|
||||||||
புதிய செயற்கைக்கோள் மூலம் மலிவு விலையில் இணையச் சேவை - களமிறங்கிய அமேசான் |
||||||||
![]()
செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையச் சேவை வழங்கும் நோக்கில் Kuiper இணைய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவைக்குச் சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம்.
உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணையச் சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்கப் புள்ளியாக 27 Kuiper இணைய செயற்கைக்கோளை ‘அட்லாஸ்’ ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான். வரும் நாட்களில் Kuiper இணைய செயற்கைக்கோளை அதிகளவில் விண்ணில் நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புளோரிடாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட Kuiper இணைய செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து சுமார் 400 மைல் தொலைவில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2023-ல் சோதனை ஓட்டமாக இரண்டு Kuiper செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பயனர்களின் தேவைக்கு ஏற்ப 100 Mbps, 400 Mbps மற்றும் 1 Gbps என இணையச் சேவையை வழங்க உள்ளது அமேசான். இதற்கான சந்தா விவரம், கட்டணம் போன்றவற்றை அந்நிறுவனம் இன்னும் பகிராமல் உள்ளது.
3,236 Kuiper செயற்கைக்கோள்: சுமார் 10 பில்லியன் டாலர் பொருட்செலவில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது அமேசான். மொத்தம் 3,236 Kuiper செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்த உள்ளது.
அமெரிக்காவின் ஃபெடரல் தொடர்புகள் ஆணையத்தின் விதிகளின் படி வரும் 2026-ம் ஆண்டு ஜூலைக்குள் 1,618 Kuiper செயற்கைக்கோள்களை அமேசான் நிலை நிறுத்த வேண்டும். இப்போது உலக அளவில் செயற்கைக்கோள் இணையச் சேவையை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் வழங்கி வருகிறது. தற்போது Kuiper வரவு மூலம் ஸ்டார்லிங்குக்கு அமேசான் சவால் கொடுத்துள்ளது.
|
||||||||
by hemavathi on 03 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|