமரித்தல்.

7. யாத்திரீகள் தங்கும் இடங்களை அமைத்துப் பராமரித்தல்.

8. படிப்பகங்களை ஏற்படுத்திப் பராமரித்தல்.

9. வானொலி, தொலைக்காட்சி அறைகளைக் கட்டி பராமரித்தல்.

10. விளையாட்டு மையங்களை உருவாக்குதல்.

11. முறைசாரா கல்வி, வயதுவந்தோர் கல்வி நிலையங்கள் அமைத்து நடத்துதல்.

12. சமுதாயக் கூடங்கள் கட்டி பராமரித்தல்.

13. பொதுச் சுகாதார பாதுகாப்பு, பொழுதுபோக்கு போன்ற வசதிகளை ஏற்படுத்துதல்.

14. பொருட்காட்சி அமைத்தல்.

15. விழாக்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியனவாகும்.

ஒப்பளிப்பு பணிகள்:

            மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அதனைக் கிராமத்தில் திறம்படச் செய்வதற்குக் கிராம பஞ்சாயத்திடம் அவற்றை ஒப்படைக்கும். இப்பணிகளே ஒப்பளிப்பு பணிகள் ஆகும். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை இப்பணிகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

1. தாய் திட்டம். இதன் நோக்கம் குக்கிராமங்களில் கட்டுமானங்கள், சாலைகள் உருவாக்கல் , பிற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியனவாகும்.

2. முதலமைச்சர் பசுமை வீட்டுத்திட்டம்.

3. சூரிய சக்தியுடன் தெருவிளக்கு அமைக்கும் திட்டம்.

4. ஒருங்கமைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டம்.

5. பாரத பிரதமரின் குடியிருப்புத்திட்டம்.

6. மகாத்மா காந்தியின் நூறுநாள் வேலைத்திட்டம்.

7. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டம்.

8. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டம்.

9. தன்னிறைவுத்திட்டம்.

10. ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம்.

11. ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம்.

12. தூய்மை பாரத திட்டம்.

13. திடக்கழிவு மேலாண்மை இயக்கம்.

14. அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளை நிறைவு செய்வதற்கான நிதி.

15. தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம்.

16. பிரதம மந்திரி கிராமச்சாலை திட்டம்.

17. ஊரக சாலைகள் பராமரிப்பு திட்டம்.

இவையாவும் ஒப்பளிப்பு பணிகளுள் அடங்கும்.

பிறத்துறைப்பணிகள்:

            கட்டாயக்கடமைகள், விருப்பக்கடமைகள், ஒப்பளிப்புப்பணிகள் அல்லாத சில பிற துறைப்பணிகளும் பஞ்சாயத்திற்கு உள்ளன. அவையாவன,

1. வீட்டுமனை பட்டா வழங்க முயற்சித்தல்.

2. முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தல்.

3. குடிநீர் பஞ்சம் நீக்க வழிவகை செய்தல்.

4. குறைந்தபட்ச தேவைகள் நிறைவேற்றும் திட்டம்.

5. தமிழ்நாடு வாழ்வாதார திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய பொருளாதார தேவைகளை ஊக்குவிக்கும் பொருட்டு வழிவகை செய்தல்.

6. கொத்தடிமை ஒழிப்பு.

7. தீண்டாமை ஒழிப்பு

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 நிதி சேகரிப்பு:

            கிராமப் பஞ்சாயத்து சில திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு போதிய நிதி இல்லாத சமயத்தில் கடன் வாங்கும் வசதியும் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடன் வாங்குவது போல உள்ளாட்சியான கிராமப் பஞ்சாயத்திற்கும் இச்சலுகை உண்டு. அதனைப் போலச் சொத்து வாங்கும் வசதியும் பஞ்சாயத்திற்குள்ளது. திருமண கட்டிடங்கள், கடைகள் போன்றவற்றைக் கட்டி அதில் வரும் வருமானத்தில் கிராமப் பஞ்சாயத்துத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். இதற்குப் பணம் தேவைப்படின் கடன் வாங்கலாம். மேலும் தன்னார்வலர்கள், தொழில் நிறுவனங்கள், தொண்டூழியங்கள் போன்றவற்றின் மூலம் நிதி சேகரிப்பு செய்ய முடியும்.

 

by Lakshmi G   on 24 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.