LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

அழகின் சிரிப்பு - பகுதி - 1

                                             அழகின் சிரிப்பு

 

1. அழகு


காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.2. கடல்


மணல், அலைகள்

ஊருக்குக் கிழக்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம் போல்
மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ கல்வி
நிலையத்தின் இளைஞர் போலஎ
பூரிப்பால் ஏறும் வீழும்;
புரண்டிடும்; பாராய் தம்பி.

மணற்கரையில் நண்டுகள்

வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல
துள்ளியே அலைகள் மேன்மேல்
கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளகள் ஓடி ஆடிப்
பெரியதோர் வியப்பைச் செய்யும்.

புரட்சிக்கப்பால் அமைதி

புரட்சிக்கப் பால் அ மைதி
பொலியுமாம். அதுபோல், ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட் கப்பால்
கடலிடை அமைதி அன்றோ!
பெருநீரை வான்மு கக்கும்;
வான்நிறம் பெருநீர் வாங்கும்!

கடலின் கண்கொள்ளாக் காட்சி

பெரும்புனல் நிலையும், வானிற்
பிணந்த அக் கரையும், இப்பால்
ஒருங்காக வடக்கும் தெற்கும்
ஓடு நீர்ப் பரப்பும் காண
இருவிழிச் சிறகால் நெஞ்சம்
எழுந்திடும்; முழுதும் காண
ஒருகோடிச் சிறகு வேண்டும்
ஓகோகோ எனப்பின் வாங்கும்!

கடலும் இளங் கதிரும்

எழுந்தது செங்க திர்தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூற்றல்!
வெளியெலாம் ஓளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்ப ரப்பின்
முழுதும்பொன் னொளிப றக்கும்.
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!

கடலும் வானும்

அக்கரை சோலை போலத்
தோன்றிடும்! அந்தச் சோலை,
திக்கெலாம் தெரியக் காட்டும்
இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்
கைக்கொள்ள அம்மு கில்கள்
போராடும்! கருவா னத்தை
மொய்த்துமே செவ்வா னாக்கி
முடித்திடும்! பாராய் தம்பி!

எழுந்த கதிர்

இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே
இருளின்மேல் சினத்தை வைத்தான்;
களித்தன கடலின் புட்கள்;
எழுந்தன கைகள் கொட்டி!
ஒளிந்தது காரி ருள்போய்!
உள்ளத்தில் உவகை பூக்க
இளங்கதிர், பொன்னிண றத்தை
எங்கணும் இறைக்க லானான்.

கடல் முழக்கம்

கடல்நீரும், நீல வானும்
கைகோக்கும்! அதற் கிதற்கும்
இடையிலே கிடைக்கும் வெள்ளம்
எழில்வீணை; அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி
வண்கடல் பண்பா டல் கேள்!

நடுப்பகலிற் கடலின் காட்சி

செழுங்கதிர் உச்சி ஏறிச்
செந்தணல் வீசு தல்பார்!
புழுங்கிய மக்கள் தம்மைக்
குளிர்காற்றால் புதுமை செய்து
முழங்கிற்றுக் கடல்! இவ்வைய
முழுவதும் வாழ்விற் செம்மை
வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்
வளர்கின்ற கடல்பார் தம்பி!

நிலவிற் கடல்

பொன்னுடை களைந்து, வேறே
புதிதான முத்துச் சேலை
தன்இடை அணிந்தாள் அந்தத்
தடங்கடற் பெண்ணாள், தம்பி
என்னென்று கேள்; அதோபார்
எழில் நிலா ஒளிகொட் டிற்று!
மன்னியே வாழி என்று
கடலினை வாழ்த்தாய் தம்பி.3. தென்றல்


மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி
அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில்
கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் து஡ள் து஡ளாகச்
செயினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்!

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும்
உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன்இன் பத்தைத்
தென்னாடுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்?

தென்றலின் நலம்

குளிர்நறுஞ் சந்தனஞ் சார்
பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே
மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல
கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன்
வரவினை வாழ்த்தா ருண்டா?

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன்
ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச்
சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை
அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை
இணைத்திடல் அன்பே அன்றோ?

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்
உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும், விலக்கார் உன்னை!

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத
என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது
குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்
குளிர்செய்து, மேனி யெங்கும்
வழிந்தோடிக் கிலு கிலுப்பை
தன்னையு ம் அசைப்பாய் வாழி.

தென்றல் இன்பம்

இருந்தஓர் மனமும், மிக்க
இனியதோர் குளிரும் கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும்
கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு
மாற்றாகிப் பின்னர் வானிற்
பருந்தாகி இளங்கி ளைமேற்
பறந்தோடிப் பாடு கின்றாய்!

தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே
எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
"எழுதிய தாளை நீ ஏன்
கிளப்பினை" என்று கேட்டேன்,
"புழுதியைத் துடைத்தேன்" என்றாய்;
மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை!

தென்றலிற்கு நன்றி

கமுகொடு, நெடிய தென்னை,
கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை,
உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்க
தென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான்
கனவிலும் மறவேன் அன்றோ?

தென்றலின் விளையாட்டு

களச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளயா டிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லேநீ!4. காடு


மலைப்பு வழி

நாடினேன்; நடந்தேன்; என்றன்
நகரஓ வியத்தைத் தாண்டித்
தேடினேன்; சிற்று஡ர் தந்த
காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;
பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த
பாதையை இழந்தேன். அங்கே
மாடிவீ டொன்று மில்லை
மரங்களோ பேசவில்ல!

வழியடையாளம்

மேன் மேலும் நடந்தேன்; அங்கே
'மேற்றிசை வானம்' என்னை
"நான் தம்பி என்னை நோக்கி
நட தம்பி" எனச்சொல் லிற்று!
வான்வரை மேற்குத் திக்கை
மறைத்திட்ட புகைநீ லத்தைத்
தேன்கண்டாற் போலே கண்டேன்,
திகழ் காடு நோக்கிச் சென்றேன்.

காட்டின் அழகு

வன்மை கொள் பருக்கைக் கல்லின்
வழியெல்லாம் பள்ளம், மேடு!
முன்னாக இறங்கி ஏறி
முதலைகள் கிடப்ப தைப்போல்
சின்னதும் பெரிது மான
வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;
"கன்மாடம்" எனும்பு றாக்கள்
கற்களைப் பொறுக்கக் கண்டேன்.

மயிலின் வரவேற்பு

மகிழ்ந்துநான் ஏகும் போதில்
காடுதன் மயிலை ஏவி
அகவலால் வரவேற் பொன்றை
அனுப்பிற்று கொன்றைக் காய்க்கு
நிகரான வாலை ஆட்டிக்
காரெலி நின்று நின்று
நகர்ந்தது. கூடச் சென்றேன்
நற்பாதை காட்டும் என்றே.

தமிழா நீ வாழ்க

முகத்திலே கொடுவாள் மீசை
வேடன், என் எதிரில் வந்தான்.
அகப்பட்ட பறவை காட்ட,
அவற்றின்பேர் கேட்டேன்! வேடன்
வகைபட்ட பரத்து வாசன்
என்பதை வலியன் என்றான்;
சகோ தரத்தைச் செம்போத் தென்றான்!
தமிழா நீ வாழ்க என்றேன்.

வேடன் வழி கூறினான்

"போம் அங்கே! பாரும் அந்தப்
புன எலு மிச்சை" என்றான்.
" ஆம்" என்றேன்". "அதைத்தான் ஐயா
குருந்தென்றும் அறைவார்" என்றான்
"ஆம்" என்றேன் தெரிந்த வன்போல்!
"அப்பக்கம் நோக்கிச் சென்றால்
மாமரம் இருக்கும் அந்த
வழிச்செல்வீர்" என்றான் சென்றேன்.

காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்

செருந்தி, யாச்சா, இலந்தை,
தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு முங்கில்; இரு குரங்கு
கண்டேன் பொன் னு஡சல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
கோணல்மா மரமும் கண்டேன்!

பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த
மான்கன்றை நரியடித்தது

ஆனைஒன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனை ஒன் றணுகும்; அங்கே
புலி ஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.

மயிலுக்கு கரடி வாழ்த்து

இழந்தபெட் டையினைக் கண்டே
எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட் டெழுந்த கூட்டக்
கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம்விரிக்கும்
தனிமயிலால், அடைத் "தேன்"
வழிந்திடும்; கரடி வந்து
மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.

பயன்பல விளைக்கும் காடு

ஆடிய கிளைகள் தோறும்
கொடிதொங்கி, அசையும் ! புட்கள்
பாடிய படியி ருக்கும் !
படைவிலங் கொன்றை யொன்று
தேடிய படியிருக்கும் !
காற்றோடு சருகும் சேர்ந்து
நீடிசை காட்டா நிற்கும் ;
பயன்தந்து நிற்கும் காடே !5. குன்றம்


மாலை வானும் குன்றமும்

தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னிலே ஓர்
செங்கதிர் மாணிக் கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை,
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
மரகதத் திருமே னிக்கு
மங்காத பவழம் போர்த்து
வைத்தது வையம் காண !

ஒளியும் குன்றும்

அருவிகள், வயிரத் தொங்கல் !
அடர்கொடி, பச்சைப் பட்டே !
குருவிகள், தங்கக் கட்டி !
குளிர்மலர், மணியின் குப்பை !
எருதின்மேற் பாயும் வேங்கை,
நிலவுமேல் எழுந்த மின்னல்,
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பார டாநீ.

கிளி எறிதல்

தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி
தழைபசுஞ் சிறக டித்து
மலைப்புன்னை மரத்தின் பக்கம்
வந்திடும் கிளிக்கூட் டத்தில்,
சிலைப்பெண்ணாள் கவண் எறிந்து,
வீழ்த்தினேன் சிறகை என்றாள்.
குலுக்கென்று சிரித்தொ ருத்தி
"கொழும்புன்னை இலைகள்" என்றாள்!

குறவன் மயக்கம்

பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி
ஆதொண்டைப் பழம்பார்த் தானை
உதட்டினைப் பிதுக்கிக் "கோவை"
உன்குறி பிழைஎன் றோதும் !
குதித்தடி மான்மான் என்று
குறுந்தடி து஡க்கு வானைக்
கொதிக்காதே நான் அம்மானே
எனஓர் பெண் கூறி நிற்பாள்!

குன்றச் சாரல், பிற

குன்றத்தின் "சாரல்", குன்றின்
அருவிகள் குதிக்கும் "பொய்கை"
பன்றிகள் மணற்கி ழங்கு
பறித்திடும் "ஊக்கம்" நல்ல
குன்றியின் மணியால், வெண்மைக்
கொம்பினால் அணிகள் பூண்டு
நின்றிடும் குறத்தி யர்கள்
"நிலாமுகம்" பாரடா நீ !

குறத்தியர்

"நிறைதினைக் கதிர்" முதிர்ந்து
நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
புறத்தினில் தேர் போல் நீண்ட
புதுப்பரண் அமைத்து, மேலே
குறத்தியர் கவண் எடுத்துக்
குறிப்பார்க்கும் விழி, நீ லப்பூ!
எறியும்கை, செங்காந் தட்பூ!
உடுக்கைதான் எழில்இ டுப்பே !

மங்கிய வானில் குன்றின் காட்சி

மறைகின்றான் பரிதி; குன்ற
மங்கையோ ஒளியிழந்து,
நிறைமூங்கில் இளங்கை நீட்டி
வாராயோ எனஅ ழைப்பாள்!
சிறுபுட்கள் அலறும்! யானை
இருப்பிடம் சேரும்! அங்கோர்
குறுநரி ஊளைச் சங்கால்
இருள் இருள் என்று கூவும்!

நிலவும் குன்றும்

இருந்தஓர் கருந்தி ரைக்குள்
இட்டபொற் குவியல் போலே,
கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே
கருத்துக்கள் இருத்தல் போலே
இருள்மூடிற் றுக்குன் றத்தை!
நாழிகை இரண்டு செல்லத்
திரும்பிற்று நிலவு ; குன்றம்
திகழ்ந்தது முத்துப் போலே!

எழில் பெற்ற குன்றம்

நீலமுக் காட்டுக் காரி
நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
பாலிலே உறைமோர் ஊற்றிப்
பருமத்தால் கடைந்து, பானை
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்
குன்றின்மேல் வீசி விட்டாள்!
ஏலுமட் டுந்தோ ழாநீ
எடுத்துண்பாய் எழலை எல்லாம்!

முகில் மொய்த்த குன்றம்

ஆனைகள், முதலைக் கூட்டம்,
ஆயிரம் கருங்கு ரங்கு,
வானிலே காட்டி வந்த
வண்முகில் ஒன்று கூடிப்
பானயில் ஊற்று கின்ற
பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
போனது. அடிமை நெஞ்சம்
புகைதல்போல் தோன்றும் குன்றம்!


 


by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.