|
|||||
பெரியாரும்,சிவாஜியும் ! |
|||||
இப்போது எழுதப் போவது காலையில் எழுதிய பதிவின் தொடர்ச்சி! இன்றைக்கு சிவாஜி குறித்த பல சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன! ஆயினும் அவற்றில் மூன்றை மட்டும் இன்று பதிவிடுகிறேன். பெரியார் சமாதியில் நீண்ட நேரம் அமர்ந்து புறப்பட்ட சிவாஜி,பெரியார் திடலில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டார். பெரியாரோடு அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர்..ஆகியோரெல்லாம் இருக்கும் போட்டோக்களையும்,பெரியார் பயன்படுத்திய பொருள்களையும் பார்த்து ரசித்தார். ஆசிரியர் வீரமணி அவரை வரவேற்று பேசினார். பிறகு விடை பெற்று காரில் ஏறி பயணித்து வருகையில், கட்சி நிர்வாகி ஒருவர், அண்ணே, நாம காந்தியிடத்திற்கு, காமராஜ் இடத்திற்கு எல்லாம் போனோம்.ஆனால்,அங்கெல்லாம் மாலை வைத்து,வணங்கி வந்துட்டோம்.ஏன் நீங்க பெரியார் இடத்துல மட்டும் அப்படி உட்கார்ந்துட்டீங்க...’’என்றார். நல்லா கேட்டப்பா கேள்வி! காந்தியும்,காமராஜரும் பெரிய தியாகிங்க.. நாட்டுக்காக பாடுபட்டவங்க வாஸ்த்தவம் தான்! ஆனா,என்னவோ எனக்கு இவங்களவிட பெரியார் மேல பற்று பந்தம்...சொல்லத் தெரியாத ஒரு மரியாதை இருக்குது. அது எப்படின்னா நான் பத்து,பதினொரு வயசில அண்ணன் ராதா நாடக கம்பெனியில இருக்கும் போதே பெரியார் பெருமைகளை அவர் சொல்லச் சொல்லக் கேட்டு வளந்தவன். அதற்கு பிறகு அண்ணா,மூனாக் கானா இவுகளோட சேர்ந்து நான் நடிச்சு கொடுத்த எத்தனையெத்தனையோ நாடகங்கள் அனைத்துமே பெரியார் கொள்கைகளை பரப்புறதுக்கானது தான்!அப்ப எத்தனை எதிர்ப்புகள்,தொல்லைகள பார்த்திருக்கோம்...அதெல்லாம் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்...! டேய் ,என்னத்தச் சொல்லி ஒங்களுக்கு வெளங்க வைப்பேன்னு தெரியல..ஆனா ஒன்ன மட்டும் சொல்வேன். பெரியார் மட்டும் இல்லன்னா இந்த கணேசன் இந்தளவுக்கு ஆளாகியிருப்பாங்கிற..?என்று கேள்வி கேட்டு நிறுத்தினார். யாரும் பதில் சொல்லவில்லை. என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மட்டுமல்ல, அவர் என்ன பதில் சொல்வார் என்ற ஆர்வத்தோடும் அவரையே பாரத்தனர். சிவாஜியே தொடர்ந்தார். ம்..கூம் .. நூத்துல ஒரு கூத்தாடியா நானும் வாழ்ந்திட்டு கவனிப்பில்லாமப் போயிருப்பேன்...’’என்றார்.இப்படிப் பேசும் போது சிவாஜி குரல் கம்மியது. நா தழுதழுத்தது..! அப்போது,சிவாஜியின் நம்பிக்கைகுரிய தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜசேகர்,அண்ணே நீங்க ரொம்ப உணச்சிவசப்படுறீங்க..இப்ப கூட ஆசிரியர் வீரமணி உங்க கிட்ட இதை சொல்லச் சொன்னார்..’’.ரொம்ப உணர்ச்சிவசப்பட்டால் ஒடம்பு சீக்கிரம் கெட்டுப் போயிடும். அரசியல்வாதி ஆவேசப்படுவது போலப் பேச வேண்டுமேயல்லாது நிஜமாவே ஆவேசப்படக் கூடாது, உருக்கமாக பேசலாம்... ஆனால்,அப்படிப் பேசும் போது நம்ப உள்ளத்தை தளர விட்டுடக் கூடாது.’’ என்றார்.
-சாவித்திரி கண்ணன் |
|||||
by Swathi on 07 Oct 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|