|
|||||
அரசியல் பேசுங்கள் ! |
|||||
பல ஆண்டுகளாகவே, 'பிளீஸ் இங்க அரசியல் பேசாதீங்க' என்ற வரி எல்லா இடங்களிலும் பயன்படுத்தபட்டது என்பதுதான் பெரும் பிழை. தமிழ்ச் சமூகம் தரம் தாழ்ந்து வீழ்ந்து போனதற்கு இந்த வரியும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக படித்தவர்கள் அரசியலைவிட்டு அந்நியப்பட்டது என்பது பேராபத்துகளை ஏற்படுத்திவிட்டது. 'பட்டிமன்றம்' என்ற ஒரு கலையை உருவாக்கி, எதன் ஒன்றையும் விவாதம் செய்ய வேண்டும் என்று உலகிற்கு கற்பித்த இனம், இன்று எதனையும் விவாதம் செய்யாமல் ஊமை போல கடந்துச் செல்வது ஏற்புடையது அல்ல. ஆக்கபூர்வமான விவாதங்கள் பலவும், இந்த நிலத்தில் அரசியல் சார்ந்து எழுந்திருக்க வேண்டும். அரசியல் விமர்சகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் உருவாகி இருக்க வேண்டும். யார் சரியானவர்கள்? யார் தவறானவர்கள்? என்று ஆராய்ந்து வாக்கு செலுத்துகின்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்திருக்க வேண்டும். நம்மில் இருந்து பிரிந்த மலையாள இனம் அரசியல் தெளிவு பெற்ற இனமாக வாழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. காரணம், அங்கு படித்தவர்கள் அரசியலை ஆக்கப்பூர்வமாக அணுகுகின்றனர். 95%-க்கும் மேல் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக இருப்பது என்ற பெருமிதம் அவர்களிடம் இருப்பதற்கு காரணம், அவர்களின் தெளிந்த அரசியல் பார்வைதான். மனிதச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு காரணமான எல்லாக் கூறுகளையும் அவர்கள் தெளிந்த பார்வையோடு அணுகுவதை நம்மால் கண்கூட பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் தெருவோரமாக குடிப்பதுதான் இன்றைய கலாச்சாரமாக மாறி நிற்கின்றது. காரணம் என்ன? 'சமூகம் எக்கேடு போனால் என்ன' என்று எண்ணுகின்ற படித்தவர்களின் கூடாரம்தான் இது. தவறுகளைத் தட்டிக் கேட்கும் குணமானது, மெல்ல மெல்ல தமிழர்களிடம் குறைந்து வருகிறது. நம்மைச் சுற்றி நிகழும் தவறை எதிர்த்துக் கேள்வி கேட்பதுதான் அரசியல். ஒரு சாதாரண வார்டு கவுன்சிலரை கூட எதிர்த்து பேசும் வலிமையற்றவர்களாக நாம் வாழ்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அவமானம். குடும்பமாக உட்கார்ந்து, 'யாருக்கு வாக்கு செலுத்துவது' என்று எத்தனை குடும்பத்தில் விவாதிக்கின்றோம்? 'அப்பா சொல்பவர்க்குதான் எனது ஓட்டு' என்று சொல்கின்ற படித்த முட்டாள்கள் பலரையும் நாம் தினமும் சந்திக்கின்றோமே. 'அப்பா சொல்பவரைத்தான் திருமணம் செய்வேன்.. அப்பா சொல்வதைத்தான் வாங்குவேன்..' என்றால் அதில் நியாயம் உண்டு. ஆனால் ஒட்டுமொத்த நாட்டையும் வழிநடத்தும் தலைவனைத் தேர்வு செய்ய, 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் உரிமை அளிக்கப்பட்டது என்பது அந்த வயதில் அனைவரும் பக்குவமடைந்துவிடுவர் என்று நம்பித்தான். ஆனால், இன்று 18 வயதில் அரசியல் தெளிவும் பக்குவமும் அடைந்த எத்தனைப் பேர் ஊரில் இருக்கின்றனர்? வீட்டில், டீக்கடையில், பேருந்தில், பள்ளியில், கல்லூரியில், அலுவலகங்களில் இப்படி எந்த இடத்தில் ஒருவர் அரசியல் பேசத் தொடங்கினாலும், அந்த நபரைக் கேலிப்பேசுவதற்கு நம்மில் பலரும் கிளம்பிவிடுகிறோம். 'வந்துட்டான் பெரிய அரசியல்வாதி.. நமக்கு எதுக்குபா அரசியல்..'என இழுக்க ஆரம்பிக்கிற கூட்டம்தான் நாம் தாழ்ந்து போனதற்கு காரணம். கிரிக்கெட், சினிமா, நாடகம் என்ற தேவையற்ற அனைத்து பொழுதுபோக்குகளையும் விவாதிக்க உங்களது மனம் விரும்பவது போல, கம்யூனிசம், சோசலிசம், கேப்டலிசம், திராவிடம், தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடல்களின் அரத்தங்களையும், அத்தத்துவங்களில் முன்வைக்கப்படுகின்ற அரசியலையும் விவாதிக்கும் அறிவும் தெளிவும் ஊரில் ஒரு படித்தவனுக்கு கூட இல்லாது இருப்பதுதான் வேதனையின் உச்சம். இங்கு நாம் பெற்ற பட்டங்கள் எல்லாம் குப்பைக்கு சமமானவை. உங்களின் படிப்பு உங்களுக்கும் பயனில்லாமல், சமூகத்திற்கும் பயனில்லாமல் போனதற்கு காரணம் அரசியல் என்பது இங்கு யாருக்கும் கற்பிக்கப்படவில்லை. அரசியல் தலைமைத்துவத்தின் பிறப்பிடம். தலைமைத்துவம் ஆண்மையின் பிறப்பிடம். ஆண்மை அச்சமின்மையின் பிறப்பிடம். எதனையும் எதிர்த்து கேள்வி எழுப்பும் பயமற்ற, ஆண்மையுள்ள சமூகமாக இன்றையத் தமிழ்ச்சமூகம் இல்லை. 'இல்லை.. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அரசியல் பேசினார்களே..' என்று நீங்கள் சொல்லலாம். ஒரேவொரு போராட்டத்திற்கு அணி திரண்டுவிட்டு பிறகு ஐபிஎல் பார்க்க கிளம்பிட்டால் அதற்கு பெயர் அரசியல் அறிவின்மைதான். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது தமிழ்ச்சமூகத்தில் நடந்திட்ட ஒரு விபத்து. இரண்டு மனிதன் எப்பொழுது இந்த பூமியில் பிறந்தானோ அப்பொழுதே அரசியலும் பிறந்தது. அன்று, அந்த இரண்டு நபர்களுக்கு இடையேயான பகிர்வுகளே அரசியலாக இருந்து இருக்கும். பலகோடி மனிதர்கள் வாழும் இன்றைய சூழலில் நாம் எதனை எல்லாம் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதனை தீர்ப்பதுதான் அரசியல். முன்பெல்லாம் படிப்பறிவில்லாத நம் உறவுகள் ஏதேனும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், 'அப்பறம்.. நாட்டு நடப்பு எல்லாம் எப்படிபா போகுது..' என்று பேசத்தொடங்குவர். இப்பொழுது, நாம் நமது நண்பர்களை சந்திக்கும் போது, 'நாடு எக்கேடாய் போனா.. நமக்கு என்னப்பா..' என்றுதான் பேசுகின்றோம். படிப்பறிவற்ற நம் பெற்றோர்கள் பேசிய அரசியலை கூட படிப்பறிவு பெற்ற இன்றைய நமது தலைமுறை பேச மறுப்பதுதான் பேரவலம். அன்பானவர்களே... ஏனெனில், அரசியல் என்பது வெறும் வார்த்தை அல்ல; அதுவொரு வாழ்வியல் நெறி... -பேராசிரியர் ஆ.அருளினியன் |
|||||
by Swathi on 01 Aug 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|