LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?

தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளன்று பலரும் அவரைப் பற்றிய நினைவுகளை, சாதனைகளைப் பகிர்ந்திருந்தனர். அதில் ஒரு குறிப்பில், போர்ச்சுகலிடமிருந்து கோவாவை விடுவிக்கப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரான மோகன் ரானடேவின் விடுதலைக்காக போப் ஆறாவது பாலிடம் பேசியதாகப் படித்தேன்.

என்னதான் அண்ணாவைப் பிடிக்கும் என்றாலும் இந்தக் குறிப்பு சற்று அதிகமாகவேபட்டது. இதற்குப் பிறகு தொடர்ந்து தேடிப்பார்த்ததில் உண்மையாகவே அப்படி நடந்திருக்கிறது!!

கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மோகன் ரானடே 1955ல் கைதுசெய்யப்பட்டு, 5 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்த பிறகு, 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
1960ல் அவர் ஒரு சரக்குக் கப்பலில் லிஸ்பனுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அதற்கு அருகில் உள்ள காஸியஸ் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1961ல் இந்தியப் படைகள் கோவாவை விடுவித்துவிட்ட பிறகும் மோகன் ரானடே விடுதலைசெய்யப்படவில்லை.

இவரது விடுதலைக்கு கடுமையான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், ஏதும் நடக்கவில்லை. பிரதமர் ஜவஹர்லால் நேருவே இதற்கு முயற்சித்தும் நடக்கவில்லை.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக 1967ல் பதவியேற்ற சி.என். அண்ணாதுரை, வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வாட்டிகனில் போப்பாண்டவர் ஆறாவது பவுலைச் சந்தித்தார்.

அப்போதுதான் போர்ச்சுகல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து மோகன் ரானடேவை விடுவிக்க வேண்டுமெனக் கோரினார் அண்ணா.

இதற்கான ஆதாரங்கள் என்னென்ன? முதலாவதாக, மோகன் ரானடே 2014ல் அளித்த பேட்டி. அதில் தன்னை விடுவிக்க அண்ணாதுரை போப்பிற்குக் கடிதம் எழுதியதாகவும் இதையடுத்து போப் வலியுறுத்தியதால் தான் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார் ரானடே.

ஆர். கண்ணன் எழுதிய அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலான Anna – the life and times of C.N. Annaduraiல் போப் ஆண்டவரை அண்ணா தனிமையில் சந்தித்ததாக மட்டுமே சொல்லப்படுகிறது. கோரிக்கை குறித்து ஏதும் சொல்லவில்லை.

ஆனால், தனது சுயசரிதை நூலான நெஞ்சுக்கு நீதியில், மோகன் ரானடே இது தொடர்பாக அளித்த பேட்டியைச் சுட்டிக்காட்டுகிறார் மு. கருணாநிதி. போர்ச்சுகல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பிய மோகன் ரானடே, 1969 மார்ச் 3ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். "போர்ச்சுக்கீசிய சிறைகளில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கான குழு, அண்ணா அவர்களிடம் அவர் வெளிநாட்டுப் பயணம் செய்தபோது அவரிடம் எனது விடுதலைக்கு முயற்சி செய்யுமாறு கேட்டது. அண்ணா அவர்களும் புனித போப்பிடம் அந்தக் கோரிக்கையை சமர்ப்பித்து போர்த்துகீசிய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட போப் அவர்கள் நான் விடுதலைசெய்ய வழிவகுத்தார்" என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் ரானடே கூறியதாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.

1970ல் வாட்டிகன் சென்ற கருணாநிதி, இதற்காக போப்பிடம் நன்றி தெரிவித்ததாகவும் கூறுகிறார் (நெஞ்சுக்கு நீதி - பாகம் இரண்டு, அத்தியாயம் - 14. தியாக தீபங்கள்).

இப்படி வலியுறுத்த, சி.என். அண்ணாதுரைக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? கத்தோலிக்க தேசமான போர்ச்சுகலில் போப்பின் பேச்சுக்கு மதிப்பு உண்டு என்பது முதலில் புரிந்திருக்க வேண்டும். அதற்கு வாட்டிகன், போர்ச்சுகல் உறவு தெரிந்திருக்க வேண்டும்.

பிறகு, மோகன் ரானடே என்று ஒருவர் கோவாவின் விடுதலைக்காகப் போராடினார்; அவர் போர்ச்சுகல் சிறையில் இருக்கிறார்; அவரது விடுதலைக்கு இந்தியா முயற்சித்து வருகிறது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சரி, அண்ணாதான் கேட்கிறார், போப் ஏன் அதைச் செய்ய வேண்டும்? இத்தனைக்கும் பார்த்தவுடன் அசந்துபோகக்கூடிய ஆகிருதியைக் கொண்டவரல்ல அண்ணா.

முடிவில் 1969ல் விடுதலையானார் மோகன் ரானடே. அப்போது அண்ணா உயிரோடு இல்லை. அவரை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இந்திராவும் நாஞ்சில் மனோகரனும் வரவேற்றனர். பிறகு, மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரானடே.

 

-முரளிதரன் காசிவிஸ்வநாதன் 

by Swathi   on 20 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
கருத்துகள்
15-Apr-2020 13:22:30 பங்கிறாஸ் அருளப்பன் said : Report Abuse
வாழ்த்துக்கள்! தமிழ்வலைத்தளம் பற்றி கேட்டிருந்தாலும் இன்று ஒரு குறள் பார்க்க தேடியபோது தமிழ் வலை தென்படவும் தொடர்ந்து வாசிக்கவும் நேர்ந்தது. இன்னும் வாசிக்கவும் இதன் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் விரும்புகிறேன். வாசித்த இரண்டு கட்டுரைகளும், 'ஜெயகாந்தனும் கலைஞரும்' சாவித்திரி கண்ணன் மற்றும் 'சி. என். அண்ணாதுரை - போப் ஆண்டவர்' நன்றாக இருந்தது. மட்டுமல்ல வாசகர்களுக்கும் கருத்து பரிமாற வசதி உண்டு என அறிந்ததிலும் மகிழ்ச்சியே. நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.