அரசியல் மற்றும் களப்பணியில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து தன் குரலை பதிவு செய்து வரும் ஜோதிமணி. தற்போது இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
மக்கள் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் தன்னுடன் இணைந்து பணியாற்றலாம் என்று கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இளம் அரசியல் தலைவர்களுக்கான பயணம் ஒன்றிற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள்,செனட்டர்கள்,ஹவுஸ் ஆப் ரெப்ரசென்டேட்டிவ் என்று பலரோடு உரையாட வாய்ப்பு கிடைத்தது.
அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகம் மற்றும் களப்பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இதுபோன்ற இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படுவதைப் பார்த்தேன். அரசியல், அரசாங்கம், களப்பணிகள்,பல துறைகளில் பணியாற்றுபவர்களின் தொடர்பு, தங்கள் புதுமையான யோசனைகளை செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு என்று இந்த வாய்ப்பு பல்வேறு வாயில்களை விரியத்திறப்பதை உணர்ந்தேன்.
|