|
||||||||
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் |
||||||||
நவம்பர் 3 வெளியான லைசென்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் மக்களிசைப் பாடகி ராஜலட்சுமி , ராதாரவி, பழ கருப்பையா , வையாபுரி என்று பெரும் திரைநட்சத்திரக் கூட்டமே நடித்துள்ளது. இப்படத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையாக வரும் ராஜலெட்சுமி அறச்சீற்றம் கொள்ளும் பெண்ணாக அருமையாக நடித்திருக்கிறார். பொதுமக்கள் குப்பையை வீதியில் வீசுவது முதல் பெண்களுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான சீண்டல்கள் வரை அனைத்திற்கும் கோபம் கொண்டு கேள்வி கேட்கிறார் ராஜலெட்சுமி. பாடகியாக உலகறிந்த ராஜலெட்சுமி தனது முதல் திரைப்பட கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தி நடித்துள்ளார். முழு கதையையும் இழுத்துச்செல்லும் பொறுப்போடு மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். ராஜலெட்சுமியின் தந்தையாக வரும் ராதாரவி அனுபவமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். பாலியல் கொடுமைக்கு ஆளான தனது பள்ளி மாணவியின் நிலையறிந்து அந்தக் குடும்பத்துடன் தனித்து நின்று போராடுகிறார். ஒரு கட்டத்தில் தன் அரசுப்பணி துறந்து அரசாங்கத்திடம் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் நிலையில், காவல்துறை இவரது கோபப்படும் குணத்தைக் காரணம் காட்டி அனுமதி வழங்க மறுத்துவிடுகிறது. இந்நிலையில் நேரடியாக பொதுநல வழக்கு தொடுக்கிறார். இது நாட்டின் பேசுபொருளாகி சட்ட அமைச்சரே நீதிமன்றத்தில் நேரில் வந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கிறார். இதில் சட்ட அமைச்சராக வரும் பழ கருப்பையா அவர்கள் வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார். அரசுப்பள்ளி ஆசிரியரின் துப்பாக்கி உரிமக் கோரிக்கைக்கு நாட்டு மக்களின் கருத்து, இந்தியாவின் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிரான இந்த முக்கிய வழக்கில் இது குறித்த சட்ட நுணுக்கங்கள், நீதிமன்ற விவாதங்கள், புள்ளிவிவரங்கள் என்று கதை செல்கிறது. இதில் ஆசிரியரின் கோரிக்கை நிறைவேறியதா? துப்பாக்கி உரிமம் கிடைத்ததா என்பதுதான் கதையின் முடிவு.. இப்படத்தின் முதற்பகுதி பல்வேறு களத்தை நிறுவ சில சோகமான காட்சிகளை சுமந்து செல்லும் நிலையில், இடையில் பாடலாசிரியர் ஏ.இராமணிகாந்தன் வரிகளில் இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப் இசையில் வரும் "குட்டிக் குட்டி கனவுகள" , "என் நிழலினி " ஆகிய இரண்டு பாடல்கள் மனதை வருடிச் செல்கிறது. இதில் "என் நிழலினி " வரிகளும் இசையும் முணுமுணுக்கும் பாடலாக மக்களிடம் சென்றடையும் என்று எதிர்பார்க்கலாம். இப்பதிவின் சிறப்பான ஒளிப்பதிவை காசி விஸ்வநாதன் செய்துள்ளார். வெரோனிகா பிரசாத் எடிட்டிங் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் கணபதி பாலமுருகன் துணிச்சலாக இப்படி ஒரு சவாலான சமூக நோக்கில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் கதைக்களத்தை அமைத்து நேர்த்தியாக நகர்த்தியுள்ளார். இப்படம் இயக்குநருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தும் நல்ல பெயரைப் பெற்றுத்தரும் என்றே சொல்லவேண்டும். பிரபல நடிகர்களைக்கொண்டு, பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் பெரும் படங்களுக்கு இடையே, இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வரும் கதைகளை மக்கள் வரவேற்பதன் வழியே இப்படிப்பட்ட கதைகளை சிறு முதலீட்டில் எடுக்க பலர் முன்வருவார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.ஜீவானந்தம்( ஜெ.ஆர்.ஜி. புரொடக் ஷன்) இப்படத்தின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரது நடிப்பும், தமிழ் உச்சரிப்பும் அருமை. பள்ளி ஆசிரியரின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக வாழ்த்து தெரிவிக்கும் இயக்குநர் இயமம் பாரதிராஜா, நடிகர் சூரி, இயக்குநர் சுசீந்திரன் என்று பலரும் திரையில் தோன்றி கதையின் ஊடாக வாழ்த்துவது படத்திற்கு பலம் சேர்க்கிறது. அபி நட்சத்திராவின் நடிப்பு அட்டகாசம். மேலும் கீதா கைலாசம், வையாபுரி , நமோ நாராயணன் என்று பெரும் பட்டாளமே நடித்துள்ளது.. பெண்களின் இன்றைய பாதுகாப்பு குறித்த பல சிக்கல்களைப் பேசும் கதைக்காகவே இதுபோன்ற படங்களை வரவேற்கவேண்டும். லைசென்ஸ் குழுவிற்கு வாழ்த்துகள். |
||||||||
by Swathi on 04 Nov 2023 0 Comments | ||||||||
Tags: license லைசென்ஸ் rajalakshmi | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|