|
|||||
சினிமா விமர்சனம் - J பேபி |
|||||
பிள்ளைகளுக்குள் தகராறு, பிரிவு, சொந்த வீடு ஏலத்தில் மூழ்கிப்போனது போன்ற மன உளைச்சல்களால் மனப்பிறழ்வான அம்மா தவறுதலாக கொல்கத்தாவுக்குச் சென்றுவிட, அவரை மகன்கள் பத்திரமாக மீட்டு வந்தார்களா? குடும்பத்தின் பிரச்சனைகள் தீர்ந்ததா? என்பதைச் சொல்வதே J.பேபி திரைப்படத்தின் கதை.
பெருநகரத்தின் அவசர அவசரமான வாழ்வியலில் பிழைப்பை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் எளிய மக்களிடையே நிகழும் முரண்களையும், விலகிக் கிடக்கும் உறவுகளையும், மனவழுத்தத்தின் ஆபத்தையும், அன்பின் தேவையையும் எளிய கதையின் வழியே சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. அதற்கு நிஜச் சம்பவத்தைக் கையிலெடுத்து திரைக்கதையாக்கி இருப்பது இன்னும் நெருக்கத்தைக் கூட்டுகிறது.
மன உளைச்சலுக்கு ஆளாகும் பேபி (ஊர்வசி) தொலைந்து போகிறார். அவரின் இன்மையைக் கூட அறியாத மகன்கள் சங்கர் (தினேஷ்), செந்தில் (மாறன்) அவரவர் வேலையில் பிஸியாக இருக்கின்றனர். காவல் துறை அழைத்துச் சொல்லும் போது தான் தாய் தொலைந்து போனதே இருவருக்கும் தெரியவருகிறது. உடனே புறப்பட்டு தாயை மீட்டுக் கொண்டுவர, மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் அவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர் ஒருவர் உதவுகிறார். குடும்பப் பிரச்சினையால் பேசிக்கொள்ளாமல் இருக்கும் சங்கரையும், செந்திலையும் இந்தப் பயணம் என்னவாக மாற்றியது? தாய் பேபி மீட்கப்பட்டரா, இல்லையா என்பது படத்தின் திரைக்கதை.
இப்படத்தின் முதல் பாதியைக் கலகலப்பாக நகர்த்தும் பொறுப்பைத் தன் தோள்மேல் சுமந்து வெற்றி காண்கிறார் லொள்ளு சபா மாறன். தன் தம்பி மீது கோபத்தோடு முறைத்துக் கொண்டும், குடிக்கும் பழக்கத்தோடும் அவர் செய்யும் அலப்பறையால் அவ்வப்போது தியேட்டரே சிரிப்பலையால் நிரம்புகிறது. மிகவும் தன்மையான மகனாக, கணவனாக வலம் வருகிறார் அட்டகத்தி தினேஷ். கொல்கத்தா நகரில் அம்மாவைக் காணத் தவிப்பதும், தள்ளிப்போவதும் இடையிடையே அண்ணனையும் இழுத்துப் பிடித்துக்கொண்டு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இடைவேளை வரை நிதானமான நடிப்பை வெளிப்படுத்திய ஊர்வசி, இடைவேளைக்குப் பின் நடிப்புச் சூறாவளியாக கதக்களியே ஆடியிருக்கிறார். இரண்டாவது பாதி முழுக்க ஊர்வசியே தனது நடிப்பால் நிறைத்திருக்கிறார்.
உப்பிய கன்னமும், தொப்பையுமாகச் சராசரி நடுத்தர வயது ஆணாக தினேஷ் பாவமான முகத்துடனும், ‘ஷார்ட் டெம்பர்’ குணத்துடனும் கவனம் பெறுகிறார். ஒன்லைன் காமெடிகளுக்கும், அடுத்தவரை கலாய்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட மாறனுக்கு இப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். குடித்துவிட்டு உளறுவது, போகிற போக்கில் செய்யும் நகைச்சுவை, தம்பியிடம் காட்டும் கடுகடுப்பு, இறுதியில் உடைந்து பேசும் இடங்களில் ஈர்க்கிறார்.
பிள்ளைகள் மீது மட்டுமல்லாது எதிர்ப்படும் அனைத்து மனிதர்கள் மீதும் பாசத்தைப் பொழிவதாகட்டும், பிள்ளைகள் தன்னை மனநலக் காப்பகத்தில் தள்ளிவிட நினைக்கிறார்கள், தன்னை குடும்பத்தில் சேர்ப்பதை பாரமாக நினைக்கிறார்கள் என்பதை அறிந்ததும் வெகுண்டெழுந்து பிள்ளைகளையே கல்லால் அடிக்க ஓங்குமளவுக்கு வேறொரு லெவலுக்கு தனது நடிப்பை மாற்றுவதாகட்டும், மனப்பிறழ்வு மனநிலையை மிக அருமையாக வெளிப்படுத்துகிறார். "எனக்கு ஸ்டாலினை தெரியும்", "எனக்கு ஜெயலலிதாவை தெரியும்" என்றெல்லாம் அவர் உதார் விடுவதும், போலீஸ் பேட்ரோலில் கண்ணயரும் காவலரிடம் ரவுசு காட்டுவதுமாக நம்மை சிரிக்க வைப்பவர், அடுத்த கணமே தனது மனப்பிறழ்வு நிலையை உணர்ந்து வருந்துகையில், விழிகளில் கண்ணீரை வரவழைக்கிறார். மனப்பிறழ்விலும் தன் பிள்ளைகளிடம் நைனா நைனா என்று உருகுகையில் நெகிழ்ச்சியால் விழி நிறைக்கிறார். உண்மைச் சம்பவத்தில் உதவிய அதே நபரைத் திரையில் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
கொல்கத்தாவிலுள்ள காவல்துறை அதிகாரி, பெண்கள் காப்பகக் காப்பாளர் என வருபவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பிள்ளைகள் ஐவரில் இருவர் தவிர மற்றவர்களைப் புதியவர்களாக நடிக்க வைத்திருப்பது நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. வாரிசுகளுக்குள் சண்டையென்றாலும் சரி, மனப்பிறழ்வான தாயாக இருந்தாலும் சரி, மனசு விட்டுப் பேசினால் அனைத்தும் சரியாகும் என்பதைப் படத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார்கள். சித்ரா குரலில் வரும் ‘யார் பாடலை’ பாடல் மூலம் உருக வைக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ. இயல்பான களத்தை இன்னும் நெருக்கமாக்குகிறது ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு. உணர்வுப்பூர்வமான படத்தை எதிர்நோக்கும் பார்வையாளர்களுக்கு இப்படம் நல்ல தேர்வாக அமையலாம். ஊர்வசியின் நடிப்புக்கு நிச்சயம் விருது எதிர்பார்க்கலாம். |
|||||
by Kumar on 25 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|