|
|||||
சினிமா விமர்சனம் - 12th ஃபெயில். |
|||||
சினிமா விமர்சனம் - 12th ஃபெயில்.
கல்வி என்பது ஒருவர் பெறும் அறிவு, திறன்கள், மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பெறுவதற்கான கருவியாகும். ஒரு தனிநபர் மற்றும் ஒட்டுமொத்தச் சமூகத்தின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியின் நோக்கம் ஒரு வெற்றிகரமான நிலையான சமுதாயத்தை உருவாக்குவதே. “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்கிறார் தெய்வப்புலவர், திருவள்ளுவர்.
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்விச் செல்வமே ஆகும். கல்வியைத் தவிர மற்ற செல்வப் பொருட்கள் அனைத்தும் செல்வமே அல்ல என்பதே இக்குறள் கூறும் பொருள். கல்வியை தவிர ஏனைய செல்வங்கள் அழியக்கூடியது. அவை நமக்குள் அறியாமையை விதைத்து விடும். ஆனால் கல்வி நமக்கு என்றும் அழிவில்லாத அறிவொளியை உண்டாக்கும்.எனவே நாம் அழிவில்லாத கல்விச் செல்வத்தைப் பெற்றவராகத் திகழ வேண்டும்.
“மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத் தன்தேசம் அல்லாமற் சிறப்பில்லை. கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு” மன்னனையும் கற்றவனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிறப்புடையவன். ஏனென்றால் மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிறார் ஔவை.
கல்வியின் முக்கியத்துவம் பற்றி திருவள்ளுவர் முதல் அம்பேத்கர் வரை வலியுறுத்தியதும் இதைத்தான். எல்லாப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாகத் திரையிட்டுக் காட்டவேண்டிய அபூர்வ ரத்தினமாக வெளிவந்திருக்கிறது ‘12th ஃபெயில்’ என்கிற இந்தித் திரைப்படம். அனுராக் பதக்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, விது வினோத் சோப்ரா எழுதி இயக்கியிருக்கிறார். குற்றப் பின்னணியின் தீராக் கறை படிந்த சம்பல் பள்ளத்தாக்கு. அங்கேயுள்ள பின்தங்கிய கிராமமொன்றில் வாழும் நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் மனோஜ் குமார் சர்மா. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைகிறார். சூழல் காரணமாக, தான் சந்திக்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான துஷ்யன் சிங்கின் மந்திர வார்த்தைகள் அவர் வாழ்வைத் திசை திருப்புகிறது. பின்னாளில், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி, தன்னைப் போலவே லட்சக்கணக்கில் போட்டித் தேர்வுக்கும் தயாராகும் மாணவர்கள் மத்தியில், கனவுகளைச் சுமந்து டெல்லி செல்கிறான். முள் பாதைகள் நிறைந்த வறுமையின் நெருக்கடிகளுக்கும் கனன்று எரிந்துகொண்டேயிருக்கும் நம்பிக்கையென்னும் அணையா நெருப்புக்குமிடையே நடக்கும் அவனது வாழ்க்கைப் போராட்டங்களே கதை. பள்ளத்தாக்கிலிருந்து பனிமலையின் உச்சியை அடையும் பழைய அச்சில் வார்த்த வெற்றிக்கதை போல்தான் மேற்பரப்பில் தெரிகிறது. ஆனால், துல்லியமான திரைக்கதை, அழுத்தந்திருத்தமான கதாபாத்திர எழுத்து ஆகியவற்றால் பிரமிக்கும்படி செதுக்கியிருக்கிறார் எழுத்தாளர், இயக்குநர் விது வினோ சோப்ரா. இவர் ஏற்கெனவே ‘காமோஷ்’, ‘முன்னா பாய்’, ‘3 இடியட்ஸ்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர். ஏற்கெனவே, தாம் கொடுத்த வெற்றிப் படங்களின் தொடர்ச்சி என்று கூறிவிட்டு, அவர் ஏனோதானோவென ‘சீகுவல் சினிமா’க்களை எடுத்துக்கொண்டிருந்தால்கூட சுலபமாகப் பொருளீட்டலாம். ஆனால், அதில் விருப்பமில்லாமல், ஒரு நேர்மையான கதையைப் பிரமாதமாகச் செதுக்கியிருப்பதற்காகவே அவரைப் பாராட்டலாம். கதாபாத்திரங்களுக்கு வெகு பொருத்தமான நடிகர்கள் தேர்வும் விருதுகளுக்கு உண்டான எல்லாத் தகுதிகளும் கொண்ட நடிப்பும் ஈர்க்கிறது.
இந்த நடிகரின் நடிப்பு மிகச்சிறப்பு என யாரையும் குறிப்பிட்டுச் சொல்லிவிடமுடியாத அளவுக்கு ஒவ்வொரு நடிகரும் தங்கள் பாத்திரத்தை உண்மையாகவே நேசித்து நடித்திருக்கிறார்கள் என்பதை விடக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாகப் படிப்புக்காக டெல்லி சென்றுவிட்டுப் பல வருடங்களுக்குப் பிறகு தன் கிராமத்துக்கு வரும் நாயகனின் தலைக்கு எண்ணெய் தேய்த்தவாறு அவனது அன்னை, "நாங்கள் நல்கத்தான் இருக்கிறோம், அண்ணன் நிறையச் சம்பாதிக்கிறான், வறுமை என்பதே இல்லை" என ஆறுதலாகப் பேசும் காட்சியில், தன்தாயின் பேச்சை இடை நிறுத்தி "இன்னும் எவ்வளவு பொய் சொல்லப்போறம்மா போதும் நிறுத்து" என நாயன் அழுதுகொண்டே கூறும்போது அந்தத் தாய் அவனின் தலையைக் கட்டுவித்துக்கொண்டு அழத்தொடங்கித் திடீரெனப் பெரிய கதறலோடு சத்தமிட்டு அழுகிறாள் அந்த இடத்தில் அழாதவர்கள் மனிதர்கள் அல்ல என தோன்றுகிறது. அத்தனை விஷயங்களையும் பார்த்துச் பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர் விது வினோ சோப்ரா.
கதையை மீறாத ரங்கராஜன் ராமபத்ரனின் ஒளிப்பதிவு உள்ளே இழுத்துக்கொள்கிறது. கையறுநிலை, வறுமை, காதல், லட்சியம், பிடிவாதம் எனக் கதாபாத்திரத்தின் எல்லா நிழல்களையும் தனது முகத்திலும் உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் வெளிப்படுத்தியிருக்கும் படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாசே, கதாநாயகி மேதா ஷங்கர் ஆகிய இருவரும் அபாரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ராவின் பின்னணி இசையைச் சிலாகித்துச் சொல்லலாம். சித்தார், சரோத், புல்லாங்குழல் இவை மூன்றை மட்டுமே கொண்டு, தேவைப்படும் இடங்களில் மட்டும் ஒரு வலுவான, ஆனால் கதாபாத்திர உணர்வுகளை அளவோடு மீட்டும் பின்னணி இசையை அமைத்துள்ளார்.
ஒவ்வொரு முறை நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கி திருட்டுப் பட்டம் சூட்டப்படும் போதும் மனோஜ் செருப்பைக் கழற்றிச் சீறும் காட்சி, டார்ஜிலிங்கில் காதலியின் வீட்டைக் கண்டடைந்ததும் அவள் பார்க்க முடியாது என்று சொல்லும் நான்கு நிமிட சிங்கிள் டேக் காட்சி, முதல் முறை மகன் தேர்ச்சி பெற்றதை தொலைப்பேசியில் கிராமத்துத் தாய் கண்ணீருடன் சிரித்தபடி கேட்கும் உணர்வுப்பூர்வமான காட்சி, இறுதித் தேர்வை நேர்மையாக எதிர்கொள்ளும் உச்சக்கட்டக் காட்சி என ஒரு நாவலின் சம்பவங்களுக்குரிய அத்தனை நயங்களும் நுண்ணுணர்வும் படம் முழுக்க வியாபித்திருக்கின்றன. நல்ல கதைக்களத்தோடு வரும் எந்த மொழி படமும் காலத்தை புறட்டிப்போடும் என்பதற்கு இந்த திரைப்படம் சான்று. கருத்து சொல்ல மொழி ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறது இந்த திரைப்படம். |
|||||
by Kumar on 25 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|